அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3690

முரசொலி கடிதங்கள் · 3690

கபட நாடகமாடிகளைக் கண்டுகொள்வீர்!

நாள் 31.12.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3690. கபட நாடகமாடிகளைக் கண்டுகொள்வீர்!

உடன்பிறப்பே,

முதல் அமைச்சர், ஜெயலலிதா டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, வெளியே வந்து செய்தியாளர்களிடம், வெளிநடப்புச் செய்திருப்பதாகக் கூறியதோடு, அவசர அவசரமாகச் சென்னைக்கு வந்து 27ஆம் தேதியன்று “கர்நாடகம் தடுக்கும் தண்ணீரும்; தமிழகம் வடிக்கும் கண்ணீரும்” என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்திற்கு நீண்ட பதில் அறிக்கை விடுத்திருக்கிறார். அதை அறிக்கை என்று சொல்வதைவிட “வசைபாடல்” என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். என்ன செய்வது? அவர் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் பண்பாட்டோடு, நாகரிகமாக அறிக்கை விடத் தெரியாது போலும்! அவருடைய பாணியே அதுவாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் அவர் எழுதியதையும், நான் எழுதியதையும் இங்கே ஒப்பிட்டுக் காட்டுகிறேன். தமிழ்நாட்டு மக்களே எது உண்மை என்பதைத் தீர்மானித்துக் கொள்ளட்டும்!

ஜெயலலிதா இன்றைய அறிக்கையின் துவக்கத்தில், “கருணாநிதி தனது அறிக்கையில், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளிவந்தபோது, இது தமிழகத்திற்குப் பாதகமானது என்று நான் (ஜெயலலிதா) அறிக்கை வெளியிட்டதாகவும், அந்த இறுதித் தீர்ப்பைத்தான் அரசிதழிலே வெளியிட வேண்டும் என்று தற்போது பாரதப் பிரதமருக்குக் கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5-2-2007 அன்று வெளியிடப்பட்ட பிறகு, 19-2-2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது” என்று நான் ஏதோ தவறான தகவலைத் தெரிவித்து விட்டதாகக் கூறுகிறார். அதாவது 5-2-2007 அன்று காவேரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு

வந்த பிறகு, 19-2-2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது என்று, இடையிலே எதுவுமே நடைபெறாததைப் போலச் சொல்லியிருக்கிறார். நான் உண்மையைக் கூறுகிறேன்.

5-2-2007 அன்று காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியான பிறகு, அதிலே என்ன இருக்கிறது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், 6-2-2007 அன்றே ஜெயலலிதா ஒரு நீண்ட அறிக்கை விடுத்து, அந்த அறிக்கை அ.தி.மு.க. வின் அதிகாரபூர்வமான “நமது எம்.ஜி.ஆர்.” பத்திரிகையில் 7-2-2007 அன்று முதல் பக்கத்திலேயே வெளிவந்துள்ளது.

அந்த அறிக்கையும் முழுக்க முழுக்க என் மீது வசைபாடல்தான்! அதற்காக எத்தனை “அவதூறு வழக்குகளை” வேண்டுமானாலும் தொடரலாம். 7-2-2007 அன்று வெளிவந்த ஜெயலலிதாவின் அறிக்கை வருமாறு :-

“ஓட்டைக் கப்பலுக்கு ஓராயிரம் மாலுமிகள் என்பதைப் போல, மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தையும் அமைச்சர்களையும் வைத்திருக்கிற கருணாநிதியால் காவேரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்ப்பை முழுமையாகப் பெற்றுத் தர முடியவில்லை”

இதற்கு என்ன பொருள்? இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதை முழுமையாகப் பெற்றுத் தரவில்லை என்று தானே குறை சொல்லியிருக்கிறார். அப்படியானால் அந்த இறுதித் தீர்ப்பு சரியில்லை என்று அவர் சொல்வதாகத்தானே பொருள்? அப்படிப்பட்ட இறுதித் தீர்ப்பைத்தானே அரசிதழில் வெளியிட வேண்டுமென்று இப்போது ஜெயலலிதா கோரிக்கை வைக்கிறார்.

7-2-2007 தேசிய அறிக்கையில், ஜெயலலிதா மேலும் கூறியிருப்பதாவது :-

“கருணாநிதியின் தொடர் துரோகச் செயலால்தான் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு இன்று பாதகமாக வந்துள்ளது. இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று “மைனாரிட்டி” தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்”.

தமிழகத்திற்குப் பாதகமாக இறுதித் தீர்ப்பு வந்துள்ளது என்று 7-2-2007 அன்று அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, தற்போது; அப்படி ஒரு அறிக்கையையே வெளியிடாததைப் போல, நான் ஏதோ எனது கடிதத்தில் கற்பனையாகச் சொல்லியுள்ளதைப் போல எழுதுகிறார் என்றால், எது உண்மை, எது பொய் என்பது தெளிவாகிறதா? அல்லவா?

மேலும் ஜெயலலிதா 7-2-2007இல் வெளியிட்ட அறிக்கையில், “நடுவர் மன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பை, தான் வரவேற்பதாகவும், இதனால் மகிழ்ச்சி அடைவதாகவும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் இது வரவேற்கத்தக்க தீர்ப்பு அல்ல” என்று கூறி, அது அவர்கள் பத்திரிகையிலேயே வெளிவந்துள்ளது. அந்தப் பத்திரிகை என் கைவசமும் உள்ளது. எங்கேயும் அதைக் காட்டுவதற்கு நான் தயார்.

இவ்வாறு இறுதித் தீர்ப்பை வரவேற்கத்தக்க தீர்ப்பு அல்ல என்று கூறிய ஜெயலலிதா, தற்போது அதே தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்று பிரதமருக்குக் கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதுகிறார் என்று நான் எழுதியிருந்தேன். அதைத்தான் தவறு என்று இன்றையதினம் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இவ்வாறு 7ஆம் தேதி அறிக்கையில் ஜெயலலிதா; “இறுதித் தீர்ப்பு வரவேற்கத் தக்கது அல்ல” என்றும், “ஏற்கத் தக்கது அல்ல” என்றும் தெரிவித்த போதிலும், அப்போது தி.மு. கழக அரசில் 19-2-2007 அன்றும், 15-4-2007 அன்றும் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொண்டது. ஆனால் தற்போது குறுவை முழுவது மாகப் பாழாகி, சம்பாவும் என்னவாகுமோ என்று டெல்டா விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், கர்நாடக அரசு உச்சநீதிமன்றமும், காவேரி நதி நீர் ஆணையமும் தமிழகத்திற்கு நீர் வழங்குமாறு கூறிய பிறகும், அதனைக் கர்நாடக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களை அடிக்கடி கூட்டி அவர்களின் ஒப்புத லோடு தமிழகத்திற்கு நீரே வழங்க மறுத்துள்ள நிலையிலே, தமிழகத்திலே உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று சொல்லியபிறகும், அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், தன்னிச்சையாக அனைத்துக் கட்சித் தலைவர்களின்

கூட்டத்தையே கூட்ட மறுத்து, தான் எடுத்ததே முடிவு என்ற தன்மையோடு செயல்படுகின்ற ஜெயலலிதா; நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்த நேரத்தில் தி.மு. கழக அரசு இரண்டு முறை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, அந்த அடிப்படையிலே செயல்பட்டதைக் கண்டிப்பதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்பதையும் தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 5-2-2007 அன்று வெளிவந்தது. 19-2-2007 அன்று பதினைந்து நாட்களுக்குள் கழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைவரின் கருத்துக்களையும் கேட்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அதற்கே அப்போது ஜெயலலிதா 21- 2-2007 அன்று விடுத்த அறிக்கையில் தீர்ப்பு வந்து பதினைந்து நாட்கள் கழித்துத்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியதாகக் குறைபட்டுக் கொண்டார். ஆனால் இப்போது என்ன நிலை?

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தவுடன் அவசர அவசரமாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், இறுதித் தீர்ப்பு வரவேற்கத் தக்கது அல்ல என்று கூறிய போதிலும், அதன் பின்னர் அந்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று பலமுறை அவர்களுடைய அறிக்கைகள் வாயிலாகவும், பிரதமருக்குக் கடிதங்கள் வாயிலாகவும் தெரிவித்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.

மேலும் ஜெயலலிதா அப்போது விடுத்த அறிக்கையில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது என்று நான் சொன்னதாகவும், நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பைவிட இறுதித் தீர்ப்பில் தண்ணீரின் அளவு குறைவாகக் கிடைத்துள்ளது என்றும் கூறியிருந்தார். இதற்கு அப்போதே 8-2-2007 அன்று நான் அளித்த பதிலில், “காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. “ஆறுதல் தருகிறது” என்று நான் சொன்னதை “மகிழ்ச்சி தருகிறது” என்பதாக அர்த்தப்படுத்திக் கொண்டு அம்மையார் அறிக்கை விட்டது மாத்திரமல்லாமல், நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தண்ணீர் அளவு குறைவாக இறுதித் தீர்ப்பில் கிடைத்துள்ளது என்கிறார்.

ஜெயலலிதா. இடைக்காலத் தீர்ப்பு 205 டி.எம்.சி. இறுதித் தீர்ப்பு 210 டி.எம்.சி. இது எப்படி இடைக்காலத் தீர்ப்பை விட இறுதித் தீர்ப்பிலே குறைந்து விட்டது என்று பொருள் ஆகும்?” என்று தெளிவுபடுத்தியிருந்தேன்.

19-2-2007 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்து கொண்டவர்கள் அப்போது நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களா என்றால், “நடுவர் மன்றம் அத்துமீறி கர்நாடகத்தில் கட்டப்பட்ட ஆயக் கட்டுகளை அங்கீகரிக்கும் அளவில் உத்தரவினைத் தந்துள்ளது, இது விவாதத்திற்குரிய, கண்டிப்பாக எதிர்த்தே தீர வேண்டிய ஒரு விஷயமாகும். தவறு களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது” என்றுதான் சொன்னார்கள். (நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் 20-2-2007 தேதியில் 4வது பக்கத்தில் இது வெளிவந்துள்ளது.) “நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்திற்கு பாதகமான அம்சங்கள்” என்றே தலைப்பிட்டு அப்போது அந்தப் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன. இப்படிப் பாதகமான அம்சங்கள் அடங்கிய நடுவர் மன்றத் தீர்ப்பைத் தான் தற்போது அரசிதழில் வெளியிட வேண்டுமென்று ஜெயலலிதா வலியுறுத்துகிறார்.

அடுத்து ஜெயலலிதா தி.மு. கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை உடனடியாக வெளியிட வேண்டுமென்று 17-12-2012 அன்று கேட்டுக்கொண்டதைப் பற்றி, மிகவும் அநாகரிகமாக, அவர்கள் இறுதித் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கேட்பது போல ஒரு கபட நாடகமாடி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டனரா என்பது புரியாத புதிராக இருக்கிறது என்று இன்றைய அறிக்கையில் சாடியிருக்கிறார். இது கழக நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமல்ல, பிரதமர் அலுவலகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவது போல உள்ளது.

கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்த அதே 17-12-2012 அன்று நான் அனைத்து நாளேடுகளுக்கும் விடுத்த அறிக்கையிலேயே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை

மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்ததோடு, அந்த வேண்டுகோள் பற்றி உடனடியாகக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து முறையிடுவார்கள் என்றும் தெரிவித்ததோடு, உடனடியாக டெல்லியில் உள்ள கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவைத் தொடர்பு கொண்டு, பிரதமரைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்கக் கேட்டுக்கொண்டு, அவர்களும் அவ்வாறே அன்றைய தினமே பிரதமரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்து, அதனைப் பிரதமர் அவர்களும் கேட்டு, உடனடியாக அது பற்றி கவனிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். அந்தச் செய்தி 18- 12-2012 தேதிய நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. ஆனால் ஜெயலலிதா அவருக்கே உரிய பாணியில் இதைப் பற்றியும் தவறாகத் தனது அறிக்கையிலே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

வாதத்திற்கு வாதம் பதில் சொல்லலாம். கபட நாடகமாடிகளின் விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது? தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்புள்ள, மு.க. 31-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 296–301. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்