முரசொலி கடிதங்கள் · 3696
“யாகாவாராயினும் நா காக்க!”
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3696. “யாகாவாராயினும் நா காக்க!”
உடன்பிறப்பே,
“திருவள்ளுவர் சிலை பராமரிப்பில் கருணாநிதியைவிட எனக்கு அதிக அக்கறை உண்டு”
என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பென்னி குவிக் நினைவு மண்டபத் திறப்பு விழாவில் திருவாய் மலர்ந்திருக்கிறார். பெரியார் அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குவிக்கின் நினைவினைப் போற்றும் வகையில் அவரது சிலையினைத் தி.மு.கழக ஆட்சியிலேயே 15-6-2000 அன்று மதுரை பொதுப்பணித் துறை வளாகத்தில் நான் திறந்து வைத்து, அந்தச் சிலை இன்றளவும் அங்கேதான் உள்ளது. அந்தப் பொறியாளர் பென்னி குவிக் அவர்களுக்குத்தான் இப்போது மீண்டும் மணிமண்டபம் எழுப்பியிருக்கிறார்கள்.
கழக ஆட்சியில் வள்ளுவருக்கு சென்னையிலே கோட்டம் எழுப்பியது மட்டும் போதாது என்று 31-12- 1975 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே குமரி முனையில் வள்ளுவர் சிலை ஒன்றினை வைப்பதென முதன்முதலாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் முடிவெடுத்த ஒரு மாதத்திற்குள்ளேயே கழக ஆட்சி கலைக்கப்பட்ட காரணத்தால், அது உடனடியாக நிறைவேற்றப்பட வில்லை. பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியிலே இருந்தபோது அதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், அது செயல்படவும் பெறவில்லை. இந்தச் செய்தியை நான் மூடி மறைத்ததாக ஜெயலலிதா பேசியிருக்கிறார். ஏற்கனவே நான் பல முறை இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.
7-10-2003 அன்று நான் “முரசொலி”யில் எழுதிய கடிதத்திலேயே “எம்.ஜி.ஆர். ஆட்சியிலே இருந்தபோது சிலை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அது முழுமை வடிவம் பெறவில்லை” என்று எதையும் மூடி மறைக்க எண்ணாமல் குறிப்பிட்டிருக்கிறேன்.
1989இல் கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, குமரி முனையில் வள்ளுவர் சிலை வைக்கும் பணிக்கான தொடக்கவிழா நடைபெற்றது. மறுபடியும் இரண்டாண்டுகளில் ஆட்சி பறிக்கப்பட்டதால் அந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுதான் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி பற்றிய வரலாற்றின் தொடக்கம்.
தற்போது வள்ளுவர் சிலை பராமரிப்பில் தனக்கு அதிக அக்கறை என்று சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை ஐந்தாண்டுக் காலம் ஆட்சியில் இருந்தபோது உண்மையிலேயே அக்கறை காட்டியிருந்தால், ஏற்கனவே கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட சிலை நிர்மாணிக்கும் பணியை நிறைவேற்றி முடித்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெற வில்லை.
பின்னர் 1996ஆம் ஆண்டு கழக ஆட்சி மலர்ந்தவுடன் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் சிலை அமைத்திடும் பணியைக் கணபதி ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரின் சீரிய முயற்சியோடு விரைந்து நிறைவேற்றி 1999ஆம் ஆண்டு டிசம்பர் 31, 2000ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் சிலை திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் அருமை நண்பர் ஜி.கே. மூப்பனார், இல்.கணேசன், என். சங்கரய்யா, வாழப்பாடி ராமமூர்த்தி, ஆர்.நல்லகண்ணு, எஸ். திருநாவுக்கரசு, குமரி அனந்தன், ஆர்.எம். வீரப்பன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மலேசிய டத்தோ சாமிவேலு, இலங்கை ஆறுமுகம் தொண்டைமான், மொரிஷியஸ் ராமசாமி சிதம்பரம் பிள்ளை, சிங்கப்பூர் திருநாவுக்கரசு, ஸ்காட்லாந்து ஆஷர், ஜெர்மனி தாமஸ் மால்டன் மற்றும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், புலவர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருவள்ளுவர் சிலை பராமரிப்பில் என்னைவிடத் தனக்கு அதிக அக்கறை உண்டு என்று ஜெயலலிதா எனக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால் 2001ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே ஏற்பட்ட பிறகு, தி.மு. கழக ஆட்சியினால் இந்தச் சிலை வைக்கப்பட்டது என்பதால் இந்தச் சிலையினைப் பராமரிக்கும் பணியினை அப்போதே ஜெயலலிதா அரசு கைவிட்டுவிட்டது. அதுபற்றி 2003ஆம் ஆண்டிலேயே நான் “முரசொலி”யில்,
“இந்தச் சிலையின் அழகை அனைவரும் காணக் கூடிய அளவில் 65 ஒளி விளக்குகள் இந்தச் சிலை வைக்கப்பட்டபோது அமைக்கப்பட்டிருந்தன. அந்த விளக்குகளில் தற்போது 11 விளக்குகள்தான் எரிகின்றன. மற்ற விளக்குகள் புதுப்பிக்கப்படவே இல்லை. அதன் காரணமாக இரவு நேரத்தில் வள்ளுவர் சிலையைப் பார்க்க வருபவர்கள் முழுமையாகச் சிலையின் அழகைக் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அய்யன் வள்ளுவரின் அந்தச் சிலையை அன்றாடம் சுமார் 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் பேர் வந்து பார்க்கின்றார்கள். விடுமுறை நாட்களில் மூன்று படகுகளும், மற்ற நாட்களில் ஒரு படகும் என்ற அளவில் பார்வையாளர்கள் அந்தப் படகுகளில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். நாள் ஒன்றுக்கு படகு 18 முறை சென்று திரும்புகிறது. கரையிலிருந்து செல்லும் படகு நேராகத் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று, பிறகு அங்கிருந்து விவேகானந்தர் மண்டபத்திற்குச் சென்று கரை திரும்புகின்றது. ஒரு படகில் ஒரு முறை 200 பேர் ஏற்றிச் செல்லப்படுகிறார்கள். ஒருவருக்கு படகு கட்டணமாக இருபது ரூபாய் வசூலிக்கப்படுகிறது. படகு செலுத்துவது அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிறுவனத்தின் பொறுப்பிலே உள்ளது. இவ்வாறு பார்வையாளர் கட்டணம் மூலமாக மட்டுமே ஆண்டு ஒன்றுக்குத் திருவள்ளுவர் சிலையினை காண வருபவர்கள் வாயிலாகச் சுமார் 60 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாயாகக் கிடைக்கப் பெறுகிறது. விவேகானந்தர் மண்டபம் கண்டிடத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த 60 இலட்சம் ரூபாயிலிருந்து கணிசமான ஒரு தொகையை இந்தச் சிலையின் பராமரிப்புச் செலவிற்காக அரசு ஒதுக்கினால்கூட போதும்! கடற்கரையோரத்தில் சிலை அமைக்கப்பட்டிருப்பதால் கடலின் உப்புக் காற்று சிலையைப் பாதித்து விடாமல் இருக்க ரசாயனப் பூச்சு ஒன்று செய்யவேண்டும். ஆனால் இதனை இந்த அரசு செய்யவில்லை. அதன் காரணமாகவும் சிலை பாதிக்கப்படக் கூடும். எங்களையெல்லாம் ஆளாக்கிய
தந்தை பெரியார் அவர்கள் திருவள்ளுவருடைய பெருமையைச் சொல்ல, திருக்குறளின் தத்துவங்களை எடுத்துக்காட்ட சென்னை மாநகரத்திலே 1942ஆம் ஆண்டுவாக்கில் திருக்குறள் மாநாடு ஒன்றை நடத்திய பிறகுதான் பண்டிதர்களுடைய நூலகங்களில் மாத்திரம் இருந்த திருக்குறள் பாமர மக்களுடைய கைக்கு வந்தது என்பதை யாரும் மறக்க முடியாது. இருப்பினும் திராவிட இயக்கத்துக்கு மட்டும் வள்ளுவரை உரிமை கொண்டாட நான் விரும்பவில்லை. கட்சி வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொரு கட்சியிலும் உள்ளவர்கள் திருக்குறளின் சிறப்பை நன்குணர்ந்து அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறார்கள். ஆனால் அதிலும் கட்சி மாச்சரியமும் அரசியல் கசப்புணர்வும் புகுந்து விடுவதுதான் வேதனையானது.
குமரி முனையில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவரின் சிலைக்குக் கடல் காற்றினால் மெல்ல மெல்ல ஏற்படும் சேதாரத்தை நிரந்தரமாகத் தடுத்திட ஆண்டுதோறும் ரசாயனக் கலவை பூசுகிற பராமரிப்புப் பணியைத் தொடர்ந்து நடத்திட இந்த அரசு முன்வந்தாலே போதுமென வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்”
என்று 2003ஆம் ஆண்டிலேயே எழுதியிருந்தேன். அதையெல்லாம் மறந்துவிட்டு, தற்போது திருவள்ளுவர் சிலை பராமரிப்பில் என்னை விட அவருக்கு அதிக அக்கறை என்று பேசினால், யார் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு புளுகுகிறார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமலா போய்விடும்?
கழக அரசில் ஆற்றிய பணிகளில் தலையாய பணி, குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு அகிலமே கண்டு வியக்கும் அளவுக்கு 133 அடி உயரத்தில் 7000 டன் எடை கொண்ட மாபெரும் சிலை 9 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்திட்ட பணியாகும். அதுமட்டுமல்லாமல், சென்னையில் வள்ளுவர் கோட்டம் எழுப்ப திட்டமிட்டு நிறைவேற்றியதும்; தேசிய அளவிலான தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் தொல்காப்பியர் பெயரில் விருது வழங்கிட வேண்டும் என்றும்; உலக அளவிலான தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘குறள் பீடம் விருது’ வழங்கிட வேண்டும் என்றும்; மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்து
செம்மொழி பிரகடனம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக அந்த விருதுகளை மத்திய அரசு அறிவிக்கச் செய்ததும் அடியேன்தான் என்பதைத் தமிழ் ஆர்வலர்கள் நன்கறிவர்.
திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும்; “2011ஆம் ஆண்டு ஆட்சி மாறிய பிறகு ஒன்றரை ஆண்டுக் காலமாக இந்த ரசாயனக் கலவை பூசப்படவில்லை என்று கருணாநிதி கூறுவது விஷமத்தனமானது” என்றும் அவருக்கே உரிய வாய்த் துடுக்கோடு ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
இந்தக் கூற்றாவது உண்மையா என்றால், ஆட்சியினரை ஆதரிக்கும் “தினமணி” நாளேடு 31-12-2012 அன்று அரைப்பக்கத்திற்கு “உப்புக் காற்றால் சேதமடையும் திருவள்ளுவர் சிலை” என்ற தலைப்பில் எந்த அளவிற்குச் சிலை பராமரிப்புப் பணியில் அ.தி.மு.க. அரசில் அலட்சியம் காட்டப்படுகிறது என்பதை எழுதியவுடனேயே, அது தவறான செய்தி என்றும் சிலை பராமரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் ஜெயலலிதாவோ, அவரது ஆட்சியினரோ ஏன் மறுக்கவில்லை? அரசின் சார்பில் அடுத்த நாளே அந்தச் செய்தியை மறுத்து, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்தால், தி.மு.கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் அறிவிக்க வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காதே! நான் கூறியது விஷமத்தனமானதா? ஜெயலலிதா தற்போது பேசியிருப்பது விஷமத்தனமானதா?
அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருக்குறளை அழித்துவிட்டு, என்னுடைய வாசகங்களை எழுதச் செய்தேன் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். 1967இல் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் போக்கு வரத்துத் துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் எல்லாம் திருவள்ளுவரின் படத்தை அமைத்து, திருக்குறளையும் பொறிக்கச் செய்தவனே நான் தான். புதிய பேருந்துகளில் திருக்குறள் எழுது படாத நிலையில் வழித்தடத்தில் அவசரமாக அனுப்பப்பட்டபோது, அந்தத் துறையின் அமைச்சர் தம்பி கே.என்.நேருவை அழைத்து நான் அறிவுறுத்தியதற்குப் பிறகு அந்தப் புதிய பேருந்துகளிலும் திருக்குறள் உடனடியாகப் பொறிக்கப்பட்டது.
குறள் பற்றி “குறளோவியம்” எழுதி; திருவள்ளுவருக்கு ஓவியம் தீட்டிய வேணுகோபால் சர்மா அவர்களை அழைத்து பத்தாயிரம் ரூபாய் நிதியினை வழங்கி, அவர் வரைந்த திருவள்ளுவர் உருவப் படத்திற்கான உரிமையைத் தமிழக அரசு பெற்றுக் கொள்ளச் செய்து, 3 லட்சம் ரூபாயை வழங்கி; “திருக்குறள்- கலைஞர் உரை” என்ற எனது நூலை தமிழறிஞர் அ.சா.ஞான சம்பந்தம் மூலம் வெளியிடத் தொடங்கி திருவள்ளுவருக்குச் சிறப்புச் செய்தவன் நான்.
தொடக்கத்திலேயே, 30.10.1969 அன்று தி.மு. கழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, ஆண்டுதோறும் பொங்கல் விழாக் கொண்டாடப்படும் நாளுக்கு அடுத்த நாள், ‘திருவள்ளுவர் நாள்’ என்றும், திருவள்ளுவர் நாள் விடுமுறை நாள் என்றும், 3.11.1969 அன்று தமிழக அரசின் ஆணையாக வெளியிடப்பட்டது.
தி.மு.கழக அரசு பிறப்பித்த ஆணையின்படி தான், 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும், திருவள்ளுவர் ஆண்டு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் விருதுக்கான தொகையை தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தான் 10 ஆயிரம் ரூபாய் என்பதற்கு மாறாக, 20 ஆயிரம் ரூபாயாகவும், 1998ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தினேன் என்பதை மறந்துவிட்டு, திசை திருப்பும் வகையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார் ஜெயலலிதா.
என்னைவிட அவருக்குத் திருவள்ளுவர் சிலை பராமரிப்பில் அக்கறை உண்டு என்று நினைத்துக் கொண்டாலோ, அல்லது தமிழ், செம்மொழி என்ற விஷயங்களில் அக்கறையைப் பற்றிப் பேசினாலோ அவர் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. ஏனென்றால், சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களில் கழக ஆட்சியில் அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தையே “ஸ்டிக்கர்” ஒட்டி மறைத்த மகானுபாவர்தான் ஜெயலலிதா.
இறுதியாக அவர் யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்த குறளைச் சொல்லித்தான் தன் பேச்சை முடித்திருக்கிறார். அந்தக் குறள்,
“பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.”
அதாவது பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள் என்ற இந்த வள்ளுவரின் பொன் மொழி, என்னுடைய இந்த நீண்ட விளக்கங்களுக்குப் பிறகு, அந்தக்குறள் யாருக்குப் பொருந்தும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களும், குறளை நன்குணர்ந்த சான்றோர்களும், புலவர்களும் நன்கு உணர்வார்கள்.
அம்மையார் கூறும் அந்தக் குறள் “பயனில சொல்லாமை” என்ற அதிகாரத்தில் இடம் பெற்றதாகும். அதே அதிகாரத்தில் இடம் பெற்ற, அம்மையார் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு குறளும் உள்ளது. அது;
“பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்”
அதாவது பயனற்றவைகளைச் சொல்லி, பயன்பெற நினைப்பவரை, மனிதர் என்பதை விட, “பதர்” என்பதே பொருத்தமானதாகும்.
நான் ஜெயலலிதாவுக்கு விளக்கங்களைத் தான் அளிக்கிறேன். அவரோ வெறுப்பைக் கக்குகிறார். அவரைப் போன்றவர்களுக்காக வள்ளுவர் சொன்ன வாசகமான “யாகாவாராயினும் நா காக்க” என்பதை மறந்து விடாதீர்கள் என்று நினைவூட்டுகிறேன்!
அன்புள்ள, மு.க. 17-1-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 333–339. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.