முரசொலி கடிதங்கள் · 3694
கெடுமதி கொண்டு “நெடு” எழுதிய கட்டுரை!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3694. கெடுமதி கொண்டு “நெடு” எழுதிய கட்டுரை!
உடன்பிறப்பே,
2-1-2013 அன்று சில பத்திரிகையாளர்கள், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் உங்களைப் பற்றிப் பேசியதற்கு நீங்கள் விளக்கமாகப் பதில் அளித்திருந்தீர்கள். அதற்குப் பிறகும் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலே அதையே கேட்டிருக்கிறாரே?” என்று கேட்டபோது, “அவர் தனிப்பட்ட முறையில் தொடக்கம் முதல் என்னை வெறுப்பவர் என்று எனக்குத் தெரியும். இளம்பிராயத்திலிருந்தே நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், அந்தக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவன் என்றும் பலமுறை சொல்லியிருக்கிறேன். ராமகிருஷ்ணனுக்கு உண்மையான கம்யூனிஸ்ட்களை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று நான் பதிலளித்தேன்.
இந்தப் பதில் குறித்து தோழர் ராமகிருஷ்ணனோ, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களோ எதுவும் கூறவில்லை. நான் கம்யூனிசக் கொள்கைகளில் சிறு வயதிலிருந்தே ஈர்க்கப்பட்டவன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பழ.நெடுமாறன் என்னுடைய கருத்துக்களை மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்து எழுதிய கட்டுரை ஒன்றினை “தினமணி” வெளியிட்டுள்ளது.
அதில் ராமகிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறார் நெடுமாறன். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடாதது பற்றி நான் மெளனமாக இருப்பது ஏன் என்று அவர் கேட்டதற்கு, 17-12-2012 அன்றே அதைப்பற்றி நான் அறிக்கை கொடுத்திருந்தேன் என்பதை அவருக்குப் பதிலாக அளித்து விட்டேன். அதற்குப் பிறகும், அதைப் பற்றியே அவர் கேள்வி கேட்டிருந்த காரணத்தால், தனிப் பட்ட முறையில் என்னை வெறுப்பவர் அவர் என்றும், கம்யூனிசக் கொள்கையில் இளம் பிராயத்திலிருந்தே ஈர்க்கப்பட்டவன் நான் என்றும் கூறினேன். அதற்கும் நெடுமாறனுக்கும் என்ன
சம்மந்தம்? ஆடு நனைக்கிறதே என்று ஓநாய்க்கு ஏன் கவலை? நான் கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டவனா இல்லையா என்பதை கம்யூனிஸ்ட் தோழர்களே நன்றாக அறிவார்கள். இவருக்கு என்ன தெரியும்? இந்தப் பிரச்சினையிலே இவரை யார் மூக்கை நுழைக்கச் சொன்னது? கருணாநிதி உண்மையாக யார் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள் என்று நெடுமாறன் எழுதுகிறார். தமிழக மக்கள் நான் யார் என்பதையும் அறிவார்கள், நெடுமாறன் எப்படிப்பட்டவர் என்பதையும் அறிவார்கள். நான் கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவன் என்பதை இப்போது சொல்லவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்ட பல கூட்டங்களிலேயே அதைச் சொல்லியிருக்கிறேன். நான் கம்யூனிஸ்டா இல்லையா என்பதற்கு நெடுமாறனின் சான்றிதழை நான் கேட்டேனா? பெரியண்ணன் வேடம் போடும் இந்த முந்திரிக் கொட்டையிடமா சான்றிதழ் கேட்டேன்? மாசேதுங் கம்யூனிஸ்ட்கள் பற்றிக் கூறியதை எங்கிருந்தோ தேடிக் கண்டுபிடித்து தன் கட்டுரையில் இடம் பெறச் செய்து, அவர் கூறியது எனக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்பதற்கு என் மனசாட்சி பதில் கூற வேண்டும் என நீட்டி முழக்கியிருக்கிறார் நெடுமாறன். என்னுடைய மனசாட்சி என்னைப் பற்றிக் கூறியதைத்தான், நான் பல முறை வெளிப்படையாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அதெல்லாம் “பொடா”வில் மாதக் கணக்கில் புழுங்கிக் கிடந்ததையே மறந்து, மனசாட்சியைப் புதைகுழிக்கு அனுப்பிவிட்ட இன்றைய நெடுமாறனுக்குத் தெரியாது.
தோழர்கள் நம்பூதிரிபாத் அவர்களும், கே.டி.கே. தங்கமணி அவர்களும் தங்கள் சொத்து முழுவதையும் கட்சிக்காக அளித்தவர் கள் என்றும், சிறைக் கொடுமைகளை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் நெடுமாறன் உதாரணம் காட்டுகிறார்.
அவர்கள் அளவிற்கு நான் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ள முன் வராவிட்டாலும், என்னால் முடிந்த அளவிற்கு ஏழை மக்களுக்காகத் தொடர்ந்து தொண்டாற்றியிருக்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே சொத்தான வீட்டைக் கூட நான் மக்களுக்காக எழுதிக் கொடுத்து விட்டேன். எனக்கென்று எந்த எஸ்டேட்டு களையும், மாட மாளிகைகளையும் சம்பாதித்தவன் இல்லை. கழக நிகழ்ச்சிகளில் எனக்குத் தனிப்பட்ட முறையிலே வழங்கிய அனைத்துப் பொருள்களையும் கழகத்திற்காக நான் வழங்கி,
அவ்வளவும் இன்றையதினம் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பதை யாரும் காணலாம். பாளையங்கோட்டை தனிமைச் சிறையிலே இருந்தவன்தான் நான். எந்த விதமான ஆடம்பர வாழ்வையும் நான் எப்போதும் மேற்கொண்டவன் இல்லை.
“திராவிட நாடு கோரிக்கையை அடியோடு கை கழுவியவர் கருணாநிதி. இன்றளவும் அதைப்பற்றி வாய் திறக்கவில்லை” என்று நெடுமாறன் எழுதியிருக்கிறார். திராவிட நாடு கோரிக்கையை அண்ணா அவர்கள் உயிரோடு இருந்த போதே தி.மு.க. கை விட்டது உண்மைதான். அப்போதே அதற்கான எத்தனையோ விளக்கங்களை, காரணங்களை அண்ணா அவர்களே கூறிவிட்டார்கள்.
அம்பானி, டாடா, பிர்லா போன்ற பெரு முதலாளிகளுடன் கருணாநிதி தன்னை ஒப்பிடுவது தான் பொருத்தமானது என்கிறார் நெடுமாறன். எந்த அளவிற்கு நஞ்சைக் கக்கிக் கத்திப் பழக்கப்பட்ட நெடுமாறன் கொடிய நஞ்சாகவே மாறிவிட்டார் என்பதுதான் இதிலிருந்து புரிகிறது. அம்பானி, டாடா, பிர்லா போலவா கருணாநிதி வாழ்க்கை நடத்துகிறார் என்பதைத் தமிழ்நாட்டு மக்களே நீங்கள் தான் கூற வேண்டும்!
ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்திருக்கிறேன். 1957ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோற்காமல் வெற்றி பெற்றிருக்கிறேன். 75 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றளவும் மாட மாளிகை போன்ற தெரு வீட்டைக்கூட நான் குடியிருப்பதற்கு வாங்கிக் கொண்டவனல்ல. பதவிக்கு வராததற்கு முன்பு நான் வாங்கிய “தெரு வீடு” (Street House) என்று சொல் வார்களே, அதே வீட்டிலேதான் உதவியாளர்கள் உட்கார்ந்து பணியாற்றிடக் கூடப் போதிய வசதி இல்லாத நிலையிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஆனால் இரக்கமில்லாமல் என்னை டாடா வேறு நெடுமாறன் ஒப்பிடுகிறார் என்பதை நினைக்கும்போது அவர் தனது மனசாட்சிக்கு “டாடா” கொடுத்து விட்டாரே என்றெண்ணி, வேதனைதான் எனக்கு ஏற்படுகிறது.
பொதுவாழ்வில் ஈடுபட்டு அதற்குப் “பொன்” விழா கொண்டாடிய ஒரே குடும்பம் என் குடும்பம் என்கிறார். “பொன்”
விழாவிற்காகப் பொன்னென்றும் வைரமென்றும் சம்பாதித்துக் கொண்டு விட்டேன் என்கிறாரா? என்னிடம் பற்றும் அன்பும் கொண்ட தோழர்கள் எனக்கு விழா எடுக்கிறார்கள். அது கண்டு வக்கற்றோர் வயிற்றெரிச்சல்படுவதா? என் குடும்பத்தினர் யாரோ முதல் ரகப் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் என்கிறார். அதற்கு நான் என்ன செய்வது? அவர்கள் நேர்மையாகத் தொழில் செய்து சம்பாதித்தால் அதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைய முடியுமே தவிர, நானே அதற்கெல்லாம் நிறை உடையவன் ஆகி விடுவேனா?
ஐந்து முறை முதலமைச்சராகப் பதவி வகித்த கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் கம்யூனிஸ்டாக எப்போதாவது நடந்து கொண்டதுண்டா என்று நெடுமாறன் கேட்கிறார். தோழர் மணலி கந்தசாமியை நெடு மாறனுக்குத் தெரியாதா? கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் அவர். திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனைகளை அவர்களுக்கே சொந்தமாக்கிய விழாவில் மணலி பேசும் போது, “எத்தனையோ ஆண்டுக் காலமாக கம்யூனிஸ்ட் கட்சி ரத்தம் சிந்திப் போராடிய போதும் கிடைக்காத உரிமையை, கலைஞர் தன்னுடைய பேனாவின் ஒரு துளி மையினால் நிறைவேற்றிவிட்டார்; இனி இரவு இந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த இடத்தில் தூங்குகிறோம் என்ற மன நிறைவோடு தூங்குவார்கள்” என்று பாராட்டினார்.
என்னைக் கம்யூனிஸ்டா என்று கேட்ட நெடுமாறனுக்குப் பதிலளிக்க நீண்ட கால கம்யூனிஸ்டான தம்பி க. சுப்பு இன்று இல்லாமல் போய் விட்டாரே?
பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கி போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கியது கம்யூனிசத்திற்கு விரோதமானதா?
பதினைந்து ஏக்கர் உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது கம்யூனிசத்திற்கு எதிர்ப்பானதா?
இந்திரா காந்தி அம்மையார் வங்கிகளை நாட்டுடைமையாக்கி அறிவித்திடத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருந்தேனே; அது கம்யூனிசத்திற்கு எதிரானதா?
பழம்பெரும் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அண்ணன் ப.ஜீவானந்தம் அவர்களின் நினைவை என்றென்றும் போற்றும்
வகையில் நாகர்கோவிலில் அவருக்கு நினைவகம் அமைத்து, நானே சென்று திறந்து வைத்தேனே, அது கம்யூனிசத்திற்கு எதிரானதா?
என்னுடைய இளமைக் காலத்திலிருந்து ரஷ்ய எழுத்தாளர் மேக்சிம் கார்க்கி எழுதிய “தாய்” காவியத்தால் கவரப்பட்டு, அதை தமிழில் கவிதை நடையில் எழுதியதோடு, அது திரைப்படமாகவும் வெளிவரச் செய்தேனே, அது கம்யூனிசத்திற்கு விரோதமானதா?
குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், கண்ணொளி வழங்கும் திட்டம், இரவலர்கள் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம், ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம், தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம், காவல் துறையிலே பணியாற்றுவோருக்காக போலீஸ் கமிஷன்கள் அமைத்தது, மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை அளித்தது, சென்னையில் மே தினப் பூங்கா உருவாக்கியது, அரசு அலுவலர் குடும்பப் பாதுகாப்புத் திட்டம், மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதித் திட்டம், புன்செய் நிலவரி அறவே நீக்கம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது, ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலி நிர்ணயச் சட்டம், அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனைகளை அவர்களுக்கே சொந்தமாக்கிய சட்டம், தரிசு நிலங்களைப் பயன்படுத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு ஒப்படை செய்யும் சட்டம், இவைகள் எல்லாம் நெடுமாறன் அகராதியில் கம்யூனிசத்தை மறுக்கும் திட்டங்களா?
என்னுடைய மகன்களில் ஒருவருக்கே “ஸ்டாலின்” என்று இப்போதல்ல; அறுபதாண்டுகளுக்கு முன்பே பெயர் சூட்டிய என்னைப் பார்த்து, கம்யூனிசத்திற்கு ஆதரவாக எப்போதாவது கருணாநிதி நடந்து கொண்டதுண்டா என்று நெடுமாறன் கேட்கிறார் என்றால்; அவர் எந்த அளவிற்குத் தனது அறிவை அடமானம் வைத்து விட்டார் என்றல்லவா கேட்பார்கள்!
கம்யூனிஸ்ட் கட்சியிலே உள்ள உண்மையானவர்கள் என்னிடம் எந்த அளவிற்கு பற்றுக் கொண்டவர்கள் என்பதற்கு 8-1-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வே தக்க சான்றாகும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.எம்.கோபு அவர்கள் மறைந்து விட்டார்கள். அவரது திருவுருவச் சிலையினை அவரது குடும்பத்தார் சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் நிறுவுகிறார்கள். அதனை நான்தான் திறந்து வைக்க வேண்டுமென்று விரும்பி, என் உடல் நிலை கருதி, அவர்கள் அந்தச் சிலையினை அண்ணா அறிவாலயத்திற்கே எடுத்து வந்து என் கையினால் அதனைத் திறக்கச் செய்து எடுத்துச் சென்றார்கள் என்றால், அவர்களின் அந்த அன்பு எங்கே? இந்த நெடுமாறனின் கபடமான நெஞ்சம் எங்கே?
தோழர் பி. ராமமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவர். நான் முதலமைச்சராக இல்லாதபோதே, 30-3-1991 அன்று நடைபெற்ற அவருடைய நினைவகத் திறப்பு நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் திரு. ஜோதிபாசு அவர்களோடு இணைந்து கலந்து கொண்டவன் நான்.
1998இல் என்னுடைய பவள விழா நடைபெற்றபோது, அதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர். நல்லகண்ணு, ஏ.எம். கோபு, ஜி.பழனிச்சாமி, கே.சுப்பராயன், நா.பெரியசாமி, வை.சிவபுண்ணியம், நாங்குநேரி கிருஷ்ணன் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.வரதராசன், டி.கே. ரெங்கராஜன், மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் வந்து கலந்து கொண்டார்கள்.
மாநிலங்களவை உறுப்பினர்களாக தோழர் டி.கே. ரெங்கராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், டி. ராஜா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்ததும் என் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
12-5-2007 அன்று பேரவையில் எனது பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்ற போது, விழாவிற்குத் தலைமையேற்று என்னை பலபடப் பாராட்டியவர் நாடாளுமன்ற அவைத் தலைவராக இருந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் திரு. சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள்தான்.
இவ்வளவையும் மறைத்து விட்டு நெடுமாறன் என் மீது இந்த அளவிற்கு காழ்ப்பையும், வெறுப்பையும் கக்கிக் கட்டுரை தீட்ட என்ன காரணம் தெரியுமா?
அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, 18-12-2003 அன்று சென்னை உயர் நீதி மன்றம், “பொடா” சட்டத்தில் கைது செய்யப்பட்ட பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன் ஆகியோரை 17 மாத சிறை வாசத்துக்குப் பிறகு ஜாமீனில் விடுதலை செய்தது. பழ.நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, அ.தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் 19-12- 2003 அன்று தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதற்குப் பிறகும் நெடுமாறனை அ.தி.மு.க. அரசு விடுதலை செய்யவில்லை. அவர் மீது வேறொரு வழக்கினைத் தொடுத்தார்கள். அதிலும் ஜாமீன் பெற்று, 8-1-2004 அன்று தான் கடலூர் சிறையிலிருந்து பழ.நெடுமாறன் விடுதலையானார். அவரை சிறை வாயிலில் கழக மாவட்டச் செயலாளர் தம்பி எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், கடலூர் எம்.எல்.ஏ., இள. புகழேந்தி மற்றும் கழகத் தோழர்கள் வரவேற்றனர். சிறையிலிருந்து வெளியே வந்த மறுநாளே கோபாலபுரத்தில் என்னை நெடுமாறன், சுப. வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். அதேநாளில் நெடுமாறன் விடுதலை பற்றி முரசொலியில் நான் ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதையை இவ்வாறு தொடங்கியிருந்தேன்.
“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை”யில் மாதங்கள் பதினெட்டு உலவியபின் மாவீரனாகவே நெஞ்சுயர்த்தி வெளி வந்து மனமொன்றித் தழுவி மகிழ்ந்த நெடுமாறனுக்கு வாழ்த்துச் சொல்லிக் கொடி கொடுத்து நான் வரவேற்பு வழங்கிய பின் வடித்த கவிதை!”
அன்றைய கழகத் துணைப் பொதுச் செயலாளர், தம்பி மு.க.ஸ்டாலின் நெடு மாறனின் இல்லம் சென்று பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதற்கெல்லாம் நா மணக்க நன்றி தெரிவிக்க வேண்டாமா? அதற்குத்தான் நெடுமாறன் “தினமணி”யில் நாகரிகத்தில் தோய்த்து எழுதியுள்ள விமர்சனக் கட்டுரை!
அன்புள்ள, மு.க. 11-01-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 320–326. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.