முரசொலி கடிதங்கள் · 3703
மின் உற்பத்தி வளர்ச்சி - அன்றும், இன்றும்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3703. மின் உற்பத்தி வளர்ச்சி - அன்றும், இன்றும்!
உடன்பிறப்பே,
ஆளுநர் உரைக்குப் பதிலளித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மின் உற்பத்தி பற்றி அதிகாரிகள் தயாரித்துக் கொடுத்த நீண்ட விளக்கத்தைப் பேரவையிலே படித்திருக்கிறார். 2001 முதல் 2006 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில், 500 மெகாவாட் மின் திறன் கொண்ட அனல் மின்நிலையத்தை வடசென்னையில் அமைக்கவும், தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களை வல்லூரில் அமைக்கவும்; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களை தூத்துக்குடியில் அமைக்கவும்; 500 மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீரேற்று மின் நிலையத்தை அமைக்கவும்; ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் 95 மெகாவாட் திறன் கொண்ட எரிவாயு சுழலி மின் நிலையத்தை அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும்; ஆனால் இந்த மின் திட்டங்களை 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றாததுதான் தற்போது நிலவும் மின் பற்றாக்குறைக்குக் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார்.
இதில் வடசென்னை அனல் மின் நிலையம் 2ஆம் நிலைக்கு 26.6.2001இல் 1ஆவது அலகு மூலமாக ரூபாய் 2475 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அரசாணை பிறப்பித்திருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியை விட்டு இறங்குகின்ற வரை ஐந்தாண்டு காலத்தில் அந்த மின்திட்டம் தொடர்பாக எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தி.மு.கழக ஆட்சியிலேதான் 18.2.2008 அன்று முதல் அதற்கான பணிகள் பி.எச்.இ.எல் நிறுவனத்தாருடன் பேசி துரிதமாகச் செயல்படுத்தப்பட்டது. ஆனால் முதலமைச்சர் பேரவையில் அவரது ஆட்சியில் கிடப்பில் இத்திட்டம் போடப்பட்டதை அப்படியே மறைத்துள்ளார்.
வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 2ன் மூலமாக ரூபாய் 2,175 கோடி மதிப்பீட்டில் 2வது அலகு அமைக்க 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கழக ஆட்சியிலேதான் 14.7.2008ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெறத் தொடங்கின.
2.5.2007ல் மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை 3ன் மூலமாக 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கழக ஆட்சியிலேதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இத்திட்டம்தான் தற்போது மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
12.7.2002ல் சென்னையில் தேசிய அனல் மின் கழகத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யூ.) 1000 மெகா வாட்டிற்குச் செய்யப்பட்டிருந்தது. இதைத்தான் முதலமைச்சர் தனது ஆட்சியில் தொடங்கப்பட்டது என்று சொல்கிறார். ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அ.தி.மு.க. ஆட்சியிலே போடப்பட்டதே தவிர, அதனைத் தொடர்ந்து எந்தப் பணியும் நடைபெறவில்லை. தி.மு.கழக ஆட்சியிலேதான், இதனை 1500 மெகாவாட் என்ற அளவிற்கு உயர்த்தி 8000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வல்லூரில் அமைத்திட 13.8.2007 முதல் பி.எச்.இ.எல் நிறுவனத்தாரால் விரைவாக பணிகள் செயல்படுத்தப்பட்டன.
19.6.2003ல் தூத்துக்குடியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யூ.) செய்யப்பட்டிருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. தி.மு.கழக ஆட்சி யிலேதான் 28.1.2009 முதல் 4909 கோடி ரூபாய்ச் செலவில் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டி பி.எச்.இ.எல் நிறுவனத்தாரால் பணிகள் விரைவாகச் செயல்படுத்தப்பட்டன.
14.12.2009ல் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்குதல் மூலம் 1126 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 183 மெகாவாட் இணை மின்சாரம் தயாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியிலேதான்.
27.3.2002ல் அ.தி.மு.க. ஆட்சியில் பவானி கட்டளை தடுப்பணை புனல் மின் திட்டம்-3 என்ற திட்டம் 396 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அரசாணை பிறப்பித்திருந்தாலும்; அதற்கான பணிகள் தி.மு.கழக ஆட்சியிலேதான் விரைவாகச் செயல்படுத்தப்பட்டன.
26.10.2007ல் உடன்குடியில் பாரத மிகு மின் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூட்டு முயற்சியில் 8700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யூ.) செய்யப்பட்டது. ஏற்கனவே கழக ஆட்சிக் காலத்திலேயே இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதன் உற்பத்தி 2013ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், 800 மெகாவாட் 1வது அலகு மூலமாகவும், மற்றொரு 800 மெகா வாட் 2வது அலகு மூலமாகவும், ஜூலை மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2011இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டது. தற்போது தமிழக அரசே இந்தத் திட்டத்தை தாங்களே நிறைவேற்றப்போவதாக அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். இதுவும் அறிவிப்போடு இல்லாமல் உண்மையிலேயே தொடங்கினால் நல்லதுதான்.
8.12.2006ல் எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்கம் மூலமாக 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதன் உற்பத்தி 2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2011இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டம் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.
5.1.2009ல் எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) அனல் மின் நிலையம் (காட்டுப்பள்ளி) மூலமாக 9,613 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்றுவந்தன. இந்தத் திட்டம் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் அக்கறையுடன் துரிதமாக நடைபெறவில்லை.
இந்த உற்பத்தித் திட்டங்கள் பற்றியெல்லாம் மின்வாரியத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டாலும், மின்கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பொதுச் செயலாளரும், பேரவையின் பொருளாளருமான தம்பி சிங்கார ரத்தினசபாபதி விரிவாக ஏற்கனவே தொலைக்காட்சிகளில் மக்களுக்கு விளக்கியிருக்கிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய மின் திட்டங்களின் மீது தி.மு.கழக ஆட்சியில், எதுவும் செய்யவில்லை என்று
ஜெயலலிதா தனது பதிலில், முதல் பத்தியில் கூறிவிட்டு, அடுத்த பத்தியில், “2005ஆம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட, வடசென்னை அனல் மின் நிலையத் திட்டத்தில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான பணிகளே மேற்கொள்ளப்பட்டிருந்தன” என்று சொல்லியிருக்கிறார். ஆகவே 50 சதவிகிதப் பணிகள் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவ்வாறு கழக ஆட்சியில் அந்தத் திட்டத்தின் மீது காட்டிய அக்கறையினால்தான், 600 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் கிடைக்கவுள்ளது. அதுபோலவே கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட வடசென்னை அனல் மின்நிலையத்தின் இரண்டாவது அலகின் மூலமாக மே மாதம் முதல் 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவுள்ளது.
கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப் பணிகள் மூலம் 608 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இத்திட்டம் பற்றி பேரவையில் முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் கூறிய மறுநாளே இன்றையதினம் மேட்டூர் அனல் மின் நிலைய புதிய யூனிட்டில் டியூப் பழுது என்றும், சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் செய்தி வந்துள்ளது.
வல்லூர் அனல் மின் திட்டப் பணிகளும் கழக ஆட்சிக் காலத்தில்தான் விரைவாக நடைபெற்று வந்தன. முதல் அலகு உற்பத்தியையும் தொடங்கிவிட்டது. ஆனால் அதையும் ஜெயலலிதா இவரது முயற்சியால் கிடைத்ததைப் போல் பேரவையிலே தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக தி.மு.கழக ஆட்சியிலே பெரு முயற்சி எடுத்துச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத்தான் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 19 மாதங்களில் அவர் செய்ததைப் போலப் படித்துக் காட்டியிருக்கிறார். ஆனால் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மற்ற திட்டங்களைப் போல இந்த மின் உற்பத்தித் திட்டங்களையும் முடக்கிப் போடாமல் அவர் இருந்ததே, தமிழகத்திற்குச் செய்த நன்மைதானே? ஆனால் தமிழ்நாட்டு மக்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக அவர் இந்தத் திட்டங் களையெல்லாம் தொடர்ந்து, பிரச்சினை தீர வேண்டுமென்ற
அக்கறையினால் அல்ல என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்வார்கள்.
மேலும் ஜெயலலிதா தனது பதில் உரையில், அவரது ஆட்சிக் காலத்திலே, “2,500 மெகாவாட் அளவுக்கு மின் திட்டங்கள் துவக்கப்பட்டிருந்ததால், 7000 கோடி ரூபாய் அளவுக்கு மின் திட்டங்களுக்குச் செலவழிக்க வேண்டிய நிலை தி.மு.க. அரசுக்கு ஏற்பட்டது” என்று சொல்லியிருக்கிறார். அதிலிருந்து அவரது ஆட்சிக் காலத்தில் 2,500 மெகாவாட் அளவுக்கு துவக்கப்பட்ட மின் திட்டங்களுக்காக, அவரது ஆட்சிக் காலத்தில் எதுவும் செலவழிக்கப்படவில்லை என்பதையும், கழக அரசிலேதான் அது ஜெயலலிதா ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டங்கள் ஆயிற்றே என்று கிடப்பிலே போட்டு விடாமல், 7,000 கோடி ரூபாய் அளவுக்குச் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஜெயலலிதா அம்மையாரே தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அம்மையார் அவர்கள் தனது பதிலில், “2001 முதல் 2006 வரையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக வைத்திருந்தோம், கழக ஆட்சியிலேதான் மின் பற்றாக்குறை வந்துவிட்டது” என்று சொல்கிறார். அப்போது அ.தி.மு.க. ஆட்சியிலே மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்திடக் காரணம், 2001ஆம் ஆண்டுக்கு முன்பு, 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் பேசின் பாலம் டீசல் எண்ணெய் மின் திட்டம், திருமூர்த்தி சிறு புனல் மின் திட்டம், முக்குருத்தி சிறு புனல் மின் திட்டம், சாமல்பட்டி டீசல் எண்ணெய் மின் திட்டம், திருமக்கோட்டை எரிவாயு சுழலி மின் திட்டம், பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் திட்டம், சமயநல்லூர் டீசல் எண்ணெய் மின்திட்டம், ஆழியாறு சிறு புனல் மின் திட்டம், நெய்வேலி ஜீரோ யூனிட் மின்திட்டம், வழுதூர் எரிவாயு மின் திட்டம், பெருஞ்சாணி சிறு புனல் மின் திட்டம் என்ற இந்த 11 திட்டங்களின் மூலம் 1200 மெகா வாட் மின் உற்பத்திக்கு வழிவகை செய்ததால் தானே தவிர வேறல்ல. எனவே மின் வாரியத்தின் வளர்ச்சிக்குத் தி.மு.கழக ஆட்சிதான் வழி வகுத்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒரு விவரம். ஜெயலலிதா தனது ஒவ்வொரு அறிக்கையிலும் தமிழக அரசுக்கு ஏராளமான கடன்களை நான்
வாங்கி வைத்து விட்டதைப் போலத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். இதற்குப் பல முறை விளக்கமளிக்கப்பட்டும் கூட அதையே கூறி வருகிறார். 2006ஆம் ஆண்டு மே திங்களில்தான் தி.மு.கழகம் ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பே, 31.3.2006 அன்றே, அதாவது ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்குப் பின்பு, தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக இருந்தது. அதுபோலவேதான் மின் வாரியத்திலும் 2005-2006ஆம் ஆண்டில் 5000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் சுமையை வைத்து விட்டுத்தான் ஜெயலலிதா ஆட்சியை விட்டு இறங்கினார். இதைப்பற்றி நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன், “அய்யோ, ஜெயலலிதா தமிழக அரசின் தலையில் 57 ஆயிரம் கோடி கடன் சுமையை ஏற்றிவைத்துவிட்டுப் போய் விட்டார், மின் வாரியத்திலே 5000 கோடி ரூபாய் நஷ்டம்” என்றெல்லாம் அறிக்கைக்கு மேல் அறிக்கை வெளியிட்டு யாரையும் குறை சொல்லிக் கொண்டிருக்கவில்லை. பிறர் மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ள எத்தனித்ததுமில்லை. அரசு என்றால் கடன் வாங்கத்தான் நேரிடும். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டுமென்றால் கடன் வாங்கினால்தான் நிறைவேற்ற முடியும். இவற்றைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா அவரது பாணியில் புழுதிவாரித் தூற்றுவதும், நாம் ஒவ்வொன்றிற்கும் உண்மை விளக்கம் அளிப்பதும், அதற்குப் பிறகும் ஏற்கனவே சொன்ன தையே திரும்பத் திரும்பச் சொல்லி, அனைவரையும் குழப்பித் திசை திருப்புவதும் ஜெயலலிதாவின் வாடிக்கையாகிவிட்டது என்பதை; பச்சைப் பாம்புக்கும் பச்சைக் கொடிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டுள்ள தமிழ் மக்கள் இதையும் அறிந்திருப்பார்கள் என்றபோதிலும், மீண்டும் விளக்கம் தர வேண்டியது என்னுடைய கடமை என்பதால்தான் இந்தக் கடிதம்.
அன்புள்ள, மு.க. 11-02-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 378–383. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.