அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3688

முரசொலி கடிதங்கள் · 3688

பள்ளிக் கல்வித் துறையும் பாழாகும் பரிதாபம்!

நாள் 28.12.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3688. பள்ளிக் கல்வித் துறையும் பாழாகும் பரிதாபம்!

உடன்பிறப்பே,

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு, கல்வித் துறையின் மேம்பாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அதனால் எந்தவொரு நாட்டிலும் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அரசுகள் அதிகத் தொகையினை ஒதுக்கீடு செய்ய முன்வருவார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரையில் 2005-2006இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு 4,348 கோடி ரூபாய் என்பது 2010-2011இல் தி.மு.கழக ஆட்சியில் 10,148 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினை அ.தி.மு.க. ஆட்சியிலும் 14,553 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்திக் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே ஒதுக்கிய போதிலும்கூட, அதன் பயன்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய நேரத்தில் கிடைக்கின்ற அளவிற்குச் செயல்பாடுகள் அமைந்திடவில்லை.

2001-2006இல் அ.தி.மு.க. ஆட்சியில் 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில், அதாவது அவர்கள் பெற வேண்டிய ஊதியத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு ஊதியம் மட்டுமே பெறும் நிலையில் நியமிக்கப் பட்டிருந்தவர்களுக்கெல்லாம், 2006இல் தி.மு. கழக அரசு பொறுப்பேற்றவுடன் காலமுறை ஊதியம், அதாவது அவர்கள் பெற்று வந்த ஊதியத்தைவிட மூன்று மடங்கு அதிக ஊதியம் கொடுத்து ஆசிரியர்களை மகிழச் செய்தது. அத்துடன் 2006க்குப் பின், தொடக்கக் கல்வித் துறையில் 12 ஆயிரத்து 426 இடைநிலை ஆசிரியர்கள், 14 ஆயிரத்து 115 பட்டதாரி ஆசிரியர்கள் என 26 ஆயிரத்து 541 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித் துறையில் 70 இடைநிலை ஆசிரியர்கள், 17 ஆயிரத்து 45 பட்டதாரி

ஆசிரியர்கள், 4 ஆயிரத்து 665 ஆசிரியர் பயிற்றுநர்கள், 3002 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 525 தமிழாசிரியர்கள், 1131 சிறப்பாசிரியர்கள், 140 தொழில் ஆசிரியர்கள், 1686 கணினி ஆசிரியர்கள் என 27 ஆயிரத்து 739 ஆசிரியர்களும்; மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 216 விரிவுரையாளர்களும், 32 முதுநிலை விரிவுரையாளர்களும் என மொத்தம் 55 ஆயிரத்து 53 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள்; கழக ஆட்சியில்!

இவர்கள் தவிர, ஆசிரியர் அல்லாத 1140 பணியாளர்களும், கருணை அடிப்படையில் 449 பணியாளர்களும், அரசு மேல் நிலைப் பள்ளிகளில் விவசாயம் கற்பிக்க 176 விவசாயப் பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டார்கள். 2006 முதல் 2010 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஆசிரியர் கல்வித் தகுதி பெற்ற 1114 மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டார்கள்.

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் இத்தனை பேர் நியமிக்கப்பட்டார்களே, அப்போது ஏதாவது புகார்கள் வந்ததுண்டா? ஏதாவது முறைகேடு சொன்னதுண்டா? ஏதாவது குளறுபடிகள் நடந்ததுண்டா? ஆனால் இப்போது அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நிலைமை?

நேற்றைய (26-12-2012) “தினமலர்” நாளேட்டின் முதல் பக்கத் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? “இரண்டாயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி! தகுதியில்லாதவர்களுக்குப் பணி வழங்கியது அம்பலம்!”. அந்தத் தலைப்பில் வந்துள்ள செய்திக் குறிப்பில் சில முக்கியப் பகுதிகள் வருமாறு :-

❖ இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளைத் தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும் பெரும் குளறுபடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

❖ உடல் தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். சரியான கல்வித் தகுதி இல்லாதவர்களும் இறுதிப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர்.

❖ அதிகார வட்டாரத்திலிருந்து வந்த நெருக்கடி காரணமாக டி.இ.டி. ஆசிரியர் தேர்வுப் பணி இடியாப்பச் சிக்கலாக மாறித் தேர்வு வாரியம் தவியாய்த் தவித்து வருகிறது.

❖ பணி நியமனத்திற்கு முன் சான்றிதழ்களைச் சரியாகச் சரிபார்க்காமல் கோட்டைவிட்டு விட்டு, 18 ஆயிரம் பேருக்குப் பணி நியமனம் வழங்கியாகிவிட்டது. உத்தரவுகளைப் பெற்றோர் பணியிலும் சேர்ந்து விட்டனர். இப்போது மீண்டும் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

“தினமலர்” வெளியிட்ட இந்தக் குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே போகிறது. இது மாத்திரமல்ல; அதே தினமலர் ஏட்டில், வேறொரு பக்கத்தில், “1,000 தொழில் கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலி; - மேல்நிலை பள்ளிகளில் பாடப் பிரிவுகள் மூடல்” என்ற செய்தியும் பெரிதாக வந்துள்ளது.

“தினமலர்” நாளிதழில் இவ்வளவு குறைகூறி 26ஆம் தேதி செய்திவந்த போதிலும், 27ஆம் தேதிய “தினமணி” நாளிதழில் பணி நியமனம் பெற்ற பெரும்பாலோர் பணியிலே சேருவதில் எந்த விதமான தடையும் இல்லை என்றும், ஓரிருவர் மட்டுமே உரிய தகுதிகளுடன் இல்லை என்றும், இறுதி நேரத்தில் சற்று அவசரமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதால் மீண்டும் பட்டியல் சரிபார்க்கப்பட்டது என்றும், எந்தவொரு மிகப் பெரிய பணி நியமனத்திலும் சிறிய பிரச்சினைகள் இருப்பது இயல்புதான் என்றும், தமிழ் வழி முன்னுரிமை கோருவோர் தவறான சான்றிதழ்களை அளித்துள்ளதால் அந்தப் பிரிவினருக்கு மட்டும் மற்றுமொரு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகச் செய்தி வந்துள்ளது.

நாம் கேட்பதெல்லாம் சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் கூட எதற்காக அவசர அவசரமாகப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன? அதனால் எந்த அளவிற்குக் குழப்பங்கள், குளறுபடிகள்?

கடந்த 13ஆம் தேதியன்று முதலமைச்சரே நேரடியாக 26 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணையினை

வழங்குவார் என்று முழு பக்க விளம்பரங்கள் அனைத்து ஏடுகளிலும் செய்யப்பட்டு, மிகப் பெரிய அளவில் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் 36 ஆசிரியர்களுக்கு மட்டுமே நேரடியாகப் பணி நியமன ஆணையினை வழங்க, ஏனையோருக்கு மற்றவர்கள் பணி நியமன ஆணையினை வழங்கினார்களாம். “முதல்வர் விழாவில் தவித்த ஆசிரியைகள்” என்ற தலைப்பிலே அதைப் பற்றியும் 14ஆம் தேதியன்றே தினமலரில் செய்தி வந்தது.

அந்தச் செய்தியில், “பணி நியமன ஆணை வழங்கும் விழா, 13ஆம் தேதி நடந்த நிலையில், 12ஆம் தேதி காலை முதலே 650 பஸ்கள் மூலம் ஆசிரியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும், 12ஆம் தேதி இரவு சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய தனியார் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் வந்திறங் கிய அவர்களுக்குச் சிறிது நேர ஓய்வு கூட அளிக்கப்படவில்லை. உடனடியாகக் குளித்துத் தயாராக அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து இரவு 2 மணி முதலே அவர்கள் நந்தனம் விழா அரங்கிற்கு பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டு அரங்கில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமரவைக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் பெண்களே அதிகம் இருந்த நிலையில், அவர்களுக்குப் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. ஆங்காங்கே இருந்த “மொபைல்” கழிப்பிடங்களில், தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு “மொபைல்” கழிப்பிடத்திற்கும் 20க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றே சென்று வந்தனர். முதல் நாள் இரவு முதலே அவர்கள் அங்கு அமரவைக்கப்பட்டதால், பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். கொசுக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகப் பயனாளிகள் புலம்பினர்” என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்கப்பட்ட விழாவிலே நடந்த சம்பவங்கள்.

13ஆம் தேதியன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட போதிலும், வழக்கமாகப் பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு முன்பு, பலமுறை அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே, ஆணைகள் வழங்கப்படும். ஆனால் இந்த முறை நேரம் இல்லாத காரணத்தால், சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும் பணிகளை நிறைவேற்றாமலே பணி நியமன ஆணைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுவிட்டன. பணி நியமன ஆணைகள் வழங்கிவிட்டு

சான்றிதழ்களைச் சரிபார்ப்பதால், அதிலே தகுதி இல்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுடைய தேர்வு ஆணையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடப்பதற்கு முன்பாக, எந்தெந்தப் பாடங்களை, வேலைக்குத் தகுதியாக ஏற்க வேண்டும் என்றும், எந்தப் பாடங்கள் தகுதியில்லை என்றும், மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களைத் தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் குறித்துத் தெளிவான சுற்றறிக்கையைச் சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபட்ட குழுவினருக்கு அரசு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாததால், ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு அணுகுமுறையுடன் சான்றிதழ்களைச் சரி பார்த்திருக்கிறார்களாம்.

கடந்த வாரத்தில் மற்றும் ஓர் செய்தி. “ஆசிரியர் அல்லாத 7 ஆயிரம் பணி இடங்கள் காலி” என்பதுதான் அதன் தலைப்பு. அதாவது அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணி இடங்களை நிரப்புவதில் அரசு சுத்தமாகக் கவனம் செலுத்துவதில்லை என்பது குற்றச்சாட்டு. இந்தப் பணியிடங்களை நிரப்பாத காரணத்தால், அந்தப் பள்ளிகளில் இவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஆசிரியர்கள் மூலமாக நிறைவேற்றுவதால், மாணவர்களுக்கு அவர்கள் போதிக்கும் பணி பாதிக்கப்படுகிறதாம்.

அடுத்து ஒரு செய்தி. அதாவது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தொடர்பான விவரங்களையெல்லாம் “ஆன்-லைன்” வழியாக ஜனவரி 4ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று ஓர் உத்தரவு. இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார் 11 லட்சம் பேர் உள்ளனர். 18 மணி நேரம் மின்வெட்டு! சில பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதிகள் மற்றும் இன்டர்நெட் வசதிகள் இல்லை. இதிலே எவ்வாறு ஜனவரி 4ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை “ஆன்-லைன்” மூலமாகத் தெரிவிக்க இயலும். இந்தத் தேதியை நீடிக்க வேண்டுமென்று நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு கூட அரசுத் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

இப்படி எழுதி கொண்டே போகலாம். அ.தி.மு.க. அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு சமச்சீர்

கல்வித் திட்டத்தில் ஆரம்பித்து; முதல் கோணல் - முழுவதுமே கோணல் என்ற அளவில்தான் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் அந்தத் துறைக்கு இதுவரை எத்தனை அமைச்சர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பதும், அந்தத் துறையிலே உள்ள மூத்த அதிகாரிகள் எத்தனை பேர் இடமாற்றல் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதும், எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதும் அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை எவ்வாறு இயங்கி வருகிறது என்பதற்கான சான்றுகளாகும். பள்ளிக் கல்வித் துறை பாழ்பட்டால், பாதிப்புக்குள்ளாவது மாணவர்களின் எதிர்காலம்தான். இன்று வற்றிப் போகும் குளமாகவல்லவா குளறுபடிகளும், குறைபாடுகளும் நிறைந்த பள்ளிக் கல்வித் துறை காட்சியளிக்கிறது!

அன்புள்ள, மு.க. 28-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 283–288. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்