முரசொலி கடிதங்கள் · 3701
எப்போது விஸ்வரூபம் எடுக்கப் போகிறதோ?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3701. எப்போது விஸ்வரூபம் எடுக்கப் போகிறதோ?
உடன்பிறப்பே,
2006 தமிழகச் சட்டசபைத் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
“சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகுதிகளில் “பறக்கும் சாலைத் திட்ட”த்தை (Elevated Highway) செயல்படுத்துவோம்”
-எனத் தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அந்த வாக்குறுதியைச் செயல்படுத்திட முனையும் நோக்கில், 13.5.2006 அன்று கழக அரசு அமைந்தபிறகு, ஒரு மாத காலத்திற்குள்ளாக அதாவது, 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில்,
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை அகற்றுவதற்காகச் சென்னை துறைமுகத்திற்கு உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, சென்னைத் துறைமுகத்தையும், மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலச்சாலை 1655 கோடி ரூபாய்ச் செலவில் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டு, இந்த மிகப் பிரமாண்டமான திட்டத்திற்கு மாண்புமிகு பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் 8.1.2009 அன்று என் தலைமையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார். அப்போது நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பேசும்போது, “This Project is one more important mile-stone in the ambitious road programme of the Government that will transform the Country’s
transport sector, give a boost to industry and integrate the economy” என்று குறிப்பிட்டதையும் மறக்க முடியாது. இந்தத் திட்டத்தின் மதிப்பு பின்னர் 1,815 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.
இத்திட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நிறைவேற்றப்படத் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டது. இதில் பெரும் பகுதி நிதி ஒதுக்கீடு மத்திய அரசின் நிதியாகும்.
சென்னைத் துறைமுகத்திலிருந்து தங்கு தடையற்ற சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கு வழிவகை செய்வதற்காகச் சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை கூவம் ஆற்றின் ஒரு கரையோரமாகப் பறக்கும் விரைவுச் சாலையை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குத் தமிழக அரசு 22.6.2007 அன்று கொள்கை அளவில் அனுமதி வழங்கியது.
பின்னர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக்கொண்டபடி, இந்த உயர்மட்ட பறக்கும் சாலையைச் சென்னை துறைமுகத்திலிருந்து கோயம்பேடுவரை கூவம் ஆற்றின் கரையோரமாகவும், கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் வரை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையின் மேலும் அமைப்பதற்கு 7.3.2008 அன்று அனுமதி வழங்கித் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
இவ்விரைவுச் சாலை உயர்மட்ட சாலையாக 17.5 கிலோ மீட்டர் நீளமும், தரைமட்ட சாலையாக 1.5 கிலோ மீட்டர் நீளமும் ஆகமொத்தம் 19 கி.மீ. நீளமுடையதாக அமையும்.
1815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் இச்சாலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாகக் கட்டுதல், இயக்குதல் மற்றும் மாற்றுதல் (Build, Operate and Transfer) திட்டத்தின் கீழ் அமைக்கப்பட முடிவெடுக்கப்பட்டது.
நான்கு வழி உயர்மட்ட சாலையாக அமையவுள்ள இச்சாலையின் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டு காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றும், இது, இந்தியாவிலே மிக நீளமான உயர்மட்ட சாலையாக அமையும் என்றும் அப்போதே அறிவிக்கப்பட்டது.
இவ்வுயர்மட்ட மேம்பாலச் சாலை அமைப்பதற்குத் தேவைப்படும் நில எடுப்புக்கான செலவுத் தொகையையும் மற்றும் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல்; மறுகுடியமர்வுக்கு வகைசெய்தல் ஆகியவற்றுக்காக ஏற்படும் செலவினத்தையும் சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகமும், தமிழ்நாடு அரசும் 50க்கு 50 என்கிற விகிதாச்சார அடிப்படையில் ஏற்பதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு 130 கோடி ரூபாய் செலவாகும்.
இதைத் தவிர, இந்த உயர்மட்ட பறக்கும் சாலை அமைப்பதையொட்டி, இப்பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் அனுமதி பெறுதல், குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் மின் கம்பங்கள் ஆகியவற்றை இடமாற்றம் செய்தல் போன்ற பணிகளுக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளால், பாதிக்கப்படுபவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், மறுகுடியமர்வுக்கு வகைசெய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காகத் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒருங்கிணைப்பு நிறுவனமாக (Nodal Agency) நியமிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்வதற்காகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒரு துணைக் குழுவும் 14.9.2008 அன்று தமிழக அரசினால் அமைக்கப்பட்டது.
சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடுவதால் அவை துறைமுகத்தை அடைவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. எரிபொருள்களும் வீணாகித் தேவையற்ற செலவினமும் ஏற்படுகிறது. இந்த உயர்மட்ட சாலை அமைப்பதன் மூலம், சென்னைத் துறைமுகத்திலிருந்து சரக்குப் பெட்டகங்களைத் தங்க நாற்கரச் சாலை வழியாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல், கால விரயத்தையும், எரிபொருள் விரயத்தையும் தவிர்த்து, இதர
பகுதிகளுக்கு விரைவாகவும், தடங்கலின்றியும் கொண்டு செல்ல முடியும்.
பிற பகுதிகளிலிருந்து சரக்குகளைத் துறைமுகத்திற்கு விரைவாகக் கொண்டு வரவும் முடியும்.
இதன் தொடர் பயனாகச் சென்னை மாநகரில் உள்ள மற்ற சாலைகளிலும் வாகனப் போக்குவரத்துகளால் ஏற்படும் நெரிசல்களும் வெகுவாகக் குறையும்.
2011ஆம் ஆண்டு மார்ச் திங்களில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் தொடருவதற்கான அனுமதியையும் வழங்கிவிட்டது.
கழக அரசின் திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்திய பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்று பார்த்து, கழக ஆட்சியின் போது தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமான சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்டச் சாலை 1,815 கோடி ரூபாய் செலவிலே தொடங்கப்பட்டு அதிகவேகமாக நடைபெற்று வந்ததை, அ.தி.மு.க. ஆட்சியின் “பணியைத் தொடராதே” என்று 2012ஆம் ஆண்டு மார்ச் திங்களில் தடுத்து நிறுத்தி விட்டார்கள். இந்தத் திட்டத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் தலைமை நீதிபதி இக்பால் அவர்களும், நீதிபதி சிவஞானம் அவர்களும் 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் இந்தத் திட்டத்தைத் தொடரலாம் என்று தீர்ப்பளித்ததையும் தற்போதைய தமிழக அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் முறையாக வழங்கப்பட்டு, பிரதமரே வந்து பணிகளைத் தொடங்கி வைத்த திட்டம் அது. அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரை மணி நேரத்தில் செல்லுகின்ற பயணம் ஐந்தே நிமிடங்களில் முடிவுறும்; போக்குவரத்துச் சுலபமடையும். ஏற்கனவே தமிழக அரசே முழுமையாக ஆய்ந்து அனுமதி கொடுத்து தொடங்கப் பட்ட திட்டம். இந்த விவரங்களையெல்லாம் மத்திய அரசின் துறைச் செயலாளரே தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு விரிவாக எழுதியதோடு, நேரிலும் வந்து விளக்கியிருக்கிறார். மத்திய அமைச்சரவையில் செயலாளர் திரு.டி.ஏ.கே.நாயர்
அவர்கள் பிரதமரின் அனுமதியோடு சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இந்தத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கியிருக்கிறார். அதற்குப் பிறகும் சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலைப் பணியினையும் அ.தி.மு.க. அரசு முடக்கிப் போட்டுள்ளது.
16-5-2012 அன்று டெல்லி மாநிலங்களவையில் கவிஞர் கனிமொழி இந்த மதுரவாயல் திட்டத்தைத் தமிழக அரசு முடக்கிப் போட்டிருப்பது குறித்து பேசியபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் எல்லாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். சுமார் ஓராண்டு காலமாக இந்தத் திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு நியாயமான அடிப்படை எதுவுமின்றி, முட்டுக் கட்டை போட்ட காரணத் தினால் திட்ட மதிப்பீடும் அதிகமாகி, பொதுமக்களின் வரிப்பணம் விரயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பணிகள் நிறைவேற்றப் பட்டு வந்த இடத்தில் எல்லாம் புல், பூண்டுகள் முளைத்துவிட்டன. இந்த முக்கியமான திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு தடங்கலாக இருந்ததின் காரணமாக மக்களிடையே எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகமானதால் தமிழக அரசு தன் முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 29-1-2013 தேதிய “இந்து” நாளிதழில் “Ray of hope for Port - Maduravoyal Project - State wants NHAI to realign elevated expressway along Cooum and resume work” என்ற தலைப்பில் இத்திட்டம் பற்றி நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, தமிழக அரசு இந்தத் திட்டத்தைத் தொடருவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கு அதுபற்றிக் கடிதம் எழுதியிருப்பதாகவும் சொல் லப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டுரையை முடிக்கும்போது, “The Tamil Nadu Government is yet to complete its share of the work in terms of relief and rehabilitation of dwellers along the Cooum River and acquisition of the land” என்றும் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தைப் பொறுத்தவரை; தமிழக அரசோடு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக எதுவும் செய்யப்படவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் அளவிற்குச்
செலவுகள் செய்யப்பட்டு; இருபது சதவிகிதப் பணிகள் முற்றுப் பெற்றுள்ளன.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இது போன்ற பல திட்டங்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்களின் வரிப் பணம்தான் விரயமாக்கப்படுகிறது. சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைக்கும் இத்திட்டம் ஏற்கனவே விரிவாகப் பேசப்பட்டு, மத்திய அரசும் மாநில அரசும் விவாதங்கள் நடத்தி அதன் பிறகுதான் ஒப்புதல் தரப்பட்டு இந்தியப் பிரதமர் அவர்களே வந்திருந்து அடிக்கல் நாட்டினார்கள். அதனால் என்ன? பிரதமர் அவர்களும், திருமதி சோனியா காந்தி அவர்களும் நேரில் வந்து திறப்பு விழா நடத்தி வைத்த புதிய தலைமைச் செயலகம் - புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்தையே மருத்துவமனையாக மாற்ற முனைபவர்களுக்கு மதுரவாயலா முக்கியம்?
“வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை முன்னெடுத்துச் சென்று முதன்மை மாநிலம் ஆக்குவேன்” என்று அடிக்கடி முழங்கிடும் ஜெயலலிதா; அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பான அந்த மாபெரும் திட்டத்தைத் தொடர்ந்து செயலாக்கம் பெற்றிட அனுமதித்திருந்தால் 2013ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாகவே அத்திட்டம் முழுமை அடைந்திருக்கும். ஆனால் அதன் காரணமாகத் தி.மு.கழகத்திற்குப் பெயர் வந்து விடுமே என்ற ஒரே உள்நோக்கத்தோடு அ.தி.மு.க. அரசு அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுத் தாமதம் ஏற்படுத்தி மக்கள் வரிப் பணத்தை பாழடித்துவிட்டு; மாநில வளர்ச்சியில் அக்கறை இருப்பதாகச் சொல்லிக் கொள்வதெல்லாம் போலியானதே என்ற உண்மை மக்களுக்குத் தெரியாமலா போய்விடும்? இந்த உண்மைகள் எல்லாம் எப்போது விஸ்வரூபம் எடுக்கப் போகிறதோ என்பது இப்போது தெரியாது; ஆனால் தெரியாமலே போய்விடாது;
தெரிந்தே தீரும்!
அன்புள்ள, மு.க. 1-2-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 366–371. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.