முரசொலி கடிதங்கள் · 3691
வள்ளுவர் சிலை காத்திட வாய்மைப்போர்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3691. வள்ளுவர் சிலை காத்திட வாய்மைப்போர்!
உடன்பிறப்பே,
நேற்றையதினம் 1-1-2013; ஏன் அதற்கு முதல் நாள் இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை! குமரி முனையில் முக்கடலும் சங்கமிக்கின்ற அலைகடல் பரப்பில் வேறெங்குமில்லாத அளவிற்கு 133 அடி உயரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கும் அய்யன் வள்ளுவருடைய சிலை கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக - தமிழ் உணர்வே இறந்து அற்றுப் போய் விட்ட இந்த ஆட்சியில் - செம்மொழியின் சிறப்பைப் போற்றி மதிக்கத் தெரியாத இந்த ஆட்சியில் - பராமரிப்பின்றி, கடல் காற்றின் உப்புத் தன்மை காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேதமடைந்து வருவதாகவும், தமிழ் உணர்வு மிகுந்தோர் - வள்ளுவரின் வாய்மொழியில் மனம் பறி கொடுத்தோர் என அன்றாடம் சுமார் நான்காயிரம் பேர், படகில் சென்று அய்யன் வள்ளுவரின் சிலை அற்புதத்தைக் கண்டு, ஆச்சரியப்பட்டு மகிழ்ந்து வருவதாகவும், பார்வையாளர்கள் கட்டணம் மூலமாகவே ஆண்டுக்கு அறுபது இலட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்றும், அந்த நிலையிலே கூட அந்தச் சிலையை அரசாங்கம் கவனிக்க மனமிரங்கவில்லை என்றும், அரசு ஆதரவுப் பத்திரிகையான “தினமணி”யிலேயே அரைப் பக்க அளவிற்குப் பெரிதாகச் செய்தி வந்திருந்தது. “தினமணி”யைப் பொறுத்த வரை, அந்தப் பத்திரிகையிலே வெளிவருகின்ற “மக்கள் கருத்து” ஆனாலும், “தலையங்கம்” ஆனாலும், “கேலிச் சித்திரம்” ஆனாலும்; திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் தலைமைப் பொறுப்பிலே இருக்கும் என்னையும் தாக்கிவரக் கூடியவைகளாக இருந்த போதிலும், அதன் ஆசிரியர் வைத்திய நாதனைப் பொறுத்தவரை நான் எப்போதும் அவருடைய தமிழ் ஆர்வத்தை குறைத்து மதிப்பிடுபவனல்ல. தமிழ் மொழியின் தாக்கத்தால் திரு. வைத்தியநாதன் அவர்களே மனம் வெதும்பி அந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.
இதே “தினமணி”யில் 4-1-2000 அன்று ஒரு தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. ஆம், அய்யன் வள்ளுவரின் சிலை திறப்பு
விழா முடிந்த நேரத்தில் வெளிவந்த தலையங்கம் அது. அதனையும் இப்போது தவறாமல் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். அதில், -
“குமரி முனையில் நடைபெற்ற இவ்விழாவில் உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ்ச் சமூகங்களின் பிரதிநிதிகள் பங்கு கொண்டிருக்கிறார்கள். முதல்வர் கருணாநிதி முன்னின்று எடுத்த இவ்விழா சர்வ கட்சி விழாவாகவே நடைபெற்றிருக்கிறது. சென்னையில் தனித்த வடிவத்தில் வள்ளுவர்கோட்டத்தை எழுப்பிய கருணாநிதியே - திருவள்ளுவர் சிலையையும் திட்டமிட்டு எடுத்திருக்கிறார். இச்சிலை கணபதி ஸ்தபதியின் கைவண்ணத்துக்கு மட்டுமின்றி, முதல்வர் கருணாநிதியின் தமிழ் உள்ளத்துக்கும் நிலைத்த சான்றாக விளங்கக் கூடியது!”
என்று எழுதியிருந்ததை மறந்திடக் கூடுமோ?
மழை மற்றும் உப்புக் காற்றினால் அய்யன் வள்ளுவரின் சிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமேயானால், அவ்வப்போது ரசாயனக் கலவை பூசப்பட வேண்டும். தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் சுமார் 65 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து ரசாயனக் கலவை பூசப்பட்டது. 2011ஆம் ஆண்டு ஆட்சி மாறிய பிறகு இந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக மிகவும் அவசியமான அந்த ரசாயனக் கலவை பூசப்படாமல், சிலை சேதமடைந்து வருவதாக அந்தச் செய்தியிலே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தியைப் படித்த பிறகுதான் - அது என் மனதில் பெரும் பாரமாக இறங்கி வருத்தப்படச் செய்தது. அதன் விளைவாக நேற்றையதினம் என்னிடம் வாழ்த்துப் பெற வந்த உரிமையோடு கூடிய ஒரு சிலரிடம் நான் சிரித்துப் பேச முடியாத சூழ்நிலை உருவாயிற்று. ஏனென்றால் குமரிமுனையிலே உள்ள அந்த அய்யன் வள்ளுவர் சிலைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.
1989ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தலில் வென்று நமது கழக அரசு பதவியேற்றது. 17.3.1990 அன்று நிதிநிலை அறிக்கையைச் சட்டமன்றப் பேரவையில் வைத்தபோது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் நிறுவப்படும் என்று அறிவித்தேன். அதன்படி, கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை அமைக்கும் பணியைத்
திரு. கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்க முடிவு செய்து ஆணை வழங்கப்பட்டது. 6.9.1990 அன்று கன்னியாகுமரியில் சிலை வடிக்கும் பணியை உளி எடுத்துச் செதுக்கி நான் தொடங்கிவைத்தேன்.
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், உலகில் வியப்புக்குரியதுமான 133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை திறக்கின்ற விழா நிகழ்ச்சியினை, கன்னியாகுமரியில், 1999ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள், 31ஆம் நாள் - மற்றும் 2000ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 1ஆம் நாள் ஆகிய இரு நாட்களிலும், தமிழக அரசின் சார்பில், மிகச் சிறப்பாக நடத்துவதென்றும், அந்த விழா நிகழ்ச்சியின்போது பல்வேறு நாடுகளிலே உள்ள தமிழறிஞர்களை எல்லாம் அழைத்துச் சிறப்பு செய்வது என்றும் கழக அமைச்சரவையில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாளன்று, திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிலை திறக்கும் விழா மாலை 4.30 மணி அளவில் தொடங்கியது. கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். சீர்காழி சிவசிதம்பரம், டி.கே.எஸ். கலைவாணன் ஆகியோர் தங்களது வெண் கலக் குரலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினர். செய்தித் துறை அமைச்சராக இருந்த வ. முல்லை வேந்தன் வரவேற்புரையாற்றினார்.
குமரிமுனை விழா அரங்கத்தில் குவிந்திருந்த இலட்சக்கணக்கான தமிழ்ப் பெருங்குடி மக்களின் விண்ணதிரும் வாழ்த்துக்களுடன் வான்முட்டும் திருவள்ளுவர் சிலையினை நான் திறந்து வைத்தேன். விழாவினை நேரில் கண்ணுற்றோர் வாழ்வில் பெரும் பேறு பெற்றோம் என்று பெருமிதம் கொள்ளும் அளவிற்கு எழுச்சிக் கோலம் பூண்டிருந்தது ஏற்றமிகு அந்த விழா.
வழக்கமாகக் கதைகளிலும், புராணங்களிலும் வரம் பெறுவோர் எல்லாம் தம்மை வலுப்படுத்திக் கொண்டு, தமது ஆதிக்கத்தை அகல விரிப்பதிலேயே வாழும் நாள் வரை அக்கறை செலுத்துவர். ஆனால் எனக்கோ, கிடைத்த வரம், என் அய்யன் திருவள்ளுவரைச் சிலையாகக் கண்டு - அதுவும் அவர் குறளில்
எத்தனை அதிகாரம் இயற்றினாரோ - அத்தனை உயரம் - அதாவது 133 அதிகாரங்களைக் குறிக்கும் 133 அடி உயரச் சிலையை - இந்திய பூபாகத்தில் வட இமயத்துக்கு நிகராகத் திகழும் குமரி தென் கடல் ஆடும் குமரியில் நிறுவிட வேண்டும் என்ற வரமல்லவா?
அந்தச் சிலை திறப்பதற்கான பொத்தானை அழுத்தியபோது, என் விரல் என்னை அறியாமல் அசைவற்றுப் போனது மட்டுமல்ல - என்னையே நான் மறந்துவிட்டேன். இளமைப் பருவ முதல் எந்தவொரு தத்துவ வித்தகனை இமைப் பொழுதும் மறவாமல் - எழுத்தில், பேச்சில், குருதி இயக்கத்தில் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தேனோ - யாருக்கு வரலாறு போற்றும் வள்ளுவர் கோட்டம் ஒன்றைத் தலைநகராம் சென்னையில் அமைத்தேனோ - யாருக்காக ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் வள்ளுவர் திருநாள் என அறிவித்தேனோ - பேருந்துகளிலும், பயணியர் விடுதிகளிலும், ஒழுக்கம் போதிக்கும் குறளை எந்த ஒளிமிகு ஏந்தலுக்காக எழுச்சி செய்து உருவப்படத்துடன் அமைத்தேனோ - யாருடைய குறளுக்குக் குறளோவியம் தீட்டி - பின்னர் 1330 குறளுக்கும் உரையும் எழுதினேனோ - அந்த அய்யன் திருவள்ளுவருக்கு இருபத்தி ஐந்து ஆண்டு காலப் பெரு மூச்சுக்குப் பிறகு சிலை அமைந்தது - அதைத் திறந்து வைக்க எனக்கு ஆயுளும் இருந்தது என்கிறபோது என் மன நிலையை வர்ணித்திட தமிழ்த்தாய், தன்னிடமும் சொற்களுக்குப் பஞ்சமென்று சொல்லி விட்டாளே, நான் என்ன செய்ய!
அய்யன் வள்ளுவரின் சிலை திறப்பு விழாவில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் - அருமை நண்பர் ஜி.கே. மூப்பனார், இல். கணேசன், என். சங்கரய்யா, வைகோ, வாழப்பாடி ராமமூர்த்தி, ஆர். நல்லகண்ணு, எஸ். திருநாவுக்கரசு, ஆர்.எம். வீரப்பன், குமரி அனந்தன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் தமிழறிஞர்கள், மலேசிய அமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீசாமிவேலு, இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான், மொரிசியஸ் அமைச்சர் இராமசாமி சிதம்பரம் பிள்ளை, சிங்கப்பூர் வை. திருநாவுக்கரசு, ஸ்காட்லாந்து ஆர்.ஈ. ஆஷர், ஜெர்மனி யைச் சேர்ந்த முனைவர் தாமஸ் மால்டன், பேராசிரியர் ஆரோக்யசாமி, பேரூர் சாந்தலிங்க அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருமதி இராதா தியாகராஜன், பேராசிரியர்
எஸ்றா சற்குணம், ஆசிரியர் சாவி ஆகியோர் உரையாற்றிப் போற்றிப் பாராட்டினர்.
இந்த அளவிற்கு எனக்குக் கிடைத்த பாராட்டைத் தாங்கிக் கொள்ள முடியுமா? அதனால்தான் அய்யன் வள்ளுவரின் சிலை யினை பராமரிக்காமல் இந்தக் கதிக்குள்ளாக்கி இந்த ஆட்சியினர் சீரழித்து வருகிறார்கள். தமிழகத்திலே உள்ள புலவர்களும், சான்றோர்களும், குமரி வாழ் தமிழர்களும் இதற்காக ஓரிரண்டு முறை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தியும இந்த ஆட்சியினர் அதைப்பற்றிக் காதில் போட்டுக் கொள்ளாமல் காலம் கடத்தி வருகின்றனர்.
நேற்றையதினம் என்னைச் சந்தித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எல்லாம் இதைப் பற்றிக் கூறி நாடாளுமன்றத்திலும் இது குறித்துப் பேசச் சொல்லியிருக்கிறேன். அய்யன் வள்ளுவர் சிலை பராமரிப்புப் பணிக்காக உரிய நிதி ஒதுக்கீடு செய்து பணியை விரைந்து மேற்கொள்ள அ.தி.மு.க. அரசு முன்வராவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலேயே, அந்தப் பணியினை மேற்கொள்ளலாமா அல்லது குமரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் மிகப் பெரிய போராட்டம் ஒன்றினை நடத்தி ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கலாமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நேற்றைக்கு என்னைச் சந்திக்க வந்த நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து, குமரி மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சுரேஷ்ராஜன் ஆகியோர் மிகப் பெரிய அளவில் குமரியில் ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என்று கூடத் தெரிவித்தார்கள். இதற்கெல்லாம் இடம் அளிக்காமல், தமிழக அரசே முன் வந்து இந்தப் பணியினை மேற்கொள்ளுமா என்றும் அது பற்றி அரசின் சார்பில் அறிவிக்கப்படுகிறதா என்றும் ஒரு சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் எப்போதும்போல அ.தி.மு.க. அரசு இதிலும் மெளனமாக இருக்குமேயானால், சிலை பராமரிப்புக்கு மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிப்போம்! அய்யன் வள்ளுவர் சிலையைக் காத்திட அணி வகுப்போம்! வள்ளுவர் சிலையைக் காத்திட வாய்மைப் போருக்குத் தயாராவோம்!
அன்புள்ள, மு.க. 03-01-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 302–306. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.