முரசொலி கடிதங்கள் · 3676
நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3676. நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்! உடன்பிறப்பே,
10-10-2011 என்ற தேதியில் “அய்யகோ! அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிலம் அரோகரா!” என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தில், சென்னை மாநகரத்தின் இதயம் போன்ற பகுதியில் அண்ணா மேம்பாலத்தை ஒட்டி அரசுக்குச் சொந்தமான 13 காணி 4 கிரவுண்ட் 1262 சதுர அடி நிலம் “தோட்டக்கலைச் சங்கம்” என்ற ஒரு அமைப்பின் பெயரில் தோட்டக்கலை வி. கிருஷ்ணமூர்த்தி என்ற அ.தி.மு.க. பிரமுகரால் சுயலாப வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதைப் பற்றியும், அதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்படும் ஒத்துழைப்புகள் பற்றியும் தேதி வாரியாக விரிவாக எழுதியிருந்தேன். தி.மு.கழக ஆட்சிக் காலங்களில் எல்லாம் அந்த இடத்தை அரசுக்குச் சொந்தமாக்கிட முயற்சிகள் எடுக்கப்பட்டதையும், அதுபற்றிய நீதிமன்ற நடவடிக்கைகளையும் அந்தக் கடிதத்திலே எழுதியிருந்தேன்.
உதாரணமாக, தி.மு.க. ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாமல்; வழக்கு நிலுவையில் இருந்த நிலையில்; 21-1-2004 அன்று அ.தி.மு.க. ஆட்சியில் - அரசின் எழுத்துப்பூர்வமான அனுமதி எதுவும் இல்லாத நிலையிலேயே; அரசு வழக்கறிஞர் - “நான் பெற்றிருக்கும் அறிவுரைகளின்படி, அரசு சார்பில் செய்துள்ள மேல்முறையீடுகளைத் திரும்பப் பெறுவதற்கு அனுமதி தரவேண்டும்” (As per instructions, I may be permitted to withdraw appeals) என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து, தி.மு.கழக ஆட்சியில் தொடுத்திருந்த வழக்கினைத் திரும்பப் பெற்றுவிட்டார். இதில் அரசு வழக்கறிஞர் பின்பற்றிய முறை, அரசின் அலுவல் நடைமுறைகளுக்குக் கிஞ்சிற்றும் பொருந்தாததும், பொருத்தமில்லாததும் ஆகும். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்; அரசு வழக்கறிஞரே அப்படிக் கேட்டதற்குப் பிறகு உயர் நீதிமன்றமும் வேறு வழியின்றி
தி.மு. கழக ஆட்சியில் தொடர்ந்த வழக்கினைத் திரும்பப் பெற அனுமதித்து; மேல்முறையீட்டினை ரத்து செய்து உத்தரவிட்டது. உடனடியாக 3-3-2006 அன்று, நிலத்தைத் திரும்பவும் தோட்டக் கலைச் சங்கத்திடமே ஒப்படைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றிய பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் கழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களின் மீதான வழக்கில், உயர் நீதிமன்றம் 11-4-2008 நாளிட்ட தீர்ப்பில்; “அரசாங்கத்தின் முன் அனுமதி பெறாமல்; வேளாண் தோட்டக் கலைச் சங்கம் “உட்லண்ட்ஸ்-டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட்”க்கு இந்த நிலத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே உள்குத்தகைக்கு விட்டிருந்தது. திரு. கிருஷ்ண மூர்த்தி, சங்கத்தின் கெளரவச் செயலாளராக ஆன பிறகு அரசு சொத்தைத் தனது சொந்த சொத்து போலக் கையாள்வதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இச்சங்கத்தின் நிதி முறைகேடுகள் குறித்து பல குற்றச்சாற்றுகள் சொல்லப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மாவட்டப் பதிவாளர், தமிழ் நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டார். சங்கத்தின் மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கும்போது; அரசு பொது நோக்கங்களுக்காக நிலத்தைத் திரும்பப் பெறுவதற்குச் சொன்ன காரணங்களைப் புறக் கணித்துவிட்டு; நிரூபணமாகாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், “அரசியல் காழ்ப்புணர்வு காரணம்” என்று கூறி அவர்கள் தொடுத்த நீதிப் பேராணைகளை தனி நீதிபதி அனுமதித்துள்ளார். அரசின் அனுமதி பெறாமல் மிகப் பெரிய விளம்பரப் பலகைகளை நிறு வியுள்ளதாகவும் மற்றும் தரைப்பகுதிக்கு சிமெண்ட் வேலைகள் செய்திருப்பதாகவும் கழக ஆட்சியின் போது, தலைமைச் செயலாளர், தனது மனுவில் குறிப் பிட்டுள்ளார். ஆண்டு ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் செலவில் மலர்க் கண்காட்சியை நடத்தியதைத் தவிர கடந்த 20 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும்
சங்கத்தால் செய்ததாகக் காட்டப்படவில்லை. இத்துடன், மலர்க் கண்காட்சியை நடத்தியது தொடர்பாக அதிக அளவில் பணம் வசூல் செய்தும், அதில் குறைந்த அளவே செலவு செய்தும், நிதி முறை கேடுகள் நடைபெற்றுள்ளதால் அச்சங்கத்தின் மீதும், அதன் செயலாளர் மீதும் உரிய அலுவலரால் விசாரணை செய்யப்பட வேண்டும். வருவாய் நிலை ஆணைகளின் படியும், அரசு வழிகாட்டி நெறி முறைகளின் படியும் காலங்காலமாக குடியிருக்க வசதியின்றியுள்ள ஏழை யெளிய மக்களுக்கு இருப்பிடம் வழங்க வேண்டுமென்ற நெறி முறைகள் ஒரு புறம் இருக்க; இச்சங்கத்தின் வசம் நிலங்கள் உள்ளதாலும், அதன் ஒரு பகுதியை மட்டுமே தோட்டக்கலை வளர்ச்சிக்காக அவர்கள் பயன்படுத்தி வருவதாலும், அரசால் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களை சங்கத்தின் கெளரவச் செயலாளர் திரு. வி.கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த உபயோகத்திற்காக அதாவது வாடகைக் கார் மற்றும் மீனா அட்வர்டைசர்ஸ் என்ற பெயரிலான விளம்பர நிறுவனத்திற்கும் பயன் படுத்தி வருவதாக ஆவணங்களின் மூலம் தெரிய வருவதால், மேற்படி நிலங்களைத் திரும்பப் பெறுவது குறித்த அரசின் நடவடிக்கையில் எவ்விதத் தவறும் இருப்பதாகக் கருத இயலாது. திரு. வி. கிருஷ்ணமூர்த்தி தனது மனுவில் கார் மற்றும் விளம்பர நிறுவன வியாபாரம் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். நிலம் ஏற்கனவே அரசின் வசம் உள்ளதைக் கருத்தில் கொண்டும் அரசின் தலைமைச் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படை யிலும் இந்நிலங்கள் பொதுக் காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உள்குத்தகைதாரர் தானாகவே இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும்” - என்று கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணையின் தொடர்ச்சியாக; தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், உச்ச நீதி மன்றம் 13-11-2009 அன்று வழங்கிய இடைக்கால ஆணையில் இந்த நிலம் ஏற்கனவே அரசின் கைவசம் உள்ளதால், தோட்டக்கலையின்
மேம்பாட்டிற்காக அதைத் தொடர்ந்து அரசு பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறிவிட்டது. எனவே சென்னை மாவட்ட ஆட்சியர் தோட்டக்கலைச் சங்கத்திடமிருந்து நிலத்தை எடுத்து, அரசு-தோட்டக்கலைத் துறையிடம் ஒப்படைத்தார். இந்த நிலத்தில் - சுற்றுப்புறச் சூழலைப் பேணிக் காத்திடவும், மலர்கள் - மூலிகைகள் - தாவரங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத் தைப் பொதுமக்கள் உணர்ந்திடவும், தோட்டக் கலை ஆராய்ச்சிகளை ஊக்குவித்திடவும், பெரிய பூங்கா ஒன்றினை உருவாக்கிடத் திட்டமிட்டு: அதனைப் படிப்படியாக நிறை வேற்றிட முடிவு செய்து; முதலில் “டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ்” இருந்த பகுதியில் மிகச் சிறந்த பூங்கா ஒன்றினை உருவாக்கி, அதற்கு “செம்மொழிப் பூங்கா” என்று பெயரிட்டு, அதனை நான் திறந்து வைத்தேன். அந்தப் பூங்காவை, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் நல்ல முறையில் பராமரிக்கத் தவறிய பிறகும், இன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் அன்றாடம் கண்டு களித்து வருகின்றனர். பூங்காவுக்கு எதிர்ப்புறம், தோட்டக்கலைச் சங்கத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்த இடத்தில் பூங்காவினை விரிவாக்கம் செய்வதற்கு முன்; இடத்தைக் காலி செய்து அரசிடம் ஒப்படைக்கக்கோரி தோட்டக்கலைச் சங்கத்திற்கு 15-12-2010 அன்று தி.மு.கழக ஆட்சியின்போது அன்று நோட்டீஸ் அனுப்பப் பட்டது. நோட்டீஸ் அனுப்புவதற்கு முன் நூறாண்டுகளுக்கு வில்லங்கங்கள் சரி பார்க்கப்பட்டு அந்த நிலம், அரசு நிலம்தான் என்று சட்ட விதிமுறைகளின்படி உறுதி செய்யப்பட்டது. இந்த நோட்டீசுக்கெதிராக, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் அந்தச் சங்கத்திற்கு நேரடி விசாரணைக்கு வாய்ப்பளித்திடும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கிணங்க 2011 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் நேரடி விசாரணைக்கு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் மே திங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் வரை நேரடி விசாரணைக்காக தோட்டக்கலை கிருஷ்ண மூர்த்தி ஆஜராக வில்லை. பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு, 15-7-2011 அன்று அவர் சென்னை மாவட்ட ஆட்சியர் முன்பு திடீரென ஆஜராகி சில ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கிறார்.
சென்னை மாவட்ட ஆட்சியரும், எங்கிருந்தோ ஏவப்பட்ட செல்வாக்கிற்கும், நெருக்கடிகளுக்கும், அரசியல் மேலாதிக்கத் திற்கும் பணிந்து - அரசு வழக்கறிஞரின் கருத்துரையினை ஒப்புக்காகப் பெற்று, தோட்டக்கலைச் சங்கம் அமைந்துள்ள 4 காணி 18 கிரவுண்ட் 1683 சதுர அடி நிலம் அந்தச் சங்கத்திற்கே உரியது என்று 22-8-2011 அன்று இப்போது, அ.தி.மு.க. ஆட்சியிலே உத்தரவிட்டுள்ளார். நிரந்தர நிலப்பதிவேட்டில் இந்த நிலம் அரசு நிலம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லங்கம் சரி பார்த்ததில் இந்த நிலம் அரசுக்குச் சொந்தமான தென்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த நிலம் சம்மந்தமாக நடந்து வரும் வழக்குகளில் எந்தக் கட்டத்திலும் இந்த நிலம் தோட்டக்கலை சங்கத்திற்குச் சொந்தமானது என்று சொல்லப் படவில்லை. இந்த நிலம் அரசு நிலம் என்பதால் தான் தோட்டக்கலைச் சங்கத்திடமிருந்து கைப்பற்றி, தமிழக அரசின் துறைகளில் ஒன்றான தோட்டக்கலைத் துறையிடம் 8-5-2008 அன்று கழக ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டது.
நிலைமைகள் இவ்வாறிருக்க, இந்த நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் சங்கத்திற்குச் சொந்தமானதென முடிவு செய்ய, எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அரசுக்குச் சொந்தமான இடம் என்று ஏற்கனவே முடிவு செய்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர்தான். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக அந்த இடம் அரசுக்குச் சொந்தமானதல்ல என்று கூறச் செய்து, தோட்டக்கலை கிருஷ்ண மூர்த்திக்குத் தாரைவார்க்க; அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இதைப்பற்றி நான் “முரசொலி”யில் விவரமாக 10-10-2011 அன்று எழுதியதோடு, நீதிமன்றத்தின் வாயிலாகவும் அந்த நிலம் மீண்டும் அரசுக்குக் கிடைத்திட முயற்சிகளை மேற்கொள்வோம் என்று கூறியிருந்தேன். அதன்படி தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி திரு. இக்பால் மற்றும் நீதியரசர் சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்து, மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் வாதிட்டார். அப்போது அரசு வழக்கறிஞர், தோட்டக்கலை சங்கத்திடம் நிலத்தை ஒப்படைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பிலே இருந்தவர், பிறப்பித்த உத்தரவு அரசின்
நிலச்சீர்திருத்த ஆணையரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அது குறித்து நிலச் சீர்திருத்த ஆணையாளர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தோட்டக்கலைச் சங்கத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறார் என்றும் அதன் மீதும் அவர்கள் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்ததின் பேரில், நீதியரசர்கள் நமது கோரிக்கை நிறைவேறி வருகிறது என்ற அடிப்படையில், நமது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு. புவனேஸ்குமார் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்தார்.
நிலச் சீர்திருத்த ஆணையாளர் 2011ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் இந்த ஆணையைப் பிறப்பித்ததோடு நிற்காமல், தோட்டக்கலைச் சங்கத்தின் கவுரவச் செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் (Show Cause Notice) அன்றையதினமே அனுப்பியிருக்கிறார். அந்த நோட்டீசில் பல உண்மை ஆதாரங்களையெல்லாம் எடுத்துக்காட்டி பத்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், தவறினால் கைவசமிருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எழுதியிருக்கிறார். இதன் மீதும் தோட்டக்கலை சங்கத்தின் செயலாளர், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.
நிலச் சீர்திருத்த ஆணையாளர் சென்னை மாவட்டக் கலெக்டர் இந்த இடத்தைத் தாரை வார்த்ததைத் தவறு என்று கூறி அதைத் தடுத்து நிறுத்தி வைத்த பிறகு இந்த ஆட்சியிலே நடைபெற்றது என்ன? இதிலே என்னென்ன உண்மைகள் மறைக்கப்படுகின்றன? அந்த இடம் தற்போது யாருடைய பொறுப்பிலே உள்ளது? தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு சாதகமாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சென்னை மாவட்ட கலெக்டர்களே அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு வேண்டிய மாவட்ட வருவாய் அலுவலரை கலெக்டர் பொறுப்பிலே நியமிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிற குற்றச்சாட்டு உண்மையா? நிலச் சீர்திருத்த ஆணையர் கடந்த ஆண்டு நவம்பரில் ஆணை பிறப்பித்து, ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அரசு சார்பில் இதிலே என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? உண்மை ஊருக்குத் தெரிய வேண்டாமா? நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் காப்பாற்றப்பட வேண்டாமா? ஆட்சியாளர்கள் விளக்கம் அளிப்பார்களா?
உடன்பிறப்பே, இந்தக் கடிதம் வாயிலாக நான் எழுப்பியுள்ள வாதங்கள் எல்லாம், ஏதோ என்னுடைய சொந்த நிலம் பறி போய்விட்டது போலவோ, அல்லது அதை மீட்டு எனக்குச் சொந்தமாக்கவோ அல்லவே அல்ல! இது அரசு நிலம். எல்லோருக்கும் பொதுவான அரசு நிலம். சென்னை மாநகரத்தின் மத்தியிலே உள்ள 200 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய நிலம். அதைத்தான் யாரோ ஒரு அ.தி.மு.க. காரருக்கு தாரை வார்ப்பதைத் தடுத்து நிறுத்த நான் மேற்கொண்டுள்ள முயற்சி இதுவாகும். சட்டப்படி இதுபற்றி எடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அன்புள்ள, மு.க. 7-12-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 216–222. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.