அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3682

முரசொலி கடிதங்கள் · 3682

அன்பே வா! அந்தகார இருள் போக்க அரிமாவே வா!

நாள் 16.12.2012சுமார் 1 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3682. அன்பே வா! அந்தகார இருள் போக்க அரிமாவே வா!

உடன்பிறப்பே,

இடையில் இன்னும் இரண்டு நாட்கள்தான்...! நேற்று செய்த கொடுமைகளையெல்லாம் இன்று மக்கள் மறந்திருப்பர் என்றெண்ணி; தீட்டுகின்றோம் திட்டங்கள் ஆயிரத்தை என்று நீட்டி முழக்குகின்றார்; நீலிக் கண்ணீர் வடிப்பதிலே நிகரற்ற ஆட்சியாளர்!

அம்மையாரின் ஆட்சியிலே அந்தகார இருள் சூழ்ந்து; அவதிப்படும் மக்கள் நிலை எண்ணிப் பாராய்! இன்று எத்தனைக் கொலைகள்! எத்தனை களவு! தாலிச் சங்கிலி அறுப்புக்குத் தடையில்லை! செய்யாத குற்றத்துக்கு எதிர்க் கட்சிக்காரர்கள் என்றால் எத்தனை எத்தனை அடக்கு முறை? எத்தனை கொடுந் தண்டனை? எத்தனை குண்டர் சட்டங்கள் ? இப்படி எத்தனை கொடுமைகளை அ.தி.மு.க.வின் அன்றைய ஆட்சியிலும் - இன்றைய ஆட்சியிலும் தமிழகம் அனுபவிக்க நேர்ந்தது என்பதை அருமை உடன் பிறப்பே! எண்ணிப் பாராய்!

“சொல் ஒன்று; செயல் ஒன்று!” என்பதற்குச் சான்றாக விளங்குகின்ற அவல ஆட்சியன்றோ இன்றைய ஆட்சி! அன்று அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஆயிரமாயிரம் பேர்; அவர்கள் உரிமைகளைக் கேட்டதற்கு, அவர்களின் வீடுபுகுந்து அடித்து விரட்டி; “ஏனென்றா கேட்கின்றாய்? எதிர்த்தாப் பேசுகின்றாய்? வாலைச் சுருட்டிக்கொள்! இல்லையேல் வாயைக் கிழித்தெறி வோம்!” என்று குண்டாந் தடிகளாலும், துப்பாக்கி முனைகளாலும் பதம் பார்த்தவர்கள் - இன்றைக்கும் அந்த முறை பலிக்குமென்று அடக்குமுறை ஆயுதங்களைக் கூர்தீட்டிப் பார்க்கின்றனர்! சிறைக் கதவைத் திறப்போம் எனச் சீறிப் பாய்கின்றனர்!

சிலிர்த்தெழும் சிங்கக் கூட்டமே! மாணவர் அணியே! மகளிர் அணியே! இளைஞர் முழக்கமிடும் இளைஞர் பட்டாளமே!

“இருப்பது ஒரு உயிர்; அது - என்னரும் ஏழைத் தமிழர்களை வாழ வைக்கவும் - இந்த இனத்தின் வெற்றியை நிலைநாட்டவும் பயன்படட்டும்” என்று அறிஞர் அண்ணா சொன்னாரே - இன்று அதனை அவர் தம்பி நினைவூட்டுகின்றேன்!

தடை பல கடந்து எங்கள் படை பெருகும்; என்பதை மெய்ப்பிக்க - என்னுயிர் உடன்பிறப்பே! இன்றே தயாராகுக! இடையில் இன்னும் இரண்டே நாட்கள்!

நான் சென்னையிலும்; பேராசிரியர் மாதவரத்திலும்; தளபதி ஸ்டாலின்; அண்ணன் பிறந்த காஞ்சியிலும் தலைமையேற்று, பெருகிவரும் இளைஞர் பட்டாளத்தை - மகளிர் அணியை - மாணவர் சேனையை - விவசாயிகளின் அணிவகுப்பை - பாட்டாளிகள் முழக்கும் எழுச்சி முரசத்தை - கண்டிடக் காத்திருக் கின்றோம்!

எமது விழிகள்; உமது அறநெறிப் போருக்கான வழிகளை அமைக்கட்டும்!

இருளில் தவிக்கும் தமிழகத்திற்கு; அந்த இருள் போக்கும் பேரொளியாக - நீ எழுப்பும் அறப்போர் ஒலி அமையட்டும்!

அன்பே வா!

அந்தகார இருள் போக்க அரிமாவே வா!

அன்புள்ள, மு.க. 16-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 253–254. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்