முரசொலி கடிதங்கள் · 3705
பெண்ணாளும் மாநிலத்தில், மண்ணாகுதே மங்கையர் வாழ்வு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3705. பெண்ணாளும் மாநிலத்தில், மண்ணாகுதே மங்கையர் வாழ்வு!
உடன்பிறப்பே,
தமிழகத்தில் பெண் முதலமைச்சர் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சி வருகின்ற நிலையில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் பட்டியலைப் பார்த்தால்;
❖ வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து ஆண்டியப்பன் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி காயத்ரி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை.
❖ சிவகிரியில் நந்தினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டுக் கொலை.
❖ சைதாப்பேட்டையில் விஜயா என்ற பெண்ணின் சடலம்.
❖ தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத் தில் 13 வயது சிறுமி, பள்ளி மாணவி புனிதா கற்பழிக்கப்பட்டு கொலை.
❖ நாகை மாவட்டத்தில் 11 வயது தலித் இனத்தைச் சேர்ந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து கற்பழிப்பு.
❖ விருத்தாசலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் சுகந்தி என்கிற இளம் பெண் கற்பழிப்பு
❖ சிதம்பரம் அருகில் மஞ்சக்குழி கிராமத்தில், சந்தியா என்கிற இளம்பெண், கற்பழிக்கப்பட்டு 3வது மாடியிலிருந்து வீதியிலே எறியப்பட்டாள்.
❖ தர்மபுரியில் அரூர் தாலுக்காவில் தாதாரவலசை கிராமத்தில் மேனகா என்கிற இளம்பெண் திருமணமானவர் கற்பழிக்கப்பட்டுப் படுகொலை.
❖ தூத்துக்குடி மாநகரில், மாதாநகர் 2வது தெருவில் மாரியம்மாள் என்கிற இளம் பெண் கணவனைப் பிரிந்து 3 குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். விடியற்காலையில் வீடு புகுந்து கற்பழிப்பு.
❖ விழுப்புரம் வானூர் ருக்மணிபுரம் பள்ளி மாணவி கல்கி என்பவள் கற்பழிக்கப்பட்டுச் சவுக்குத் தோப்பில் பிணமாகத் தொங்க விடப்பட்டாள்.
❖ உடுமலையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்தாள்.
❖ நாமக்கல்லில் 18 வயது இளம்பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு.
❖ வேலூர் மாவட்டம், ஆர்க்காடு அருகில் திமிரி என்கிற ஊரில் அபிநயா என்கிற 17 வயது பெண், அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாக, கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தீக்குளித்துத் தற்கொலை.
❖ சென்னை, பொழிச்சலூரில் பிரேமலதா கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு காட்டில் பிணமாக வீசப்பட்டுக் கிடந்தாள்.
❖ திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் திருமணமான மீனா என்கிற இளம்பெண் தன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று கற்பழிப்பு.
❖ ஒரத்தநாடு, புதூரில் 6ஆம் வகுப்புப் படித்து வந்த 11 வயது சிறுமி, ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கற்பழிப்பு.
❖ ராணிப்பேட்டை அருகில் சுடுகாட்டில் சிறுமி கொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தாள்.
என்று தொடர்ந்து கட்டுக்கடங்காமல், பெண்கள் மீதான கொடுமைகள் நடைபெற்று வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாகி மரணமடைந்தபோது நான் அதற்காக வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமன்றி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இத்தகைய கொடுமையான பாலியல் வன் முறைக்கு மாணவிகளும் ஏழைப் பெண்களும் ஆளாக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதுதான். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.
என்னுடைய இந்தக் கருத்தையொட்டியே வர்மா கமிஷன் பரிந்துரைகளும் அமைந்து, அதாவது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, கொலை செய்வோருக்கு ஆயுள் தண்டனை என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசைப் பொறுத்த வரையில் இந்த பாலியல் வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது என்பது, காவல் நிலையத்தில் பெயருக்கு ஒரு வழக்குப் பதிவு என்ற அளவிலே தான் இருந்து, டெல்லிச் சம்பவத்திற்குப் பின்னர் இந்த ஆட்சியினரும் கூட, தீவிரமான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரசாயன ரீதியில் ஆண்மையைப் போக்க வேண்டுமென்றெல்லாம் அறிவித்திருந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகும் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நின்றபாடில்லை.
கோவையில் 13 வயது மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் குற்றம் செய்ததால் மாணவியின் தாய்மாமன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவத்திற்கு மாதர் சங்கம் போன்ற பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி 17-2-2013 தேதிய நாளேடுகளில் வந்துள்ளது.
மேலும் அன்றைய நாளிதழிலேயே தர்மபுரி மாவட்டத்தில், பொம்முடி அருகே கடந்த 14ஆம் தேதியன்று 16 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகச்
செய்தி வந்துள்ளது. இவ்வாறு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையிலேதான், பண்பாட்டுக்கும், நாகரிகத்துக்கும் முற்றிலும் எதிரான இந்தக் குற்றங்களைப் புரிவோருக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை பற்றிய கேள்விகளும் எழுகின்றன. மத்திய அரசு, வர்மா கமிஷன் அளித்த பரிந்துரைகளுக்கு மேல் ஒரு படி சென்று, அவர்களுக்குத் தூக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்றே அறிவித்துள்ளது.
தூக்குத் தண்டனை என்பது தற்போது இந்திய அரசியலில் மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையைப் பற்றிக் கேள்வி எழுந்த நேரத்திலே கூட, “பொதுவாகவே தூக்குத் தண்டனையே கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு தண்டனை பற்றியும் ஏற்கனவே கழகத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தேன்.
இதற்கிடையே வீரப்பனின் நண்பர்களான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு விசாரணை நடத்திய மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் அவர்களுக்கு விதித்தது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த காரணத்தால்தான், உச்ச நீதிமன்றம் இந்த நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றி 2004ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்து ஒன்பதாண்டு காலமாக இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படவில்லை. இதற்கிடையே அவர்கள் நான்கு பேரும் இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார்கள். அந்தக் கருணை மனுவினை இந்தியக் குடியரசுத் தலைவர் நீண்ட கால நிலுவைக்குப் பிறகு, கடந்த 11ஆம் தேதியன்று நிராகரித்த நிலையில், தற்போது அவசர அவசரமாக அவர்களைத் தூக்குத் தண்டனைக்கு ஆளாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது பற்றிய செய்திகள் ஏடுகளில் வந்து கொண்டுள்ளன.
அந்த நான்கு பேரின் சார்பாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையை
நிறைவேற்றத் தடை விதிக்கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் 16- 2-2013 அன்று மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். மேலும் அந்த மனுவில் தங்களுக்கு விதிக்கப்பட்டத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் காலின் கன்சால்வஸ், சமிக் நாராயண் ஆகியோர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. அல்டமாஸ் கபீர் அவர்களின் இல்லத்திற்கே சென்று இந்த மனுவினைத் தாக்கல் செய்து, உடனடியாக அதன் மீது விசாரணை வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள்.
தலைமை நீதிபதி அவர்கள், அந்த நான்கு பேரும் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் போடப்படலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மனு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார். தலைமை நீதிபதி அவர்களின் இந்த அறிவிப்பினையொட்டித் தூக்குத் தண்டனை பற்றிய கருத்துகள் பல முனைகளிலும் நாடெங்கிலும் பரபரப்பாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, புதன்கிழமைவரை அவர்களைக் காத்திட, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேருக்கும், வீரப்பனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று வீரப்பனின் துணைவியாரே கூறியிருக்கிறார். தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரும் அவர்களை நிரபராதிகள் என்று சொல்லியிருக் கிறார்கள். 1993ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் வேண்டுமென்றே வழக்கு தொடுக்கப்பட்டதாகவும், எனவே சி.பி.ஐ. மறுவிசாரணை செய்ய வேண்டுமென்றும் அவர்கள் வைத்துள்ள கோரிக்கை அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதைப் பொறுப்பிலே உள்ளவர்கள் மனதிலே கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு திரிவேணிபென் என்பவருக்கும் குஜராத் மாநிலத்திற்குமிடையே நடைபெற்ற ஒரு வழக்கில் ஏற்கனவே அளித்த தீர்ப்பில், “இந்திய அரசியல்
சட்டத்தின் 32வது பிரிவின்படி தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்குக் காரணமில்லாமல் மிகுந்த கால தாமதம் ஏற்படுமானால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் உச்ச நீதி மன்றத்தை நிவாரணம் கேட்டு அணுகலாம்” என்று குறிப்பிட்டிருந்ததை இப்போது எடுத்துக்காட்டுகிறார்கள். தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் ஒன்பதாண்டு கால தாமதம் ஏற்பட்டிருப்பதால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வரும் உச்ச நீதி மன்றத்தில் தூக்குத் தண்டனையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோருவதற்கு உரிமை உள்ளது என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
“இந்திய அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின் கீழ் இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் ஆணை நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டதாகும்” என்று உச்ச நீதிமன்றம் கேகர்சிங் என்பவருக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இப்போது எடுத்துக் காட்டப்படுகிறது.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் திரு. வி.ஆர்.கிருஷ்ண அய்யர் அவர்கள் இந்த நால்வரின் தூக்குத் தண்டனை பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துகள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவையாகும். “சட்டப் புத்தகத்தில் இருந்து தூக்குத் தண்டனையை எடுத்துவிட வேண்டும் என்று அரசு அதிகாரத்தில் உள்ளவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அரசாங்கம் செயல்படுத்தும் தூக்குத் தண்டனை என்பது அரசாங்கமே செய்யும் கொலைக்குச் சமமானதே அன்றி வேறல்ல. அரசாங்கமே செய்யும் இத்தகைய கொடுங் குற்றங்களுக்கெதிராக இந்திய நாட்டு மக்கள் அணி திரள வேண்டும். அரசியல் சட்டம் வழங்கியுள்ள “வாழும் உரிமை”யை அரசாங்கம் தன்னிச்சையாகத் தூக்கிலேறிட அனுமதிக்கக் கூடாது. உலகின் 90 சதவிகித நாடுகள் தூக்குத் தண்டனையை ஏற்கனவே ரத்து செய்துவிட்டன. இந்திய நாடும் தூக்குத் தண்டனையை ரத்து செய்து இது “காந்தி தேசம்” என்பதை உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும்” என்று திரு.கிருஷ்ண அய்யர் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகளைத்தான் நான் பல்லாண்டு காலமாகச் சொல்லி வருகிறேன். இன்றைய நிலையில்
இந்தக் கருத்துகளை மத்திய அரசும், சட்ட வல்லுநர்களும், நீதி மன்றங்களும் சீர்தூக்கிப் பார்த்து மனித உரிமைகளையும் மனித நேயத்தையும் போற்றக் கூடிய வகையில் தூக்குத் தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்து அகற்றி விடுவது பற்றித் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் இந்தக் கருத்து ஏற்கனவே உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டிருக்குமானால், இப்போது தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வரும் தூக்குத் தண்டனைகள் நிகழாமலேயே தடுக்கப்பட்டிருக்கலாம்.
அன்புள்ள, மு.க. 19-2-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 394–400. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.