முரசொலி கடிதங்கள் · 3689
அவமானம்; யாரால் என்பதுதான் கேள்வி!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3689. அவமானம்; யாரால் என்பதுதான் கேள்வி!
உடன்பிறப்பே,
“ஜெயலலிதா வெளிநடப்பு” - அனைத்து நாளேடுகளிலும் இன்று தலைப்புச் செய்தி, முக்கியச் செய்தி இதுதான்! தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தமிழக முதலமைச்சர் டெல்லி செல்கிறார் என்றெல்லாம் ஒரு வார காலமாக விளம்பரப்படுத்தப்பட்டு, நேற்றையதினம் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் பத்து நிமிடத்திற்கு மேல் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்து, அது தமிழக மக்களை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டதாகக் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். இந்தச் செய்தியைச் செய்தியாளர்கள் நேற்றையதினமே என்னிடம் வந்து பரபரப்பாகத் தெரிவித்த போது, ஜெயலலிதாவையோ, தமிழகத்தையோ மத்திய அரசு அவமானப்படுத்தியிருந்தால், அதை நான் கண்டிக்கிறேன், ஆனால் என்ன நடந்தது என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி அதுவும் ஏடுகளிலே வந்துள்ளது.
தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டம், முதலமைச்சர்கள் மாநாடு போன்றவற்றில் பொதுவாக மாநிலங்களின் அகர வரிசையிலேதான் முதலமைச்சர்களைப் பேசுவதற்கு அழைப்பார்கள். அதிலே சில நேரங்களில் வயதில் மூத்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமையும் வழங்குவார்கள். அதுபோல் நான் முதல்வராக இருந்தபோது எனக்கு வழங்கியிருக்கிறார்கள். நேற்றைய தினம் அகர வரிசையில்தான் பேசுவதற்கு முதலமைச்சர்கள் அழைக்கப்படுவதாக இருந்தபோது, தமிழக முதலமைச்சரின் பெயர், தமிழ்நாடு என்பதில் ஆங்கில எழுத்தான “டி” என்று இருப்பதால் கடைசியாகப் பேச வேண்டியிருக்கும் என்பதால், தான் உடனடியாகச் சென்னைக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது என்று கூறி, முதலிலே பேச வேண்டுமென்று கோரியதன் பேரில் அதனை ஏற்றுக்கொண்டு, பிரதமர் தலைமை உரையாற்றிய பிறகு, முதலில் பேசுவதற்குத் தமிழக முதல் அமைச்சரைத்தான் அழைத்திருக்கிறார்கள்.
பத்து நிமிடம் பேசியவுடன் மணி அடிக்கப் பட்டது என்றும், அது தனக்கும், தமிழகத்திற்கும் ஏற்பட்ட அவமானம் என்றும் செய்தியாளர்களிடம் தமிழக முதல் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 30க்கு மேற்பட்ட முதல் அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் உட்பட 40 பேர் பேச வேண்டியிருப்பதால், அனைவரும் பேசுவதன் அவசியத்தைக் கருதி ஒவ்வொருவருக்கும் பத்து நிமிடம் என்றால் கூட 400 நிமிடம், அதாவது அனைவரும் பேசுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும் என்பதால் முன்கூட்டியே ஒவ்வொருவரும் பத்து நிமிடத்திற்குள் தங்கள் பேச்சினை முடித்துக் கொள்ள வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் பத்து நிமிடத்திற்கு மேல் பேச வேண்டுமென்று விரும்பியிருந்தால் முன்கூட்டியே தனக்குக் கூடுதலாகச் சற்று நேரம் ஒதுக்கித் தர வேண்டுமென்று கோரியிருக்கலாம். அல்லது தன் பேச்சிலே முக்கியமான பகுதிகளை மட்டும் சுருக்கிப் பத்து நிமிடத்திற்குள் பேசிவிட்டு, மற்ற பகுதிகளைப் பேசியதாக அவையின் நடவடிக்கைகளிலே சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டு, ஏடுகளுக்கு முழுப் பேச்சினையும் வழங்கியிருக்கலாம். ஆனால் தமிழக முதலமைச்சர் பத்து நிமிடம் முடிந்து மணி அடித்தவுடன் வெளியேறியிருக்கிறார். மணி அடித்த காரணத்தினாலே பேச்சினை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டுமென்பது இல்லை. மேலும் சில மணித்துளிகள் தொடர்ந்து தன் பேச்சினைத் தொடர்ந்து அதன் பின்னர் முடித்துக் கொண்டிருக்கலாம். அதை யாரும் தடுத்திருக்கப் போவதில்லை. ஆனால் நம்முடைய முதல் அமைச்சர் அவருக்கே உரிய முன் கோபம் காரணமாக வேகவேகமாக வெளியே வந்து நிருபர்களிடம், தமிழக மக்களை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டதாக ஒரு குற்றச்சாட்டினைத் தெரிவித்துவிட்டுத் தனி விமானத்தில் ஏறிச் சென்னைக்கு வந்துவிட்டார்.
பேச்சினை விரைவாக முடிக்கச் சொல்வதற்காக மணி அடிப்பது என்பது ஒன்றும் அவமானகரமான காரியமல்ல. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், தமிழகச் சட்டப்பேரவை நடைபெறுகிறதே, அங்கே மணி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் அப்போது மணி அடிப்பார்கள். அதனைக் காதிலே வாங்கிக் கொள்ளாமலே உறுப்பினர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். அது பல ஆண்டுக் காலமாக எல்லா ஆட்சிக் காலத்திலும் இருந்து வரும் நடைமுறை.
அதை அவமானகரமானது என்று யாரும் கூறுவது கிடையாது. அது மாத்திரமல்ல; பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்படவிருக்கையில், “இன்றையதினம் இத்தனை பேர் பேசவேண்டியிருக்கிறது, அதற்குப் பிறகு முதல் அமைச்சர் பதில் சொல்ல வேண்டும், எனவே பேசுகின்ற ஒவ்வொரு உறுப்பினரும் ஐந்து நிமிடத்திற்குள் தங்கள் பேச்சினை முடித்துக் கொள்ள வேண்டும்” என்று பேரவைத் தலைவரே கூறுவார். இப்போதும் அந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. அதிலே எந்தத் தவறும் கிடையாது. ஆனால் முதல் அமைச்சர், பள்ளிகளிலே மணி அடித்து பிள்ளைகளை உட்கார வைப்பதைப் போல என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் பேரவையில் மணி அடித்து உட்கார வைப்பதும் பள்ளிகளிலே மணி அடித்துப் பிள்ளைகளை உட்கார வைப்பதைப் போலத்தானா?
ஒரு சில நாட்களுக்கு முன்பு அம்மையார், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டினை நடத்தியபோது, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அரை மணி நேரம், முக்கால் மணி நேரம் என்று தொடர்ந்து தங்கள் மாவட்டத்திற்கு தமிழக அரசு அது செய்யவில்லை, இது செய்யவில்லை என்று பட்டியலிட்டுக் கொண்டே இருந்தால், மாநாடு எப்போது முடியும்?
முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த பேட்டியிலேயே, அவர் பேசுவதற்கு முன்பாகவே ஒவ்வொரு முதல் அமைச்சருக்கும் பத்து நிமிடங்கள் தான் கால அவகாசம் அளிக்கப்படும், அந்த பத்து நிமிடங்கள் முடிந்து விட்டால் ஒரு மணி அடிக்கப்படும் என்று சொன்னார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். அப்படியானால் அவ்வாறு தெரிவிக்கப்பட்டவுடனேயே, பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாகவே, பத்து நிமிடம் என்பது ஒவ்வொரு முதல் அமைச்சருக்கும் நேரம் போதாது, அதனை அதிகப்படுத்த வேண்டும், மேலும் முதல் அமைச்சர்கள் பேசும்போது முடிக்கச் சொல்லி மணி அடிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? அப்படிச் சொல்லியிருந்தால் நேரத்தை அதிகப்படுத்தி, மணி அடிக்காமல் இருந்திருப்பார்கள் அல்லவா? தமிழக முதல் அமைச்சர் அதைச் செய்தாரா என்றால் இல்லை.
பொதுவாக நேற்றையதினம் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டம் 12வது ஐந்தாண்டுத் திட்ட வரைவினை இறுதி செய்வதற்கான கூட்டம். அந்தக் கூட்டத்தில் அந்தத்
திட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும், எதை மாற்ற வேண்டும் என்பது பற்றி மட்டும் பேசினால் குறிப்பிட்ட பத்து நிமிடம் போதும். ஆனால் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவது போல் அரசியல் ரீதியாக மத்திய அரசு அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்று அந்தக் கூட்டத்தில் பேசுவதென்றால் நேரம் போதாதுதானே?
தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களிடம், மத்திய அரசு தனக்கு ஆதரவாக இல்லாத - எதிர்ப்புத் தெரிவிக்கும் முதல் அமைச்சர்களைப் பேச அனுமதிக்காமல் இப்படியொரு புதிய அடக்குமுறையைத் தொடங்கியிருக்கிறார்கள், அதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். கூட்டத்தில் முதலில் பேசியதே தமிழக முதல் அமைச்சர்தான். அந்த நிலையில் மத்திய அரசு தனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் அமைச்சர்களுக்கு மட்டும் நேரத்தைக் குறைத்து, ஆதரவு தெரிவிக்கும் முதல் அமைச்சர்களுக்கு நேரத்தை அதிகப்படுத்திக் கொடுத்ததாக எவ்வாறு பழி சுமத்திட இயலும்? மத்திய அரசின் சார்பில் எல்லா முதல் அமைச்சர்களுக்கும் ஒரே அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா அவர்கள், காங்கிரஸ் மாநில முதல்வர்கள் பேசும்போதும் பத்து நிமிடம் முடிவடைந்தவுடன் மணி அடிக்கப்பட்டது என்று தெரிவாக்கியிருக்கிறார். எனவே மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது என்ற குற்றச்சாட்டும் சரியானதல்ல. மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமார், “சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட முதல்வர்கள் பேச வேண்டும். ஒருவருக்கு பத்து நிமிடம் என்றாலே 5 மணி நேரத்துக்கு மேலாகும். ஆகையால் தமிழக முதல்வர் தெரிவிக்கும் காரணம் ஏற்கும்படியாக இல்லை. மாநிலத்தின் குரல் வளையை மத்திய அரசு நெரித்து விட்டது என்று ஜெயலலிதா கூறுவது தவறு” என்று சொல்லியிருக்கிறார்.
நமது தமிழக முதல் அமைச்சர் வெளி நடப்புச் செய்வது இப்போது தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்திலிருந்து மாத்திரமல்ல; அண்மையில் பெங்களூரில் காவிரிப் பிரச்சினைக்காகக் கர்நாடக முதல் அமைச்சரும், தமிழக முதல் அமைச்சரும் கலந்துகொண்ட கூட்டத்திலிருந்தும் இப்படித்தான் நம்முடைய முதல் அமைச்சர் வெளிநடப்பு செய்துவிட்டு, சென்னை திரும்பினார். ஏன் காவேரி நதி நீர் ஆணையக் கூட்டம் ஏற்கனவே ஒரு முறை நடந்தபோது,
அங்கிருந்தும் இப்படித் தான் வெளிநடப்புச் செய்தார். எனவே வெளிநடப்பு செய்திருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் வெளி நடப்புச் செய்துவிட்டு மத்திய அரசு மீது சகட்டுமேனிக்குக் குற்றச்சாட்டுகளைக் கூறுவது முறையானதுதானா?
தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்காததற்குக் காரணம் ஒரு குடும்பத்தினர் நடத்தும் டி.வி. ஒளிபரப்பு சேவைக்குச் சாதகமாக செயல்பட வேண்டும் என்பதுதான் காரணம் என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்ட உரையில் தமிழக முதல் அமைச்சர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதைப்பற்றி ஜெயலலிதா அங்கே குதர்க்கமாக உரையாற்றுவதற்கு முன்பாகவே மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி அவர்கள் தெளிவாகப் பதிலளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்கள் இதுபற்றி அவரிடம் கேள்வி கேட்டபோது, “தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் மயமாக்கலுக்கான உரிமம் வழங்குவது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைப்படிதான் மத்திய அரசு முடிவு எடுக்கும். கேபிள் டி.வி. ஒளிபரப்புச் சேவையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக் கூடாது என்று டிராய் பரிந்துரை செய்திருக்கிறது. எனினும் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் மயமாக்கலுக்கான உரிமம் வழங்குவதற்காக டிராயின் பரிந்துரையை மறு பரிசீலனை செய்யும்படி அந்த அமைப்பைக் கேட்டுள்ளேன்” என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க நேரம் கேட்டதாகவும், தரப்படவில்லை என்றும் ஜெயலலிதா நிருபர்களிடம் நேற்று கூறியிருக்கிறார். ஆனால் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி அவர்கள், இதுகுறித்து அ.தி.மு.க. வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிடம் நேரில் முறையிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
மத்திய அரசு சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் கூறவில்லை. நான் முதல் அமைச்சராக இருந்தபோது பல முறை தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போதும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறேன். உதாரணத்திற்கு இரண்டைத் தெரிவிக்கிறேன்.
1969ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக ஆன பிறகு முதல் முறையாகத் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில்
கலந்து கொண்டேன். அப்போது என்னுடன் நிதியமைச்சர் மதியழகன் அவர்களும் வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் நான் பேசும்போதுதான் மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய வேண்டும் என்று கூறினேன். அப்போது யு.என்.ஜ. “இந்தக் கூட்டத்திலேயே மத்திய மாநில அரசுகளின் உறவு பற்றி யோசனை கூறியது தமிழக முதல்வர் ஒருவர் தான்” என்று குறிப்பிட்டிருந்தது. அந்தக் கூட்டத்திலே தான் “வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும்” என்று நான் பேசி, மத்திய நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அதை எதிர்த்துக் காரசாரமாகப் பேசினார். ஆனால் பிரதமர் இந்திராகாந்தி ஒருசில மாதங்கள் கழித்து 14 வங்கிகளை தேசியமயமாக்கி அறிவித்து, அதற்காக அம்மையார் அவர்களைச் சென்னைக்கு வரவழைத்துப் பாராட்டு விழா நடத்தினேன்.
அடுத்து 21-3-1970 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டபோது, “சேலத்திற்காக பல ஆண்டுக் காலம் போர்க்குரல் எழுப்பிய நாங்கள் தமிழகத்தில் இன்று ஆளுங்கட்சியாக வந்திருக்கிறோம். ஆனால் சேலம்தான் இன்னும் வரவில்லை. சேலத்தைப் பற்றிய அறிவிப்பைத் தமிழ்நாடு மிகுந்த பரபரப்போடும், உணர்ச்சியோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆசையில் கல்லைப் போடாமல் சேலம் திட்டத்திற்கான அடிக்கல்லைப் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். பிரதமருக்கு நான் இறுதியாகவும், உறுதியாகவும் கூறிக் கொள்வேன். இந்தக் கூட்டத்தில் சேலம் உருக்காலைத் திட்டத்தைப் பற்றித் தங்களது அறிவிப்புத் தேவை. இன்னமும் அறிவிக்காமல் இருப்பதன் நோக்கமென்ன? யார் ஆட்சிக்கு வந்தபிறகு அறிவிக்கலாம் என்று இருக்கிறீர்கள்? கூடுதலாக மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ள 175 கோடி ரூபாய் எல்லா மாநிலங்களுக்கும் எங்களுடைய தமிழ்நாட்டிற்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். வறட்சிப் பகுதிகளில் வேலை வாய்ப்புக்கு ஒதுக்கப்படும் நூறு கோடி ரூபாயில் தமிழ் நாட்டை வஞ்சிக்கக் கூடாது. இந்த மூன்றிற்கும் தங்களிடமிருந்து ஒப்புதல் கிடைக்காத வரையில் இந்தத் திட்டத்தை நான்கு கோடி தமிழ்மக்களின் சார்பில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும், திட்டத்திற்கான சம்மதம் தர முடியாது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினேன்.
அதன் விளைவாக உடனடியாக அதே 1970ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17ந்தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நான்காம் திட்டத்திலேயே சேலம் உருக்காலை துவக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி சேலத்தில் என் தலைமையில் விழா நடைபெற்று இந்திரா காந்தி அவர்களே அடிக்கல்லும் நாட்டினார்கள். அந்தத் திட்டம் உடனடியாகத் தொடங்கியது.
எனவே மத்திய அரசு கூறுவதற்கெல்லாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல; கோபித்துக் கொண்டாலும், பண்பாடு காப்பது மிகவும் முக்கியம். 1971-72ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே “உரிமைக்குக் குரல் கொடுப்போர் மாநில அரசிலும், உறவுக்குக் கை கொடுப்போர் மத்திய அரசிலும் இருந்திடும் இந்தக் காலத்திலேயே, தமிழகத்தின் முறையீடுகள் பல கட்டிக் கழிக்கப்படுகின்றன வென்றால், தயவுக்குத் தவம் கிடப்போர் மாநிலத்திலும், தாராள சிந்தையற்றோர் மத்திய அரசிலும் இருந்திட்டால் மாநிலத்தின் வேண்டுகோள்கள் விழலுக்கு இறைத்த நீராகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?” என்றும், “வரம் கொடுக்கும் தெய்வமாக மத்திய அரசும், தவம் கிடக்கும் பக்தர்களாக மாநிலங்களும் இருக்க முடியாது” என்றும் பேசியிருக்கிறேன். எனவே மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளைக் கூறுவது தவறல்ல.
இன்றைய முதல் அமைச்சரின் முழுப் பேச்சு ஏடுகளில் எல்லாம் வெளிவந்திருக்கிறது. அவ்வளவையும் அங்கே அவர் படித்திருந்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஒவ்வொரு முதல் அமைச்சரும் தமிழக முதல்வரைப் போல நாங்களும் பேசுவோம் என்று ஆரம்பித்தால் எவ்வளவு நேரமாகியிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? எனவே தமிழ்நாட்டிற்கே அவமானம் நேர்ந்து விட்டதாகக் கூறுவது என்பது மிகைப்படுத்தப்படும் ஒன்றே தவிர உண்மையான குற்றச்சாட்டு அல்ல! அவமானம்; யாரால் என்பதுதான் முக்கியமான கேள்வி!
அன்புள்ள, மு.க. 29-12-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 289–295. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.