முரசொலி கடிதங்கள் · 3673
கரும்பு விவசாயிகள் கவனத்திற்கு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3673. கரும்பு விவசாயிகள் கவனத்திற்கு! உடன்பிறப்பே,
2012-2013ஆம் ஆண்டுக்கான கரும்பு பருவத்திற்கு, கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ. 2,350 என்று விலை நிர்ணயம் செய்ய நான் உத்தர விட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து, “எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மன மகிழ்ச்சியையும் அளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு கரும்பு விவசாயிகளுக்கு உண்மையிலேயே ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மன மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறதா என்ற விவரம் இரண்டொரு நாட்களில் தெரியும். கரும்புக்கான கொள்முதல் விலையை ஜெயலலிதா அறிவித்தவுடன், அதை வெளியிட்டுள்ள தமிழக நாளேடுகள், அந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடியதா என்பது பற்றி, அந்த விவசாயிகளின் சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டு வெளியிட வேண்டுமென்று எண்ணவில்லை. அக்கறை இருந்தால் அவர்கள் சொல்லட்டும், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறார்கள். ஆனாலும் தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் செயல் தலைவர் உடனடியாக இந்தக் கரும்பு விலை நிர்ணயம் பற்றி பேட்டி அளித்து, அது “தினகரன்” இதழில் மட்டும் வெளிவந்துள்ளது. அது வருமாறு :-
“கரும்பு உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, தண்ணீர்ப் பற்றாக் குறை என பல நெருக்கடிகள் உள்ளன. எனவே, உற்பத்திச் செலவுகளை உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய் கொள்முதல் விலை வழங்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்துப் போராடி
வருகிறோம். ஆனால், தமிழக அரசு தற்போதுள்ள விலையை விட 250 ரூபாய் மட்டுமே உயர்த்தி, டன்னுக்கு 2,350 ரூபாய் என்று விலையை அறிவித்திருப்பது வேதனையாக இருக்கிறது. கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இது திருப்தி அளிக்கவில்லை” என்றெல்லாம் கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் செயல் தலைவர் தெரிவித்திருக்கிறார். எனவே, முதல்அமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருப்பதைப்போல, அவரது தலைமையிலான அரசின் இந்த “உத்தரவு” கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தையோ, உற்சாகத்தையோ, மன மகிழ்ச்சியையோ அளிக்க வில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது 6-1-2012 தேதிய நாளேடுகளில் “கரும்புக்கான ஆதார விலை ரூ. 2,100 ஆக உயர்வு - ஜெயலலிதா உத்தரவு” என்ற தலைப்பில் வந்துள்ள அறிக்கையில், “எனது தலைமையிலான அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” - “மானியம் வழங்க நான் உத்தரவிட்டேன்” - “நான் ஒதுக்கீடு செய்துள்ளேன்” - “என்னுடைய இந்த நடவடிக்கைகளின் மூலம்” என்றெல்லாம் அடைமொழி அலங்காரம் கொடுத்து “இந்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலையை போக்கு வரத்து செலவு 100 ரூபாய் உட்பட 2,100 ஆக உயர்த்த நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று ஜெயலலிதா தெரிவித்ததாக, அதனை தமிழகத்தின் நாளேடுகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்தன. அந்த 2,100 ரூபாயைத்தான் இந்த ஆண்டு மேலும் 250 ரூபாய் மட்டுமே உயர்த்தி, 2,350 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார். (அதாவது வழக்கறிஞர் ஷேம நிதி அளித்ததைப்போல)
ஜெயலலிதா விடுத்துள்ள நீண்ட அறிக்கையில், கழக ஆட்சியில் எந்த அளவு கரும்பு கொள்முதல் விலையாக இருந்தது என்பதைப் பற்றி குறிப்பிடவே இல்லை. மேலும் “கரும்புக் கான ஆதார விலை உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மனதில் கொண்டு முதற்கட்டமாக இந்த ஆண்டு இந்த விலை உயர்வு” என்றும் ஜாக்கிரதையாகத் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே சொன்னது என்ன?
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பக்கம் 3இல் “கரும்பு உற்பத்தி புரட்சித் திட்டம்” என்ற தலைப்பில் “எத்தனால் எரிபொருள் உற்பத்தியைப் பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை; டன்னுக்கு 2,500/- ரூபாயாக
உயர்த்தப்படும் - அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு நிர்வாகம் சீரமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்கள். தேர்தல் அறிக்கையிலே 2,500 ரூபாய் என்று சொல்லிவிட்டு, கடந்த ஆண்டும் 2,100 ரூபாய் என்றுதான் அறிவித்தார்கள். அப்போது கரும்பு விவசாயிகள் எல்லாம் இந்த ஆண்டாவது டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த ஆண்டிலும் 2,350 ரூபாய் என்று மட்டுமே அறிவித்திருக்கிறார்கள்.
தி.மு. கழக ஆட்சிக் காலத்தில், 7.11.2009ஆம் நாளிட்ட தினமணி நாளிதழில் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, “டன்னுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மத்திய அரசின் அறிவிப்பினால் டன்னுக்கு ரூ. 139 குறைவாகப் பெறக் கூடிய அவல நிலைக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது? அவர்களது கபட நாடகங்களை இனி நடத்த முடியாது!” என்றெல்லாம் அவருக்கே உரிய மொழியில் கேள்வி கேட்டிருந்தார். ஆனால் அப்படிக் கேள்வி கேட்ட ஜெயலலிதாவைப் பார்த்து இப்போது, இது என்ன கபட நாடகம்? கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் என்று ஏன் விலை நிர்ணயம் செய்யவில்லை? என்று கரும்பு விவசாயிகள் கேட்க மாட்டார்களா என்ன?
கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் 1966ன்படி, மத்திய அரசு அறிவிக்கும் சட்டபூர்வ குறைந்தபட்ச விலை, தமிழக விவசாயிகளுக்கு கட்டுப் படியாகவில்லை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சர்க்கரை ஆலை உரிமையாளர்களையும், விவசாயிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தனி அலுவலர்களையும் கொண்ட முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையை மாநில அரசின் பரிந்துரை விலையாக அறிவித்து வழங்கி வந்தது.
ஆனால், 2001ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. 5 ஆண்டு காலம் முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டியோ, விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஆலை உரிமையாளர்கள், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அலுவலர்களின் கருத்துக்களைக் கேட்டோ முடிவெடுக்காமலேயே மத்திய அரசு
நிர்ணயித்த விலையை மட்டுமே வழங்கி வந்ததை கரும்பு விவசாயிகள் அனைவரும் அறிவார்கள்; அதனை அவர்கள் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள்.
2001ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைந்தபோது 9-11-2001 ஆம் நாள் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை மட்டும் தரப்படும், மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்கமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு ஜெயலலிதா தெரிவித்தார். அ.தி.மு.க. அமைச்சரவை நிறை வேற்றிய தீர்மானத்தின்படி 2001-2002 முதல் 2004-2005 வரை நான்காண்டு காலம் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலையான
ரூ. 795 மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது என்பதையும் கரும்பு விவசாயிகள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
2009-2010ஆம் ஆண்டிற்கு மத்திய அரசு 9.5 சதம் சர்க்கரை பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.1077.60/-ம் ஒவ்வொரு 0.1 சர்க்கரை பிழிதிறனுக்கும் ரூ.11.30/-ம் அளிப்பது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது என மாநில அரசு கருதியதால், பரிந்துரை விலையாக ரூ.359.80/- ஐ கூட்டி மாநில அரசின் பரிந்துரை விலையாக 9.5 சத சர்க்கரை பிழிதிறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.1437.40 என்றும், சராசரி பிழிதிறன் அடிப்படை யில் கூடுதலாக ரூ.22.60/-எனவும், வண்டி வாடகையாக டன் ஒன்றுக்கு ரூ.90/ம் சேர்த்து ஆகமொத்தம் ஒரு டன் கரும்புக்கு சராசரியாக ரூ.1550/- வழங்கிய அரசு - ஜெயலலிதா பாணியிலே சொல்ல வேண்டுமென்றால் “எனது தலைமையிலே நடைபெற்ற தி.மு. கழக அரசு தான்”!
மத்திய அரசு 9.5 சதம் பிழிதிறன் கொண்ட ஒரு டன்கரும்புக்கு ரூ.1298.40 என விலை நிர்ணயம் செய்து அறிவிப்பதற்கு முன்பே, நமது மாநிலத்தில் முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலை உரிமை யாளர்கள், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை தனி அலுவலர்கள் ஆகியோரின்
கருத்துக்களைக் கேட்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.1550/-விலை கிடைக்க 29.9.2009ல் ஆணையிடப்பட்டது.
உச்சநீதி மன்றம் கரும்பு விலை நிர்ணயம் சம்பந்தமாக அளித்த தீர்ப்பில் மத்திய அரசின் சட்டபூர்வ குறைந்தபட்ச விலையோடு மாநில அரசு கூடுதலாக பரிந்துரை வழங்கலாம் என 5-5-2004 அன்று தீர்ப்பு வழங்கிய பிறகு, அந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தாமல், அதன் பிறகு 16 மாத காலம் சும்மாயிருந்துவிட்டு, 2006ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்ததை முன்னிட்டு ஒரு டன் கரும்புக்கு 1014 ரூபாய் என்று ஜெயலலிதா ஆட்சியிலே அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதே தவிர அந்தத் தொகை வழங்கப்படவில்லை. ஜெயலலிதா ஆட்சி புரிந்த அந்த நான்காண்டுகளுக்கு மட்டும் விவசாயி களுக்கு ஏற்பட்ட நட்டம் ஏறத்தாழ ரூ.440 கோடி என்பதையும் இன்றைய முதலமைச்சர் அவர் களுக்கு நினைவூட்டுகின்றேன்.
கரும்பு விலையைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டுமேயானால், 2006-2007இல் தி.மு. கழக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின், அந்த ஆண்டு மத்திய அரசு டன் ஒன்றுக்கு கரும்பு விலையை 802.50 ரூபாய் என்று நிர்ணயித்தபோது, தமிழக அரசு 221.50 ரூபாய் உயர்த்தி, டன் ஒன்றுக்கு 1,024 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்தது.
2007-2008ஆம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்த கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ. 811.80 என்பதை, ரூ. 222.20 உயர்த்தி, டன் ஒன்றுக்கு 1,034 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்தோம்.
2009-2010 ஆம் ஆண்டு ஏற்கனவே நான் மேலே குறிப்பிட்டதைப் போல போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகையெல்லாம் சேர்த்து டன் ஒன்றுக்கு 1,550 ரூபாய் என்று கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது, இது பின்னர் 1,650 ரூபாய் அளவிற்கும் உயர்ந்தது.
2010-2011ஆம் ஆண்டு மேலும் 350 ரூபாய் டன் ஒன்றுக்கு உயர்த்தி, 2000 ரூபாய் என்று கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆக ஒவ்வொரு ஆண்டும் தி.மு.கழக ஆட்சியில் 200 ரூபாய் என்றும், 300 ரூபாய் என்றும், 350 ரூபாய் என்றும்
கரும்புக்கு விலை கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டதற்கு மாறாக, கடந்த ஆண்டு ஜெயலலிதா அரசு டன் ஒன்றுக்கு 2000 ரூபாய் என்பதை 2100 ரூபாயாக, அதாவது 100 ரூபாய் மட்டுமே டன் ஒன்றுக்கு உயர்த்தியது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டைவிட வெறும் 250 ரூபாய் அளவிற்கு மட்டுமே உயர்த்தியுள்ளது. வழக்கமாக விவசாயிகள், ஆலை அதிபர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தான் விலை அறிவிப்பது வழக்கம். ஆனால் தமிழக அரசு தன்னிச்சையாக விலை அறிவித்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்த போது, தி.மு. கழக ஆட்சியிலே ஜனநாயக ரீதியாக கரும்பு விலை நிர்ணயம் செய்யப்பட்ட போதெல்லாம், அதைக் குறை கூறிக் குற்றம் சொன்ன ஜெயலலிதா, தற்போது கரும்பு விவசாயிகளின் செவிகளில் கசப்பான செய்தியைப் பாய்ச்சியதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? 2001-2002இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.620.50. அதற்கு முந்தைய ஆண்டு தி.மு.கழக ஆட்சியில் கொடுத்த ரூ.775 என்ற விலையைத்தான் அ.தி.மு.க. அரசு அப்போது அறிவித்ததே தவிர, எந்தவிதமான உயர்வும் செய்யவில்லை. 2002-2003ஆம் ஆண்டிலும், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.695. அப்போதும் அ.தி.மு.க அரசு - தி.மு.கழக ஆட்சியில் கொடுத்த ரூ.775 என்று தான் விலை நிர்ணயம் செய்ததே தவிர, எந்த விதமான உயர்வும் செய்யவில்லை. 2003-2004இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.730. அப்போதும் அ.தி.மு.க அரசு தி.மு.கழக ஆட்சியில் கொடுத்த ரூ.775 என்றுதான் விலை நிர்ணயம் செய்ததே தவிர, எந்தவிதமான உயர்வும் செய்யவில்லை. 2004-2005இல் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.745. அப்போதும் அ.தி.மு.க. அரசு- தி.மு. கழக ஆட்சியில் கொடுத்த ரூ.775 என்றுதான் விலை நிர்ணயம் செய்ததே தவிர, எந்தவிதமான உயர்வும் செய்யவில்லை.
2005-2006இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.795. இந்த ஆண்டில்தான், நான் மேலே கூறியதைப்போல நாடாளுமன்றத் தோல்வியின் காரணமாகவும், சட்டமன்றத் தேர்தலை மனதிலே கொண்டும் 1014 ரூபாய் என்று அ.தி.மு.க. ஆட்சியினர் விலை நிர்ணயம் செய்தார்களே தவிர, அவர்கள் ஆட்சி செய்த ஐந்தாண்டு காலத்தில் நான்காண்டு காலத்திற்கு எந்த விதமான விலை உயர்வும் செய்யாதவர்கள் தான் அ.தி.மு.க. ஆட்சியினர். தி.மு.கழக ஆட்சியில் தான் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக விலையை அதிகரித்து நிர்ணயம் செய்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்மைகளை யெல்லாம் மறைத்துவிட்டு, அல்லது தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு கரும்புக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்பதை கரும்பு விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அன்புள்ள, மு.க. 21-11-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 196–202. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.