அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3683

முரசொலி கடிதங்கள் · 3683

“வெள்ளை அறிக்கை” வெளியிட முன்வருவார்களா?

நாள் 17.12.2012சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3683. “வெள்ளை அறிக்கை” வெளியிட முன்வருவார்களா?

உடன்பிறப்பே,

தமிழகத்திலே நடைபெறும் ஜெயலலிதாவின் இருண்ட ஆட்சிக்கு எதிராகவும்; நிலவி வரும் வரலாறு காணாத மின்வெட்டைக் கண்டித்தும்; கழகத்தின் தலைமைச் செயற்குழு எடுத்த முடிவிற்கிணங்க நாளை தமிழகமெங்கணும் (தர்மபுரி மாவட்டம் தவிர்த்து) ஜனநாயக ரீதியான “அறப்போர் ஆர்ப்பாட்டம்” நடத்துவதாக முறைப்படி அறிவித்து, அதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் ஆங்காங்கே ஈடுபட்டிருப்பதை தொலைபேசி வாயிலாக வரும் செய்திகள் அறிவிக்கின்றன.

இரண்டு நாட்களாக நான் எழுதிய மடல்களைப் படித்திருப்பாய். மின்வெட்டுக் காரணமாக தமிழ்நாடே ஸ்தம்பித்துக் கிடக்கின்றது. அம்மையாரின் ஆட்சியிலே குறுவைப் பயிர் அறவே பொய்த்துப் போய்விட்டது. 15 லட்சம் ஏக்கர் சம்பாப் பயிரைக் காப்பாற்ற 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று கடந்த அக்டோபர் மாதத்தில் பேரவையில் முதலமைச்சர் முழங்கி, அதனை “அம்மா உத்தரவு” என்று அனைத்து ஏடுகளும் “போற்றிப்” பாடின. இன்று 12 மணி நேரமல்ல, 3 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் கிடையாது. கருகி வரும் சம்பாப் பயிரையாவது காப்பாற்ற தண்ணீரும் மின்சாரமும் கேட்டு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். இன்றைய நாளேட்டில் வந்துள்ள செய்திப்படி, “மின் தடையால் பருப்பு ஆலைகள் முடங்கின - விருதுநகரில் இழப்பு 13 கோடி ரூபாய்” என்றும் மேலும் “உற்பத்திக் குறைவால் தமிழகத்தில் அரிசி விலை ஏற்றம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டத் தலைவர் சுவாமிமலை விமலநாதன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாறன், தமிழக விவசாயிகள்

சங்க மாநிலச் செயலாளர் பெரம்பலூர் ராஜா சிதம்பரம் ஆகியோர், “இப்போதே வயல்களில் விவசாயிகள் ஆடுமாடுகளை விட்டு மேய்க்கத் தொடங்கி விட்டனர். வயல்கள் வெடித்துக் காணப்படு கின்றன. இந்த ஆட்சியில் எல்லாம் பாழாகிவிட்ட”தாகக் கூறியிருக்கிறார்கள்.

விவசாயிகள் போராட்டம் நடத்தினால், ஆட்சியிலே இருப்போர் அதைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை. நிலைமைகளைப் பற்றி அரசுத் தரப்பிலிருந்து விளக்கிடவில்லை. முதலமைச்சருக்கோ எத்தனையோ வேலைகள்! விவசாயிகளைப் பற்றியா கவலைப்பட முடியும் என்பார்கள். மின்துறைக்கு என்று ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, “ஜூன் மாதத்திற்குப் பிறகு மின் தட்டுப்பாடு என்பது வானத்தில் இருக்கலாம், தமிழகத்தில் இருக்காது. மேட்டூரில் இன்னும் பத்து நாட்களில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிவிடும்” என்று பேசியிருக்கிறார்.

அமைச்சர் குறிப்பிட்டுள்ள மேட்டூர் சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் என்று இன்றைய ஏடுகளிலேயே வேறொரு செய்தியும் வந்துள்ளது. அந்தச் செய்தியில் “நீர் மட்டம் 44 அடியாகக் குறைந்ததால், சுரங்க மின் நிலையம் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுரங்க மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படவில்லை. மேட்டூர் அணையின் சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சுரங்க மின் நிலையம் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், 200 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று வந்துள்ளது. மற்றொரு நாளிதழில் “மேட்டூர் மின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தம் - 8 ஆண்டுக்குப் பின் 5 கண் மதகில் நீர்திறப்பு” என்று செய்தி வந்துள்ளது. அமைச்சர் பேசியது உண்மையா? ஏடுகளிலே வந்துள்ள இந்தச் செய்தி உண்மையா?

ஆனால், துறையின் அமைச்சரோ; ஜூன் மாதத்திற்குப் பிறகு மின்வெட்டு வானத்தில்தான் இருக்கும் என்கிறார். முதல் அமைச்சரோ கடந்த ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதத் திற்குப் பதிலளித்தபோது, தற்போது உள்ள 3 மணி நேர மின்

வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம் என்றும், கடந்த ஆண்டு ஜூலை முதலே தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்றும் சொன்னார். அதே ஜெயலலிதா கடந்த மாதம் கூறும்போது, அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதாவது 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அமைச்சர் ஜூன் மாதத்திற்குப் பிறகு மின் வெட்டை வானத்தில் சென்று தேட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். முதலமைச்சர் சொல்வது உண்மையா? துறை அமைச்சர் சொல்வது உண்மையா?

அது மாத்திரமல்ல; இன்றைய நாளேட்டிலேயே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் திரு. கபிலன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “இன்னும் இரண்டு ஆண்டுகளில், மின்சாரத் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறார். முதலமைச்சர் சொன்னது உண்மையா? மூத்த அதிகாரி சொல்வது உண்மையா?

வரலாற்றிலேயே இல்லாத மின் வெட்டுக் காரணமாக தமிழகத்திலே உள்ள பெரிய தொழில்கள், சிறிய தொழில்கள் எல்லாம் வேறு மாநிலங்களை நோக்கிச் சென்றிட நேரம் பார்த்துக் கிடக்கின்றன. அப்படிச் சென்று விட்டால் அந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர் களின் கதி என்ன ஆவது? தற்போதே கோவை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரியில் உள்ள தொழிலாளர்கள், வேலையில்லாத காரணத்தால் அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடிச் சென்று விட்டார்கள். தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எப்போது மின்சாரம் வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலை. இந்த நிலைமைகளை எல்லாம் எடுத்து விளக்கிடத்தான் கழகத்தின் சார்பில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டு, தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

1967ஆம் ஆண்டுவாக்கில் பெரியவர், முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்கள் கழகத் தோழர்களின் தேர்தல் பணிகளைப் பார்த்துவிட்டு, “சிங்கிள் டீயைக் குடித்து விட்டு மணிக்கணக்கில் தேர்தல் பணியாற்றக் கூடியவர்கள் தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள்” என்று பாராட்டினார். அதிலே ஒரு சின்ன மாறுதல். தேர்தல் பணியாற்றுவதிலே மாத்திரமல்ல, தி.மு.கழகம் நடத்துகின்ற போராட்டங்களில் கலந்து கொள்ளப்

புறப்படுவதிலும் கழகத்தினர் வேறு யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை எத்தனையோ முறை நீ நிரூபித்துக் காட்டியிருக்கிறாய். அதனை மேலும் நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம்தான் நாளை நடைபெறும் அறப்போர் ஆர்ப்பாட்டம்.

மின் உற்பத்தி பற்றியும், மின் வெட்டு பற்றியும் நான் எழுப்பிய எத்தனையோ கேள்விகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் நேரடியாகப் பதில் சொல்லாமல் திசை திருப்பக் கூடிய வகையில் பதில்களைச் சொல்வது மட்டுமல்லாமல், கழகத்தையும், மத்திய அரசையும் பழி தூற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் மின் உற்பத்தி கிடைக்கப் போகிறது என்று ஆட்சியாளர்கள் பலமாகக் குரல் கொடுக்கிறார்களே, அந்த மின் உற்பத்திக்குக் காரணமே தி.மு. கழக ஆட்சிதான். கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள்தான் தற்போது மின் உற்பத்தியை அளிக்கப் போகின்றன. அதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கறிவார்கள். எனவே இனியும் அந்தக் குற்றச்சாட்டினைக் கூற முடியாது என்ற அளவில்தான் ஆளுங்கட்சிக்காரர்கள் மின் உற்பத்தி, மின் வெட்டு பற்றி நாம் வைக்கின்ற எந்தக் குற்றச்சாட்டிற்கும் பதிலளிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. அரசு தற்போது பதவிக்கு வந்து 19 மாதங்கள் ஆகிவிட்டன. எந்தக் காலத்திலும் இந்த அளவிற்கு தமிழகம் இருண்ட பூமியாக இருந்ததில்லை. மின்வெட்டுக் காரணமாக - தொழில் துறை, வேளாண்மைத் துறை, ஜவுளித் துறை, பொது மக்களின் அன்றாட வாழ்க்கை முறை என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பல முறை உறுதி மொழி வழங்கினாலும், அதில் எந்த உறுதிமொழியும் இதுவரையில் உருப்படியாக நிறைவேறவில்லை. மாறாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே இருந்த வேலை வாய்ப்புகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். - மேட்டூர் அணை வறண்ட நிலையில், அணைக்குள்ளேயே அங்குள்ள விவசாயிகள் சோளம் விதைத்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆலைகள் தொடர்ந்து மூடிக் கிடப்பதால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பாலும், வேலை வாய்ப்பு இழப்பாலும், தமிழகத்தின் பொருளாதாரமே ஜெயலலிதா ஆட்சியில் தலைகீழாகக் கவிழ்ந்து அழிந்து கொண்டிருக்கின்றது. - “ஓராண்டுக் காலத்தில் நூறாண்டு சாதனை

என்று ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வாரி இறைத்து, அதற்காக சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தைச் செலவழித்து நாட்டை நாசம் செய்தார்களே தவிர, எந்தத் துறையிலும் எழுச்சி இல்லை. அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் அடுக்கடுக்கான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைப் பற்றி நீதிமன்றங்களிலேயே பல வழக்குகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்திலே உண்மையான மின்சார நிலைமை என்ன? மின் வெட்டுப் பிரச்சினை எப்போது நீங்கும்? தி.மு.கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின்திட்டங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து மின்சாரம் எப்போது கிடைக்கத் தொடங்கும்? தற்போது அம்மையார் ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் என்னென்ன? இதைப்பற்றி எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான உண்மை விவரங்களைத் தெரிவிக்கின்ற வகையில், அ.தி.மு.க. அரசு உடனடியாக ஒரு “வெள்ளை அறிக்கை”யை அளித்திட முன்வருமா?

தமிழகத்து மக்களின் துன்ப துயரங்களை பிரதிபலித்து எதிரொலிக்கும் வகையில் நாளை நமது அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறட்டும்.

அன்புள்ள, மு.க. 17-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 255–259. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்