அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3681

முரசொலி கடிதங்கள் · 3681

இருள் தொலைந்திட வா! விரைந்து வா! வா!

நாள் 15.12.2012(தேதி: அச்சிட்ட பொருளடக்கத்திலிருந்து)சுமார் 3 நிமிட வாசிப்பு
X

மூலத்தின் நிலையான குறைவு

இக்கடிதம் மூலத்திலேயே முழுமையற்றது: அச்சுப் பக்கம் 252 கிடைக்கும் ஒரே மூல நூலில் இல்லை. கிடைக்கும் பக்கங்களின் உரை மட்டுமே இங்கு உள்ளது; விடுபட்ட தொடர்ச்சி, நிறைவுப் பகுதி, கையொப்பம், தேதி எவையும் உருவாக்கப்படவில்லை.

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3681.இருள் தொலைந்திட வா! விரைந்து வா! வா!

உடன்பிறப்பே,

கடந்த 13ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கழகத்தின் முன்னணியினர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஏனைய செயற்குழு உறுப்பினர்களாம் என் உடன்பிறப்புக்கள், காலையில் 10.00 மணிக்குத் தொடங்கிய செயற்குழுக் கூட்டம் பிற்பகல் 1.00 மணி அளவுக்கு நிறைவுற்ற பிறகு, என்னைச் சந்தித்தவர்கள் அனைவருமே என்னை நெருங்கி வந்து, அதிர்ச்சியும் ஆவலும் கலந்த முகத்தினராய்ப் பின்வருமாறு கேட்டார்கள்: “என்ன தலைவரே! எல்லாச் செயற்குழுக் கூட்டங்களிலும் - பொதுக்குழுக் கூட்டங்களிலும், பொதுவாகவே பொலிவுடன் காணப்படும் உங்கள் முகம், இன்று இவ்வளவு வாட்டமாக இருப்பதற்கு என்ன காரணம்?”

இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் அந்தச் செயற்குழுவில் கலந்து கொண்டவர்களில் யாருமே இல்லை.

அந்தக் காரணத்தை வாய்விட்டுச் சொல்ல முடியாமல், என் நா தழுதழுத்ததை அவர்களுக்கு விளக்கிச் சொல்லவா முடியும்?

சிங்க நடைபோட்டு, சிரித்த முகத்தோடு, செம்மாந்து நடந்து வரும் சேலத்து வேங்கை தம்பி வீரபாண்டியும், சட்ட நுணுக்கங்களோடு சாதுரிய மிக்க வாதங்களை எடுத்துவைத்து, சமூக நீதி வென்றிட காலமெல்லாம் பாடுபட்டு, கழகத்தின் தொண்டனாய், என் தோழனாய், அண்ணாவின் தம்பியாய் அரும்பணி ஆற்றிய தென்பாண்டிச் சிங்கமாம் ஏ.எல். சுப்பிரமணியனும் - கழகத்தின் கட்டளை எதுவாயினும் சிரமேற்கொண்டு, அதனைச் சிரமம் பார்க்காமல் செய்து முடிக்கும் செயல்வீரர் காதர்பாட்சா (எ) வெள்ளைச் சாமியும் - கொள்கைத்

தங்கம் கோட்டூர் இராசசேகரனும் - சந்ததமும் கழகத்தின் புகழ் பாடி, சமுதாய நலனுக்கு கீதம் ஒலித்துக் கொண்டிருந்த - எந்நாளும் நினைவில் நிற்கும் முன்னாள் அமைச்சராம் சமயநல்லூர் செல்வராஜும் - சூராதி சூரன், சுயமரியாதை வீரன் சூலூர் பொன்முடியும், இன்னும் என் நெஞ்சை விட்டு அகலா இளைய உடன் பிறப்புக்களாம் இனிய கழக வீரர்கள் சிலரும் இடம்பெறாமல் இந்தச் செயற்குழு நடைபெற்றிருக்கிறதே என்ற கவலைதான் என்னை வாட்டிவதைக்கிறது என்பதை அறிந்து கொள்ளாதவர்களைப்போல, எனக்கு ஆறுதல் சொல்பவர்களாக அந்த உடன்பிறப்புக்கள் என்னிடத்திலே நெருங்கி வந்து விசாரிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந் தாலும் இந்தக் கவலைகளோடு கவலையாக, தமிழ்நாட்டு மக்கள், சுனாமி அலைகளின் நடுவே கடலில் தள்ளப்பட்டு திணறித் தவிப்பதுபோல் திண்டாடுகின்ற காட்சியன்றோ இந்த ஆட்சியில் அனுதினமும், அல்லும் பகலும் ஓயாமல் ஒழியாமல், தோன்றித் தோன்றி மக்களுக்குத் தொல்லை பல கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அந்தக் கொடுமையை, கொடிய வேதனையை இளமை முதல் என் மண்ணின் மைந்தர்களுக்காக உழைத்து வரும் என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?

எத்தனை லட்சோப லட்சம் தமிழ் மக்கள் இந்த மண்ணில், கண்ணில் ரத்தம் வழிய திக்கற்றுத் தவிக்கிறார்கள். அவர்கள் போற்றி வளர்த்த கலை, நாகரிகம், மொழி, பண்பாடு, அனைத்தும் இன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பொருள்களாகவன்றோ ஆக்கப்பட்டுவிட்டன. இதற்கெல்லாம் மீட்சி எப்போது? என்ற கேள்விக்கு விடை காணவும், அதுவரையில் இந்த பூமியில் புழுக்களாகத் துடித்துத் தவிக்கின்ற ஏழை எளிய தமிழ்மக்களைக் காப்பாற்ற வழிகாணும் வகையறிந்து செயல்படவே துடிக்கின்றோம்.

அதற்குக் குறைந்த காலப் போராட்டம் போதுமா? நீண்டகாலப் போராட்டம் தேவையா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பது எதிர்கால இளையதலைமுறையினர் கையில் இருக்கிறது என்றாலும், அதுவரையில் இந்தத் தலைமுறையில் அந்தத் தலைமுறைக்காக என்ன செய்தாய்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையிலேதான் செயற்குழுவில்

ஆறு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த ஆறும் அத்தியாவசியத் தீர்மானங்கள் என்றாலுங்கூட, அவற்றையெல்லாம் செயல்படுத்தத் தேவையான இடநேரங்கள், அவற்றுக்கான ஆக்கப்பூர்வப் பணிகள், வாதாடிப் போராட வேண்டிய காலவேளைகள், இவை அனைத்தையும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய வழிமுறைகள் தவிர்க்க முடியாதவை எனக் கருதி, அதற்கான முயற்சிகளில் இறங்குவது ஒருபுறம் இருக்க, அவற்றையெல்லாம் முந்திக்கொண்டு நடைபெற வேண்டிய அல்லது நடத்தித் தீரவேண்டிய ஒரு பெருங்காரியமாக, ஒளியிழந்து இருட்டில் தவித்துக் கொண்டிருக்கின்ற இந்த மாநிலத்தை இருட்டிலேயிருந்து காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, கட்சி சார்பற்ற முறையில் தமிழ் மக்களாம் நம் அனைவருக்கும் உண்டு. அந்தப் பொறுப்பை ஆளவந்தாருக்கு - ஆட்சிச் சக்கரத்தை சுழற்ற முடியாமல், அகந்தைச் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருப் போருக்கு ஓர் எச்சரிக்கையாக, அண்ணா கற்றுத்தந்த அறவழிப் போராட்டத்தை வருகிற 18ஆம் தேதியன்று தமிழகமெங்கும் மாநிலம் முழுவதும் மாநகரங்கள், நகரங்கள், பேரூர், சிற்றூர், குக்கிராமங்கள் என்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நடத்துவதென்று செயற்குழுவில் முடிவெடுத்திருக்கிறோம். அதற்கான தீர்மானத்தை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன். இதோ அந்த ஆறாவது தீர்மானம்:- “தமிழகத்தில் ஏற்கனவே ஓரளவு மின் வெட்டுப் பிரச்சினை சில நேரங்களில் இருந்த போதிலும், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதைப்போல எந்தக் காலத்திலும் இப்படித் தமிழகத்தின் வாழ்க்கை முறையையும் பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிடும் வகையில் 16 மணிநேரம்,18 மணிநேரம் என்று மின்வெட்டு இருந்ததில்லை. மின் வெட்டுக் காரணமாகத் தமிழக ஜவுளித் துறையின் எதிர்காலம் இருளடைந்து, தினமும் 100 கோடி ரூபாய் வீதம் உற்பத்தி இழப்பு! குத்தாலம் எரிவாயு நிலையத்தில் ஜெனரேட்டர் இல்லாததால் மின் உற்பத்தி பாதிப்பு! காற்றாலை மின்சாரத்தை விற்றதில் 18 ஆயிரம் கோடி ரூபாய் வாரியத்துக்கு இலாபம் ஏற்பட்ட போதிலும், உற்பத்தியாளர்களுக்குப் பணம் தரப்படவில்லை!

தடையில்லாத மின்சாரம் கேட்டுத் தொழில் துறையினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்!

மின்வாரிய அதிகாரிகளை மின்வெட்டுக்காகப் பொதுமக்கள் சிறைப் பிடித்த சம்பவங்கள்!

மின்வெட்டுக் காரணமாக நூற்பாலைகள் வெளி மாநிலங்களுக்கு இடம்பெயர முடிவு!

மாநிலம் முழுவதும் மின்வெட்டு நேரம் குறித்து முறையான தகவல் அளிக்காதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!

அறிவை வளர்க்க வேண்டிய மாணவர்கள், அகல் விளக்கை வைத்துக்கொண்டு படிக்க வேண்டிய பரிதாபம்!

இவ்வாறு கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் உள்ள நாளேடுகள் எல்லாம் நடைபெறும் இந்த ஜெயலலிதா ஆட்சிக்கு “சான்றிதழ்” (?) வழங்கியுள்ளன.

மும்முனை மின்சாரம் முறையாக வழங்காத காரணத்தால், குறுவைப் பயிர்ச் சாகுபடி அறவே இல்லை என்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டு, சம்பாப் பயிராவது பிழைக்குமா என்ற கேள்விக்குறியோடு இதுவரை ஆறு விவசாயிகள் - இந்த ஆட்சியின் அவலத்துக்குத் தங்கள் இன்னுயிரைத் தாரைவார்த்து தற்கொலை செய்து கொண்டு மடிந்திருக்கிறார்கள்.

இந்த நிலைமைகளையெல்லாம் பற்றித் தமிழக அரசு ஏதாவது கவலைப்படுகிறதா? தி.மு. கழக ஆட்சியில் ஓரளவுக்கு மின்சார வெட்டு இருந்தபோது, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விடுத்தார், பதவியைவிட்டு உடனடியாக விலகும்படி ஆணையிட்டார், என்பதைத் தமிழ்நாடு மக்கள் நிச்சயமாக மறந்திருக்க மாட்டார்கள். நிலக்கரி இல்லாததால் மின் உற்பத்தி பாதிப்பு - ஜெனரேட்டர் இல்லாததால் மின் உற்பத்தி பாதிப்பு - மின் புழுதி நீக்க உபகரணங்கள் இல்லை, அதனால் மின் உற்பத்தி பாதிப்பு என்று தொடர்ந்து வரும் செய்திகள் மின்வெட்டினைச் சமாளிப்பதிலே இந்த அரசுக்கு உள்ள அக்கறையின்மையினைத்தான் வெளிப்படுத்துகின்றன.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான வேளாண்மை, வணிகம், சிறுதொழில் மற்றும்

[மூலம் இங்கு முடிகிறது — அச்சுப் பக்கம் 252 இல்லை. தொடர்ச்சி, நிறைவு, கையொப்பம், தேதி எதுவும் சேர்க்கப்படவில்லை.]

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 249–252. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்