அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3702

முரசொலி கடிதங்கள் · 3702

தனிப்பட்ட காழ்ப்பும், தலைமைச் செயலக மாற்றமும்!

நாள் 2.2.2013சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3702. தனிப்பட்ட காழ்ப்பும், தலைமைச் செயலக மாற்றமும்!

உடன்பிறப்பே,

புதிய தலைமைச் செயலகம் குறித்து நீதிமன்றங்களின் முடிவு வெளிவந்துள்ள நிலையில், பல காலக்கட்டங்களில் அது தொடர்பான நிகழ்வுகளை நினைவு கூர்வது பொது நலனுக்கு உகந்ததே என்று கருதி, இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

1983ஆம் ஆண்டு முதலே தமிழகத் தலைமைச் செயலகத்திற்குப் புதிய கட்டிடம் கட்ட இடம் தேடப்பட்டது. 1983ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். புதிய தலைமைச் செயலகத்தைத் திருச்சியில் கட்டலாமா என்று எண்ணினார். 2003இல் ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகத்தைத் திருவிடந்தை, தையூர் பகுதிகளில் கட்டலாமா என்று யோசித்தார்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் அப்போது தலைமைச் செயலகம் இயங்கி வந்தது. இந்த இடத்தில் இந்திய ராணுவமும் இருப்பதால் பாதுகாப்பு காரணமாகப் பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத ஒரு நிலை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மக்களாட்சியில், ஆட்சியின் கேந்திரமையம் மக்கள் உரிமையுடன் வந்து செல்லக் கூடிய வகையில் அமைந்திட வேண்டுமென்பதை அனைவரும் அறிவர். மேலும், அங்கே உள்ள கட்டிடங்களில் ஏதாவது மாற்றல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும்கூட - ஏன், அங்கே இருக்கும் புல்லைச் செதுக்கி அகற்றுவதற்குக்கூட - இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கிறது. வேறு சில அரசு அலுவலகங்கள் நகரின் வெவ்வேறு இடங் களில் இயங்கி வருவதால் அதன் காரணமாக “வாடகை” என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்குத் தொடர்ந்து செலவு ஏற்படுகிறது என்பதாலும்; அனைத்து அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் அமையக் கூடிய விதத்தில் புதிய இடத்தை அ.தி.மு.க. அரசு முதலில் தேடி வந்தது.

தி.மு.கழக ஆட்சியில் கட்டி 14-8-1975 அன்று திறந்து வைக்கப்பட்ட - நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது என்றும், கசிவு ஏற்படுகிறது என்றும், எனவே கோட்டையில் இருந்து உடனடியாகத் தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்போது ஜெயலலிதா கூறினார்.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது முடிவெடுத்தார். நிதி நெருக்கடி அரசுக்கு இருந்தாலும், தொலைநோக்குப் பார்வையோடு புதிய தலைமைச் செயலகத்தை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைப்போம் என அப்போது அ.தி.மு.க. அரசு தெரிவித்தது. கட்டப்போவையில் ஜெயலலிதாவால் அப்போது அறிவிக்கப்பட்டபோதே, “தற்போதைய தலைமைச் செயலகம் தகுதி வாய்ந்ததாக இல்லை. ராணி மேரி கல்லூரி கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளன. அதை இடிக்க வேண்டும். புதிய தலைமைச் செயலக வளாகம் அவசியம்.” என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அந்தக் கல்லூரியின் ஆசிரியர், மாணவியர் மற்றும் பெற்றோர் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது.

பின்னர், சென்னை கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா பூஜை - புனஸ்காரங்களோடு நடைபெற்று, அன்றைய முதல் அமைச்சரான ஜெயலலிதாவே அதிலே கலந்து கொண்டார். ஆனால் அதுவும் நடைபெறவில்லை.

அதையெல்லாம் மனதிலே கொண்டுதான், முந்தைய ஆட்சி எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தி.மு.கழக ஆட்சியிலே 2007ஆம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டது.

ஓமந்தூரார் வளாகத்தில் சட்டமன்றப் பேரவை, மேலவை - அவற்றையொட்டி தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கும்; நவீனமயமான வகையில் கலைவாணர் அரங்கத்தை உருவாக்கிடவும்; முனைந்து - ஏறத்தாழ 86 ஆயிரத்து 450 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட “ஏ” பிளாக் என்ற கட்டிட வளாகத்தில் சட்டப்பேரவைக் கூட்ட அரங்கம் - பேரவைத் தலைவர் அலுவலகம்

- மேலவை அரங்கம் - சட்டமன்ற நூலகம் - கூட்ட அரங்கு - மேதகு ஆளுநர் அலுவலகம் - முதலமைச்சர் அலுவலகம் - முதல் அமைச்சரின் செயலகம் - எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் - அமைச்சர்களின் அலுவலகங்கள் - அமைச்சரவைக் கூட்ட அரங்கம் - தலைமைச் செயலாளர் அலுவலகம் - சட்டமன்றத் துறை - பொதுத் துறை - நிதித்துறை - உள்துறை - சட்டத்துறை - திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஆகிய ஆறு முதன்மையான துறைகளுக்குரிய அலுவலகங்கள் அமைக்கப்பட்டு அழகுறக் கட்டி முடிக்கப்பட்டது. 13-3-2010இல் புதிய தலைமைச் செயலகம் - சட்டப் பேரவைக் கட்டிடங்களின் திறப்பு விழா பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு நடைபெற்றது.

மிகவும் சிறப்பான முறையில் தலைமைச் செயலகத்திற்கென்றே வடிவமைக்கப்பட்டு கட்டிடம் 1000 கோடி ரூபாய் அளவிற்குத் திட்டமிடப்பட்டு, அதில் 581.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுக் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப்பட்ட பிறகு; அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தைப் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது என்று 19-8-2011 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்து, அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்தாமல் மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

தற்போது புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு - திறப்பு விழாவும் நடைபெற்று - சட்டப் பேரவைக் கூட்டத் தொடர்களும் நடைபெற்று - ஏழு முறை அமைச்சரவைக் கூட்டங்களும் நடைபெற்று - முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் எல்லாம் புதிய தலைமைச் செயலகத்திற்கு இடம் மாறிய பிறகு; 2011 மே மாதம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், தலைமைச் செயலகத்தை, பழைய இடத்திலேயே தொடர்ந்து நடத்துவோம் என்றும்; புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தமாட்டோம் என்றும் கூறி, அங்கே வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை எல்லாம் பெயர்த்தெறிந்துவிட்டு, புதிய பலகைகளை வைத்திடும் பணியிலே “ஜெயா” அரசு ஈடுபட்டது.

கழக ஆட்சியிலே உருவாக்கப்பட்ட ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள தலைமைச் செயலகத்திலே தான்; திரிபுரா ஆளுநர் என்னைச்

சந்தித்தார்; இந்தியக் கிரிக்கெட் குழுவின் தலைவரான மகேந்திர சிங் டோனி அவர்களுக்கு; உலகக் கோப்பையை வென்றதற்காகச் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது; அது மட்டுமல்லாமல்; மத்திய அரசின் அமைச்சர்கள், திரு.ப.சிதம்பரம், திரு.ஜி.கே. வாசன், திரு.நாராயணசாமி போன்றவர்களும்; தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், புதிய தலைமைச் செயலக வளாகத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு கட்டிட அமைப்பைப்பாராட்டி இருக்கின்றார்கள்.

ஏன்; புதிய தலைமைச் செயலகத்திலே உள்ள சட்டப் பேரவை அரங்கிற்கு ஜெயலலிதாவின் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பல நாட்கள் வந்திருந்து அவை விவாதங்களிலே கலந்து கொண்டிருக்கின்றார்கள். புதிய தலைமைச் செயலக வளாகம் சரியில்லை என்று அ.தி.மு.க. உண்மையாகவே நினைத்திருந்தால், அப்போதே அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவை நிகழ்ச்சிகளுக்கு வராமல் அல்லவா புறக்கணித்திருக்க வேண்டும். மாறாக அவர்கள் கலந்து கொண்டுதான் அவை நடைபெற்றது. ஆனால் ஒரு முறைகூட அந்த வளாகத்திற்கே வராமல் இருந்த ஜெயலலிதா, அந்தத் தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்துவிட்டு, தமிழகத்திலே உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் வலியுறுத்திய பிறகும், அந்தக் கட்டிடத்தைப் புறக்கணித்து, பழைய தலைமைச் செயலகத்திலே இயங்கி வந்த “பாவேந்தர்” செம்மொழித் தமிழாய்வு நூலகத்தை இரவோடு இரவாக வெளியே தூக்கியெறிந்துவிட்டு; அங்கே மீண்டும் சட்டப் பேரவையை நடத்தி வருகிறார். இதிலிருந்து ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள கட்டிடம் தி.மு. கழக ஆட்சியிலே கட்டப்பட்டு, இந்தியப் பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்பதுதான் அவரது வெறுப்புக்கு ஒரே காரணமாக இருக்க முடியும் என்றும், நிர்வாக வசதி இல்லை என்றெல்லாம் கூறுவது அவரது உள்மனதில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வை மறைப்பதற்காகத்தான் என்பதும் நன்றாகப் புலனாகிறது.

தி.மு.கழக ஆட்சியிலே கட்டியதுதான் காரணம் என்றால், தி.மு.கழக ஆட்சியிலே எழுப்பப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையை மட்டும் புனருத் தாரணம் செய்து பயன்படுத்திக்

கொள்ளலாமா? தமிழகத்திலே உள்ள பல மேம்பாலங்கள் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில்தானே உருவாக்கப்பட்டன. அந்த மேம்பாலங்களின் வழியாகத்தானே அம்மையார் ஜெயலலிதாவின் கார் செல்கிறது! கருணாநிதி கட்டிய மேம்பாலம், அதிலே நான் பயணம் செய்யமாட்டேன் என்று நிறுத்தி விட்டாரா என்ன? தலைமைச் செயலகம் அங்கே இயங்க முடியாது என்றால் பல்நோக்கு மருத்துவமனை மட்டும் அங்கே இயங்க முடியுமா?

மருத்துவமனையாக மாற்ற ஆக்சிஜன் நிரப்பும் இடம், சறுக்குப் படிக்கட்டுகள், வார்டுகள் போன்ற வசதிகள் இந்தக் கட்டிடத்தில் இல்லை. இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் அதற்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக, தற்போது அதற்காக 30 கோடி ரூபாய் செலவழிக்க அ.தி.மு.க. அரசு முன் வந்திருக்கிறது என்றால், அம்மையாரின் பிடிவாதத்திற்காகச் செய்யப்படும் செலவுதானே அது? மக்களின் வரிப்பணத்தைப் பாழடிக்கின்ற செயல்தானே அது?

இந்தப் பிரச்சினை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, நீதிபதிகள் முருகேசன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் மத்திய அரசிடம் “சுற்றுச் சூழல் அனுமதி பெறப்பட்டு விட்டதா? டெண்டர் விடப்பட்டாகி விட்டதா? வழக்கு நிலுவையில் இருக்கும்போது அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா? எனவே இது விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு என்று அறிவிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

அரசு வழக்கறிஞர் கூறும்போது, “இது அரசின் கொள்கை முடிவாகும்” என்று வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக இடைக் காலத் தடை விதித்தனர். இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வு; இந்த வழக்கினை வேறு நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தார்கள். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கே.என்.பாஷா, என்.பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது. புதிய தலைமைச் செயலகத்திற்காகப் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது; அந்தக் கட்டிடங்களை இடிப்பதால் மீண்டும் அதிகச் செலவு ஏற்படும்; அருகிலேயே பல மருத்துவ மனைகள் இருக்கின்றன, போக்குவரத்து நெரிசல்

ஏற்படும் என்றெல்லாம் உயர்நீதி மன்றத்தின் புதிய அமர்வு முன் வாதாடப்பட்டது. என்றாலும் நீதிபதிகள், ஏற்கனவே அரசு மருத்துவமனைகள் அருகில் இருந்தாலும், டெல்லியில் உள்ள “எய்ம்ஸ்” மருத்துவமனைபோல பன்னோக்கு மருத்துவ மனை சென்னையிலே இல்லை, அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஏற்க முடியாது” என்று கூறி எதிர் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் இத்தகைய தீர்ப்பினை வழங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, புதிய தலைமைச் செயலகத்திற்குள் மருத்துவமனையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. என்ன அவசரம்? மருத்துவமனை தொடங்குவதைப் பற்றி ஏற்கனவே முன் கூட்டியே அறிவிக்கப் பட்டதா? எதற்காக இந்த அவசரக் கோலம்? தலைமைச் செயலகத்திற்காகக் கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? கழக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காழ்ப்புணர்வு தானே இதற்குக் காரணம்? இனிமேல் ஒரு தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டுமென்றால் அதற்காகச் செலவழிக்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு? தனி மனிதர் ஒருவரின் காழ்ப்புணர்ச்சி உண்டாக்கிய பிடிவாதம் காரணமாக “கொள்கை முடிவு” என்ற பெயரில் தமிழக மக்களின் வரிப்பணம் எந்த அளவிற்கு விரயமாகிறது, இன்னும் விரயமாகப் போகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன? ஆமாம்; “கொள்கை முடிவு” என்பதை எந்த ஆட்சியிலும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் அல்லவா?

அன்புள்ள, மு.க. 2-2-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 372–377. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்