அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3699

முரசொலி கடிதங்கள் · 3699

ஈழத்தமிழர் வாழ்வில், நல்லொளி பரவிட.....

நாள் 26.1.2013சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3699. ஈழத்தமிழர் வாழ்வில், நல்லொளி பரவிட.....

உடன்பிறப்பே,

ஈழத்தமிழர்களின் வேதனைகள் தீர்ந்த பாடில்லை; அவை தொடர்ந்து துன்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னால் இயன்ற அளவிற்கு என்னென்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் இலங்கைத் தமிழர்களின் நலனை மனதிலே கொண்டு செய்து கொண்டுதான் உள்ளது. 1956ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ச்சியாக ஓங்கிக் குரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்ப வர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

நமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்திய அரசு உதவிட முன்வருவதாக உறுதி கூறிய போதிலும், உலக நாடுகளின் மத்தியில் நடுநிலை நாடுகளில் ஒன்று இந்தியா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, சிலவற்றில் விட்டுக் கொடுத்துப் போகிறதே இந்திய அரசு என்று சிலர் சந்தேகம் கொள்ளக் கூடிய அளவிலேதான் செயல்படுகிறது.

உதாரணமாக இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பலமுறை விடுத்து விளக்கியுள்ளோம்.

இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. நேற்றையதினம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்கள்,

இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார்.

தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் உள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் “இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியைத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை. அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகாரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை” என்று கூறியிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அந்தோணி அவர்கள், “தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை. இலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம்.

எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம். அதே சமயம் மற்ற பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

இலங்கையிலே ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட வேண்டுமென்று பெரிதும் விரும்புகின்ற ஐ.நா. மன்றம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் ஈழப் பகுதி சிங்களமயமாக்கப்படும் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நாம் நடத்திய “டெசோ” மாநாட்டிலே; பதினான்கு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

நமது “டெசோ” மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானங்களைத் தான் நமது கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்றக் கழகக் குழுவின் தலைவர் தம்பி டி.ஆர். பாலுவும் எடுத்துச் சென்று ஐ.நா. சபையிடமும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடமும் ஒப்படைத்தார்கள்.

தீர்மானங்களை “டெசோ” அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டிலே நிறைவேற்றியதோடு இருந்துவிடாமல், இந்தியப் பிரதமர் அவர் களுக்கும் அதனை அனுப்பிவைத்தேன். அந்தக் கடிதத்தில்

இலங்கையிலுள்ள தமிழர்கள் கோரி வரும் அரசியல் தீர்வை, அவர்களே முடிவு செய்யும் வகையில் அவர்களுக்குத் தேவையான உரிமைகள் வழங்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபையிலும், மனித உரிமைகள் ஆணையத்திலும் கொண்டுவர மத்திய அரசு உதவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

நான் அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்து விட்டு, பிரதமர் அவர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்ததோடு, ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா; நமது வேண்டுகோளை ஏற்று ஆதரித்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்கள். பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அளித்தனர்.

நமது கழக உறுப்பினர்களிடம் நேரில் உறுதி அளித்ததோடு, என்னுடைய கடிதத்திற்கு எனக்குப் பதில் எழுதிய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், நல்வாழ்வுக்கும் தேவையான பணிகளில் இந்திய அரசு அக்கறை காட்டி வருகிறது என்றும், ஈழத் தமிழர்களின் மறு குடி அமர்வு மற்றும் மறு வாழ்வுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கிச் செயல்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அந்தக் கடிதத்தில், அதிகாரப் பகிர்வு குறித்து ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் இலங்கை அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும், எதிர்காலத்தில் ஈழத் தமிழர்கள் சம உரிமை, கௌரவம், சம நீதி மற்றும் சுயமரியாதையுடன் வாழக் கூடிய நிலையை உருவாக்கிட இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் 3-10-2012 அன்று என்னுடைய தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் (டெசோ) அமைப்பின் கலந்துரையாடல் கூட்டத்தில்; “ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட ஐ.நா. மன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போது உள்ள நிலை

மைக்கு விரைந்து முற்றுப் புள்ளிவைத்து, ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், தங்களுடைய உரிமைகள் குறித்து விவாதித்துத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைச் சிங்கள அரசு, ஈழத்தந்தை செல்வா அவர்கள் காலந்தொட்டே, தொடர்ந்து தமிழினத்தை ஏமாற்றி வரும் கபட நாடகத்தை, நாம் புரிந்து கொண்டிருப்பதால்தான்; ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வினைப் பொது வாக்கெடுப்பு மூலமாக முடிவு செய்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். சிங்கள அரசின் மனித நேயமற்ற அணுகுமுறையினை உலக நாடுகள் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்ளத் தொடங்கி விட்டன என்பதையே ஐ.நா. மனித உரிமை ஆணைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜா, லண்டனில் இருந்து திரு.கண்ணன், நார்வேயிலிருந்து திரு.சிவகணேசன் ஆகியோர் எனக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தனர். அதன்படி, “2009 போர் முடிந்தவுடன் திரு.இளங்குமரன் என்ற பேபி சுப்பிரமணியம், திரு.யோகி, கவிஞர் புதுவை இரத்தினகிரி, திரு.பாலகுமார், இளம்பரிதி ஆகியோருடன் 18 ஆயிரம் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டனர். அவர்களுடைய தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து திரு.யோகியின் மனைவி திருமதி யோகதத்தினம் யோகி; கவலையுடன் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது, ஈழக் கவிஞர் புதுவை இரத்தினகிரி எங்குள்ளார் என்று தெரியவில்லை என்றும், ஒரு சிலர் அவர் சாகடிக்கப்பட்டு விட்டார் என்றும் சொல்கின்றனர். ஈழப் பிரச்சினையில் ஆர்வத்தோடு களப்பணியாற்றிய கவிஞர் ரத்தினகிரியின் உயிர், கேள்விக்குறியாக உள்ளது” என்றெல்லாம் தெரிவித்து இதைப்பற்றி நான் வினா எழுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

20-1-2013 அன்று நான் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கும் எழுதிய நீண்ட கடிதத்தில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வரும் அத்துமீறல் மற்றும் அராஜக நடவடிக்கைகளைத் தடுத்து

நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். மேலும் அந்தக் கடிதத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச்சாரத்தை நீர்த்துப் போகச் செய்வதிலும், தமிழர்களின் பொருளாதார வாழ்வை சீர்குலைத்துச் சிதைப்பதிலும் சிங்கள அரசு வேகமாக ஈடுபட்டு வருவதையும் எடுத்துக்காட்டி, இலங்கையிலே உள்ள தமிழர்கள் வாழும் 89 கிராமங்களுக்கு ஏற்கனவே இருந்த பெயர்களை மாற்றிவிட்டுச் சிங்களப் பெயர்களைச் சூட்டியிருப்பது பற்றியும் விரிவான அறிக்கையில் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தின் முழு விவரமும், அந்தக் கிராமங்களின் பெயர்களும் ஏடுகளில் விரிவாக வெளிவந்தன. ஆங்கில நாடேடுகள் உட்பட; அந்தச் செய்திக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தன.

பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தச் செய்தி வழக்கறிஞர், தம்பி கே.எஸ். ராதாகிருஷ்ணன் முயற்சியால் அதிர்வு இணையம் வழியாகச் சென்றுள்ளது. அதனைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் படித்ததோடு, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆங்கில இணையங்களிலும் வெளியிட்டிருக்கிறார்கள். அதனைப் படித்துவிட்டு நேற்று ஒரு நாளில் மட்டும் சிலர் அனுப்பிய பதில்களின் சுருக்கம் வருமாறு :-

“சுதாகரன் (ஜெர்மனி):- உங்கள் செய்தியைப் பார்த்தேன். மிகவும் கவலையாக உள்ளது. இனி நான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டிருக்கிறதா? என் பிள்ளைகளுக்கு நான் இனி எங்கே பிறந்தேன் என்று சொல்ல முடியாத நிலை. இதனைச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எனது நன்றி.

ஜெயசங்கர் (சுவிஸ்):- சில இணையத்தின் செய்திகளைப் பார்த்து நானும் ஒரு காலத்தில் கலைஞர் அவர்களைக் குறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் இப்போது செய்வதெல்லாம் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதியைத் தருகிறது.

திருநாவுக்கரசு (லண்டன்):- நல்ல ஒரு விஷயத்தைக் கலைஞர் அய்யா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வளவு வயதாகியும் அவர் செயல்படும் விதம் பிரமிக்க வைக்கிறது. இதனை வேறு தமிழகத் தலைவர்கள் ஏன் செய்யவில்லை?

நிதர்ஷன் (அமெரிக்கா):- 89 தமிழ் நகரங்களையும் சிங்களத்தில் மாற்றினால், இனி நமது அம்மாவைக் கூட நாம் “அம்மே” என்று சிங்களத்தில்தான் கூப்பிட வேண்டும் போல இருக்கே அண்ணா! இதில் கலைஞர் அவர்கள் செய்த வேலை பாராட்டத்தக்கது. அவராவது கடிதம் எழுதினார். மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அவர்கள் ஈழப் பிரச்சினையிலாவது இணைய மாட்டார்களா? எங்களுக்கு ஒரு விடிவு வராதா?

நிலா சுதன் (முன்னாள் போராளி) ஈழம் :- மட்டக்களப்பில் நாம் காலம் காலமாகக் கூப்பிட்டு வரும், குடுமி மலை என்னும் இடத்தை “தொப்பிகல” என்று சிங்களம் மாற்றி விட்டதே! இப்போது தமிழ் ஊடகங்கள்கூட “தொப்பிகல” என்றுதான் எழுதுகிறார்கள். எங்கே போய் முடியப்போகிறதோ தெரியவில்லை. ஆனால் நல்ல வேளையாகக் கலைஞர் அண்ணா அவர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார். அவரால் ஏதாவது நடந்தால் நாங்கள் இங்கே நிம்மதியாக வாழலாம்.

விக்டர் (கனடா):- இதுவரை கலைஞர் அவர்கள் ஈழப் பிரச்சினைக்காக ஆட்சியை இரண்டு முறை இழந்தும், பல்வேறு இழப்புகள், துயரங்களைச் சுமந்த போதும், தற்போதும் கலைஞர் அய்யா அவர்கள் எங்களின்பால் நேசம் கொண்டு குரல் கொடுப்பதை ஈழத்துச் சொந்தங்களால் மறக்க முடியாது. எங்கள் நன்றிகள்!

நா. சிற்றரசு (ஜெர்மனி):- ஈழப் பிரச்சினையில் அய்யா கலைஞர் அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன. ஐ.நா. மன்றத்திற்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களையும், டி.ஆர். பாலு அவர்களையும், எங்களோடு நீண்ட காலம் தொடர்பில் உள்ள வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் அவர்களையும் அனுப்பி பிரிட்டன் மாநாட்டில் கலந்துகொண்டு, எங்களுக்காகக் குரல் கொடுக்கச் சொன்னார். இந்திய நாடாளுமன்றத்தில் கவிஞர் கனிமொழி அவர்களும் எங்களுக்காகக் குரல் கொடுத்ததை மறக்க முடியாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடக்கப் போவது நல்லவையாக இருக்கட்டும். கலைஞர் அய்யாவின் முன்னெடுப்புகளால் எங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற ஏராளமான கடிதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. முதலில் வந்ததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

இந்தச் செய்திகளை எல்லாம் ஏதோ என் பெருமைக்காக நான் இங்கே எழுதிடவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள நம்முடைய தமிழ்ச் சொந்தங்களின் எண்ணவோட்டம் எவ்வாறு உள்ளது என்பதைக் குறிப்பிட்டுத்தான் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டியிருக்கிறேன். இப்படிச் சுமார் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அவை அனைத்தையும் இங்கே இணைக்க முடியாது என்பதால் சிலவற்றை மட்டும் இணைத்துள்ளோம் என்றும் இலண்டனிலிருந்து நண்பர் குகதாசன் குகநேசன் என்கிற கண்ணன் அனுப்பியிருக்கிறார்.

வரும் மார்ச் திங்களில் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை சபையின் கூட்டத் தொடர் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக விவாதிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. உலக நாடுகளின் கடுமையான கண்டனங்கள் இலங்கை அரசுக்கு எதிராக அப்போது தெரிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் நம்முடைய இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுதியான நிலைப் பாட்டினை மேற்கொள்ள வேண்டுமென்பதே தமிழகத்தில் வாழும் தமிழர்களின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

இதைப் பற்றியெல்லாம் விரிவாக விவாதித்திடத்தான் பெப்ரவரி திங்கள் 4ஆம் நாள் அன்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் “டெசோ” உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த மடலில் நான் எழுதியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில் விவாதித்து; துன்பச் சூறாவளியில் துவண்டு கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் நல்லொளி பரவிட நல்ல முடிவுகளை எடுப்போம்!

அன்புள்ள, மு.க. 26-1-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 352–358. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்