அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3695

முரசொலி கடிதங்கள் · 3695

துணிச்சலான செயலா? துவள வைக்கும் காரியமா?

நாள் 16.1.2013சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3695. துணிச்சலான செயலா? துவள வைக்கும் காரியமா?

உடன்பிறப்பே,

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27-12-2012 அன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிவிட்டு, அவசர அவசரமாக வெளிநடப்புச் செய்வதாகச் செய்தியாளர்களிடம் மட்டும் தெரிவித்துவிட்டுச் சென்னை திரும்பிய போதிலும், அவருடைய முழு உரை அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. சென்னையில் அவசர வேலை இருப்பதாகக் கூறி, அந்தக் குழுக் கூட்டத்தில் முதன் முதலாகப் பேசுவதற்கு அனுமதி பெற்று, அவ்வாறே முதலிலே பேசிவிட்டு, உடனடியாகத் தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய போதிலும், இங்கே அவர் என்ன அப்படிப்பட்ட அவசர வேலையில் கலந்து கொண்டார் என்று எந்தவிதமான செய்தியும் இல்லை. ஆனால் அவர் அங்கே பேசும்போது,

“என்னுடைய தலைமையின் கீழ் உள்ள மாநில அரசு பத்தாண்டுகளுக்குப் பின்னர், மின் கட்டணங்களை உயர்த்துவது என்ற துணிச்சலான முடிவை எடுத்தது. இது நமது மாநிலத்தில் மின் சக்தி இடர்ப்பாட்டைச் சமாளிப்பதற்காக என்னுடைய அரசு மேற்கொண்ட உறுதியான தீர்வினைக் காட்டுகிறது” என்று சொல்லியிருக்கிறார்.

(The State also took courageous decisions under my leadership to raise power tariffs after ten years)

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பத்து மாத காலத்தில் மின் கட்டண உயர்வினை 5 சதவிகித உயர்வு, 10 சதவிகித உயர்வு அல்ல, ஒரேயடியாக ஒரே நேரத்தில் 37 சதவிகித அளவிற்கு உயர்த்தி அறிவித்தார். இதைத்தான் ஜெயலலிதா “துணிச்சலான

முடிவு” என்று கூறித் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறார்; டெல்லியில் முதலமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில்!

2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக வந்த போதும், 1-12-2001 முதல் மின் கட்டணங்களை உயர்த்தினார். மீண்டும் 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் 15-3-2003 அன்று 1398 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வுகளைச் செய்தார். அன்றைய தினம்தான் தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்ட விவசாயம், ஏழைக் குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தார். வீடுகளுக்கான மின் கட்டணத்தை 22.13 சதவிகிதமும், கல்வி நிலையங்களுக்கு 16.61 சதவிகிதமும் உயர்த்தினார். இதெல்லாம் கடந்த காலத்தில் ஜெயலலிதாவின் துணிச்சலான முடிவுகள்தான்!

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில்; மின் கட்டண உயர்வு 1,651 கோடி ரூபாய் அளவிற்கும், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் 7,874 கோடி ரூபாய் அளவிற்கும் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே எந்த அளவிற்கு ஜெயலலிதாவின் “துணிச்சலான முடிவு” தமிழ்நாட்டு மக்களைத் துவளத்திற்கே உள்ளாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் அதைத்தான் டெல்லி தேசிய வளர்ச்சிக் குழுவில்தான் துணிச்சலான முடிவினை மேற்கொண்டதாக ஜெயலலிதா தனக்குத்தானே பாராட்டிக் கொண்டுள்ளார்.

தி.மு.கழக ஆட்சியில் வீடுகளுக்கு மின்சாரம் உபயோகிப்போர் மொத்தம் 149.86 இலட்சம் பேரில் 134.67 இலட்சம் பேருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.

600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்குக் கழக ஆட்சியிலே மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது தி.மு. கழகம் இந்த முடிவினை எடுத்த நேரத்திலேகூட மிகவும் பயந்து கொண்டுதான், அதனால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்று அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பி, அதற்குப் பிறகுதான் அந்த உயர்வினைக் கழக அரசு அறிவித்தது. ஆனால் 7,874 கோடி ரூபாய்க்கான மின் கட்டண உயர்வு முடிவினைத் தனது தலைமையிலான அரசு துணிச்சலாக எடுத்து அறிவித்தது என்று டெல்லியில் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

தி.மு. கழக ஆட்சியில் தயங்கித் தயங்கி முடிவெடுத்த நிலையிலேகூட, இன்றைய முதலமைச்சர், ஜெயலலிதா அவர்கள் 2-8-2010 அன்று விடுத்த அறிக்கையில்,

“விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னால், விலைவாசியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர் கருணாநிதி. இரண்டு மாதத்துக்கு 600 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் மாதம் 300 யூனிட் மின்சார பயன்பாடு என்பது சர்வ சாதாரணம். மேலும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் ஏழை எளிய மக்கள் கூடுதல் மின்சார கட்டணத்துக்கு ஆளாக்கப்படுவார்கள். மின் கட்டண உயர்வால் வீட்டு வாடகையும் உயரலாம். தொழிற்சாலைகள், சிறு, குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் என எல்லாத் தரப்புக்கும் மின் கட்டண உயர்வால் கடும் பாதிப்பு ஏற்படும். மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் மேலும் உயரக் கூடும். சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் சுமையை உடனடியாக நீக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்று என்னைக் கேட்டுக்கொண்ட அம்மையார் ஜெயலலிதா, இப்போது அவருடைய இந்தப் பழைய அறிக்கையினை நினைவுபடுத்திக் கொள்ளாமல், டெல்லியிலே சென்று முழக்கமிட்டிருக்கிறார்.

கழக ஆட்சியில் 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தவர்களுக்குக் கூட யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகிப்போருக்கு யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய் 75 காசு என்ற அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. கழக ஆட்சியில் வாங்கும் சக்தி ஓரளவிற்கே பெற்றுள்ள சாதாரண நுகர்வோருக்கு எவ்விதக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் சகட்டு மேனிக்கு ஏழையெளியோர், நடுத்தர வர்க்கத்தினர், வசதி

படைத்தோர் என்ற எவ்வித வேறுபாடும் இன்றி அனைவருக்கும் கட்டண உயர்வு செய்யப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் ஏழையெளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குறைந்த மின்னழுத்த இணைப்புகள் மூலம் 5,300 கோடி ரூபாயும், வசதி படைத்தோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தும் உயர் மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ. 2,574 கோடியும் கூடுதலாக அரசுக்குக் கிடைக்கத் தக்க வகையில் கட்டண உயர்வைச் செய்திருக்கிறார்கள். என்ன சமதர்மமோ இது?

இவ்வாறு கட்டணங்களை உயர்த்தி வாக்களித்த மக்களைக் கஷ்டப்படுத்துவது என்பது ஜெயலலிதாவுக்குப் புதிய கதையல்ல; கை வந்த கலை!

தமிழ்நாட்டு மக்களின் ஏமாளித்தனத்தின் காரணமாக எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்ட ஜெயலலிதா, வந்ததும் வாரதுமாக வரவு செலவு திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரியைச் சுமத்திவிட்டு; மேலும் தொடர்ந்து; “ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கின்ற” செயலாக எல்லா மட்டத்திலும் வரி உயர்வு - கட்டண உயர்வு - பால் விலை உயர்வு - என்று இருபதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பல உயர்வுகளை அறிவித்து விட்டார். அதெல்லாம் அம்மையாரின் துணிச்சலான செயல்கள்தான்!

தி.மு. கழகம் ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லையா? உயர்த்திக் கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் அரசு தாங்கிக் கொண்டு பொது மக்கள் பாதித்து விடக் கூடாது என்பதற்காகப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வில்லையா? ஆவின் கட்டணத்தை அதிகமாக உயராமல் பார்த்துக் கொள்ளவில்லையா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அதை விடுத்து, நமக்கென்ன, சிரமப்பட்டது போவது மக்கள்தானே என்ற பாணியில் கண்ணை மூடிக் கொண்டு கட்டணங்களை ஜெயலலிதா உயர்த்தினார். உயர்த்தியது மாத்திரமல்ல; அதை மிகப் பெரிய துணிச்சலான செயல் என்றும் இப்போது டெல்லியிலே சென்று பேசியிருக்கிறார்.

பேருந்துக் கட்டணங்களைப் பொறுத்த வரையில், சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை, 50 சதவிகித அளவிற்கு அதாவது மேலும் 14 பைசா என்ற அளவிற்கு உயர்த்தி, இனி கிலோ மீட்டர் ஒன்றுக்கு 42 பைசா என்று நிர்ணயித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது சாதாரண புறநகர் பேருந்துகளுக்குக் கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா என்றிருந்த கட்டணத்தை ஐந்தாண்டு கால தி.மு.கழக ஆட்சியில் ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதையும், ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஆறு மாத காலத்திலேயே கிலோ மீட்டர் ஒன்றுக்கு 42 பைசா அளவிற்குப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார் என்பதையும் நான் நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் ஜெயலலிதாவோ இந்த உயர்வுகளை எல்லாம் சர்வசாதாரணமாக, துணிச்சலான செயல்கள் என்று வர்ணனை செய்திருக்கிறார்.

2006ஆம் ஆண்டு முதல் 2011 மே திங்கள் வரை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேருந்துக் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை என்பதையும், ஜெயலலிதா பதவியிலே இருந்தபோது பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு மீண்டும் அவர் 2011இல் பொறுப்புக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே பேருந்துக் கட்டணத்தை உயர்த்திப் பொதுமக்களை வாட்டச் செய்திருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பால் விலையையும் ஜெயலலிதா உயர்த்தியிருக்கிறார். 14-2-2011 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் “பால் தட்டுப்பாட்டினை உருவாக்கி, தட்டுப்பாடுகளை உருவாக்கும் திறிகெட்ட அரசாக மைனாரிட்டி தி.மு.க. அரசு விளங்குகிறது. பால் உற்பத்தியாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு வழிப்பறி கொள்ளையர்களைப் போல நடந்து கொள்கிறது” என்றெல்லாம் கூறியதற்கு மாறாக, பால் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசாமல் தன்னிச்சையாகவே கொள் முதல் விலையையும், விற்பனை விலையையும் உயர்த்தினார். தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் அளவிற்கு ஒன்றரை ஆண்டுகளில் சுமையை வைத்துவிட்டு, அதைத் தன்னுடைய

துணிச்சலான செயல்கள் என்று டெல்லியிலே பேசியிருக்கிறார் என்றால் எத்தகைய இரட்டை வேடம் இது?

“இரட்டைவேடம்” என்பது ஜெயலலிதாவுக்குப் பழகிப் போய்விட்ட கலை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும், முன்னுக்குப் பின் முரணாகக் கருத்து வெளியிடுவதும், நேற்று சொன்னதை இன்று மறுப்பதும் ஜெயலலிதாவின் அரசியல் பாணி. அவர் பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்ற நிலைப்பாட்டை மேற்கொள்வதும்; பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீன் போக்கைப் பின்பற்றுவதும்; அவரது அரசியல் குணம்! அவரிடம் அழுத்தமாகப் பதிந்துவிட்ட அந்தக் குணமும் - பழக்கமும் தான்; தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் அப்படி வீர தீர (?) உரையாற்ற வைத்து; இப்போது மத்திய அரசு ரயில் கட்டணத்தை, தமிழக அரசின் பேருந்துக் கட்டணத்தைவிடக் குறைந்த அளவிற்கே உயர்த்திய போதிலும், அதனை “வெந்த புண்ணிலே வேல்” என்று முதலையின் கண்ணீர் வடிக்கச் செய்கிறது. தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தினால் அது துணிச்சலான செயல், ஆனால் மத்திய அரசு உயர்த்தினால் அது மட்டும் “வெந்த புண்ணிலே வேலா?” என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்! இது துணிச்சலான செயலா? மக்களைத் துவள வைக்கும் காரியமா?

அன்புள்ள, மு.க. 16-1-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 327–332. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்