அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3675

முரசொலி கடிதங்கள் · 3675

வைர விழாவும்; மாண்புமிகு மரபுகளும்!

நாள் 30.11.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3675. வைர விழாவும்; மாண்புமிகு மரபுகளும்!

உடன்பிறப்பே,

தமிழக அரசின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழா அழைப்பிதழ் கிடைத்தது. மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரும், எனது நீண்ட கால நெருங்கிய நண்பரும், கழகத்தின்பாலும், தமிழகத்தின்பாலும், தமிழர்களின்பாலும் மிகுந்த அன்பும் அரவணைப்பும் காட்டுபவரு மான திரு. பிரணாப் முகர்ஜி அவர்களும், மேதகு தமிழக ஆளுநர் திரு.கே. ரோசய்யா அவர்களும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதியரசர் எம்.ஒய். இக்பால் அவர்களும் கலந்து கொள்ளும் இந்த விழா சீரோடும் சிறப்போடும் நடந்திட; அறிஞர் அண்ணா அவர்களும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் மற்றும் சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன், கே.டி.கே.தங்கமணி, வி.உமாநாத், மணலி கந்தசாமி, கோவைரமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பொன்னப்ப நாடார், கருத்திருமன், கே.வினாயகம், ஜோதி வெங்கடாசலம், அனந்த நாயகி போன்றவர்கள் எல்லாம் அமர்ந்து தமிழக நலன்களுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டிற்காகவும் சிந்தித்து உரை நிகழ்த்திய உயர்ந்த அவையில்; ஐம்பதாண்டுகளுக்கு மேலாக உறுப்பினராக - எதிர்க்கட்சித் துணைத்தலைவராக - எதிர்க் கட்சித் தலைவராக - ஐந்துமுறை முதல் அமைச்சராக இருந்து பணியாற்றியவன் என்ற முறையில் என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளை இந்தக் கடிதத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவிற்கான அழைப்பிதழை, “திரு.மு.கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர், கோபாலபுரம்” என்று முகவரியிட்டு, அரசு சார்பில் யாரோ ஒருவர் கொண்டு வந்து என் வீட்டிலே கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். அழைப்பிதழைப் பார்த்தேன். “தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையின் வைரவிழா அழைப்பிதழ்” என்றிருந்தது.

ஆனால் 1997ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி நடைபெற்றபோதே, 14-7-1997 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தின் பவள விழாவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழாவும் சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அப்போது இந்த விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக விழாக்குழு ஒன்று பேரவைத் தலைவராக இருந்த பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்கள் தலைமை யில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி.மணி, பரிதி இளம்வழுதி, பேரவைச் செயலாளர் டி. சாலமன் ஜெயபால், எஸ்.ராஜரத்தினம், ஐ.ஏ.எஸ்., சந்திரசூடன், ஐ.ஏ.எஸ்., ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். 12-6-1997 அன்று இந்தக் குழுவினர் என்னைச் சந்தித்து, விழாக்களை நடத்துவது பற்றி பல்வேறு யோசனைகளையெல்லாம் கூறி கலந்துரையாடினார்கள். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வைர விழாவிற்கு எந்தக் குழுவும் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நமது முதல் அமைச்சருக்குத்தான் எல்லாமும் தெரியும் என்கிறபோது எதற்காக குழு என்று நினைத்திருப்பார்கள்.

14-7-1997 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அப்போது தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி அவர்கள் தலைமையில் என்னுடைய முன்னிலையில் விழா நடைபெற்றது. பேரவைத் தலைவர் பழனிவேல் ராஜன் வரவேற்புரை ஆற்றினார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மன்மோகன் சிங் லிபர்ஹென் துவக்க உரையாற்றினார். சட்டமன்றப் பவள விழா மற்றும் பேரவை வைர விழா மலரினை நான் வெளியிட - குடியரசு முன்னாள் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அதனைப் பெற்றுக் கொண்டார். தமிழக அரசின் சார்பில் ஆர். வெங்கட்ராமன், பாத்திமா பீவி, மன்மோகன் சிங் லிபர்ஹென், சி.சுப்பிரமணியம், பா. ராமச்சந்திரன், அவை முன்னவர் பேராசிரியர் அன்பழகனார், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் (காங்.), பேரவைத் துணைத் தலைவர் இளம்வழுதி ஆகியோருக்கு முதலமைச்சர் என்ற முறையில் நான் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினேன். 85 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர் என்ற பட்டியலில் திருமதி லூர்தம்மாள் சைமன் (காங்.) மேடைக்கு

வர இயலாமல் எதிரே அமர்ந்திருந்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்திற்கே நான் சென்று விருதினை வழங்கினேன். அந்த விழாவில் அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர், சட்டமன்ற முன்னாள், அந்நாள் உறுப்பினர்கள், மேலவையின் முன்னாள் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நீதியரசர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அந்த விழாவில் பேரவைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர், ஏ.எஸ்.பொன்னம்மாள் (காங்.), எம்.ஆண்டி அம்பலம் (காங்.), ஆகியோருக்கும்; பேரவைக்கு 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் (அ.தி.மு.க.), எஸ்.திருநாவுக்கரசு (அ.தி.மு.க.), ப.உ.சண்முகம், ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், அ.இரகுமான்கான், எஸ்.அழகர்சாமி (சி.பி.ஐ.) அரங்கநாயகம் (அ.தி.மு.க.), துரை.ராமசாமி, (அ.தி.மு.க.), கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கும்; மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் என்ற வகையில் எல். கிருஷ்ணசாமி பாரதி (அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்), ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர், வி.பாலகிருஷ்ணன், பி.கே.நல்லசாமி, வி.அருணாசலம், லூர்தம்மாள் சைமன், கே.சக்திவடிவேல் கவுண்டர் ஆகியோருக்கும்; பேரவை முன்னாள் தலைவர்களான முனு ஆதி (அ.தி.மு.க.), முனைவர் தமிழ்க்குடிமகன் ஆகியோருக்கும்; பேரவை மேலவை முன்னாள் துணைத் தலைவர்களான ஜி.ஆர்.எட்மண்ட் (அ.தி.மு.க.), பெ.சீனிவாசன், வி.பி.பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க.), வி.பி.துரைசாமி, பார்த்தசாரதி ஆகியோருக்கும்; முன்னாள் உறுப்பினர்கள் சங்கத் தலைவர் முத்துக் கண்ணப்பர், சங்கச் செயலாளர் ஆர். நாக சுந்தரம் ஆகியோருக்கும் முதலமைச்சர் என்ற முறையில் நான் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தேன்.

இவை அனைத்தும் அப்போதே ஏடுகளில் செய்திகளாக வெளிவந்தன. மேலும் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த முன்னோடிகளும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்களுமான பீட்டர் அல்போன்ஸ் அவர்களும், வேலூர் ஞானசேகரன்

அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கழக ஆட்சியில் நடைபெற்ற வைரவிழா பற்றி எனக்கு நினைவூட்டினார்கள். “தமிழ்நாடு சட்டமன்றப் பவள விழா சட்டமன்றப் பேரவை வைர விழா” என்ற தலைப்பில் மிக அழகாகத் தயாரிக்கப்பட்டு, அப்போது வெளியிடப்பட்ட மலர் இப்போதும் சட்டப் பேரவை நூலகத்திலே உள்ளது. இந்திய நாட்டுச் சட்டமன்ற வரலாறு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1833ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது நியமன உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தனர். 1919ஆம் ஆண்டில் மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்நாளைய மாகாண சட்ட மன்றங்களில் முதன்முதலாக இடம் பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின்னர் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உருவாவதற்கு வழிகோலியது. அந்தச் சட்டத்தின்படி சென்னை மாகாண மன்றத்திற்கு 1920ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30ஆம் நாள் நிகழ்ந்த முதல் பொதுத் தேர்தலில் நீதிக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி திரு. சுப்பராயலு ரெட்டி தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது. இதுகுறித்து, சென்னை மாகாணத்தின் நிர்வாக அறிக்கையில் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது: “இந்திய வரலாற்றில் முதன் முறையாக சென்னை மாகாணத்தின் கீழ்ச்சாதி மக்கள், உயர்சாதி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து அரசியல் அதிகாரத்தை அவர்களது சொந்தக் கரங்களைக் கொண்டு பறித்துக் கொண்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1921ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் பன்னிரெண்டாம் நாள் கன்னாட் கோமகன் அவர்களால் முதல் மாகாண சுயாட்சிச் சட்ட மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது கன்னாட் பிரபு பேசிய போது, “நிர்வாகத் திறனும் நல்ல பாரம்பரியமும் கொண்ட இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதில் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். இது ஜனநாயக வரலாற்றின் ஆரம்பக் கட்டம் என்றாலும், முக்கியத் திருப்பத்திற்கு வழிகோலும்” என்று குறிப்பிட்டார்.

அவ்வாறு நீதிக்கட்சியால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் சட்டமன்றம் 75 ஆண்டுகள் முடிந்ததையொட்டித்தான், அதன் பவள விழா நிகழ்ச்சியும், அதேபோல 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்கீழ் முதன்முதலாக 1937ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டமன்றப் பேரவையின் அறுபதாண்டுகள் நிறைவையொட்டி வைர விழா நிகழ்ச்சியும் இணைக்கப்பட்டுத்தான் 14-7-1997 அன்று மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டது. எனவே சட்டமன்றப் பவள விழாவும், பேரவை வைர விழாவும் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது எப்படி யாவது ஒரு விழாவினை நடத்த வேண்டும் என்பதற்காக வழி என்ன என்று பார்த்து, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, குடியரசு பெற்ற பிறகு, 1952ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றம் அமைக்கப்பட்டது என்பதைக் கூறி, அது முதல் கணக்கிட்டால் அறுபதாண்டுகள் என்பதால் வைர விழாவினை நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். விழா சிறப்பாக நடக்கட்டும். அதைப் பற்றி நமக்கொன்றும் காழ்ப்பு இல்லை. ஆனால் திடீரென்று இந்த ஆட்சியில் இப்படியொரு வைர விழா கொண்டாடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? நான் குறிப்பிட்டுள்ளவாறு 1920ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டப்படி சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் திராவிட இயக்கத்தின் வேர்க் கட்சியான நீதிக் கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகை யிலேதான் கழக ஆட்சிக் காலத்தில் பவள விழா நடத்தப்பட்டது. ஆனால் திராவிட இயக்கத்தின் வெற்றியையும், நீதிக்கட்சியின் வெற்றியையும் திரை போட்டு மறைக்கவும், மக்களைத் திசை திருப்பவும், அதற்குப் பிறகு தற்போது தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்கி, அங்கே நிதிநிலை கூட்டத் தொடர் உட்பட ஒரு சில சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெற்று, தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் புதிய அத்தியாயம் நிலை பெற்ற பிறகும், தலைமைச் செயலகமும், சட்டப் பேரவையும் நிரந்தரமாக அங்கேயே அதாவது ஓமந்தூரார் வளாகத்திலேயே அமைந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்,

வைரவிழா வளைவு, வைர விழா போன்றவைகளை திடீரென்று நடத்த முற்பட்டுள்ளார்கள். கழக ஆட்சியில் நடைபெற்ற வைர விழாவில், அவை முன்னவர் பேராசிரியர், எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மராட்டிய முன்னாள் ஆளுநர் சி. சுப்பிரமணியம், இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இப்போது நடைபெறும் விழாவில் அவை முன்னவருக்கோ, எதிர்க்கட்சித் தலைவருக்கோ உரையாற்றும் வாய்ப்பு இருப்பதாக அழைப்பிதழில் இல்லை. இன்னும் வேடிக்கை! நவம்பர் 30ஆம் தேதியன்று விழா நடைபெறப் போகிறது. நவம்பர் 27ஆம் தேதிதான் சிறப்பு விருந்தினரான குடியரசுத் தலைவருக்கும், மேதகு ஆளுநருக்கும் அழைப்பிதழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட விழாக்களை; முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், ஆன்றோர்கள், சான்றோர்கள் எல்லாம் கலந்துகொள்ளக் கூடிய வகையில் இடவசதி உள்ள பொதுமன்றங் களில் நடத்துவதுதான் வழக்கம். கழக ஆட்சியிலே நடைபெற்ற வைரவிழா, பவள விழாக்கள் கூட சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் நடைபெற்றது. ஆனால் இப்போது சட்டமன்றப் பேரவைக் கூடத்திலேயே இட நெருக்கடிக்கிடையே விழாவினை நடத்துகிறார்கள். அதன் காரணமாக ஒரு சில மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தவிர மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கோ, முன்னாள் பேரவை உறுப் பினர்களுக்கோ அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

இந்த “இருண்ட ஆட்சி” நடத்தும் வைர விழாவில் முக்கியமான நிகழ்ச்சி, இதை யொட்டி வைக்கவுள்ள வைரவிழா வளைவாகும். ஆனால் இந்த வளைவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் விழாவிலே இணைக்காமல், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை மட்டும் முன்கூட்டியே வைத்துக் கொண்டு, அந்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை முதல் அமைச்சரே நடத்தி முடித்து விட்டார். அந்த வளைவினையாவதுகட்டி முடித்து, அதன் திறப்பு விழாவினையாவது குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிற நிகழ்ச்சியோடு நடத்தியிருக்கலாம். அது மாத்திரமல்ல; வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் இந்தியாவின் முதல் குடிமகன். அவரே இந்த விழாவிற்காக வந்து

கலந்து கொள்கிறார். ஆனால் இந்த விழாவிற்காகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழிலும், அதன் கவரிலும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம்தான் இருக்கிறதே தவிர, விழாவிற்கு முக்கிய விருந்தினர்களான குடியரசுத் தலைவரின் படமோ, ஆளுநரின் படமோ இடம் பெறவில்லை என்பதும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மரபு “(ப்ரோட்டகால்)” இந்த அளவிற்குப் புறக்கணிக்கப்படுகிறது என்பதும் கண்டனத்திற்குரிய செய்தியாகும். அரசு விழா நிகழ்ச்சிகளிலேகூட, அதிலும் இந்தியக் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலேயே; “எல்லாம் தானே” என்ற தன்முனைப்போடு; அரசு மரபுகள் போற்றப்படும் வகையில் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர், உயர் நீதிமன்றத் தலைமை நீதியரசர் ஆகியோருக்கு முறைப்படி அளிக்கப்பட வேண்டிய “ப்ரோட்டகால்” மரியாதை காப்பாற்றப்பட்டால் என்ன, காப்பாற்றப்படாவிட்டால் என்ன; ‘அம்மா’வை விட அவர்கள் உயர்ந்தவர்களா என்ன? என்ற போக்கில் சில உயர் அதிகாரிகளும் எண்ணி துணைபோய் விடக் கூடாது. இடித்துரைத்திட வேண்டிய பத்திரிகைகள் கூட வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்கின்றனவே தவிர, எதிர்த்து யார் வாலாட்டினாலும், ஒட்ட நறுக்கப்படும் என்கிற அச்சமும், நடுக்கமும் தமிழ்நாட்டுக்கு சாபக் கேடாக நேர்ந்துவிட்ட நிலையில் யார்தான் என்ன செய்ய முடியும்? நாம்தான் இதற்கு மேல் எழுதி என்ன பயன்? அன்புள்ள, மு.க. 30-11-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 209–215. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்