முரசொலி கடிதங்கள் · 3679
பத்திரிகையாளர்களும் ரசித்துச் சிரிக்கட்டும்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3679. பத்திரிகையாளர்களும் ரசித்துச் சிரிக்கட்டும்!
உடன்பிறப்பே,
அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் புதுப் புது விநோதங்கள், வேடிக்கைகள், கோமாளித்தனங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஒன்றுதான் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி. 9-12-2012 காலை ஏடுகளில் ஒரு செய்தி, புகைப்படத்துடன் வெளிவந்தது. “தினமணி” நாளேட்டில் வந்த அந்தச் செய்தியில், எம்.ஜி.ஆரின் நினைவிடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் விரைந்து முடிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் ஓரிரு வாரங்களுக்குள் திறக்கப்படும் எனப் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் நினைவிடத்தை ஓரிரு வாரங்களுக்குள் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைப்பார் எனத் தெரிகிறது. நினைவிடத்தை அவர் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வார் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்று குறிப் பிடப்பட்டிருந்தது.
காலையில் ஏடுகளிலே இந்தச் செய்தி வந்ததற்கு மாறாக அன்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்த செய்தியாளர்கள், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவசர அவசரமாக இன்று மதியம் முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறாரே என்று கேட்டபோது, அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தை அரசு சார்பாக உள்ள ஒரு கட்டிடத்தில் அல்லது ஒரு மண்டபத்தில் வைப்பதை ஆட்சேபித்து, சிலர் வழக்குத் தொடுத்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திவந்துள்ளது. அதற்காக அவசர அவசரமாகத் திறந்திருக்கக் கூடும் என்று சுருக்கமாகப் பதிலளித்தேன். ஆனால் இதிலே உள்ள சில விவரங்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கிட அல்லது நினைவூட்டிட விரும்புகிறேன்.
இன்று (10-12-2012) காலையில் வெளிவந்த தமிழ்நாட்டு ஏடுகளில் பிரதானச் செய்தியே, சென்னை மெரினாவில் ரூபாய் எட்டு கோடியில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தை ஜெயலலிதா திறந்துவைத்தார் என்பதுதான். ஏன் இந்த அவசரம்? நேற்று காலையில்தான் அந்த நினைவிடப் பணிகள் நடந்து வருவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் முதலமைச்சர் திறந்து வைப்பார் என்றும் செய்தி வந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை நேற்று பிற்பகல் 2.35 மணிக்கு முதலமைச்சர் திறந்துவைத்தார் என்றால் அதற்குக் காரணம் என்ன? அதிலே உள்ள மர்மம் என்ன? ஏன் அதற்கான முன்னறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை? 8 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துவிட்டு, அதற்காக ஓர் அழைப்பிதழ் கூட இல்லாமல், அவசர அவசரமாகச் செய்தியாளர்களை நேற்று மதியம் வரச்சொல்லிவிட்டு என்ன காரணத்தால் முதல் அமைச்சர் திறந்துவைத்தார். நடப்பது அரசு தானா? அல்லது தான்தோன்றித் தர்பாரா?
பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அண்ணா நினைவிடத்தைப் புதுப் பொலிவுடன் புனரமைத்திட 1 கோடியே 20 லட்சம் ரூபாயும், எம்.ஜி.ஆர். நினைவிடத்தை புனரமைத்திட 7 கோடியே 70 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். 1 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்ட அண்ணா நினைவிடத் தைப் புனரமைத்தார்களா? அதற்கான பணிகள் முடிவுற்றதா? அது திறக்கப்பட்டு விட்டதா? இல்லையா? அதைப்பற்றி எந்த விவரமும் இல்லை. ஆனால் அதற்கு முன்பாகவே எட்டு கோடி ரூபாய், எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் முடிவுற்று நேற்றையதினம் திறப்பு விழா நடந்து முடிந்துள்ளது.
இந்தத் திறப்பு விழாவினை முன்னிட்டு, நேற்றையதினம் அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், எம்.ஜி.ஆர். அவர்களைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் எப்படிப்பட்ட வள்ளல் என்று புகழ்ந்துரைத்தார் என்பதைத்தான் முன்னுரையாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த அண்ணாவின் நினைவிடத்தைப் புதுப்பிக்க இந்த ஆட்சியில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தைவிட மிகவும் குறைந்தத் தொகையே ஒதுக்கப்பட்டு, அதன் பணிகளும் நிறைவுற்றுவிட்டனவா என்று தெரியாத நிலையில் இருக்கிறோம்.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தை நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தது பற்றி இன்றையதினம் காலையில் “இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டபோது, சில தகவல் களைத் தெரிவித்துள்ளது. அந்த நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்தச் செய்திக்கு தலைப்பே, ““Two Leaves” adorns facade of renovated MGR Memorial - No prior announcement of inauguration by Chief Minister Jayalalithaa” (புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் “இரட்டை இலை” அலங்கரிக்கிறது - முதல் அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தது பற்றி முன்கூட்டி அறிவிப்பு இல்லை) என்பதுதான்!
இந்தத் தலைப்பின்கீழ் வந்த செய்தியில், “முதலமைச்சர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் அ.தி.மு.க.வின் மிகப் பெரிய இரட்டைஇலைச் சின்னம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் திறந்து வைக்க அங்கே வருவதைப் பற்றிச் செய்தியாளர்களுக்கே பிற்பகலில்தான் தெரிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, தி.மு.க.வின் வழக்கறிஞர் அணி செயலாளரான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட “இரட்டை இலை” சின்னத்தை மாநில அரசு அங்கே நிறுவுவதைத் தடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (11-12-2012) விசாரணைக்காக வரலாம். ஒரு வாரத்திற்கு முன்பு, ஆர்.எஸ். பாரதி அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை அங்கே வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில அரசுக்கும் எழுதியிருந்தார்” என்றெல்லாம் “இந்து” விவரித்ததோடு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியையும் விளக்கியுள்ளது.
“When the DMK was in power during 1996-2001, it remodeled the Anna mausoleum and the entrance arch carried the design of “Rising Sun”, a symbol of the DMK. After the AIADMK returned to power in May 2001, the design was removed”
(அதாவது 1996-2001ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருந்தபோது, அண்ணா நினைவிடம் புதுப்பிக்கப்பட்டபோது, அங்கே தி.மு. கழகத்தின்
சின்னமான “உதய சூரியன்” போல ஓரிடத்தில் “டிசைன்” இருந்தது. 2001ஆம் ஆண்டு மே மாதம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த “டிசைனை” அகற்றிவிட்டது)
இவ்வாறு “இந்து” இன்று எழுதியுள்ளது. ஆனால் இந்தச் சம்பவம் பற்றி 20-3-2002 தேதிய “முரசொலி”யிலே “இதையும் கொஞ்சகாலம் ரசிப்போம்” என்ற தலைப்பில் நான் எழுதிய உடன்பிறப்பு மடலில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன். அது வருமாறு:-
“1987ல் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜானகி அம்மையார் ஆட்சி 24 நாட்களும்; அதன்பிறகு கவர்னர் ஆட்சி சுமார் ஓராண்டும் நடைபெற்றுங்கூட எம்.ஜி.ஆர். நினைவிடம் வெறும் செங்கற்கள் அடுக்கிய நிலையில் இருந்ததே தவிர யாரும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. 1989ல் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடத்தை அண்ணா நினைவிடத்துக்கு அடுத்த நிலையில் பொலிவுடன் அமைத்தோம். 1991இல் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா அந்த நினைவிடத்தை மேலும் விரிவுபடுத்திக் கட்டி; நினைவிட வாசலில் “பிரமாண்டமான” இரட்டை இலை சின்னத்தைத் தோரணவாயிலாக அமைக்கச் செய்தார். 1996இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த ஐந்தாண்டு காலமும் அந்த இரட்டை இலை வாசல் முகப்பை நாம் மாற்றி அமைக்கவோ, அகற்றிவிடவோ நினைக்கக்கூட இல்லை. ஆனால் இப்போது இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக அண்ணா நினைவிடத்து முகப்பு வாசலில் உள்ள தோரண வாயிலில் இருபுறமும் உள்ள உதயக் கதிர் போன்ற கோடுகளை “உதயசூரியன்” சின்னமெனக்கூறி அவற்றை ஒரே நாளில் இடித்தும் தேய்த்தும் அகற்றி விட்டார்கள். அது உதய சூரியன் சின்னம் என்று அந்த வளைவுகளில் அமைக்கப்பட்டதல்ல! பொதுவாகக் கட்டிடங்கள், வீடுகள் இவற்றின் வளைவுப் பகுதிகளில் மேலெழும் கதிர்கள் போல அமைப்பது கட்சிச் சார்பற்ற இடங்களிலும் இயற்கையானதே! இதோ; சென்னை எழும்பூர் கண் மருத்துவமனைப் படத்தையும், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீடு ஒன்றின் முகப்பு படத்தையும், “கதீட்ரல் சர்ச்” முகப்பின் படத்தையும் இங்கே வெளியிட்டுள்ளேன். (நல்லவேளை; தமிழ் நாடு முழுதும் யார் வீட்டு முகப்பிலும் இதுபோன்ற உதயக் கதிர் அமைப்புகள் இருத்தலாகாது என்று உத்திரவு போடாமல்
இருக்கிறார்களே; அதற்காக மகிழ்ச்சி அடையலாம்). ஆரோக்கிய அரசியல் - அ.தி.மு.க. - தி.மு.க. - இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து நடுநிலையாளர்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகவே எல்லாப் படங்களையும் பார்வைக்கு வைத்துள்ளேன்” என்று அப்போது எழுதியிருந்தேன்.
இதைத்தான் “இந்து” நாளிதழ் கழக ஆட்சியிலே இருந்த “உதயக் கதிர்” போன்ற அமைப்பினை, அ.தி.மு.க. 2001இல் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்துவிட்டது என்று எழுதியுள்ளது. அவ்வாறு “உதயக் கதிர்” போன்ற டிசைனையே எடுத்த அ.தி.மு.க. ஆட்சியினர் தான் தற்போது, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், மிகப் பெரிய அளவில் “இரட்டை இலை” சின்னத்தை அமைத்து, அதுபற்றி தி.மு.கழகம் சட்ட ரீதியாகவும், தலைமைச் செயலாளர் அளவிலும் எடுத்துச் செல்ல முனைந்துள்ள நிலையில் - யாருக்கும் முன்கூட்டியே தெரிவிக்காமல் - எம்.ஜி.ஆர் அவர்களையே அசிங்கப்படுத்துவதைப்போல இந்தக் காரியத் தைச் செய்திருக்கிறார்கள்.
2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அண்ணா நினைவிடத்திலே இருந்த “உதயக் கதிர்” போன்ற டிசைனை அகற்றியதை; 2006ஆம் ஆண்டு மறுபடியும் தி.மு. கழக ஆட்சி அமைந்தவுடன், பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த தம்பி துரைமுருகன் மீண்டும் அந்த “உதயக் கதிர்” அமைப்பினை அண்ணா நினைவிடத்திலே அமைத்திட என்னிடம் கேட்டபோது, தேவையில்லை, அதை வைத்தால் தி.மு. கழகத்தின் சின்னமான “உதய சூரியன்” சின்னத்தைத் தான் அங்கே வைப்பதாகச் சொல்வார்கள். உதய சூரியன் சின்னத்தை வைக்க நமக்கு இடமா இல்லை, நமக்கு என்று கட்சி அலுவலகங்கள் இருக்கின்றன, அங்கே வைத்துக் கொள்ளலாம். அண்ணா நினைவிடம் என்பது பொதுவான இடம். அரசின் பராமரிப்பிலே உள்ளது. அங்கே நம்முடைய கட்சியின் சின்னத்தை வைப்பது என்பது தவறான ஒன்றாகி விடும் என்றெல்லாம் கூறி அதனைத் தடுத்துவிட்டேன். அது நமது பண்பாடு! நாம் கட்டிக் காத்திடும் அரசியல் நாகரிகம்! அதே நேரத்தில் அவர்களுக்கு என்று சில பண்பாடுகள் உண்டு. உதாரணம் வேண்டுமா?
தலைமைச் செயலகம் ஒன்று போதாதா?
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் போதாதா?
பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகம் எங்கே?
1991இல் முதன் முதலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், பாஞ்சாலங்குறிச்சியில் தி.மு.கழக ஆட்சியில் உருவாக்கப்பட்ட கட்டபொம்மன் கோட்டைவாசல் சாலையில் வைக்கப்பட்டிருந்த “கருணாநிதி தோரணவாயில்” என்பதை அகற்றிவிட்டு “சுந்தர லிங்கம் தோரண வாயில்” அமைக்கப் போகிறேன் என்று அறிவித்தார். உண்மை என்னவென்றால், என் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை அமைத்தபோதே “சுந்தரலிங்கம் தோரண வாயிலும்” அமைக்கப்பட்டுவிட்டது என்பது தான்!
1992இல் ஜூன் 3ஆம் தேதி என் பிறந்த நாளுக்காக வழக்கம்போல விழா நடத்த கலைவாணர் அரங்கம் கேட்டு 1992 ஏப்ரல் 30ஆம் தேதியே மனு தரப்பட்டது. ஆனால் அதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையிலே இருந்த சுப்பு லட்சுமி ஜெகதீசன், ஜெகதீசன் ஆகியோரைச் சந்திக்க நான் மதுரை சென்று இறங்கியதும், அவர்களைப் பார்க்கக் கூடாதென்று திடீர் தடை உத்தரவு பிறப்பித்தார்கள். அதன் பிறகு நான் சென்னை திரும்பி, நீதி மன்றத்தில் வழக்காடி, அதன் தீர்ப்புக்குப் பிறகே மதுரை சென்று சிறையில் அவர்களைப் பார்த்தேன்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் சென்றபோது குடகனாறு அரசினர் விடுதியில் தங்குவதற்கு 5-2- 2002 அன்று அனுமதி தரப்பட்டது. ஆனால் அந்த அனுமதியை 6-2-2002 அன்று ரத்து செய்து கடிதம் அனுப்பினார்கள்.
இவைகள் எல்லாம் இந்த ஆட்சியாளர்களின் பெருந்தன்மையான நடைமுறைகள், விநோதங்கள்! வேடிக்கைகள்! சிரிக்காமல் இவைகளை எல்லாம் கண்டு ரசிப்போம்! நம்மோடு சேர்ந்து பத்திரிகையாளர்களும் ரசித்துக் கொண்டே சிரிக்கட்டும்!
அன்புள்ள, மு.க. 11-12-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 238–243. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.