முரசொலி கடிதங்கள் · 3677
எந்த நிலையிலும் என் கடன்; பணிசெய்து கிடப்பதே!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3677. எந்த நிலையிலும் என் கடன்; பணிசெய்து கிடப்பதே!
உடன்பிறப்பே,
கடந்த 3-12-2012 அன்று “மாற்றுத் திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டதையொட்டி, ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆண்களும், பெண்களுமாக அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆட்சிப் பொறுப்பில் இல்லாதபோதும் அவர்கள் என்னைக் காண வந்து, வாழ்த்து தெரிவித்ததும்; நன்றி என்றால் என்னவென்றும், அது எங்கே கிடைக்கும் என்றும், அதன் விலை என்ன என்றும் கேட்கின்ற இந்நாளில், மாற்றுத் திறனாளிகள் என்னைக் காண வந்ததும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது. அப்போது அவர்கள் தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது மாற்றுத் திறனாளிகளுக்காக அளித்த சலுகைகளையெல்லாம் தொகுத்து நான் எழுதி அனைவருக்கும் நினைவூட்டிட வேண்டுமென்ற வேண்டுகோளினைத் தெரிவித்தார்கள். அவர்களின் விருப்பத்திற் கிணங்க இந்தக் கடிதத்தில் அந்த விவரங்களைத் தந்துள்ளேன்.
மனித சமுதாயத்தில், காது கேளாதவராய், கண் தெரியாதவராய், வாய்பேச முடியாதவர்களாய், கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய், மனநோயாளிகளாய் உள்ள அனைவரையுமே “ஊனமுற்றோர்” என்பதற்குப் பதிலாக, “மாற்றுத் திறனாளிகள்” என்று அழைக்கின்ற முறைகுறித்து 2007ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையில் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் இணக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதில் நமது இந்திய நாடு ஏழாவது நாடாகக் கையொப்பம் இட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இனி “ஊன முற்றோர்” (Handicapped) என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள், “மாற்றுத் திறனாளிகள்”
(Differently Abled) என அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
19.3.2010 அன்று புதிய சட்டப்பேரவையில் முதன்முதலாக அளிக்கப்பட்ட 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் “மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்” என அறிவிக்கப்பட்டு அன்றே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், துறையின் பெயரும், அலுவலகம் மற்றும் அலுவலர்கள் பெயர்களும் மாற்றி அமைக்கப்பட்டன.
2010-2011இல் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கெனப் பேரவையில் தனியே, “மானியக் கோரிக்கை” அளிக்கப்பட்டு, அதன்மீது மாற்றுத் திறனாளிகள் நலம் குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய திட்டங்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
1969 இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவைத் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பேற்றபின், தொழுநோயாளிகளின் அவலம் கண்டு நான் உருவாக்கிய “தொழுநோய் இரவலர்கள் மறுவாழ்வுத் திட்டம்” அண்ணல் காந்தி அடிகள் பிறந்த அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் 2.10.1971 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் பரனூரில் தொடங்கப் பட்டது. தொடர்ந்து 9 இடங்களில் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டு இன்றும் அவை செயல்பட்டு வருகின்றன.
1972 ஆம் ஆண்டில் “கண்ணொளி வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாம்களில் இலட்சக் கணக்கான ஏழை எளியவர்களுக்குக் கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, கண்ணாடிகளும் இலவசமாக அணிவிக்கப்பட்டன.
1974 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; கை, கால் இழந்தவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், அலுமினியத் தாங்கிகள் (Crutches), , பார்வை பழுதானவர்களுக்குக் கறுப்புக் கண்ணாடிகள், ஊன்றுகோல்கள், செவித்திறன் குறையுடை யோர்க்குக் காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
1.11.1974 முதல் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, 1.4.98இல் ரூபாய் 150; 1.4.2000இல் ரூபாய் 200; 1.8.2006 இல் ரூபாய் 400, 1.12.2010இல் ரூபாய் 500 எனக் கழக அரசினால் ஓய்வூதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டது;
1989-1990 ஆம் ஆண்டு கழக அரசில் மாற்றுத் திறனாளிகளால் பெருமளவில் பயன்படுத்தப்படும் தாங்கிகள் (Crutches), , சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள், மோட்டார் பொருத்தப்படாத மூன்று சக்கர வண்டிகள், பல்வேறு ஊன்றுகோல்கள் ஆகியவை மீதான வரிகள் மனிதநேய அடிப்படையில் முற்றிலும் நீக்கப்பட்டன.
அப்போதைய, சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டு, பார்வையற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2005-2006 ஆம் ஆண்டில் 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில்; கழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டினைப் படிப்படியாக உயர்த்தி, 2010-2011ஆம் ஆண்டில் 176 கோடி ரூபாய் என நான்கு ஆண்டுகளில் மூன்றரை மடங்கு உயர்த்தி ஒதுக்கீடு செய்தது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 200 ரூபாய் என்பதை 1-9-2006 முதல் 500 ரூபாயாக உயர்த்தி, இத்திட்டத்தில் பயன்பெறும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 6400 என்பது 11.7.2000 அன்று 7400 எனவும், 1.9.2006 முதல் 10 ஆயிரம் எனவும் கழக அரசு உயர்த்தியது. மேலும் எண்ணிக்கை வரம்பின்றி விண்ணப் பிக்கும் அனைவர்க்கும் பராமரிப்பு உதவித் தொகை வழங்கிடவும் ஆணை யிடப்பட்டு; இத்திட்டத்தின்கீழ் கழக ஆட்சியில்
64 ஆயிரத்து 138 பேர் பயனடைந்து வந்தார்கள்.
தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 1-9-2007 முதல்
மாதம் 500 ரூபாய் வீதம் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் கழக அரசினால் தொடங்கப்பட்டபோது, 20 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பயன்பெற்று வந்தனர். கழக ஆட்சியில், 2009-2010ஆம் ஆண்டு முதல், இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 50 ஆயிரத்து 609 மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் பயன் பெற்றார்கள்.
இந்தியாவிலேயே முதன் முறையாக தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 1000 பேருக்கு மாதம் 500 ரூபாய் வீதம் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் 2008-2009ஆம் ஆண்டில் தி.மு.க. அரசினால் தொடங்கப்பட்டு, மூன்றாண்டுகளில் ஒரு கோடியே 89 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
1996-2001 இல் கழக ஆட்சி காலத்தில், காதுகேளாத, வாய் பேசாதவர்களை மணம் செய்துகொள்ளும் உடற்குறை இல்லாதவர் களுக்கும்; ஒரு கை அல்லது கால் இழந்தோரைத் திருமணம் செய்து கொள்ளும் உடற்குறை இல்லாதவர்களுக்கும் நிதியுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி 5,000 ரூபாய் என்பதை 7,000 ரூபாய் என 2000ஆம் ஆண்டில் உயர்த்திய கழக அரசு; 2006இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்திட்ட உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாய் என்பதை 20 ஆயிரம் ரூபாய் என 19.12.2006 இல் உயர்த்தியது.
மாற்றுத் திறனாளியை இன்னொரு மாற்றுத் திறனாளி திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கழக அரசு 2009-2010ஆம் ஆண்டு முதல் தொடங்கிச் செயல்படுத்தியது.
இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான திருமணத் திட்டங்களின்கீழ் 5357 பேருக்கு 2006க்குப்பின் 6 கோடியே 96 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் 2007-2008 முதல் கழக ஆட்சியில் நடை முறைப்படுத்தப்பட்டது.
பணிக்குச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் வாங்குவதற்கு வண்டியின் விலையில் 30 சதவீதத் தொகை மானியமாக வழங்கப்பட்டது. 5 ஆண்டு கால கழக ஆட்சியில், மொத்தம் 1961 பேருக்கு 3 கோடியே 34 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்ச் செலவில் மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர் வண்டிகள் வழங்கப்பட்டன. 2009-2010 ஆம் ஆண்டு முதல் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உட்பட 2700 பேருக்கு 1 கோடி ரூபாய்ச் செலவில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் 1997இல் எவ்வித நிபந்தனைகளும் இன்றி 100 கி.மீ. தூரம் வரை பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோர் இலவசப் பேருந்துப் பயணச் சலுகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோர் - கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அரசு விரைவுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர இலவசப் பயண அனுமதி வழங்கப்பட்டது. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் தமது உதவியாளர் ஒருவருடன் அரசுப் பேருந்துகளில் இலவசமாகச் சென்று வர பயணச்சலுகை வழங்கப்பட்டது.
2006-2011 ஐந்து ஆண்டுக் கால கழக ஆட்சியில் இவ்வாறு இலவசப் பேருந்து பயணச்சலுகைத் திட்டங்களில் 62 கோடியே
28 இலட்ச ரூபாய்ச் செலவில் 1 இலட்சத்து 12 ஆயிரத்து 471 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்துள்ளனர்.
மனவளர்ச்சி குன்றியோரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய பயிற்சிகள் அளிக்க மாவட்டந்தோறும் ஒரு பயிற்சிமையம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் 2007ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்டு, 0-6 வயதிற்குட்பட்ட 6000 குழந்தைப் பயனாளிகளுக்கு 6 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
குழந்தை பிறந்தவுடனேயே செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறியும் பரிசோதனையும், பின்னர் குழந்தைப் பருவத்தின்போது தொடர் செவித்திறன் பரிசோதனைகளையும் மேற்கொள்ளவும் அதன் மூலம் இக்குறை பாட்டைக் கட்டுப்படுத்தவும், “ஆரம்பநிலை பரிசோதனை மையம்” ஒன்று தூத்துக்குடியில் அமைக்கப்படும் என 2010-2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, இந்த மையம் 17.2.2011 அன்று தொடங்கப்பட்டது.
பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.
தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் 200 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் 1762 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளருக்கு 2007-08 முதல் மாதம் ஒன்றுக்குத் தலா ரூ.3000/- வீதமும் 2010-2011ஆம் ஆண்டு முதல் ரூ.5000/- வீதமும் மொத்தம் 8 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் ஊதிய மானியம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டமேற்படிப்பு வரை பயிலும் மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.750/- 1.10.2007 முதல் ரூ.1500/- ஆகவும் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த ரூ.1250/- ரூபாய் ரூ.2500/- ஆகவும் தொழில் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1500 ரூபாய் என்பது 3000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.
தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில - மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்க்கு ரொக்கப் பரிசும், உயர்கல்வி பெற உதவித்தொகையும் 2006- 2007ஆம் ஆண்டி லிருந்து வழங்கப்பட்டது.
அரசு - அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் டிசம்பர் 3ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடு வதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க அரசு ஆணை 2007ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மேலும், மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த ஆணையிட்டு; அவர்கள் அலுவலகம் சென்று வருவதில் உள்ள சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போக்குவரத்துப்படி மாதம் 300 ரூபாய் என்பதை 1000 ரூபாயாக கழக ஆட்சியில் உயர்த்தி வழங்கப்பட்டது.
சமூகநலத் துறை அமைச்சர் தலைமையில், மூன்று அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் 15 அலுவல் சாராதவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் 2007ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
பின்னர் தமிழக முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் 26.4.2010 அன்று திருத்தி அமைக்கப்பட்டது.
10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், நல வாரிய உறுப்பினராக பதிவு செய்யப்பட்டனர். கழக ஆட்சிக் காலத்தில் 1 இலட்சத்து 99 ஆயிரத்து 856 மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். கழக ஆட்சிக் காலத்தில் மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மூலம் 2 கோடியே 99 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவில் 5168 மாற்றுத் திறனாளிகள் சமூக பாதுகாப்பு மற்றும் பிற திட்டங்களில் பயனடைந் துள்ளனர்.
“இளைஞன்” திரைப்படத்திற்குக் கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த 45 இலட்சம் ரூபாய் தொகையினை “முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, பின்னர் அதனை 2010-2011ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அளித்திட தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்திற்கு வழங்கப்பட்டது.
என்னைக் காண வந்த மாற்றுத் திறனாளிகளில் ஒருவர், கழக ஆட்சிக் காலத்தில் மாற்றுத் திறனாளிகளான அவர்கள் சென்னை
ராஜீவ் காந்தி பொது மருத்துவ மனையில் நான்கைந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த போது, அதுபற்றி காலைப் பத்திரிகையில் செய்தி பார்த்தவுடன், காலை உணவு கூட அருந்தாத நிலையில் நேராக பொது மருத்துவ மனைக்கே வந்து அவர்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கை ஓரிரு நாட்களில் தீர்க்கப்படும் என்று நான் நேரில் அளித்த உறுதிமொழியை நினைவூட்டியதோடு, உண்ணா விரதத்தை கைவிட்டு வீடு திரும்பிய தையும் எடுத்துக்கூறினார். ஒரே நாளில் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆணையும் பிறப் பிக்கப்பட்டது. கழக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் டெல்லியில் மத்திய அரசிடம் வாதாடி, இந்திய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனித் துறையே உருவாக வழிகண்டிருக்கிறார். கழக ஆட்சியில் ஏராளமான சாதனைகள் செய்யப்பட்டது. அதற்காக ஏனையோர் நன்றி பாராட்டாவிட்டாலும், இந்த மாற்றுத் திறனாளிகள் நம்மைச் சந்தித்து நன்றி பாராட்டியதால் அவர்கள் விரும்பியவண்ணம் இந்த பட்டியலையும் வெளியிட்டுள்ளேன். எனது வாழ்க்கைத் தொடரான “நெஞ்சுக்கு நீதி” முதல் தொகுதியை, தமிழக விழியிழந்தோர் சங்கத் தலைவரும், கண்ணொளி இழந்தவருமான தோழர் திரு. ஆசிர் நல்லதம்பி அவர்கள் தலைமையில், தொழுநோய் மறுவாழ்வுச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் முகமது அலி அவர்களைக் கொண்டு வெளியிடச் செய்தேன். மாற்றுத் திறனாளிகளை - ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் - மனதார நேசித்துப் போற்றி வருபவன் நான். எனினும் மாற்றுத் திறனாளிகளுக்கு நான் எதுவும் செய்யவில்லை என அறிக்கை வெளியிடுவோர் - உண்மைகளை அறியாதவர்கள் அல்லது உண்மைகளை மறைத்திட முயற்சிப்பவர்கள். பாவேந்தரின் கூற்றுப்படி “காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ?”- போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் பணி செய்து கிடப்பதே! அன்புள்ள, மு.க. 8-12-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 223–230. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.