அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3680

முரசொலி கடிதங்கள் · 3680

வெங்கிடங்கால், வாழ்க்கரையை எங்ஙனம் மறப்பேன்!

நாள் 12.12.2012சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3680. வெங்கிடங்கால், வாழ்க்கரையை எங்ஙனம் மறப்பேன்!

உடன்பிறப்பே,

இந்தக் கடிதத்திற்கு இடையே ஒரு புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. அது ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி. தற்போதைய கழக நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது யாருடைய இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி என்பது தெரியாது. திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் பகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் இதன் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்கள் பலர் உண்டு. தொடங்கப்பட்ட காலத்தில் கழகம் வளர்த்த முன்னோடிகளில் பெரும்பாலானவர்கள் தற்போது உயிரோடு இல்லை என்ற போதிலும், அவர்களின் வாரிசுகளும் மற்றும் லட்சக்கணக்கான இளைய சமுதாயத்தினரும் தற்போது கழகத்தை வளர்க்கும் பெரும் பணியிலே ஈடுபட்டுள்ளார்கள். ஆரம்பக் காலத்தில் நமது கழகத்தை வளர்க்க அரும்பாடுபட்ட ஒரு குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன்.

[புகைப்படம்: திருமண வரவேற்பு நிகழ்ச்சி] [புகைப்பட விளக்கவுரை: [தெளிவில்லை]]

இந்த திருமண வரவேற்பு யாருடைய இல்லத்தில் என்றால், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், நமது நாகைப் பகுதியில் தொடக்கக் காலத்தில் சுயமரியாதை இயக்கத்திலும், அதன் பிறகும் கழகத்தை வளர்க்க என்னோடு இணைந்து அரும்பாடுபட்ட வெங்கிடங்கால் சந்தானம், வாழ்க்கரை ராஜகோபால், அவருடைய இளவல் நாகை ராஜமாணிக்கம் ஆகியோரின் குடும்பத்தினரின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி. இந்தக் குடும்பத்தினர் நாகை மாவட்டத்தில் கீவளூர் வட்டாரத்தில் ஓரளவு வசதி படைத்த “சைவ முதலியார்” வகுப்பைச் சேர்ந்தவர்கள். நாவலர், பேராசிரியர் போன்றவர்களுக்கு உறவினர்களும்கூட. ஆனால் அவர்களைவிட என்னைத்தான் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற எண்ணத்தோடும், பாசத்தோடும் பழகுவார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கெல்லாம் அந்தக் காலத்தில் நான்தான் பெயர் சூட்ட வேண்டும். அந்த வீட்டுக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை என்னிடம் அந்தக் காலந்தொட்டு, இந்தக் காலம் வரை எந்த அளவிற்கு அன்போடும், நேசத்தோடும் பழகுவார்கள் என்பதை நான்தான் அறிவேன். அதனால்தான் அந்தக் குடும்பத்தின் திருமண வரவேற்பு என்றதும் நான் பிடிவாதமாகப் புறப்பட்டுச் சென்றேன். அது மாத்திரமல்ல; அந்த விழாவிற்கான அழைப்பிதழை எனக்குக் கொண்டு வந்து கொடுத்தபோது, அந்தக் குடும்பமே நேரில் வந்து நான் அவசியம் வரவேண்டுமென்று அழைத்து விட்டுச் சென்றது.

அந்த நேரத்தில் என்னுடைய நினைவு வேறெங்கும் செல்லவில்லை. இந்தத் திருமண வரவேற்பு விழாவிற்கு மட்டும் வெங்கிடங்கால் சந்தானமோ, வாழ்க்கரை ராஜகோபாலோ இருந்திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும்? என்னை எப்படி வரவேற்று அழைத்துச் சென்றிருப்பார்கள்? அந்தக் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள் என்றெல்லாம் எனக்கு நானே நினைத்துக் கொண்டேன்.

திருமண வரவேற்பு வடபழனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் என்று கூறியபோது, மாலையில் கோடம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இருக்கும், அங்கே செல்வது சிரமமாக இருக்குமே என்ற போதிலும், அந்த இல்லத்தின்

முக்கியத்துவம் கருதி நான் அதற்குச் சென்றே ஆக வேண்டும், மணமக்களுக்குப் பூச்செண்டுகளையும், அன்பளிப்பு கொடுக்க ஏதாவது ஒரு பொருளையும் வாங்கிவைக்குமாறு கூறிவிட்டேன்.

நான் வரவேற்புக்குப் புறப்பட்டபோது, என்னுடன் தம்பிகள் அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரமும், தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்பழகனும் மட்டுமே உடன் வந்திருந்தார்கள். போக்குவரத்து நெரிசலோ மிகவும் கடுமையாக இருந்தது. எனக்காக வந்த பாதுகாவலர்களோ மிகுந்த சிரமப்பட்டு அந்தப் போக்குவரத்துக்கு இடையே என்னை அழைத்துச் சென்றார்கள். நான் அந்த நிகழ்ச்சிக்குப் புறப்பட்டது முதல, அங்கே சென்றுவிட்டு என் இல்லம் திரும்பிய பிறகும் கூட நீண்ட நேரம் என்னுடைய நினைவுகள் எல்லாம் - எனது இளமைக் காலத்தில் வெங்கிடங்கால் சந்தானம், வாழ்க்கரை ராஜகோபால் போன்றவர்களோடு இணைந்து கழகம் வளர்க்கப்பட்ட பாட்டினை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு முறை அண்ணா அவர்கள் திருவாரூர் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிவிட்டு காஞ்சிபுரம் திரும்புகிறார்கள். பேச்சுத் துணையாக இரண்டு பேரை என்னுடன் காரில் வர அனுப்பிவை என்று என்னிடம் கூறியபோது, நான் வெங்கிடங்கால் சந்தானத்தையும், வாழ்க்கரை ராஜகோபாலையும்தான் அண்ணா அவர்களின் பயணத் துணையாக அனுப்பி வைத்தேன். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து அண்ணா அவர்களை நான் காஞ்சிபுரத்தில் நேரில் சந்தித்தபோது, “என்ன அண்ணா? பயணத்திற்குத் துணையாக வந்தார்களா?” என்று கேட்டபோது, “திருவாரூரில் கார் புறப்பட்டவுடன் பேச ஆரம்பித்தவர்கள்தான், காஞ்சிபுரம் வந்து நான் காரிலிருந்து இறங்குகின்றவரை பேச்சை நிறுத்தவே இல்லை; சரியான நபர்களாகப் பிடித்து அனுப்பிவைத்தாய்” என்று கூறினார்கள். நான் இதை வெங்கிடங்கால் சந்தானத்திடமும், ராஜகோபால இடத்திலும் கூறியபோது, அவர்களுக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது என்பதையெல்லாம் தம்பிகள் அமைப்புச் செயலாளர் கல்யாணத்திடமும், தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்பழகனிடமும் காரிலே சொல்லிக்கொண்டே வந்தேன்.

போக்குவரத்து நெரிசலைச் சமாளித்து, முக்கால் மணி நேர பயணத்திற்குப் பிறகு வடபழனி திருமண மண்டபத்தை அடைந்தோம். நான் காரிலிருந்து இறங்குவதற்கு முன்பாகவே, எனக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, மணமக்கள் இருவரும் கையிலே பூச்செண்டோடு என்னை வரவேற்க மண்டப வாயிலில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி வெங்கிடங்கால் சந்தானத்தின் குடும்பமே நின்றுகொண்டிருந்தது. வயதானவர்கள் முதல் குஞ்சு குளுவான் என்பார்களே அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், வெளிநாட்டிற்குப் போய்விட்டுப் பல நாட்கள் கழித்து ஊர் திரும்பினால் அந்தக் குடும்பத்தினர் எந்த அளவிற்கு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்வார்களோ, அதுபோன்ற மகிழ்ச்சி அங்கே ஒவ்வொருவருடைய முகத்திலும்! ஏன் அவர்களை யெல்லாம் பார்த்தவுடன் எனக்கும் இளம் வயதில் வெங்கிடங்காலுக்கு நான் சென்றால் என்னை எப்படி வரவேற்பார்களோ, அந்த நினைவுகள் எல்லாம் மனதிலே அலைபாய்ந்தன.

அந்தக் கூட்டத்தினர் ஒவ்வொருவரும் என்னிடம் தாங்கள் யார் என்று சொல்லியபோது, அவர்கள் இளம் வயதிலே எப்படி இருந்தார்கள், இப்போது இப்படி ஆகிவிட்டார்களே என்று நினைத்துக் கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கிடையே திடீரென்று ஒரு முகம்... என்று நான் யோசித்த நிலையில், அந்த உருவம், “அய்யா என்னைத் தெரிகிறதா? நான் ராஜமாணிக்கத்தின் மகன், நீங்கள்தானே எனக்குத் தங்கதுரை என்றும், என் தம்பிகளுக்கு தம்பிதுரை, அன்புதுரை என்றும் பெயர் வைத்தீர்கள்; இதோ பாருங்கள் தம்பிகள்!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தபோதே, நான் பெயர் சூட்டிய அந்தக் குழந்தை, இப்போது நாற்பத்தைந்து வயதுள்ள ஒரு உருவமாக எதிரிலே நிற்பது கண்டு நான் மெய் சிலிர்த்துப் போனேன். ராஜமாணிக்கத்தின் மகள் குந்தவையின் திருமணத்தை நான்தான் இருபதாண்டுகளுக்கு முன்பு 10-2-1992 இல் நடத்தி வைத்தேன் என்று பெருமையோடு குறிப்பிட்டார்கள். அந்தக் குடும்பமே என்னைச் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்வதிலே போட்டி போட்டனர்.

திருமண மாப்பிள்ளை யார் என்றால், வெங்கிடங்கால் சந்தானத்தின் மகள் வயிற்றுப் பேரன்! சந்தானத்தோடு நான்

பழகிய காலத்தில் அவருடைய மகளே ஒரு குழந்தை. அதற்குப் பெயர் தமிழரசி! அவரது தங்கை கலையரசி! வாழ்க்கரை ராஜகோபால் மகள் மாதவி! தற்போது அந்தக் குழந்தை தமிழரசி பெரியவளாகி, திருமணம் முடிந்து, அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை பிறந்து, அந்தக் குழந்தை வாலிபனாகி அவருக்குத்தான் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. அந்த உற்சாகக் கடலிலே இருந்து விடுபட்டு, சக்கர நாற்காலியில் வேனுக்குள் நுழைந்தேன். அப்போதுதான் என்னுடைய வயதே நினைவுக்கு வந்தது. ஆம், அதுவரை நான் திருக்குவளையிலும், திருவாரூரிலும், வெங்கிடங்காலிலும், வாழ்க்கரையிலும், நாகையிலும் சுற்றிச் சுழன்று வந்த அந்தக் காலத்திலேதான் இருந்தேன்.

வெங்கிடங்கால் சந்தானம், வாழ்க்கரை ராஜகோபால், நாகை ராஜமாணிக்கம் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் நமது கழகத்திற்காக உழைத்த உழைப்பும், பட்ட பாடும் வீண் போகாமல் இன்று நமது கழகம் வளர்ந்திருக்கின்றது. அத்தகையோர் சிந்திய வியர்வை, சிறைச் சாலைகளிலே அனுபவித்த கொடுமைகள் - அதற்கெல்லாம் பிறகுதான் கழகம் ஆட்சிக் கட்டிலிலே ஏறியது. எங்கிருந்தோ வீசிய புயல் காற்றில், எப்படியோ சிலர் மேலே வந்து விடலாம். ஆனால் அந்த உயர்வு தற்காலிகமானது; உழைப்பிலே, தியாகத்திலே உயர்வதே நிரந்தரமானது. எனவே எது நிரந்தரம், எது தற்காலிகம் என்பதை வருங்காலச் சமுதாயம் உணர்ந்து, அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி பற்றிய நினைவுகள்; இந்தக் கடிதமாயிற்று!

அன்புள்ள, மு.க. 12-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 244–248. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்