முரசொலி கடிதங்கள் · 3674
விடைதான் என்னவோ; இந்த வினாவுக்கு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3674. விடைதான் என்னவோ; இந்த வினாவுக்கு!
உடன்பிறப்பே,
எத்தனையோ வழக்குகள் நீதி மன்றங்களில் ஒரு சில ஆண்டுகளில் முடிந்து விடுகின்றன. சில வழக்குகள் ஆண்டுக் கணக்கில் முடியாமல் நீடித்துக் கொண்டே செல்கின்றன. அப்படிப் பட்ட வழக்குகளில் ஒன்றுதான் 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்காகும்.
ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு தொகுதிகளில் ஏன் போட்டியிட்டார் என்பது பற்றி ஒரு சிறிய விளக்கத்தைத் தருகிறேன்.
2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு, டான்சி நில பேர ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் 9-10-2000 அன்று ஜெயலலிதாவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையை விதித்திருந்தது. இதையடுத்து இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறைப்படி ஜெயலலிதாவும் தேர்தலில் போட்டியிட முடியாது” என்று சட்ட நிபுணர்கள் கூறினார்கள். அந்த நிலையில் ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் 3-11-2000 அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் தனி நீதி மன்றம் அளித்தத் தீர்ப்பை நிறுத்திவைத்து, தன்னைத் தேர்தலிலே போட்டியிட அனுமதிக்குமாறு கோரியிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்பிரமணியன், இந்தியத் தண்டனைச் சட்டம் 409வது பிரிவின்கீழ் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டிருந்தால், அதனை தம்மால் நிறுத்தி வைக்க முடியும் என்றும், ஆனால் அந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி நீதி மன்றம் கூறியிருக்கும் தீர்ப்பை தன்னால் நிறுத்தி வைக்க முடியாது என்றும் நீதிபதி கூறி, ஜெயலலிதாவின் மனுவை 11-4- 2001 அன்று தள்ளுபடி செய்தார்.
ஏற்கனவே தனி நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டாம் என்றும், அதனை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
அந்தத் தீர்ப்பு குறித்து தேர்தல் ஆணையம் 9-4-2001 அன்று பரிசீலித்தது. தலைமை தேர்தல் ஆணையராக அப்போதிருந்த திரு. எம்.எஸ்.கில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்பிரமணியம் அவர்கள் அளித்த தீர்ப்பு விரிவாக ஆராயப்பட்டது. மேலும், அந்தத் தீர்ப்பு குறித்து இந்தியாவில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களையும் பரிசீலித்தனர். இறுதியாக, ஊழல் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் டெல்லியில் கலந்து பேசிக் கொண்டிருந்த அதே நாளில், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்து விட்டார். மேலும் அதற்கடுத்த நாளான 17-4-2001 அன்று ஆண்டிப்பட்டி தொகுதியிலே வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளான 23-4-2001 ஜெயலலிதா சார்பில் புதுக்கோட்டை தொகுதியிலும், புவனகிரி தொகுதியிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கனவே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்பது நன்கு தெரியும். இருந்தாலும், நான்கு தொகுதிகளிலே அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யக் காரணம், எப்படியும் தேர்தல் அதிகாரி தனது வேட்பு மனுவினைத் தள்ளுபடி செய்துவிடுவார் - மக்களிடம் சென்று தன்னைத் தேர்தலில் போட்டியிடாமல் செய்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்து, அதன் மூலம் மக்களின் அனுதாபத்தைச் சம்பாதிக்கலாம் என்று எண்ணி செயல்பட்டார்.
இந்திய அரசியல் வரலாற்றில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற காரணத்தால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று முன்னாள் முதல்வர் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது அதுவே முதல் முறை.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து கொண்டே, குறைந்த விலைக்கு வாங்கியவர்! அதற்காகத் தண்டனை விதித்தது நீதிமன்றம்! தண்டனைக் குரிய ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறியது தேர்தல் ஆணையம்! ஒருவர் இரண்டு இடங்களுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற விதிக்கு மாறாக நான்கு இடங்களில் போட்டியிட்டவர் ஜெயலலிதா! அந்த வேட்பு மனுக்கள் செல்லாது என்று நிராகரித்தனர் தேர்தல் அதிகாரிகள்!
ஆனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவுடன், ஜெயலலிதா, தி.மு.க.தான் பல வழிகளில் சூழ்ச்சி செய்து அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்துவிட்டது என்றும், நீதிமன்றத்தை மிரட்டி, பல்வேறு தீர்ப்புகளை அவருக்கு எதிராக மாற்றச் செய்தது என்றும் குற்றஞ்சாட்டினார். திட்டமிட்டு, அவரைத் தேர்தலில் நிற்காத அளவிற்கு நாம் செய்து விட்டோம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் ஒப்பாரி வைத்து மக்களின் அனுதாபத்தைப் பெற முயற்சித்தார். இறுதியாக அந்தத் தேர்தலில் அந்த அனுதாபம்தான் வெற்றி பெற்றது.
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்துச் செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, “மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் எந்த மகிழ்ச்சியும் எனக்கு இல்லை!” என்று கூறினேன்.
ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்த நான்கு தொகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளை “முதலமைச்சர்” என்ற முறையில் நான் மிரட்டியதால் தான் அவர்கள் வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்தார்கள் என்று ஜெயலலிதா புகார் கூறினார். ஆனால், அந்த நேரத்தில் அந்தத் தேர்தல் அதிகாரிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாக இருந்தவரிடம் செய்தியாளர்கள் சந்தித்து, இது பற்றிக் கேட்டதற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி, “ஆங்காங்குள்ள தேர்தல் அதிகாரிகள் தங்கள் கடமையினைச் சட்டப்படிச் செய்துள்ளனர் - அவர்கள் பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது - அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் கூற முடியாது!” என்று பதிலளித்தார்.
இன்னும் சொல்ல வேண்டுமேயானால், தற்போது அம்மையாருக்காக அடிக்கடி பரிந்து வாதாடிக் கொண்டிருக்கின்ற நடிகர் சரத்குமார், அந்த நேரத்தில் 26-4-2001 அன்று ஓர் அறிக்கை
வெளியிட்டார். அந்த அறிக்கையில், “அரசியலில் இதுவரை நடந்திராத ஒரு கோழை நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார், செல்வி ஜெயலலிதா. படித்தவர் - ஒரு முன்னாள் முதலமைச்சர் - மத்திய நல்லாட்சியைத் தனது சுயலாபத்திற்காகக் கவிழ்க்கும் அளவிற்கு அரசியல் தெரிந்தவர் - நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஊழல் குற்றம் புரிந்த குற்றவாளி என்ற காரணம் சொல்லி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசியல் அரங்கிலே செல்லாக் காசாகி விடுவோம் என்று தெரிந்து கொண்டு அவர் அப்படிச் செய்தார்” என்றெல்லாம் அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.
எப்படியோ, 2001ஆம் ஆண்டு, அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ஜெயலலிதா புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒரு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனுதாக்கல் செய்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கோரி, தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் செ. குப்புசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து, ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிக்கு 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதி மன்றம் ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த மனுதான் நீதிபதிகள் தத்து, சந்திரமெளலி பிரசாத் ஆகியோர் முன் 20-11-2012 அன்று விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது ஜெயலலிதா சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு. லலித் அவர்கள், நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தது சரியானதுதான், அவரது மூன்று வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இதைக் கருத்தில் கொண்டுதான் தேர்தல் அதிகாரி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் சென்னை உயர் நீதி மன்றம் தேர்தல்
அதிகாரி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது தவறானது, அதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். திரு. குப்புசாமி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் திரு. அல்டாப் அகமது அவர்களும், திரு. சண்முகசுந்தரம் அவர்களும், இரண்டு தொகுதிக்கு மேல் ஒருவர் போட்டியிடக் கூடாது என்று தெரிந்திருந்தும், உயர் பதவியில் இருப்பவர் நான்கு தொகுதிகளில் வேட்பு மனுதாக்கல் செய்தது தவறானது, எனவே ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தலில் போட்டியிடும் ஒருவர் இரண்டு தொகுதிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று சட்டம் கூறும்போது, ஏன் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்? முதல்வராக இருந்த ஒருவர் இப்படி மனு தாக்கல் செய்தது ஏன்? கட்சியின் தலைவராக இருப்பவர், பொது ஊழியராக இருக்கும் ஒருவர் இப்படி வேட்பு மனு தாக்கல் செய்தது தவறானது. இதுபோல செய்திருப்பது நியாயமா? சரியா ? என்றெல்லாம் கேட்டதோடு வழக்கினை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள். நமது வழக்கறிஞர் திரு. அல்டாப் அகமது மேலும் கூறும்போது, புவனகிரி தொகுதியில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், அவர் ஏற்கனவே ஆண்டிப் பட்டி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது, மறைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மறைத்தது, தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஆறு ஆண்டு சிறைத் தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்தியை 21-11-2012 அன்று ‘தினமலர்’ நாளேடு தனது நான்காவது பக்கத்தில் “வர்த்தகச் செய்திகளுக்கு இடையே யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு வெளியிட்டது. ‘தினமணி’ நாளேடோ தனது ஒன்பதாவது பக்கத்தில் கீழே ஒரு மூலையில் போட வேண்டியிருக்கிறதே என்ற மனப்பான்மையோடு வெளியிட்டது. “நாம் தமிழர்” கட்சியின் நிறுவனர் நமது ஆதித்தனார் அவர்களின் ‘தினத்தந்தி’ நாளிதழோ, “அய்யோ! நமக்கு ஏன் வீண் வேலை” என்றெண்ணி, இந்தச் செய்தியையே வெளியிடாமல் இருந்து விட்டது. ஜெயலலிதா மீது நீதிபதிகள் கோபித்து கேள்வி கேட்ட செய்தியைப் புறக்கணித்த இந்த நாளேடுகள், 21 ஆம் தேதியன்று விசாரணையின் போது, உச்ச நீதி
மன்ற நீதிபதிகள் இந்த வழக்கினை மீண்டும் உயர் நீதி மன்றமே நான்கு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென்று அளித்த தீர்ப்பை மட்டும் தங்கள் இதழ்களில் முக்கியமாக வெளியிடத் தவறவில்லை. என்ன பத்திரிகாதர்மம்? என்ன நடுநிலை உணர்வு? இறுதியாக, புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை, சென்னை உயர் நீதி மன்றம் முறையாகப் பரிசீலிக்காததால், அந்த அறிக்கைகளின் அடிப்படையில், உயர் நீதி மன்றமே மீண்டும் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தக் குற்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதிப்பதற்குரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்கள். திரு. செ.குப்புசாமி அவர்கள் தொடர்ந்த மூல வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டு மென்றும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் தொடுத்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்தும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள். இதைத்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடுகளும் மிகப்பெரிய அளவில் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளன. ஆனால், இந்த வழக்கிலே நமக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எழுந்துள்ள கேள்வியே; இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதி மன்ற நீதிபதிகள், 20-11-2012 அன்று நீதி மன்றத்தில் கேட்டார்களே, “தேர்தலில் போட்டியிடும் ஒருவர் இரண்டு தொகுதிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று சட்டம் கூறும்போது, ஏன் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்? முதல்வராக இருந்த ஒருவர் இப்படி மனு தாக்கல் செய்தது ஏன்? கட்சியின் தலைவராக இருப்பவர், பொது ஊழியராக இருக்கும் ஒருவர் இப்படி வேட்பு மனு தாக்கல் செய்தது தவறானதல்லவா? இது நியாயமா? சரியா?” என்பதுதான் கேள்வி! இந்தக் கேள்விக்கு என்ன விடை? அன்புள்ள, மு.க. 23-11-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 203–208. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.