அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3686

முரசொலி கடிதங்கள் · 3686

அங்கும் - இங்கும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?

நாள் 25.12.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3686. அங்கும் - இங்கும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?

உடன்பிறப்பே,

டெல்லியில் பேருந்து ஒன்றில், 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மாணவி கற்பழிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு நீதி கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் மாணவர்கள் 100 பேர் காயமடைந்துள்ளனர். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் வீட்டிற்கு முன்பு மாணவர்கள் தர்ணா நடத்தியிருக்கிறார்கள். நள்ளிரவு 12.30 மணியளவில் திருமதி சோனியா காந்தி அவர்களே வீட்டிலிருந்து வெளியே வந்து, போராட்டம் நடத்திய மாணவர்களோடு தரையிலே அமர்ந்து, “நான் உங்களோடு இருக்கிறேன், இந்தப் பிரச்சினையில் விரைவிலே நீதி கிடைக்கும்” என்று ஒரு பெண்ணுக்கே உரிய மாண்பு குறையாமல் பதிலளித்திருக்கிறார். அதற்குப் பிறகும் போராட்டம் நடத்திய மாணவர்கள் விடிய விடிய கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அங்கேயே அமர்ந்திருந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் போலீஸ்காரர் ஒருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டம் நடத்திய மாணவர்கள் ஐந்து பேர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளையெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள். கோரிக்கைகள் அனைத்தையும் அனுதாபத்தோடு கேட்டுக் கொண்ட சோனியா காந்தி அவர்கள், அவர்களது முக்கிய கோரிக்கையான பாலாத்காரக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதை ஏற்கத் தயாரா

என்று உறுதி அளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் பிரச்சினையில் பொது மக்களின் கோபம் நியாயமானதுதான். இந்தக் கற்பழிப்பு வழக்கிலே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்களை விட்டு விட மாட்டோம்” என்று உறுதி கூறியிருக்கிறார்.

இந்தக் கற்பழிப்பு பற்றி விசாரணை நடத்தவும், பாலியல் பலாத்கார குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது பற்றி பரிந்துரைக்கவும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா அவர்கள் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழுவிலே இமாசல பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத், மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

மேலும் இந்த வழக்கில் டெல்லி உயர் நீதி மன்றம் தானாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டு, விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி டி. முருகேசன் அவர்கள் தலைமையிலான பெஞ்சு முன்பு டெல்லி போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை முழுமையாக இல்லை என்பதால், அனைத்து விவரங்களும் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யும்படி டெல்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் பேருந்தில் நடைபெற்ற கற்பழிப்பு பற்றி இவ்வாறு அனைத்து முனைகளிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் அங்கே போராட்டம் நின்ற பாடில்லை, தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கற்பழிப்பு எங்கே நடைபெற்றாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். அது டெல்லியிலே நடைபெற்றாலும் எதிர்க்க வேண்டியது தான், தமிழகத்திலே நடைபெற்றாலும் எதிர்க்க வேண்டியதுதான். ஆனால் தமிழகத்திலே நடைபெறுவது என்ன?

டெல்லியிலே கற்பழிப்புச் சம்பவம் நடைபெற்ற அடுத்த இரண்டாம் நாள், அதாவது 20-12-2012 அன்று தூத்துக்குடி

மாவட்டத்தில், செய்துங்க நல்லூரை அடுத்த கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். அவருடைய மனைவி இசக்கியம்மாள். அவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் புனிதா (வயது 13), இளைய மகள் ரோகினி (வயது 10). இதில் மாணவி புனிதா, நாசரத்தில் உள்ள மகளிர் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்களின் தந்தை சவுந்தரராஜன் ஓராண்டிற்கு முன்பு மறைந்து விட்டார். தாத்தா வீட்டில் தங்கிப் படித்து வந்த 13 வயதான, ஏழாம் வகுப்பு மாணவியான புனிதா பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பள்ளியில் விசாரித்தபோது அங்கும் வரவில்லை என்று கூறிவிட்டார்கள். காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.

21ஆம் தேதி காலையில் பள்ளி செல்லும் வழியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில், சீருடை அணிந்த மாணவி கலைந்த ஆடையோடு பிணமாகக் கிடப்பதாகச் செய்தி பரவியது. அந்த மாணவியின் முகத்தை பலவந்தமாக தாக்கியதற்கான காயங்களும், நகக் கீறல்களும் இருந்திருக்கின்றன. அவள் பள்ளிக்குச் சென்ற போது வழி மறித்து காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும், பின்னர் சுடிதாரின் துப்பட்டாவினால் அவளது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதும் வெளிப்பட்டது.

டெல்லியிலே கற்பழிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி நல்ல வேளையாக உயிரோடு இருக்கிறார். ஆனால் தமிழகத்திலே 13 வயதே நிரம்பிய, ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த புனிதா கற்பழிக்கப்பட்டதோடு, கொலையும் செய்யப்பட்டிருக்கிறார். புனிதாவின் கொலைக்காக கிளாக்குளம் கிராம மக்கள் சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியல் நடத்தியிருக்கிறார்கள். புனிதா படித்த பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு போராட்டத்திலே ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கற்பழித்தவர்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் புனிதாவைக் கற்பழித்தவனையும் காவலர்கள் கைது செய்துள்ளனர். ஆனால் டெல்லியிலே மத்திய அரசும், அந்த மாநில அரசும் அங்கே நடைபெற்ற சம்பவத்திற்காக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில்,

“தமிழகத்திலே ஓர் அரசு இருக்கிறதா? கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏழை புனிதாவிற்காக தமிழக அரசு சார்பில் ஏதாவது நடவடிக்கை உண்டா? டெல்லியில் நடைபெற்றதும் கற்பழிப்பு தான், தமிழகத்திலே நடைபெற்றதும் கற்பழிப்பு தானே? டெல்லி சம்பவத்திற்காக பிரதமரே அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தமிழகத்திலே கொலையே செய்யப்பட்ட புனிதாவின் குடும்பத் தாருக்கு அரசின் சார்பில் யாரோ ஒரு அமைச்சராவது சென்று ஆறுதல் கூறியது உண்டா? தமிழகத்திலே அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழ்ச்சாதி என்பதால் புனிதாவின் கொலை சாதாரணமாகி விட்டதா?” இந்தக் கேள்வி என் நெஞ்சில்தான் எழாது!

பாலியல் குற்றங்கள் கொடுமையானவை மட்டுமல்ல; கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்பதிலே கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. எனினும் குற்றத்தின் தன்மை ஒரேமாதிரியாக இருக்கும் போது, இடத்துக்கு இடம், அதனைக் கண்டித்திடும் தொனியில் சில அரசியல் கட்சிகள், வேறுபாடு காட்டுவது விநோதமாக மட்டுமல்ல - வேதனை தருவதாகவும் இருக்கிறது. உரிய நடவடிக்கைகள் அனைத்தும் டெல்லியிலே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்; மத்திய அரசைத் தொடர்ந்து செய்யப்படும் விமர்சனம் துளியேனும் குறையவில்லை. ஆனால் தமிழகத்திலோ - நமக்கு வெகு அருகில் உள்ள ஊரிலே நடந்த குற்றத்தை ஆட்சியாளர்கள் வெளிப்படையாகக் கண்டித்திட முன்வராத நிலையிலும் கூட சில அரசியல் கட்சிகள் அதுகுறித்து உரிய அளவுக்குக் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் கவலை தருவதாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. சமூக வக்கிரங்களைக் கண்டிப்பதில், அரசியல் கலப்பு கூடாது என்பதே எனது கருத்து!

உதாரணத்திற்கு ஒன்றைக் கூற வேண்டுமேயானால், இன்றைய “ஜனசக்தி” நாளேட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் ஒரு நீண்ட கட்டுரை “விம்மி அழாதீர், பொங்கி எழுவீர்” என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை முழுவதுமே டெல்லியிலே நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்திற்காக அனைவரும் பொங்கி எழ வேண்டும் என்பதைப் பற்றித்தான். ஆனால் அந்த நீண்ட கட்டுரையில் ஒரு சிறு பத்தி மட்டுமே, எழுத வேண்டியிருக்கிறதே

என்பதற்காக மாணவி புனிதா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பற்றி எழுதியிருக்கிறார். அந்த சிறு பகுதியிலே கூட, பரிதாபத்திற்குரிய அந்தத் தமிழ் மாணவியின் பெயரை எழுதக்கூட அவருக்கு விருப்பமில்லை போலும்!

தா. பாண்டியன் மாத்திரமல்ல; நம்முடைய திரைபடத் துறையைச் சார்ந்த ஒரு சிலர் டெல்லியில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் குதித்து மாணவ, மாணவிகளோடு ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களுக்குக்கூட தூத்துக்குடி மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட புனிதாவைப் பற்றிய ஞாபகம் வரவில்லையே என்பதுதான் வருத்தத்திற்குரியதாகும். ஆனால், நான் எதிர்பார்த்ததைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘தீக்கதிரில்’ டெல்லி சம்பவத்தையும், தூத்துக்குடி நிகழ்ச்சியையும் கண்டித்து தலையங்கம் ஒன்றைத் தீட்டியிருக்கிறார்கள்.

டெல்லியிலே கற்பழிப்பு என்றால் போராட்டம் - தமிழகத்திலே கற்பழித்துக் கொலையும் செய்திருக்கிறார்கள் என்கிறபோது அதைப் பற்றி யாரும் கவலைப்பட முன்வராத நிலையில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை 26-12- 2012 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால், இந்தக் கொடுமையான வன்முறையைக் கண்டிக்கும் வகையில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை கழகத்தின் தலைவன் என்ற முறையிலே அறிவித்திருக்கிறேன்.

எனது அறிக்கையைப் பார்த்தவுடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர், சற்குணப் பாண்டியன் ஓடோடி வந்து, கழக மகளிர் அணி சார்பில் தமிழகத் தலைநகரிலேயே உண்ணா விரதம் இருப்பதாக இருந்தோம், தலைவர் அறிக்கையைப் பார்த்தவுடன் தூத்துக்குடி புறப்படுகிறேன், கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துகிறோம் என்று கூறி விட்டுச் சென்றார்.

தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் பெரியசாமி தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு, ஆர்ப்பாட்டத் திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்ததோடு, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி புனிதாவின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறியதாகவும், கழகத்தின் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் உதவி நிதி

அளித்ததாகவும் தெரிவித்தார். மாணவர் அணியின் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி எனது அறிக்கையைப் பார்த்தவுடன் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

நாளையதினம் தூத்துக்குடியில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திருவை குண்டம் புனிதா, அ.தி.மு.க. ஆட்சியில், கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கழகம் நடத்துகின்ற போராட்டம் இது. இந்தப் போராட்டத்தை எப்போதும்போல நமது கழக உடன்பிறப்புகள் வெற்றிகரமாக நடத்திடுவார்கள், நடத்திட வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன்.

அன்புள்ள, மு.க. 25-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 271–276. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்