அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3692

முரசொலி கடிதங்கள் · 3692

பாலியல் கொடுமைக்கு தனிமைச்சிறையே தக்க தண்டனை!

நாள் 6.1.2013சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3692. பாலியல் கொடுமைக்கு தனிமைச்சிறையே தக்க தண்டனை!

உடன்பிறப்பே,

தூத்துக்குடியில் மாணவி புனிதா, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கோரக் கொலை.

அரூர் தாதராவலசை கிராமத்தில் பழங்குடியினப் பெண் மேனகா பாலியல் படுகொலை.

திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமி காயத்ரி கற்பழித்துக் கொலை.

விருத்தாசலம் அருகே சுகுணா,

சிதம்பரத்தில் 21 வயதான இளம் பெண் சந்தியா, தூத்துக்குடியில் மாரியம்மாள் (27) பாலியல் பலாத்காரம்,

நன்னிலம் அருகே விமலா,

கோயம்பேட்டில் இளம் பெண் மலர்

என்று டெல்லியில் ஒரு மாணவிக்கு நடந்த கொடிய நிகழ்ச்சியைப்போல - கடந்த சில நாட்களாக - தமிழகத்தில் பாலியல் பலாத்காரம் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

இவ்வாறு தமிழகத்திலும் தொடர்கதையாகி வரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை, உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டுமென்று பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், தொடரும் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வெங்கட்ராமன், வாசுகி ஆகியோர் தமிழக அரசு 41- 2013க்குள் பதில் அளிக்க வேண்டுமென்று 28-12-2012 அன்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.

டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாகி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அதற்காக 30-12-2012 அன்று இரங்கல் செய்தி விடுத்தபோது,

“ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமன்றி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இத்தகைய கொடுமையான பாலியல் வன்முறைக்கு மாணவிகளும் ஏழைப் பெண்களும் ஆளாக்கப்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்குக் கடுமை யான தண்டனை என்பது அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்துவைக்க வேண்டும் என்பதுதான். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்”

என்று அப்போதே கேட்டுக் கொண்டேன்.

பாலியல் கொடுமை செய்தவர்களுக்குத் தூக்குத் தண்டனைதான் வழங்க வேண்டுமென்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூறிவரும் நிலையில், நான் ஒருவன்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது, அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும்; அதைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தேன். நான் இப்படிச் சொன்னால் அம்மையார் ஏற்றுக் கொள்வாரா? உடனே பாலியல் குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்றிருக்கிறார். அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தால் ஓராண்டுக் காலத்தில் அந்தக் குற்றவாளிகள் வெளியே வந்து விடுவார்கள். வெளியே வந்து மீண்டும் பாலியல் குற்றம் புரிய மாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. சமூக சிந்தனையாளர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோரைப் போலவே தூக்குத் தண்டனை என்பதை நானும் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. அதனால்தான் இந்தக் குற்றத்திற்கு ஏற்ற தண்டனையாக “ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையிலே அடைக்க வேண்டும்” என்பதை என் கருத்தாகத் தெரிவித்தேன். இந்தக்

கருத்து பற்றி மாநில அரசு சீர்தூக்கிப் பார்க்க மறுத்துவிட்டாலும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால் தமிழக அரசைப் பொறுத்தவரையில் இந்த பாலியல் வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது என்பது, காவல் நிலையத்தில் பெயருக்கு ஒரு வழக்குப் பதிவு என்ற அளவிலேதான் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புனிதா என்ற 13 வயது ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட வழக்கில் தி.மு.கழகம் கண்டன அறப் போராட்டம் அறிவித்து, அதனை நடத்தி, கழகத்தின் சார்பில் இரண்டு இலட்ச ரூபாய் நிதியினையும், மாவட்டக் கழகச் செயலாளர் பெரியசாமி ஐம்பதாயிரம் ரூபாய் நிதியினையும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை ஒரு லட்ச ரூபாய் நிதியினையும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி நேரில் சென்று அளித்து, அந்தப் பெண்ணின் தாயாருக்கு ஆறுதல் கூறிய பிறகு, தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டு யாரோ ஒரு அமைச்சரை அனுப்பிவைத்தது. ஆனால் அந்த ஒரு சம்பவத்தைத் தவிர்த்து மற்ற பாலியல் பலாத்காரம் குறித்த நிகழ்ச்சிகளில் தமிழக அரசு வழக்கு பதிவு செய்ததைக் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

ஓசூரில் 18-12-2012 அன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பழங்குடியினச் சிறுமி மேனகாவின் குடும்பத்திற்கு பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டுமென்று சி.பி.எம். கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரப்பட்டுள்ளது. இதைப் போலவே தமிழகத்திலே பாலியல் கொடுமைக்கு ஆளான குடும்பங்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் விரைவில் உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு 13 அம்சத் திட்டத்தை ஏட்டளவில் அறிவித்தால், அதற்கு ஒரு சிலரின் வரவேற்பு அறிக்கைகள்தான் ஏடுகளில் வெளிவருமே தவிர, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களாகவோ பாலியல் கொடுமைகள் நடந்துவிடாமல் தடுக்கவோ அவை பயன்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

1-1-2013 அன்று ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டுச் சென்ற பிறகு, அவர் பெயரால் ஒரு நீண்ட அறிவிப்பு வந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கிட 13 அம்சத் திட்டம்

என்ற பெயரால் வெளியாகியுள்ள அந்த அறிவிப்புக்கு எப்போதும் போல பாராட்டுகள் - விளம்பரங்கள்! கடந்த சில நாட்களில் நடை பெற்ற பாலியல் பலாத்காரங்கள் - கொலைகள் பற்றி இந்த கடிதத்தின் தொடக்கத்தில் நான் பட்டியல் இட்டுள்ளேன். இந்த இலட்சணத்தில் அம்மையார் பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்கப் போகிறார்களாம்! நிறை வேற்றப்படாத பல உறுதிமொழிகளின் பட்டியலில் இதையும் இணைத்துக் கொள்ளலாம்.

முதலமைச்சர் அறிவித்துள்ள 13 அம்சத் திட்டங்களில் முதல் மூன்று திட்டங்கள் பாலியல் வன்முறை வழக்குகளை - இனி நடப்பவை, மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை - யார் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றிய நிர்வாக அறிவிப்புகளாகும். நான்காவது அம்சம்தான் “குண்டர் தடுப்புச் சட்டம்” - ஏற்கனவே இந்த ஆட்சியில் இந்தச் சட்டம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றது. தங்களுக்குப் பிடிக்காதவர்கள் - எதிர்க்கட்சியினர் மீதெல்லாம் இந்தச் சட்டத்தைப் பிரயோகித்து, கைது செய்து, சிறையில் போட்டு வாட்டி வதைத்து - அவர்கள் எல்லாம் நீதிமன்றங்களின் மூலமாக நியாயம் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் என்ற பெயரால் இதற்கும் குண்டர் தடுப்புச் சட்டத்தைத் திருத்தி அமைத்து, தங்களுக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் கொடும்பழி தீர்க்க இந்தப் பிரிவினைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்.

இந்தக் குண்டர் சட்டம் நம்முடைய முதலமைச்சரிடம் சிக்கிக் கொண்டு படாதபாடு படுகிறது. எதிர்கெடுத்தாலும் தமிழகத்தில் குண்டர் சட்டம்தான். முன்பு ஆட்சிக்கு வந்தபோது “பொடா” சட்டத்தைக் கையிலே வைத்துக் கொண்டு தன்னை எதிர்ப்பவர்களையெல்லாம் பிடித்து ஆறு மாதம், ஒன்பது மாதம் சிறையிலே பூட்டி மகிழ்ந்தார். அப்போது சிறையில் இருந்தவர்கள் எல்லாம் தற்போது அதை நினைத்துக் கொண்டு, “அம்மா”வைப் புகழ்வதிலே பாவ விமோசனம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அடிக்கடி குற்றத்திற்கு மேல் குற்றம் செய்பவர்களின் மீதுதான் - குற்றம் புரிவதையே பழக்கமாகக் கொண்டிருப்பவர் மீது தான் பொதுவாக குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதை மாற்றும் வகையில் சில நாட்களுக்கு முன்பு பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதோ ஒரு குற்றச் செயலை முதல் முறை

செய்தாலே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என்றும், “சைபர்” குற்றங்களைப் புரிவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அதற்கேற்றவாறு சட்டத்திலே திருத்தம் கொண்டு வரப்போவதாகவும் அறிவித்தார். அந்தச் சட்டத் திருத்தமே இன்னும் கொண்டு வரப்படவில்லை. அதற்குள் பாலியல் வன்கொடுமை புரிந்தவர்கள் மீதும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சலாம் என்று கூறியிருக்கிறார். இப்படியெல்லாம் ஒவ்வொன்றுக்கும் குண்டர் சட்டம் என்பதற்குப் பதிலாக, நமது முதலமைச்சருக்கு யார் யாரைப் பிடிக்காதோ அவர்கள் மீதெல்லாம் மொத்தாம் பொதுவில் குண்டர் சட்டத்தைப் பிரயோகப்படுத்த ஒரு திருத்தம் கொண்டு வரலாமா என்று யோசிக்கலாம் அல்லவா? அப்படியே முடிவெடுத்தாலும், அதையும் வரவேற்று அறிக்கை வெளியிடவும், பத்திரிகைகளில் பெரிதாக விளம்பரப்படுத்தி செய்திகள் வெளியிடவும் தமிழகத்தில் சிலர் தயாராகவே இருக்கிறார்கள்.

இந்தக் கருத்தினை நான் தெரிவிக்கவில்லை. “கல்கி” வார இதழில் “ப்ரியன்” என்பவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் தமிழகத்தில் குண்டர் சட்டம் பற்றி எழுதியிருக்கிறார். “முதல்வரின் இந்த அறிவிப்பு நீதிமன்ற வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. இப்போதே குண்டர் சட்டம் அரசியல் பழி வாங்கலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்தத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன் தீவிர ஆலோசனை நடத்த வேண்டும்” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலு - என்று “கல்கி” கட்டுரை கூறுகிறது. அந்தக் கட்டுரை மேலும் கூறுகிறது.......

“குண்டர் சட்டம் 1982ஆம் வருடம் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலிருந்து நடை முறையில் இருந்து வருகிறது. அடிப்படையாக கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பவர்கள், பொது இடங்களில் அமைதியைக் குலைப்பவர்கள் என்று பல குற்றச்செயல்களை ஒருவர் தொடர்ந்து செய்தால் அந்த நபரை குண்டர்கள் சட்டத்தில் ஒரு வருடம் வரை ஜாமீன் பெற்று வெளியே வர இடம் கொடுக்காமல் கைது செய்து சிறையில் அடைக்க வழி செய்கிறது இந்தச் சட்டம். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? ஆளும் அரசியல்வாதிகள், காவல் துறை

அதிகாரிகள் ஆகியோரின் விருப்பு, வெறுப்புக்கேற்ப இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது” என்று “கல்கி” எழுதியுள்ளது.

பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதி மன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம். இது முதலமைச்சரின் அறிவிப்பில் ஒரு அம்சம். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்கான செலவை ஏற்பதும் ஒரு திட்டமாகும். இந்த ஆட்சியில் இதுவரை பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்கான செலவை ஏற்றதோடு, அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் முன் வர வேண்டும்.

ஏதோ அன்றாடம் வெளிவரும் பத்திரிகைகளைப்போல, அன்றாடம் அறிவிக்கின்ற அறிவிப்புகளில் ஒன்றாக இந்த 13 அம்சத் திட்டங்களும் ஆகிவிடாமல், பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாகவே உரிய முறையில் உதவிடவும், பாலியல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்திடவும் இந்த அரசு முன் வர வேண்டும். இந்த அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்! சட்டத்தை மதிக்காததும், நீதி பரிபாலன முறைகளுக்கு உரிய மரியாதை வழங்காததும், சட்ட விதிமுறைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, சட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்வதில், தனித் திறமை காட்டுவதும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் கடந்தகாலப் பின்னணி என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது; பாலியல் குற்றம் தொடர்பான அறிவிப்புகளை எந்தவிதம் நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்ற சந்தேகம் யாருக்கும் எழுவது இயற்கைதானே?

அன்புள்ள, மு.க. 06-01-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 307–312. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்