அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3687

முரசொலி கடிதங்கள் · 3687

கர்நாடகம் தடுக்கும் தண்ணீரும்; தமிழகம் வடிக்கும் கண்ணீரும்!

நாள் 27.12.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3687. கர்நாடகம் தடுக்கும் தண்ணீரும்; தமிழகம் வடிக்கும் கண்ணீரும்!

உடன்பிறப்பே,

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு இந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். மீண்டும் சில விவரங்களைத் தெரிவித்து 22ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு கடிதங்களுக்கும் முன்பாகவே, 13-12-2012 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு நடைபெற்று; அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், உச்ச நீதி மன்றம், காவிரி நதி நீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக்குழு, மத்திய அரசு ஆகிய அனைத்தும் தமிழகத்திற்குத் தண்ணீர் விடுமாறு தொடர்ந்து வலியுறுத்தியும், வரவிருக்கின்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதிலே கொண்டு, கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுத்து வருவதை வன்மையாகக் கண்டித்திருக்கிறோம். மேலும் அதே தீர்மானத்தில், தண்ணீரைத் தர வேண்டிய பொறுப்பிலே உள்ள கர்நாடக மாநில அரசு, இந்தக் கால கட்டத்திற்குள் மூன்று முறை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி முடிவுகளை எடுக்கின்ற நிலையில், தண்ணீரைப் பெற வேண்டிய நிலையிலே உள்ள தமிழக அரசு யாரையும் கலந்தாலோசிக்காமல், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்திலும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டுமென்று வெளிப்படையாக வலியுறுத்தித் தெரிவித்த பிறகும், அ.தி.மு.க. அரசு அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஜனநாயக வழிமுறைகளை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு தன்னிச்சையாக முடிவெடுப்பது பற்றியும் வருத்தத்தைத் தெரிவித்திருந்தோம்.

கழகத்தின் செயற்குழு நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தை கர்நாடக மாநில அரசும் காதில் போட்டுக் கொள்ளவில்லை, ஏன் நமது தமிழக அரசே கவனத்தில் கொள்ளவில்லை. இங்கே இவர்களே கேட்கவில்லை என்கிறபோது, அங்கே அவர்கள் எங்கே கேட்கப் போகிறார்கள்? அதற்குப் பிறகும் தி.மு. கழகம் சும்மாயிருந்து விடவில்லை. 17-12-2012 அன்று நான் விடுத்த அறிக்கையில், டெல்டா மாவட்டங்களை “பேரிடர் பாதித்த மாவட்டங்களாக” தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென்றும், கருகிய சம்பா பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கிட வேண்டு மென்றும், தற்கொலை செய்து கொண்டு இறந்த விவசாயிகளின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதோடு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் அன்றையதினமே (17-12-2012) பிரதமரைச் சந்தித்து நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அரசிதழிலே வெளியிடச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளவும் செய்தேன். அவர்களும் அவ்வாறே பிரதமரைச் சந்தித்து முறையிட்டபோது, அதுகுறித்து உரிய முறையில் பரிசீலித்து ஆவன செய்யப்படும் என்று பிரதமரும் உறுதி அளித்திருக்கிறார்.

கழகத்தின் சார்பில் இந்த முயற்சிகள் எல்லாம் எடுத்த பிறகு, நமது மாநில முதல் அமைச்சர் அவர்கள் 20ஆம் தேதி ஒரு கடிதம், 22ஆம் தேதி ஒரு கடிதம் என்று பிரதமருக்கு எழுதியிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தி.மு. கழக ஆட்சியிலேதான் 5-2-2007 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பினை தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் வரவேற்று அறிக்கை வெளியிட்டனர். இறுதித் தீர்ப்பு பற்றி அப்போதே நான் கூறும்போது, “தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் உள்ள விவசாயப் பெருமக்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டால்தான் மகிழ்ச்சி அடைவேன். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு காரணமாக கர்நாடகத் துக்குத் தண்ணீர் குறைந்து விடவுமில்லை, தமிழகத்துக்கும் தண்ணீர் அளவு அதிகமாக உயர்ந்து விடவுமில்லை. இதனை

இரு மாநிலத்தாரும் சிந்தித்தால் அமைதிக்கு வழி காணலாம்” என்று கூறினேன். ஆனால் அ.தி.மு.க.வின் சார்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இறுதித் தீர்ப்பை “ஏற்க முடியாத தீர்ப்பு” என்றார். நான் “ஆறுதல் தருகிறது” என்று சொன்னதை “மகிழ்ச்சி தருகிறது” என்று சொன்னதாக ஜெயலலிதா அவரே கற்பனை செய்து கொண்டு, “அது வருந்தத்தக்கது” என்று அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் ஜெயலலிதா, “கருணாநிதியால் காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்ப்பை முழுமையாகப் பெற்றுத் தர முடியவில்லை. இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக வந்துள்ளது. இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என்று எப்போதும் போல நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளிவந்த போது என்னை ராஜினாமா செய்ய வேண்டுமென்று அறிக்கை விடுத்தார். தற்போது அந்த இறுதித் தீர்ப்பைத்தான் அரசிதழிலே வெளியிட வேண்டுமென்று பிரதமருக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதுகிறார். ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை செப்டம்பர் 17ஆம் தேதிதான் அ.தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்டது. அதனால் குறுவை சாகுபடி இந்த ஆண்டு பொய்த்துப்போய், அறவே இல்லை என்று ஆயிற்று. இந்த ஆண்டு இவ்வாறு தாமதமாக அணை திறக்கப்பட்டதால், பிப்ரவரி மாதம் இறுதி வரை நீர் தேவைப்படும் என்று விவசாயிகள் கோரியிருந்தனர். டெல்டா பாசனத்திற்கு வழக்கமாக ஜனவரி 28ஆம் தேதி வரை அணை திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அ.தி.மு.க. ஆட்சியில் ஜனவரி மாதம் பிறப்பதற்கு முன்பாகவே டிசம்பர் 21ஆம் தேதி இரவு 8 மணியோடு பாசனத்திற்கு அணை திறப்பு நிறுத்தப்பட்டு கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விவசாயிகள் என்ன செய்யப் போகிறார்களோ, வாழ்வாதாரத்தை எப்படித் தேடிக் கொள்ளப் போகிறார்களோ, வாழ்க்கையை எப்படி நகர்த்திடப் போகிறார்களோ, அடமானம் வைத்த நகைநட்டுகளை எப்படி மீட்கப் போகிறார்களோ தெரியவில்லை. இதற்காக யார் ராஜினாமா செய்வது? நடுவர் மன்றம் அமைந்திடவும், நடுவர் மன்றத்தின் மூலமாக இடைக்காலத் தீர்ப்பு பெற்றிடவும் காரணமாக இருந்த தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டுமென்று அவசரப்பட்டு அறிக்கை விட்ட ஜெயலலிதா இப்போது என்ன சொல்கிறார்? 10-2-2007 அன்று நான் விடுத்த விளக்க அறிக்கையில்,

“நீர்ப்பாசனத் துறை வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்து பேசி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விவாதிக்கப்படும் என்றும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்கிட மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கும், சட்ட ரீதியாக நல்ல தீர்வு காண்பதற்கும் தமிழக அரசு தயாராக” என்றும் கூறியிருந்தேன்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த பிறகும் கூட, தி.மு. கழக அரசு அந்தக் கட்டத்திலும், இந்த இறுதித் தீர்ப்பு குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க விரும்பாமல், 19-2- 2007 அன்று, ஜனநாயக ரீதியாக அனைத்துக் கட்சித் தலைவர் களின் கூட்டத்தைக் கூட்டியது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். குறிப்பாக அ.தி.மு.க. சார்பில் ஓ. பன்னீர்செல்வம், என்.ஜோதி இருவரும் பங்கேற்றார்கள். விரிவான விவாதத்திற்குப் பிறகு தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் காவிரி நடுவர் மன்றத்தின் முன் தமிழ்நாடு அரசு விளக்கம் கோரி ஒரு மனுவினைத் தாக்கல் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அது மாத்திரமல்ல; மீண்டும் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் 15-4-2007 அன்று மறு ஆய்வு மனுவில் வலியுறுத்தப்பட வேண்டிய அம்சங்கள் குறித்துக் கலந்தாலோசிப்பதற்காகவும், விவாதிப்பதற்காகவும் கழக ஆட்சியில் என்னுடைய தலைமையில் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்திலும் அ.தி.மு.க. சார்பில் ஓ. பன்னீர்செல்வம் அவர்களும் வழக்கறிஞர் என். ஜோதி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இவ்வாறு 2007ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில் இறுதித் தீர்ப்பு வெளிவந்த போது, என்ன மேல நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து வைத்து, கருத்துக்களைப் பெற்று விவாதித்து, அதன் பிறகே முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகள் எடுத்துச் சொல்லியும்கூட, அவ்வாறு எந்த அனைத்துக் கட்சிக் கூட்டமும் கூட்டப்படாமல், தமிழக முதலமைச்சர் தான் நினைத்ததே முடிவு, தான் எடுப்பதே நடவடிக்கை என்பதைப்போல, மக்களாட்சி மாண்புகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்பட்டு வருகிறார்.

ஜெயலலிதா எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திலே வறட்சி இயற்கையாகவே வருகிறது. சம்பா பயிர் கருகிய காரணத்தால் இதுவரை பத்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் முதல் அமைச்சர், “அவர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டு மறையவில்லை, இரண்டு மூன்று பேர்தான் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்” என்று சொல்கிறார்.

நேற்றையதினம் திருத்துறைப்பூண்டியில் கோபாலகிருஷ்ணன் என்ற விவசாயி தூக்கில் தொங்கி உயிர் விட்டிருக்கிறார். ஆனால் அங்கேயுள்ள காவல் துறை வழக்குப் பதிவையே மறுக்கிறதாம். என்ன செய்வது? மேலிடத்தின் எண்ணத்தை அறிந்து அதன்படியே அவர்கள் நடக்க வேண்டிய நிலைமை உள்ளது.

2002-2003ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்த போதும், இது போன்ற வறட்சி நிலை தமிழகத்திலே ஏற்பட்டது. மழை இல்லை. இன்னும் சொல்லப் போனால் டெல்டா மாவட்டங்களில் எலிக்கறி சாப்பிடுகின்ற நிலை. அதற்கான புகைப்படங்கள் எல்லாம் அப்போது ஏடுகளில் வெளிவந்தன. குறுவை சாகுபடிக்கே தண்ணீர் வரவில்லை. சம்பா பயிரும் கருகியது. வறுமை தாங்காமல் மன்னார்குடியில் பாலையக் கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்ற விவசாயி அரசைக் குறை கூறி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்தக் கடிதத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்று அப்போது இருந்த போலீசார் படாதபாடுபட்டனர். மன்னார்குடி தொகுதியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் சிவபுண்ணியம் இல்லத்திற்கு நள்ளிரவில் சென்ற போலீசார் சோதனை என்ற பெயரில் அவரது வீட்டை அடித்து உடைத்து வெறியாட்டம் போட்டனர்.

சம்பா பயிர் கருகியதின் காரணமாக 2003ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டனர். 26-1-2003 தேதிய “ஜூனியர் விகடன்” வார இதழில் எலிக்கறி கூடக் கிடைக்காமல் ஜெயலலிதா ஆட்சியில் விவசாயிகள் நத்தைகள் உண்ணும் பரிதாபத்தைப் புகைப்படமாகவே எடுத்து பேட்டிகளையும் பெற்று வெளியிட்டது.

தற்போதும் அதே நிலை என்ற போதிலும், அதனை மறைக்கவும், திசை திருப்பவும் இந்த ஆட்சியினர் முயற்சிக்கிறார்கள். இயற்கை பொய்க்கின்ற நிலை எல்லா ஆட்சிக் காலங்களிலும் ஏற்படலாம். அதனை மறைக்கின்ற முயற்சியிலே அரசாங்கம் ஈடுபடுவதுதான் மாபாதகம்.

தமிழக அரசைப் பொறுத்தவரையில் வருவாய் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் தமிழ் மாநிலத்திலே உள்ள விவசாயிகளைச் சாக விடாமல் காப்பாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாண வேண்டிய பொறுப்பு அரசுக்குத் தான் உள்ளது.

எனவே அரசு இதிலே ஈர நெஞ்சத்தோடும், பெருந்தன்மையோடும் செயல்பட வேண்டும். இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்குத் தாராளமாக இழப்பீட்டுத் தொகை வழங்கிட உடனடியாக முன்வர வேண்டும்; அதைப் போலவே வேலை இழந்து வாடும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்; தற்கொலை செய்து உயிர்விட்ட விவசாயிகளின் எண்ணிக்கையை மறைக்க முற்படாமல், அவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையைத் தாமதமின்றி வழங்கிட வேண்டும்; அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பணி அளித்திட வேண்டும். அதுதான் ஒரு நல்ல ஜனநாயக அரசின் கடமை. பரிதவிக்கும் மக்களுக்குப் பரிவு காட்டுவதே பண்பாடு!

அன்புள்ள, மு.க. 27-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 277–282. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்