முரசொலி கடிதங்கள் · 3698
எட்டிக்குப் போட்டியென எத்தனை காலம் ஏமாற்றுவார்?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3698. எட்டிக்குப் போட்டியென எத்தனை காலம் ஏமாற்றுவார்?
உடன்பிறப்பே,
மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியிருப்பதற்கும், மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதைக் குறைத்ததற்கும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. தி.மு. கழகமும், மத்திய அரசில் அங்கம் வகித்த போதிலும், மத்திய அரசின் முயற்சியைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. அரசின் சார்பில் இப்படிப்பட்ட விலை உயர்வுகள் செய்யப்படும்போது, எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்துக் கண்டனம் தெரிவிப்பதும், அதே எதிர்க் கட்சிகள் ஆளுங்கட்சியானால், எதிர்க்கட்சியாக இருந்தபோது தெரிவித்த கண்டனத்தை மறந்துவிட்டு - அல்லது மறைத்து விட்டு, இப்படிப்பட்ட உயர்வுகளை அவர்கள் செய்வதும்; நாடு வியப்போடு கண்டு வரும் நடைமுறைகள் ஆகிவிட்டன.
மத்திய அரசினால் இப்படிப்பட்ட மக்கள் விருப்பத்திற்கு மாறான போக்குகள், விலை உயர்வுகள் நடைபெறும்போது எதிர்க்கட்சிகள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றிடும் வகையில், கண்டனம் தெரிவிப்பதும், ஆர்ப்பாட்டம் நடத்துவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கமாக இருந்து வருகிறது. மாநில அரசின் பொறுப்பிலே இருப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது எப்போதாவது நடைபெறும் நிகழ்வாகும். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே, சேலம் உருக்காலைத் திட்டம், சேது சமுத்திரத் திட்டம், நெய்வேலி இரண்டாவது சுரங்கம் போன்ற தமிழகத்திற்குத் தேவையான மிகப்பெரும் திட்டங்களுக்காக எழுச்சி நாள் கொண்டாடப்பட்டதை நினைவு கூரலாம். ஆனால் தற்போது தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழியைப் போட்டு, குற்றம் சுமத்துவதையே வழக்கமாகப் பின்பற்றி; ஏதோ மத்திய அரசுக்கு
நேரடியாகத் தாங்கள்தான் எதிர்ப்பாளர்கள் என்பதைப்போல நடந்து கொள்வதின் உள்நோக்கம் என்ன என்பதை நாம் நன்கறிவோம்.
தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் முப்பதுக்கு மேற்பட்ட முதல் அமைச்சர்கள் கலந்து கொண்டு உரையாற்ற வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் பேச்சினைப் பத்து நிமிடத்திற்குள் முடித்துக்கொள்ள வேண்டுமென்று கூறுவதும், அதனைக் கடைப்பிடிப்பதும் தவறான புதிய நடைமுறையா? தமிழக முதலமைச்சர் வரிசைப்படி பிறகுதான் பேச வேண்டுமென்றாலும், தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டதை அடுத்து, அவரை முதல் முதலாகப் பேசிட அனுமதிக்கவில்லையா; அதைப்போல; தான் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டிய அவசியத்தில் இருப்பதால் மேலும் ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ வேண்டுமென்று கேட்டிருந்தால், அதையும் பெற்றிருக்கலாம். அதற்கு மாறாக, தான் ஏதோ புதிதாகப் புரட்சி செய்வதைப்போல அவையில் எதுவும் சொல்லாமல், வெளியே வந்துவிட்டு, செய்தியாளர்களிடம் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததாகக் கூறி, அனைத்திந்திய அளவில் ஒரு “ஸ்டண்ட்” அடிப்பது எதற்காக என்பதும் நமக்குத் தெரியும்!
அதே அரசியல் ஸ்டண்ட் வரிசையிலேதான், தற்போது மத்திய அரசைக் கண்டித்து 24ஆம் தேதி தமிழகத்திலே ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். எதற்காக ஆர்ப்பாட்டமாம்? “விஷம்போல் உயர்ந்து கொண்டே இருக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, ரெயில்வே கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து தி.மு.கழகமும் அங்கம் வகிக்கும் மத்திய அரசைக் கண்டித்து” ஆர்ப்பாட்டமாம்!
ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கும் அ.தி.மு.க. அரசிலே என்ன நிலைமை? இங்கே எந்தவிதமான உயர்வு களும் செய்யப்படவில்லையா? ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக 4000 கோடி ரூபாய்க்குப் புதிய வரிகளை விதிக்கவில்லையா? ஏழை எளிய நடுத்தர மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு, பேருந்துக் கட்டணங்களை உயர்த்தவில்லையா? பால் விலையை உயர்த்தவில்லையா? இல்லாத மின்சாரத்திற்குப் பொல்லாத
அளவில் கட்டணத்தை உயர்த்தவில்லையா? இப்படிப், பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் கட்டண உயர்வுகளை யெல்லாம் செய்துவிட்டு; தமிழகத்திலே உள்ள அ.தி.மு.க. ஆட்சியின், மத்தியிலே கட்டண உயர்வு என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது வேடிக்கையாக இல்லையா? விநோதமாக இல்லையா? இரட்டை வேடம் போட்டு, கபடநாடகம் ஆடுவதாகத் தெரியவில்லையா? எதற்காக இந்தத் திடீர் ஆர்ப்பாட்டம்? 2014ஆம் ஆண்டு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டா? மக்களுக்கு எதுவும் தெரியாது என்று மனப்பால் குடிக்கிறார்களா?
மத்திய அரசின் மீது ஜெயலலிதாவின் அறிக்கையில் மேலும் பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக “டெல்லி மாநில அரசால் தேவையில்லை என்று ஒப்படைக்கப்பட்ட மின்சாரத்தைத் தமிழகத்திற்குத் தருவதற்கு மத்திய அரசு மறுத்து வருகிறது” என்று ஒரு குற்றச்சாட்டினைக் கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசின் சார்பில் தெளிவாகப் பதில் கூறிவிட்டார்கள். டெல்லி மாநில அரசால் தேவையில்லை என்று ஒப்படைக்கப்பட்ட மின்சாரத்தை தமிழகத்திற்கு தருவதற்கு மத்திய அரசு முன் வந்தாலும், அதனைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கேற்ற “காரிடார்” வசதி அதாவது கட்டமைப்பு வசதி தற்போது போதுமானதாக இல்லை என்று நீதிமன்றத்திலும் கூறி விட்டார்கள். ஆனாலும் அதற்குப் பிறகும் ஜெயலலிதா தனது இன்றைய அறிக்கையில் அதே குற்றச்சாட்டினை மத்திய அரசு மீது மீண்டும் சொல்லியிருக்கிறார். பொய்யான ஒரு செய்தியைக் கூறுவதும், அதற்கு உண்மை விளக்கம் அளித்ததற்குப் பிறகும், மீண்டும் அதே பொய்யைத் திரும்பவும் சொல்லித் திசை திருப்பிக் குழப்புவதும் ஜெயலலிதாவின் “பாணி!” இல்லை, கோயபல்சின் “பாணி!”
2012-2013ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் நிதிநிலை அறிக்கையில் பத்தி 70இல், “வெளி மாநிலங்களில் கிடைக்கும் மின்சாரத்தை நமது மாநிலத்திற்குக் கொண்டு வருவதற்கான மின் வழித்தட வசதிகளில் நெருக்கடி உள்ளதால், மின்சாரத்தை வெளியிலிருந்து கொண்டு வருவதற்கும் வழிவகை இல்லை” என்று 26-3-2012 அன்று கூறிவிட்டு, 2012ஆம் ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம்
போடுகிறார்கள்; மத்திய அரசிடம் டெல்லியில் மீதமுள்ள மின்சாரத்தைத் தமிழகத்திற்குக் கொடு என்று கேட்கிறார்கள் என்றால், மார்ச் மாதம் அவர்கள் படித்த நிதிநிலை அறிக்கையை இவர்கள்தான் தயாரித்தார்களா? தயாரிக்கவில்லை என்றாலும், அதைப் படித்தபோது பக்கத்திலே இருந்து காதால் கேட்கவாவது செய்தார்களா? என்று படித்தவர்கள் நினைக்க மாட்டார்களா? நிதி நிலை அறிக்கையிலே சொன்னதற்கும், அதன் பின் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் ஏன் இத்தகைய முரண்பாடுகள்?
2011-2012ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைப் படித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பத்தி 67இல் “இந்த மின்வெட்டு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு 2012 ஆகஸ்டு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக மின்வெட்டு நீக்கப்படும்” என்று அறிவித்தார். 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் போய், தற்போது 2013ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது. மின்வெட்டு தமிழகம் முழுவதிலும் முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டதா? சட்டப்பேரவையிலே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி மக்களைக் காப்பாற்றாத அ.தி.மு.க. அரசை எதிர்த்து யார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது?
ஏன், 2012ஆம் ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த இதே முதலமைச்சர் ஜெயலலிதா என்ன சொன்னார்? தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம் என்றும், ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்றும் சொன்னாரா இல்லையா? இப்போது என்ன நிலைமை? ஜெயலலிதா சொன்ன சொல்லைக் காப்பாற்றாததற்காக யார் ஆர்ப்பாட்டம் நடத்துவது?
அதுபோலவே டிஜிட்டல் உரிமத்தைத் தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்குத் தரவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு. இதற்கும் விரிவான பதிலை மத்திய அரசின் சார்பில் அந்தத் துறை அமைச்சரே கூறிவிட்டார். ஆனால் அது பற்றியும் நேற்றைய அறிக்கையில் ஜெயலலிதா குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.
அடுத்து காவிரி நீர் பற்றி ஜெயலலிதா மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். அந்தக் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்
என்பதுதான் தி.மு. கழகத்தின் கோரிக்கை, வேண்டுகோள். அதற்காக பிரதமருக்குக் கடிதமே எழுதியிருக்கிறேன். கழக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் செய்திருக்கிறேன். ஆனால் இவ்வளவிற்கும் பிறகு, முதலமைச்சர் ஜெயலலிதா என்ன சொல்கிறார்? நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடக் கூடாது என்று கருணாநிதி தன்னலத்தைக் கருத்திலே கொண்டு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தமிழக மக்கள் கருதுகின்றனர் என்று ஜெயலலிதா அறிக்கையிலே எழுதுகிறார். தமிழக மக்கள் யாரும் அவ்வாறு கருதவில்லை. ஜெயலலிதா ஒருவர்தான், வேண்டுமென்றே அப்படிக் கற்பனையாகக் கருதிக்கொண்டு, இந்தக் குற்றச்சாட்டினைக் கழகத்தின் மீது சுமத்துகிறார்.
கர்நாடக மாநில அரசு இந்தக் காவிரி நீர்ப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளையும் அடிக்கடி கூட்டி, ஒரே குரலில் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள், மத்திய அரசிடம் முறையிடுகிறார்கள், நேற்றைய தினம் கூட கர்நாடக அமைச்சரவை கூடி அதிலே மத்திய அரசு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை வெளியிடக் கூடாது என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலே என்ன நிலைமை?
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல கட்சிகளும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டும்கூட, அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டியது உண்டா? அனைத்துக் கட்சித் தலைவர்களைக்கூட அழைக்க வேண்டாம்; தோழமைக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தையாவது கூட்டி அதிலே முடிவு எடுத்து இந்தப் பிரச்சினையிலே நாங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா? அதற்கான முயற்சி தமிழகத்திலே ஏன் எடுக்கப்படவில்லை? தனக்குத் தெரியாதது வேறுயாருக்கும் தெரியாது என்ற தன்முனைப்புதானே? முயற்சி எடுக்காதது மட்டுமல்ல, எதிர்க்கட்சி மீது அபாண்டமான குற்றச்சாட்டு வேறு?
கர்நாடக மாநிலத்திலே உள்ளவர்களும், மத்திய அரசிலே உள்ளவர்களும் இவர்களைப் பற்றி என்ன எண்ணிக் கொள்வார்கள்? இறுதித் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்று தி.மு.க. மத்திய அரசைக் கேட்டுக் கொண்டதாக ஜெயலலிதா
கூறுகிறாரே, அவர் ஒரு முதல் அமைச்சர், இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிக்க அவர் தயாரா?
தமிழகத்திற்குத் தேவையான மண்ணெண்ணெயினை மத்திய அரசு அளிக்கவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். கழக அரசு இருந்தபோது, உணவுத்துறை அமைச்சராக இருந்த தம்பி எ.வ. வேலு என்னிடம் அனுமதி பெற்று டெல்லிக்குப் படையெடுப்பார். அப்போது அந்தத் துறையில் அமைச்சராக இருந்த முரளி தியோரா அவர்களைச் சந்தித்து, தமிழக அரசின் கோரிக்கைகளைச் சொல்லுவார், மண்ணெண்ணெய் கூடுதலாக வழங்க வேண்டும், எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பார். மத்திய அரசில் அப்போது அந்தத் துறையின் செயலாளராக இருந்த நமது மாநிலத்தைச் சேர்ந்த திரு.சீனிவாசனைச் சந்தித்து, மண்ணெண்ணெய் பற்றாக்குறை பற்றிக் கூறுவார். அவர்களும் இப்படியெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்களே என்பதால், கூடுமானவரை உதவி செய்வார்கள். ஆனால் இப்போது புகார் கூறுகின்ற முதலமைச்சரின் அமைச்சரவையில் உள்ள அந்தத் துறையின் அமைச்சர் மண்ணெண்ணெய் கேட்டு எத்தனை முறை மத்திய அமைச்சரைச் சந்தித்திருக்கிறார்? ஜெயலலிதா பதில் கூற முடியுமா?
எதற்கெடுத்தாலும், யார் மீது வேண்டுமானாலும், எப்போதும் குறை சொல்வதும், குற்றச்சாட்டுகளை அடுக்குவதும் நல்ல தல்ல. ஒரு முதல் அமைச்சருக்கு அழகுமல்ல; நல்ல பண்பாடும் அல்ல. கிராமங்களில் 18 மணி நேரம் மின்சாரம் இல்லை. விவசாயிகள் வேதனையில் வெந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில், கோட்டூர் ஒன்றியத்தில் நேற்றையதினம்கூட ரமேஷ் என்ற விவசாயி விஷமருந்தி மடிந்திருக்கிறார். விவசாயிகள் தற்கொலை என்பது சோகத் தொடராகி வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நெசவாளர்களோ கஞ்சித் தொட்டிகளாவது திறக்கப்படுமா என்கிறார்கள். இவர்களின் வேதனைகளைத் தீர்க்க வழிகண்டு மாநில மக்களை வாழ வைத்திட வேண்டிய தமிழக அ.தி.மு.க. அரசு, மத்திய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களாம்!
24ஆம் தேதி அ.தி.மு.க. மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அரசியல் ரீதியாக நடத்துகிறது என்றால் நடத்தட்டும்; அதிலே தேவையில்லாமல், “எதற்கெடுத்தாலும் தி.மு.க., என் கனவிலும் நனவிலும் தி.மு.க. தான்” என்பதைப் போல எதற்காகத் தி.மு.க. மீது குறை கூற வேண்டும்? ஜெயலலிதா நேற்றைய அறிக்கையில், மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்துகொண்டு, தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார். சாதாரணக் கண்டனம் கூட அல்ல; கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சி என்ற முறையில், கூட்டணிக்குத் துரோகம் செய்யாமல், மத்திய அரசுக்கு உறுதுணையாக தி.மு.கழகம் இருந்த போதிலும், தமிழகத்திற்கான பிரச்சினைகள் என்று வரும்போது, தி.மு. கழகம் அவற்றைக் கைவிட்டது உண்டா? அதற்காக ஓங்கிக் குரல் கொடுக்காமல் இருந்தது உண்டா? ஆனால் ஜெயலலிதாவுக்கும், அவரோடு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் எனும் நோக்கில் அவரை மறைமுகமாக ஆதரிக்கும் சில கட்சிகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எப்படியாவது விலகிவிட வேண்டும், மத்திய அரசில் குழப்பம் ஏற்பட வேண்டும், அதை வைத்துக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டும் என்பதுதான் உள்ளார்ந்த எண்ணம். அதைத் தி.மு.க. நன்றாகவே உணர்ந்துதான் உள்ளது. நாட்டு மக்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். எட்டிக்குப் போட்டியென எத்தனை காலம் மக்களை ஏமாற்றுவார்?
அன்புள்ள, மு.க. 22-1-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 345–351. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.