அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3678

முரசொலி கடிதங்கள் · 3678

இருளின் ஆட்சி; இன்னும் எத்தனை காலமோ?

நாள் 9.12.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3678. இருளின் ஆட்சி; இன்னும் எத்தனை காலமோ?

உடன்பிறப்பே,

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு தற்போது நடைபெற்று வரும் “இருண்ட ஆட்சி”யில் எந்த அளவிற்கு மின்வெட்டுப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது; எந்த அளவுக்குத் தமிழக மக்களை அனைத்து வகையிலும் சங்கிலித் தொடர் போன்ற சங்கடங்களுக்கு உள்ளாக்கி வருகிறது என்பதைப் பற்றிக் கலந்து பேசி முடிவெடுப்பதற்காக, கழகத்தின் தலைமைச் செயற்குழு கூட்டம், வரும் 13ஆம் தேதியன்று காலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே பல முறை மின் வெட்டுப் பிரச்சினை இருந்த போதிலும், தற்போது இருப்பதைப் போல எந்தக் காலத்திலும் இப்படித் தமிழகத்தின் வாழ்க்கை முறையையும் பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிடும் வகையில் மின் வெட்டு இருந்ததில்லை. கடந்த பத்து நாட்களாக ஏடுகளில் இந்த மின்வெட்டு பற்றி வந்துள்ள செய்திகளின் தலைப்புகளைப் படித்துப் பார்த்தாலே எந்த அளவிற்கு இந்தக் கொடுமை நிலவி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

❖ மின் வெட்டு காரணமாக தமிழக ஜவுளித் துறையின் எதிர்காலம்? - தினமும் 100 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு.

❖ குத்தாலம் எரிவாயு நிலையத்தில் ஜெனரேட்டர் இல்லாததால் மின் உற்பத்தி பாதிப்பு.

❖ காற்றாலை மின்சாரத்தை விற்றதில் 18 ஆயிரம் கோடி ரூபாய் வாரியத்துக்கு இலாபம். ஆனால் உற்பத்தி யாளர்களுக்குப் பணம் தரப்படவில்லை.

❖ மின் புழுதி நீக்க உபகரணங்கள் இல்லை - அதிகரிக்கும் மின் வெட்டு.

❖ தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு செல்ல தென் மண்டல வழித் தடத்தில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை - உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல்.

❖ தடையில்லாத மின்சாரம் கேட்டு தொழில் துறையினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்.

❖ மின்வாரிய அதிகாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்.

❖ மின்வெட்டு காரணமாக நூற்பாலைகள் வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர முடிவு.

❖ மாநிலம் முழுவதும் மின் வெட்டு நேரம்குறித்து முறையான தகவல் அளிக்காதது ஏன்? - சென்னை உயர் நீதி மன்றம்.

❖ மாவட்டங்களில் 16 மணி நேரம் மின் வெட்டு

❖ நிர்வாகச் சீர்கேட்டினால் 1800 மெகாவாட் மின் உற்பத்தி முடக்கம்

இவைகள் எல்லாம் ஏடுகளில் வெளி வந்த செய்திகளுக்கான தலைப்புகள்.

அல்ல, அல்ல - நடைபெறும் ஆட்சிக்கு தமிழ்நாட்டு பத்திரிகைகள் கொடுத்துள்ள “நற்சான்றிதழ்”கள்.

மின்சாரம் முறையாக வழங்காமல், காவிரியிலும் நீரைப் பெற முடியாமல் குறுவை பயிர்ச் சாகுபடி அறவே இல்லை என்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டு, சம்பாப் பயிராவது பிழைக்குமா என்று விவசாயிகள் கேள்விக்குறியோடு இருக்கின்றபோது, நான்கு விவசாயிகள், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்த ஆட்சியின் அவலத்துக்குத் தங்கள் இன்னுயிரைத் தாரை வார்த்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டு மடிந்திருக்கிறார்கள்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த கரும்பு விவசாயி பூமிநாதன் என்பவர் தற்கொலை செய்து கொண்டு மறைந்து சில மாதங்கள் முடிவதற்குள்; அதே மாவட்டத்தில் கீழ்வேளூர் வட்டத்தில்,

கூரத்தாங்குடி கிராமத்தில் நெல் விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். ராஜாங்கம் தன் மனைவி தேவிகாவையும், மனோஜ், விஷ்வா என்ற இரண்டு மகன்களையும் அனாதைகளாக்கி விட்டு மறைந்திருக்கிறார். சம்பா பயிர் கருகியதால் நாகை மாவட்டத்தில் கீழையூரை அடுத்துள்ள மகிழி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற “தலித்” விவசாயி 29-11-2012 அன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டத்தில், பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கருகிக் கிடப்பதைப் பார்த்து கண்ணீர் விட்டதோடு, அந்த நிலத்திலேயே சுருண்டு விழுந்து 7-12-2012 அன்று இறந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை அசோக் நகரைச் சேர்ந்த குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் திரு.வி.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சென்னை மாநகரிலும், மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடிக்கடி மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது; மின்சாரம் வழங்கப்படும் நேரத்திலும் கூட மின் அழுத்தம் குறைவாகவே உள்ளது; இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; எனவே இப்பிரச்சினையில் நீதி மன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் 26-11-2012 அன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மாநிலத்தின் பல மாவட்டங்களில் தினமும் சில மணி நேரத்துக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் எங்களது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார

வாரியம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்கள் பற்றிய தகவலை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு முன்ன தாகவே தெரியப்படுத்தாதது ஏன் என்பது பற்றியும் மின்சார வாரியம் தனது அறிக்கையில் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகள் மேலும் இந்த மின்வெட்டினைச் சமாளிக்க முடியாமல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு மாற்றிக் கொள்வதைப் பற்றித் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், அன்றாடம் இந்தத் தொழில் மூலமாக மட்டும் 100 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்படுவதாகவும், இந்த ஆட்சியில் ஜவுளித் தொழிலே சவக்குழிக்குப் போய்விடுமோ என்ற அளவிற்கு நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும் செய்திகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன. மாராட்டிய மாநில அரசு, குஜராத் மாநில அரசு அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் முறையே 40 ஆயிரம் கோடி ரூபாய்; 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஜவுளித் துறையில் ஈர்ப்பதற்கேற்ப புதிய திட்டங் களை வகுத்து அறிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக “தென்னிந்திய மான்செஸ்டர்” எனப் போற்றிப் புகழப்பட்ட கோவைப் பகுதி ஜவுளித் துறை அ.தி.மு.க. ஆட்சியில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டதென பத்திரிகைகள் கவலை கொண்டு எழுதி வருகின்றன. ஆனால் கவலை கொள்ள வேண்டிய இந்த ஆட்சியினருக்குத்தான் அதைப் பற்றிய கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

தென்னிந்திய நூற்பாலைக் கழகத்தின் செயலாளர் கூறும் போது, “2008ஆம் ஆண்டிலிருந்து மின் பிரச்சினை இருந்த போதும் தற்போது இருப்பதைப் போன்ற மோசமான நிலை எப்போதும் இருந்ததில்லை” என்று கூறியிருக்கிறார். குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, ஏராளமான நூற்பாலைகள் தமிழகத்திலிருந்து குஜராத் மாநிலத்திற்கு மாறக் கூடிய நிலைமை இருப்பதாகச் சொல்கிறார்கள்.

காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி ஓரளவுக்கு கிடைக்கும் என்ற போதிலும், கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக காற்றாலை உற்பத்தியாளர்களுக்கான மின் கட்டணம் மின் வாரியத்தினால்

செலுத்தப்படவில்லை என்றும் ஏடுகளில் பெரிதாக செய்தி வந்துள்ளது.

திருப்பூர் மாநிலத்தில் பனியன் தொழில் தற்போது அப்படியே ஸ்தம்பித்துக் கிடப்பதாகவும், அதன் காரணமாக பல கோடி ரூபாய்க்கான ஏற்றுமதியினை நிறைவேற்ற முடியாத நிலை இருப்ப தாகவும், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் போட்டி காரணமாக தற்போதுள்ள சூழ்நிலை மாறக் கூடும் என்ற நம்பிக்கை இல்லாமல் அந்தத் தொழிலிலே ஈடுபட்டவர்கள் இருக்கிறார்களாம். தீபாவளி விடுமுறைக்காக தங்கள் ஊர்களுக்குச் சென்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளர்கள் இதுவரை மீண்டும் திருப்பூருக்கு வரவே இல்லையாம். ஈரோடு மாநிலத்திலும் இதே நிலைதான் இருக்கிறதாம். பிழைப்புக்கு வழி தேடிப் பிற இடங்களுக்குச் சென்று விட்டார்கள்.

“தானே” புயல் காரணமாக ஏற்பட்ட அழிவிலிருந்து தற்போது தான் எழுந்துள்ள கடலூர் மாவட்டத்தில் 14 மணி நேர மின் வெட்டு என்பது 18 மணி நேரமாக அதிகரித்துள்ளதாம். அந்த மாவட்டத்தில் மட்டும் சிறு தொழிலில் ஈடுபட்டுள்ள பத்தாயிரம் பணியாளர்கள், பத்தாயிரம் நெசவாளர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஆறாயிரம் பேர், பத்தாயிரம் விவசாயிகள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் மின் வெட்டு காரணமாக பணியில்லாமல் இருக்கிறார்களாம். விழுப்புரம் மாவட்டத்திலோ வேளாண்மை முழுவதுமாகப் பாழாகி விட்டது. இரும்பு உருக்காலைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன.

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நெசவாலைகள், அரிசி ஆலைகள், சிறு சிறு வணிகக் கூடங்கள் என்று மின் வெட்டில் பெரிதும் பாதிக்கப்பட்டு, நான்கு இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பதாகவும், மாதம் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என்றும் சொல்லப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சர்க்கரை மற்றும் நெல் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டதால், 40 சதவிகித உற்பத்தி தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் 1,500 பெரிய மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்கள் மின்வெட்டு காரணமாக பாதிக்கப்பட்டு, 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்த நிலையில் இருக்கிறார்களாம். திருநெல்வேலி மாவட்டத்தில் அரிசி ஆலைகள் மூடிக்

கிடக்கின்றன. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கட்டிடப் பணிகளை ஆற்றுவதற்காக கேரளாவுக்குச் சென்றுவிட்டார்களாம்.

டெல்டா மாவட்டங்களைப் பற்றி எழுதவே தேவையில்லை. நேற்றைய தினம் அங்கே மிகப் பெரிய போராட்டம் நடைபெற்று, சுமார் பத்தாயிரம் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல மைச்சர் 12 மணி நேரத்திற்கு மும்முனை மின்சாரம் தருவதாக வாக்களித்திருக்கிறார். வந்தால்தான் நிச்சயம்.

சென்னையிலோ அன்றாடம் இரண்டு மணி நேரம் மின் வெட்டு! மாநகரில் உள்ள லட்சக்கணக்கான அலுவலகங்களில் இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லை என்பது எந்த அளவிற்குப் பணிகளைப் பாதிக்கும் என்று சொல்லத் தேவையில்லை. உதாரணமாக ஐந்து மாடி, ஆறு மாடிக் கட்டிடங்களில் மின்சாரம் இல்லாமல் “லிப்ட்” இரண்டு மணி நேரத்திற்கு வேலை செய்யாது என்ற நிலையில், அந்த அலுவலகங்களுக்கு வருகின்றவர்களும் சரி, அங்கே பணியாற்றுகின்றவர்களும் சரி, எந்த அளவிற்கு இன்னலடைகிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச் சிரமம் புரியும்.

இந்த நிலைமைகளையெல்லாம் பற்றித் தமிழக அரசு ஏதாவது கவலைப்படுகிறதா? தி.மு. கழக ஆட்சியில் ஓரளவுக்கு மின்சார வெட்டு இருந்தபோது, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விடுத்தார், பதவியை விட்டு என்னை உடனடியாக விலகும்படி ஆணையிட்டார், என்னென்ன வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக மறந்திருக்க மாட்டார்கள். நிலக்கரி இல்லாததால் மின் உற்பத்தி பாதிப்பு - ஜெனரேட்டர் இல்லாததால் மின் உற்பத்தி பாதிப்பு - மின் புழுதி நீக்க உபகரணங்கள் இல்லை, அதனால் மின் உற்பத்தி பாதிப்பு என்று தொடர்ந்து வரும் செய்திகள் - மின் உற்பத்தியை அதிகரித்து, மின் வெட்டினை சமாளிப்பதிலே இந்த அரசுக்கு உள்ள அக்கறையின்மையினைத் தான் வெளிப்படுத்துகிறது. பிரச்சினையை யாராவது எடுத்துக் கூறினால், மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை, டெல்லியிலே மிச்சப் படும் மின்சாரத்தைத் தமிழகத்திற்கு ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை, ஏற்கனவே இருந்த தி.மு.கழக அரசுதான் காரணம் என்று மற்றவர்கள் மீது பழியைத் தூக்கிப் போடுவதில்தான் காலத்தைக் கழித்து கவனத்தைச் செலுத்துகிறதே தவிர,

நிலைமையை உணர்ந்து அதனை சரி செய்வதிலே அக்கறை காட்டுவதாகத் தெரிய வில்லை. மக்கள் நலன் கருதி, எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியினர் மீது குற்றம், குறைகளைச் சுட்டிக்காட்டுவது என்பதுதானே ஜனநாயகம். எதிர்க் கட்சிகளுக்கே வாய்ப்பூட்டுப் போடுவதைப் போல இந்த ஆட்சியினர் மீது யார் குறை சொன்னாலும், காவல் துறையை ஏவிவிட்டு, உடனே அவர்கள் மீது அவதூறு வழக்குப் போட்டு மிரட்டி அலைக்கழித்திடும் பணிகளிலே அன்றாடம் ஈடுபடுகிறது.

இதைப்பற்றியெல்லாம் கலந்துரையாடவும், மேற்கொண்டு முடிவுகளை எடுக்கவும்தான் கழகத்தின் தலைமைச் செயற்குழு வரும் 13ஆம் தேதியன்று கூட்டப்பட்டுள்ளது. செயற் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அந்தக் கூட்டத்திற்கு வரும்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின் பற்றாக்குறை எந்த அளவிற்கு உள்ளது என்பதைப் பற்றியெல்லாம் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் வாழ் வாதாரத்திற்கு அடிப்படையான வேளாண்மை, வணிகம், சிறு தொழில் மற்றும் பெருந் தொழில்கள் என அனைத்தும் மின் வெட்டுக் காரணமாக பெரும் பாதிப்புக்கு ஆளாகி தமிழகத்தின் பொருளாதாரமே வெகுவேகமாக பின்னோக்கி இழுத்துச் செல்லப்படும் கொடுமையை மக்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஜனநாயக ரீதியாக நாம் ஆற்றிட வேண்டிய கடமைகளை வகுத்து நடைமுறைப்படுத்திட வேண்டிய தருணம் இது!

அன்புள்ள, மு.க. 9-12-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 231–237. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்