அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3704

முரசொலி கடிதங்கள் · 3704

முறையான நடவடிக்கை எடுத்தது; நானா? அவரா?

நாள் 12.2.2013சுமார் 9 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3704. முறையான நடவடிக்கை எடுத்தது; நானா? அவரா?

உடன்பிறப்பே,

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு 8-2-2013 அன்று பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா படித்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கான நிவாரணம், ஈழத்தமிழர் பிரச்சினை, மின் உற்பத்தி போன்றவைகளுக்கு நான் ஏற்கனவே விரிவாக விளக்கமளித்துள்ளேன். அவர் உரையில் எஞ்சிய பகுதி, காவேரி நதி நீர்ப் பிரச்சினை பற்றியதுதான்! காவேரி நதி நீர் பற்றி பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய கடந்த 19 மாத கால ஆட்சியில் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான நீரினைப் பெற்றுக் கொடுக்க இயலாத நிலை பற்றி விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, வழக்கம் போல் தேவையில்லாமல் என்னைப் பற்றி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறி; தான் தப்பித்துக் கொள்ள முயன்றிருக்கிறார். காவேரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கும், காவேரியிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கும் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். இவர் இந்தக் குற்றச்சாட்டினை அவ்வப்போது சொல்வதும், ஒவ்வொரு முறையும் அதற்கு நான் விளக்கமளிப்பதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

காவேரி நடுவர் மன்ற இடைக்கால ஆணையை தனது இடைவிடா முயற்சிகளால் பெற்றுக்கொண்டு வந்ததைப்போல ஜெயலலிதா பேரவையிலே கூறியிருக்கிறார். காவேரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று முதன் முதலாக தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான் 17- 2-1970 அன்றே மத்திய அரசுக்குக் கடிதமே எழுதப்பட்டது. நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தி.மு. கழக ஆட்சியிலேதான் 8-7-1971 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான், 27-7-1989 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று, நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருந்தது என்பதை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணித்ததிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

2-12-1989 அன்று திரு. வி.பி. சிங் அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நடுவர் மன்றம் அமைக்கக்கோரி கடிதம் எழுதினேன். பேரவையிலே அதைப் பற்றித் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி அனுப்புமாறு வி.பி.சிங் அவர்கள் என்னிடம் தெரிவித்ததின் பேரில், 24-4-1990 அன்று நடுவர் மன்றம் தேவை என்று பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் விளைவாகத்தான் 2-6-1990 அன்று நடுவர் மன்றம் அதுவும் தி.மு.கழக ஆட்சியிலே, நான் முதலமைச்சராக இருந்தபோது தான் அமைந்தது.

28-7-1990இல் கழக ஆட்சியில்தான் இடைக்காலத் தீர்ப்பினைக்கோரி நடுவர் மன்றத்தில் மனு செய்தோம். 5-1-1991 அன்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் கூறியது. நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா என்று தீர்ப்பளியுங்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் 10-1-1991 அன்று தி.மு.கழக ஆட்சியிலே வழக்கு தொடர்ந்து, 26-4-1991 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு “அதிகாரம் உண்டு” என்று வழங்கியது. கழக ஆட்சியில் கோரிப் பெற்ற தீர்ப்பின் காரணமாகவே 25-6-1991இல் நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை அளித்தது. இதற்கிடையில்தான் 31-1- 1991 அன்று கழக ஆட்சி கலைக்கப்பட்டு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளிவந்த போதிலும், எந்தவிதமான விளைவுகளும் ஏற்படவில்லை. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை.

1996ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, நடுவர் மன்றத்தின் ஆணையைச் செயல்படுத்துவதில் தாமதத்தைத் தவிர்க்கும் வண்ணம், திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டுமென்று 19-7-1997, 23-7- 1997, 29-9-1997, 1-11-1997, 6-11-1997 ஆகிய நாட்களில் பிரதமருக்கு நான் எழுதிய கடிதங்களிலும், 27-7-1997 மற்றும் 29- 9-1997 ஆகிய நாட்களில் பிரதமரை நேரில் சந்தித்தும் கேட்டுக் கொண்டேன். மேலும் 10-11-1997 அன்று மத்திய அரசுக்கு அப்படி யொரு ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றும் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் 28-3-1998, 6-4-1998 மற்றும் 31-5-1998 ஆகிய நாட்களில் பிரதமருக்குக் கடிதம் மூலமாகவும், 7-4-1998 அன்று நேரிலும் சந்தித்து, வரைவு திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளி யிடக் கேட்டுக் கொண்டேன்.

21-7-1998 அன்று உச்ச நீதி மன்றம், “பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கப் போவதாக மத்திய அரசு உறுதியளித்து, 15 மாதமாகிறது, இன்னமும் இணக்கமான திட்டம் உருவாக்கப்படவில்லை, இந்த நிலை நீடித்துக் கொண்டே போவதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தது.

28-7-1998 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்கள் 6-8- 1998 அன்று பிரதமர் அலுவலகத்தில் காவிரி பிரச்சினை பற்றி பேசுவதற்காக ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் என்னைக் கலந்து கொள்ள கடிதம் எழுதியிருந்தார். அதிலே கலந்து கொள்வது பற்றி 3-8-1998 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் கூட்டியிருந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அந்தக் கூட்டத்திற்கு நான் செல்லக் கூடாது என்று அறிக்கை விடுத்தார்.

பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்திய அந்தக் கூட்டத்தின் இறுதியில்தான், 7-8-1998இல் தி.மு.கழக ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்று வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி இடைக்கால ஆணையில் கூறப்பட்ட 205 டி.எம்.சி. தண்ணீர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம்

அமைக்கப்படும் என்றும் முடிவாயிற்று. அந்த ஒப்பந்தத்தை சி. சுப்பிரமணியம், ஜி.கே. மூப்பனார், சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு , அப்துல் சமது, எம்.ஏ. லத்தீப், குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஆர்.எம்.வீரப்பன், ஜி.எ.வடிவேலு, இல.கணேசன், எஸ். திருநாவுக்கரசு, பேராயர் எஸ்றா சற்குணம் போன்ற தலைவர்களும் மற்றும் ஏடுகள் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, விடுதலை, தீக்கதிர், தி டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய நாளேடுகளும் கல்கி, குமுதம், சாவி, துக்ளக், ஆனந்தவிகடன், குங்குமம், ஆகிய இதழ்களும் பாராட்டின. இதுதான் உண்மையில் நடந்த வரலாறு.

உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால், “தி இந்துஸ்தான் டைம்ஸ்” ஏடு, “Karunanidhi Scores Diplomatic Victory” என்ற தலைப்பில், “காவிரிப் பிரச்சினை பற்றிய பேச்சு வார்த்தையின் முடிவு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அரசியல் வெற்றியாகும். நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகம் ஒத்துக் கொண்டதே மிகப் பெரிய வெற்றியாகும். ஜூன் 1990 முதல், அதாவது நடுவர் மன்றம் 205 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்த அந்த நாள் முதல், கர்நாடகத்தில் தொடர்ந்து இருந்து வந்த அரசுகள், இடைக்காலத் தீர்ப்பை ஒத்துக் கொள்ளவில்லை. கர்நாடகத்தை இடைக்காலத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் செய்து, நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்கிட வேண்டிய தண்ணீரின் அளவு பற்றிய இறுதித் தீர்ப்பை வெளியிடும் போது 205 டி.எம்.சி. தண்ணீர் என்பது அடிப்படை அளவுகோலாக இருக்கும் என்பதையும் திரு. கருணாநிதி உறுதி செய்து கொண்டுள்ளார். அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் “கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தையே கூடாது” என்று எடுத்திருந்த அணுகுமுறையை திரு.கருணாநிதி வெற்றிகரமாக உடைத்தெறிந்து விட்டார். அதன் மூலம் பிரச்சினைகளை வழக்குகளின் மூலம் அல்லாது, பேச்சுவார்த்தைகளின் மூலம்

தீர்த்துக் கொள்வது சிறந்தது என்பதையும் நிரூபித்துக் காட்டி விட்டார். பேச்சுவார்த்தைக்குக் கதவடைக்க மறுத்ததன் மூலம், திரு. கருணாநிதி தன்னுடைய மிகப் பெரிய அரசியல் முதிர்ச்சியை வெளிக்காட்டியுள்ளார். ஆணையத்திற்குப் பிரதம ரைத் தலைவராக அமைத்துக் கொண்டதன் மூலம், மத்திய அரசில் நடுவர் மன்றத் தீர்ப்பினை கர்நாடகம் அமல்படுத்துவதை உறுதி செய்து கொள்வதற்கான ஒரு உத்தரவாதத்தை ஏற்படுத்திக் கொண்டார்” என்று எழுதியது.

அது மாத்திரமல்ல; வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஏடுகளும் பாராட்டியபோது ஜெயலலிதா அதனை வரவேற்றாரா என்றால் இல்லை. மாறாக அந்தத் தீர்வினை நிராகரிக்கிறோம் என்றும், அதனை ஏற்க மாட்டோம் என்றும் கூறினார்.

அந்த முடிவு காண வழி வகுத்தவர், பா.ஜ.க. பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய். அப்போது அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தவர். இருந்தாலும், அந்தக் கூட்டணியிலே இல்லாத தி.மு.க.வின் தலைவனான என்னை அழைத்து சுமுக முடிவு கண்டார். ஆனால் மத்திய அரசில் இடம் பெற்ற அ.தி.மு.க. தலைவி அந்த ஒப்பந்தம் பற்றி பத்திரிகையாளர்களிடம் என்ன கூறினார் தெரியுமா?

“காவிரி பிரச்சினையில் வாஜ்பாய், கருணாநிதியின் தந்திரத்திற்கு ஆளாகி விட்டார். இரண்டு பேரும் சேர்ந்து செய்து கொண்டிருக்கின்ற உடன்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றார்.

மக்கள் கடந்த கால நிகழ்வுகளை மறந்திருப்பார்கள் என்று எப்போதும் மனப்பால் குடித்து; தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் ஜெயலலிதா, இத்தனையையும் இப்போது மறைத்து விட்டு, அவருடைய இடை விடா முயற்சிகளால்தான் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பிலே முடிவு காணப்பட்டதைப் போலவும், காவேரி நதிநீர் ஆணையம், மற்றும் காவேரி கண்காணிப்புக் குழு போன்றவை அமைக்கப்பட்டன என்பதைப் போலவும் பேரவையிலே தன்னைத்தானே தட்டிக் கொடுத்துப் பாராட்டிக் கொண்டுள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தி.மு. கழக ஆட்சியிலேதான் 5-2-2007 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த எம். கிருஷ்ணசாமி, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ரெங்கநாதன், உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் கே.எஸ். நடராசன் ஆகியோர் அப்போது வரவேற்று அறிக்கை கொடுத்தனர்.

ஆனால் அ.தி.மு.க.வின் சார்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் இறுதித் தீர்ப்பை “ஏற்க முடியாத தீர்ப்பு” என்றும், “கருணாநிதியால் காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தீர்ப்பை முழுமையாகப் பெற்றுத்தர முடியவில்லை. இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் எப்போதும்போல எனது ராஜினாமாவை வலியுறுத்தி அறிக்கை விடுத்தார்.

அந்த ஜெயலலிதாதான், இப்போது நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட தான்தான் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்கிறார். அதற்காக தி.மு.க. எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார். பிரதமரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிதழில் வெளியிட வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை; மாறாக அதனைத் தடுத்தார்கள் என்கிற அளவிற்குக் குற்றஞ்சாட்டி, இந்திய நாட்டின் பிரதமர் அலுவலகத்தையே கொச்சைப்படுத்துகிறார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த போது கூட, தி.மு. கழக அரசு அந்த நிலையிலும், இந்த இறுதித் தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவைப் போலத் தனிச்சையாக முடிவெடுக்க விரும்பாமல், 19-2-2007 அன்றும் 15-4-2007 அன்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டித்தான் முடிவெடுத்தது. ஆனால் தற்போது ஜனநாயக மரபுகளைப் போற்றக் கூடிய வகையில், அவ்வாறு எந்த அனைத்துக் கட்சிக் கூட்டமும்

கூட்டப்படாமல், தமிழக முதலமைச்சர்; தான் நினைத்ததே முடிவு என்பதைப் போல செயல்பட்டு வருகிறார்.

எனவே ஜெயலலிதா காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் ஏற்கவில்லை, இறுதித் தீர்ப்பையும் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை. காவிரி நதி நீர் ஆணையத்தையாவது ஏற்றுக் கொண்டாரா?

காவிரிநதிநீர் ஆணையம் (CauveryAuthority) அமைக்கப்பட்டு, 11-8-1998 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 21-8- 1998 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் போதிய அதிகாரம் உள்ள அமைப்புக்குத்தான் ஆணையம் என்று பெயர். ஆனால் பிரதமர் தலைமையிலான ஆணையத்துக்கு காவிரி தொடர்பாக உத்தரவிடுவதற்கும், செயல்படுத்து வதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க இயலாத, எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுக்கிற விவாத அமைப்பாகத்தான் இப்புதிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்துக்குச் சிறிதும் பாதிப்பில்லை; பாதிக்கப்படப்போவது தமிழகம்தான்” என்று ஆத்திர அவசரத்தோடு சொன்னார்.

2-4-2002 அன்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா, “செயல்படாத ஆணையம் காவிரி ஆணையம்”, “பல் இல்லாத ஆணையம்”; “அந்த ஆணையத்தை ஏற்காமல் நாங்கள் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம்” என்று சொன்னார்.

21-6-2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் “எவ்வித அதிகாரமும் இல்லாமல், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் சிறிதளவுச் செயல்படுத்த இயலாத நிலையில் காவிரி நதி ஆணையம் உள்ளது. எனவே இந்த ஆணையத்தின் கூட்டங்களில் இனிமேல் தமிழ்நாடு கலந்து கொள்ளாது” என்று விளைவுகளைப் பற்றி விரிவாக எண்ணிப் பார்க்காமல் கொண்டதே கோலம் என்ற பாணியில் முடி வெடுத்து அறிவித்தார்.

அ.தி.மு.க. அரசின் இந்த அமைச்சரவை முடிவினைப் பற்றி என்னிடம் கருத்து கேட்ட போது, “ஆணையத்தைப் புறக்கணிக்க ஜெயலலிதா அரசு எடுத்த முடிவு; விவேகமானதல்ல;

குறுவை நெல் பயிரிடுவதற்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்கு மத்திய அரசின் தலையீட்டையும் உதவியையும் பெற அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்; தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை எல்லாம் மாற்றும் போக்குதான் அ.தி.மு.க. அரசில் மேலோங்கி நிற்கிறது. காவிரிப் பாசனப் பகுதிக்கு; உரிய நேரத்தில் நீர் கிடைக்க முயற்சி மேற்கொண்டது தி.மு.க. ஆட்சிக் காலம். ஆணையக் கூட்டத் துக்குச் செல்ல மாட்டேன் என்பது அ.தி.மு.க. ஆட்சிக் காலம்” என்று நான் கூறினேன்.

காவிரி ஆணையத்தைப் புறக்கணிப்போம் என்று 2002ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் தெரிவித்தவர்தான் ஜெயலலிதா. அதற்கடுத்த நாள் “அழைத்தால் பார்க்கலாம்” என்றார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் ஆட்சியிலே இல்லாத நேரத்திலேகூட, 5-7-2002 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டுமென்று கோரி கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், “தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்ற உத்தரவைக் கண்காணிப்பதற்காகவே தங்களது (பிரதமரது) தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டு காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், நடுவர் மன்ற ஆணையின்படி தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மிகுந்த துயருக்குள்ளாகியுள்ளனர். காவிரிப் பாசன விவசாயிகளின் இந்தத் துயரத்தை உணர்ந்து, பிரச்சினை ஒருவேளை குறைக்கப் பட தமிழகத்திற்கு 3 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விடும்படி கர்நாடக முதலமைச்சரை தாங்கள் கேட்டுக்கொண்டதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், தாங்கள் விடுத்த அந்தக் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்துள்ளது. எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை விரைவில் கூட்டி நடுவர்மன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறேன்” என்று எழுதியிருந்தேன்.

5-7-2002 அன்று பிரதமருக்கு காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று நான் எழுதிய கடிதத்திற்கு 10-7- 2002 அன்று பிரதமர் எழுதிய பதில் கடிதத்தில் அதைப்பற்றிக்

கவனிப்பதாகக் கூறியிருந்தார். அவ்வாறே காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்பட்டது.

டெல்லியில் பிரதமர் கலந்து கொண்ட காவேரி ஆணையக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டபோதே 27-8-2002 அன்று அங்கே சுமுகமாகப் பேசித் தண்ணீரைப் பெறுவதற்கான வழிவகை காணாமல், அவருக்கே உள்ள முன் கோபம் காரணமாக பிரச்சினையின் அவசர முக்கியத்துவத்தை மறந்து, இடையிலே வெளி நடப்பு செய்வதாகக் கூறிவிட்டு, வெளியே வந்துவிட்டார். 29-11-2002 அன்று மீண்டும் காவிரி ஆணையக் கூட்டம். கர்நாடக முதல் அமைச்சர் முதல் நாளே சென்றுவிட்டார். ஆனால் நம்முடைய முதல் அமைச்சர் ஜெயலலிதா கடைசி நிமிடம் வரை வருவதாகச் சொல்லிவிட்டு, பிறகு டெல்லி பயணத்தையே ரத்து செய்துவிட்டார். யாருக்கு இழப்பு? தமிழ்நாட்டு விவசாயிகளுக்குத்தான்!

இதற்கிடையில் “பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியது, கடுமையான ஆட்சேபத்துக்குரியது; அந்த அவதூறுக் கடிதத்தை நான்கு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்” என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம், உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் வழக்கறிஞரான திரு.கே.கே. வேணுகோபால், நீதிபதிகளிடம், “பிரதமர் மீதும், அவரது தலைமையில் செயல்படும் காவிரி நதிநீர் ஆணையத்தின் மீதும் தமிழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தும், பிரதமர் வாஜ்பாய்க்கு இதுதொடர்பாக எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெறுவதற்காகவும் மீண்டும் ஒரு கடிதத்தை வெகு விரைவில் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதி அனுப்புவார்” என்றும் தெரிவித்தார்.

அதற்கிணங்க, 16-11-2002 அன்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், “பிரதமர் மீது தனிப்பட்ட முறையில் தான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், ஏற்கனவே தான் சொன்ன அத்தனையையும் மறந்துவிட்டு காவேரி ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும்” எழுதி யிருந்தார்.

வரலாற்று ரீதியிலான இத்தனை உண்மை நிகழ்வுகளையும் யார் நினைவிலே வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையால்தான் முதலமைச்சர் ஜெயலலிதா காவிரிப் பிரச்சினையில் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப்போல, பேரவையில் முழங்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களே! நடந்தவைகளை மனசாட்சித் தெளிவுடன் ஒளிவு மறைவில்லாமல் எழுதியிருக்கிறேன், நீங்களே கூறுங்கள்; காவிரிப் பிரச்சினையில் கருணாநிதி முறையாக நடவடிக்கை எடுத்தாரா? இல்லையா?

அன்புள்ள, மு.க. 12-02-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 384–393. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்