முரசொலி கடிதங்கள் · 3693
மத்திய அரசு தலையிட வேண்டும்; உடனடியாக!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3693. மத்திய அரசு தலையிட வேண்டும்; உடனடியாக!
உடன்பிறப்பே,
சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கும்படி தமிழக ஆளுநரிடம் வழக்கறிஞர்கள் எல்லாம் சென்று மனு கொடுத்துள்ளார்கள். தி.மு.கழக ஆட்சி நடைபெற்றபோது, 22- 11-2006 அன்று என்னைச் சந்தித்த பத்திரிகையாளர்களிடம்,
“சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும், இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 348ல் உயர் நீதிமன்றத்திலும் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கில மொழியே சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 348, உட்பிரிவு (2)இல் மாநில மொழியில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெற வேண்டுமென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள அரசியல் சாசனச் சட்டப்பிரிவைப் பயன்படுத்திச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளிலும் வழக்கு மொழியாகத் தாய்மொழி தமிழை அறிமுகப்படுத்திடத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது”
என்று அறிவித்தேன்.
இந்த என் அறிவிப்பு தமிழக அரசின் செய்திக் குறிப்பாகவும் வெளியிடப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்றமும், வழக்கறிஞர்கள் சங்கமும் வரவேற்புத் தெரிவித்தது.
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் இந்த முடிவினை ஆதரித்ததோடு, அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறைகளையும் அவரே தெரிவித்திருந்தார். நான் அதற்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் அவருக்கு அப்போதே எழுதினேன்.
இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சலுகையைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று, உத்தரப்பிரதேச உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக இந்தி மொழி இருந்து வருகிறது.
அந்த அறிவிப்பு வந்தவுடன் “அன்றைய” டாக்டர் ராமதாஸ் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலைப்பாட்டைக் கலைஞரை விட்டால் வேறு யார் நிறைவேற்ற முடியும்? அதன் தொடக்கத்தை அவர் ஆரம்பித்துவிட்டார்” என்று அறிக்கை விடுத்தார்.
உயர்நீதிமன்றத்திலே உள்ள வழக்கறிஞர்களின் தமிழ் மன்றத்தின் சார்பில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் இதே பிரச்சினைக்காக ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் அப்போது அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அப்போது என்ன காரணம் சொன்னார்கள் என்றால், “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ் ஆணை பிறப்பிக்கக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு மட்டும்தான் உள்ளது, எனவே அவர் ஆணை பிறப்பிக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத்தில் வாதாடிப் பயனில்லை” என்று கூறினார்கள். அப்போது ஆட்சியிலே அ.தி.மு.க. இருந்தது எனினும், தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
22-11-2006 அன்று நான் செய்த அறிவிப்பினைத் தொடர்ந்து, 6-12-2006 அன்று உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி என்ற அரசின் தீர்மானத்தை நானே தமிழகச் சட்டப்பேரவையில் முன் மொழிந்தேன். அந்தத் தீர்மானம், நிகழ்ச்சி நிரலில் கடைசியாகத்தான் இடம்பெற்றிருந்தது. ஆனால் அன்றைய தினம் பிற்பகலில் பிரதான எதிர்க்கட்சிக்காரர்களான அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். சிலை திறக்கின்ற விழாவிற்கு டெல்லிக்குத் தனி விமானத்தில், செல்லவிருந்ததால், முற்பகலிலேயே தமிழ் மொழி பற்றிய முக்கியமான தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டால், அவர்களும் அவையிலே இருந்து இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க
வாய்ப்பு ஏற்படும் என்று நானும் அவை முன்னவராக இருந்த பேராசிரியரும் கலந்து பேசி, அதற்காகவே நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து, தீர்மானத்தை முன்னதாகவே எடுத்து விவாதித்தோம்.
நாங்கள் அவ்வாறு செயல்பட்ட போதிலும், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நேரத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று கருதியோ என்னவோ, அ.தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சியாக அப்போது இருந்த ம.தி.மு.க.வும் அவையிலேயும் இல்லை, விவாதத்திலும் கலந்து கொள்ளவும் இல்லை. அவர்கள் இல்லாவிட்டாலும், அந்த முக்கியமான தீர்மானம் விவாதிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கோ.க. மணியும், தி.மு.க. சார்பில் ராஜகண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும் கலந்துகொண்டு பேசினார்கள்.
கழக ஆட்சியில் 6-12-2006 அன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய அந்தத் தீர்மானத்தின் வாசகங்கள் வருமாறு :-
“சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348 (1) ஆவது பிரிவின்படி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் இருந்திட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப்பிரிவு 7இன்படி, உயர்நீதிமன்ற நடவடிக் கைகள் அனைத்தையும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று, மாநில ஆட்சி மொழியிலேயே நடத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நமது மாநிலத்தில் தமிழிலேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில், அரசமைப்புச் சட்டப்பிரிவு 348 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு
ஆட்சி மொழிச் சட்டப் பிரிவு 7ன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நமது மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இம்முடிவினைச் செயல்படுத்த விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களைக் கேட்டுக்கொள்வதென இந்தச் சட்டமன்றப் பேரவையில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது”
இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்து நான் பேசுவதற்கு முன்பு அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த தம்பி துரைமுருகன் என்னை வாழ்த்திப் பேசினார். இந்த முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில் தானும் இந்த அவையிலே இருந்ததாக, தன் சந்ததியினர் பேசுவார்கள் என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொண்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் தம்பி முரசொலி மாறனின் திருவுருவச் சிலை 8-12-2006 அன்று திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த நான், 6ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட “உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி” எனும் அரசின் தீர்மான நகலை, தமிழக ஆளுநர் அவர்களின் பரிந்துரையுடன், குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கியதோடு; அந்தத் தீர்மானத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொண்டேன். குடியரசுத் தலைவர் அவர்களும் அதனைக் கவனிப்பதாக உறுதி அளித்தார்கள்.
ஆனால் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை 27-2-2007 தேதிய கடிதத்தில், “உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து இந்தப் பிரச்சினை பரிசீலிக்கப்பட்டதாகவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பிராந்திய மொழியைத் தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று இந்தியத் தலைமை நீதிபதி கருதுவதாகவும்” தெரிவிக்கப்பட்டிருந்தது.
11-3-2007 அன்று நான் இதுபற்றி விளக்கமாகப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல், சட்டத்துறை அமைச்சராக இருந்த பரத்வாஜ் ஆகியோருக்கும் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் பிராந்திய மொழியான இந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிற முன் மாதிரிகளை எல்லாம் சுட்டிக்காட்டிவிட்டு, இறுதியாகத் தமிழக மக்களின் நீண்ட கால விருப்பத்திற்கு வடிவம் கொடுக்க அவசர நடவடிக்கைகளை எடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவாகப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.
11ஆம் தேதி நான் எழுதிய கடிதத்திற்கு, அடுத்த நாளான 12ஆம் தேதியே மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்த எச்.ஆர். பரத்வாஜ் அவர்கள் எழுதிய பதிலில் “நான் தங்கள் கடிதத்தைக் கவனமாகப் படித்து, இந்த விஷயத்தில் தாங்கள் எழுப்பியுள்ள கருத்துக்களை மனதில் கொண்டு இந்த விஷயத்தைப் புதிதாகப் பரிசீலித்து, கூடிய விரைவில் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுமாறு என்னுடைய துறையை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.
12-3-2007 அன்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஆ.இராசா, எஸ்.ரகுபதி, க.வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, “சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழ்மொழி என்பதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும்” என்று பிரதமரைத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து மனுக் கொடுத்தனர்.
கழக அரசு இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “சென்னை உயர்நீதி மன்றத்தில், தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக; 2006ஆம் ஆண்டு தமிழக அரசு, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, மேதகு தமிழக ஆளுநரின் பரிந்துரையினையும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின்
பரிந்துரையினையும் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே தாமதமின்றி உடனடியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்ப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று இந்த மாநாடு; மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே மாநாட்டில், “மத்தியிலே தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகும். இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும், மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானால், முதற்கட்டமாக - செம்மொழியாம் எம் தமிழ்மொழியை மத்திய ஆட்சிமொழியாக ஆக்க வேண்டுமென்று மத்திய அரசை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வளவிற்குப் பிறகும், உச்ச நீதிமன்றம் இதற்கு ஆட்சேபணை தெரிவித்த காரணத்தினால் மத்திய அரசினால் அப்போது தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க முடிய வில்லை. இருந்தாலும் தமிழகத்திலே அப்போது தி.மு.கழக அரசு இருந்த காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்றத்திலே பெரும்பாலான வழக்குகளின் விசாரணைகள் எல்லாம் தமிழிலேயே நடைபெற்றன. தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய் இக்பால் அவர்களும் கழக ஆட்சியிலே இருந்த காலத்தில், 2010ஆம் ஆண்டு, உயர் நீதி மன்றத்தில் தமிழில் வாதம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால் தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஜனவரி 3ஆம் தேதியன்று ஒரு வழக்கறிஞரிடம் தமிழில் வாதம் செய்ய அனுமதி மறுத்ததோடு; “தமிழில் வாதம் செய்ய அரசியல் சட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை” என்றும் கருத்துக் கூறியுள்ளார். இதனை எதிர்த்துத்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்கக்கோரி, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமான போராட்டம் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு, வேறு சில வட இந்திய மாநிலங்களில் தற்போது நடைமுறையிலே உள்ளதைப்போலவே, தமிழகத்திலே
உள்ள உயர் நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக தமிழைச் சட்டப்படி கையாளுவதற்கு, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவரிடம் தி.மு.கழக ஆட்சிக் காலத்திலிருந்து ஒப்புதலுக்காக நிலுவையிலே உள்ள சட்டத்திருத்தத்திற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள, மு.க. 10-01-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 313–319. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.