அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3672

முரசொலி கடிதங்கள் · 3672

மறைமலை நகரில் - இளைஞர் அணி கருத்தரங்கு!

நாள் 17.11.2012சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3672. மறைமலை நகரில் - இளைஞர் அணி கருத்தரங்கு!

உடன்பிறப்பே,

வரும் 18-11-2012 அன்று திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் சென்னை, மறைமலைநகரில், அண்ணா திடலில் நடைபெறவுள்ளது. காலை நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பி திருச்சி என். சிவா “மொழிப்போர்” பற்றியும், பேராசிரியர் சபாபதி மோகன் “சமூகநீதி” பற்றியும், தம்பி பேராசிரியர் சுப. வீரபாண்டியன் “திராவிட இயக்க வரலாறு” பற்றியும் உரையாற்ற இருக்கிறார்கள். மாலை 4 மணி அளவில் நகைச்சுவைத் தென்றல், தம்பி திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களின் பட்டிமன்ற நிகழ்ச்சி, “இளைஞர்கள் இன்று பெரிதும் பின்பற்ற வேண்டியது மொழி உணர்வா? பகுத்தறிவா?” என்ற தலைப்பிலே நடைபெறவுள்ளது. அதன்பின்னர் கழக இளைஞர் அணியின் செயலாளர் தம்பி மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்ற நானும், இனமானப் பேராசிரியர் அவர்களும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மத்தியில் கருத்துரையாற்ற விருக்கிறோம்.

கழகத்தின் வயது 63 என்றால், கழக இளைஞர் அணியின் வயது 32 என்றுதான் கூற வேண்டும். ஆம் 1980ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 20ஆம் நாள்தான் மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் தி.மு.கழகத்தின் இளைஞர் அணியின் தொடக்க விழா நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பி.டி. ஆர். பழனிவேல் ராசன் பேசும்போது, நான் அதற்கு சில நாட்களுக்கு முன்பு முரசொலியில் எழுதிய “என்னுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன” என்ற கடிதத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, “ஏன் அவ்வாறு எழுதினீர்கள்?” என்று மனம் வருந்திப் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய அன்றைய

மாநிலங்களவை கழக உறுப்பினர் வைகோ, அந்தக் கடிதத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, “தலைவர் அவர்களே, உங்கள் கடிதத்தில் கூடவே இருந்து குழிபறிப்போர், குத்தீட்டி கொண்டு முதுகிலே குத்துவோர், நரிக்குணம் படைத்தோர், நயவஞ்சகம் கொண்டோர், அசூயைக்காரர் இவர்கள் மத்தியில் வாழ்வதை விட முடிவு எவ்வளவோ மேல் என்று எழுதியிருக்கிறீர்கள்! கூடவே இருந்து குழிபறிப்போரை நீங்கள் லட்சியம் செய்ய வேண்டியது அவசியம்தானா? உங்களுக்காக குருதியைக் கொட்டுவதற்கு ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கிறதே, அதை ஏன் நீங்கள் நினைக்கவில்லை? நயவஞ்சகம் கொண்டோர், நரிக் குணம் படைத்தோர் நாட்டிலே எந்த இயக்கத்திலும் இருக்கலாம். ஒரு விபீஷணன் உருவாவதற்காக அதை உங்களுடைய பேனா லட்சியம் செய்கிறது என்று சொன்னால், ஒரு லட்சம் இந்திரஜித்துகள் உங்கள் பின்னால் அணி திரண்டு இருப்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்! ஒரு எட்டப்பன் உருவாகலாம். பல நூறு ஆயிரம் ஊமைத் துரைகள் உங்களுக்குப் பின்னாலே திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பின்னாலே இலட்சியத்தைக் காப்பதற்காக இருக்கிறார்கள்” என்று பேசினார். யார் பேசியது என்பதைவிட, என்ன கருத்தைப் பேசினார்கள் என்பதுதான் நினைவில் கொள்ள வேண்டியதாகும்.

அந்த விழாவில் நான் நிறைவுரை ஆற்றும் போது, “இன்றைய இளைஞர்கள் மிகப் பலர், ஏதோ அன்றாடம் மகிழ்ச்சியாக பொழுது போனால் போதும் என்று எண்ணுகின்ற இளைஞர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நம்முடைய தாய்மொழியை உணர, தாயகத்தை உணர, நம் நாட்டுப் பற்றினைப்பெற, ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயத்தை உருவாக்குகின்ற மனப் பக்குவத்தைப் பெற, சமத்துவ நிலை எல்லாவற்றிலும் வேண்டும் என்கின்ற அந்த உறுதிப்பாட்டைப் பெற அவர்களை நாம் பயிற்றுவித்தாக வேண்டும். அதற்குத்தான் தி.மு. கழகத்தின் சார்பிலே இளைஞர் அணி எல்லா இடங்களிலும் வட்ட வாரியாக ஊர் வாரியாக, சிற்றூர் - பட்டி தொட்டிகளில் எல்லாம் உருவாக வேண்டும். “எழுச்சியுகம் காண்பதற்கு எழுந்து வந்த காளைகாள்; வீழ்ச்சியுற்ற தமிழகத்தின் தீரம் மிக்க இளைஞர்காள்!” என்று இளைஞர்களை அழைத்து “விருப்பம் உள்ளவராம் பெரும்

பதவியில் பல பேர், அவர் வேண்டாம், நெருப்பின் பொறிகளே, நீங்கள்தான் தேவை” என்று ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு ஈ.ரோடு ‘குடியரசு’ அலுவலகத்திலே நான் எழுதிய கவிதை வரிகள் இன்றைக்கும் எனக்கு நினைவுக்கு வருகின்றன. இளைஞர்களை நம்பித்தான் இந்தச் சமுதாயம் இருக்கின்றது. இந்த நாடு இருக்கின்றது. இந்த நாட்டினுடைய எதிர்காலம் இருக்கிறது. அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு வாக்குகளைப் பெற்றுவந்து அமர்கின்ற அரசுகளுக்கு இருக்கின்றது” என்று நான் குறிப்பிட்டேன். இளைஞர் அணி இவ்வாறு தொடங்கப்பட்ட பிறகு, அதன் இரண்டாம் ஆண்டு விழா திருச்சி மாநகரில் 1982ஆம் ஆண்டு ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய நாட்களில் மிகப் பெரிய மாநாட்டினைப்போல நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த மாணவர்கள், இளைஞர்கள், பிரதிநிதிகளோடு கலந்துரையாடல் என்ற வகையிலும், இரண்டாம் நாளன்று இளைஞர் அணியின் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டது. 10-4-1983 அன்றுதான் தி.மு.க. இளைஞர் அணிக்கு தம்பி தளபதி மு.க. ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரைமணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜூலியஸ் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும் பொதுச் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டனர். அந்த இளைஞர் அணி அமைப்புக் குழு மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் சென்று அமைப்புக் கூட்டங்களை நடத்தி இளைஞர் அணி அமைப்புகளை உருவாக்கினர். அதே 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் நாள், இளைஞர் அணிக்கு தம்பி மு.க. ஸ்டாலின் செயலாளராகவும், திருச்சி சிவா, தாரை மணியன் இருவரும் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். 31-1-1990 அன்று மதுரையிலும், 21-6-1999 அன்று சென்னையிலும், 3-3-2001 அன்று திருச்சியிலும் இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. பல்வேறு கட்சிகள் தங்கள் கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கே நியமன முறையில் தான் அறிவிக்கிறார்கள். பொதுக்குழு அழைப்பு ஒவ்வொரு முறையும் அந்தக் கட்சிகளில் வெவ்வேறு நபர்களுக்கு அனுப்பப்படும். அழைப்புப் பெற்றவர்கள் எல்லாம் பொதுக் குழு உறுப்பினர்கள் ஆகிவிடலாம். ஆனால் தி.மு.

கழகத்தைப் பொறுத்தவரை கிளைக்கழகச் செயலாளருக்கான தேர்தல் முதல், கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி வரை தேர்வு நடத்தப்பட்டு அதிலேதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நடைமுறை நம்முடைய கழகத்திலேதான் நடைபெறுகிறது.

இந்த முறை இளைஞர் அணிக்கான அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களைக் கூட அவ்வாறு நியமனத்தின் மூலம் அறிவித்திடாமல், மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் பரிந்துரைகளைப் பெற்று, அவர்கள் சொல்கின்றவர்களையே நியமனம் செய்யாமல், இளைஞர் அணியின் செயலாளர் தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று, தமிழ்நாடு தேர்வாணையக் கழகம், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகின்ற தேர்வினைவிட மேலாக, இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களையெல்லாம் நேரிலே அழைத்து மணிக்கணக்கிலே அமர்ந்து அந்த விண்ணப்பதாரர்களையெல்லாம் - அவர்களிடம் கழகத்தைப் பற்றி கேள்விகளைக் கேட்டு, அவர்கள் குடும்பப் பின்னணி பற்றியெல்லாம் தெரிந்து ஆட்களை நேரில் கண்டு தேர்வுசெய்தார். அதில் குறிப்பாக வயது வரம்பை நிர்ணயித்து அதனைக் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். கட்சியில் மூத்த உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எந்த வகையிலும் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் போன்ற நிர்வாகப் பொறுப்புகளில் இடம் பெற்று விடக் கூடாது என்பதையும் முக்கியமாகக் கருத்திலே கொண்டார்.

21-6-1999 அன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற கழக இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, நகரக் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையும் “எழுமின் இளைஞர்காள்!” என்ற தலைப்பில் கழக இளைஞர் அணியினால் சிறு நூலாக வெளியிடப்பட்டது.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ந்தேதி முதல் 15 நாள், முரசொலியில் “இளைஞர்களுக்கு வழி விடுவோம்” என்ற தலைப்பில் உடன்பிறப்புகளுக்கான கடிதங்களாக உலகச் சிந்தனையாளர்கள், புரட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புகளையெல்லாம் நான் தொகுத்து எழுதி, அதனை

கழக இளைஞர் அணியின் சார்பில் சிறு நூலாகவே வெளியிட்டிருக்கிறார்கள். அந்த நூலினை தற்போது இளைஞர் அணியின் அமைப்பாளர்களாக, துணை அமைப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்பிகள் எல்லாம் வாங்கிப் படித்திட வேண்டும். மேலும் நமது கழகத்தின் வரலாற்றினைப் புரிந்து கொள்ள உதவும் நூல்களை யெல்லாம் வாங்கிப் படிக்க வேண்டும். தி.மு.கழக இளைஞர் அணியின் வெள்ளி விழா மலர் 2006ஆம் ஆண்டு வெளியிட்ட போது, அந்த மாநாட்டு சிறப்பு மலரிலேதான் நான் எழுதும்போது, “இளைஞர்காள்! அண்ணா அமைத்த இல்லத்தில் அகல் விளக்குகளாவீர்! இகல் வெல்லும் இயக்கப் படையின் ஈட்டி முனைகளாவீர்! ஈடற்ற என் உடன்பிறப்புக்களாவீர்! பெரும் படை திரட்டிடுவீர்! அரும் பணி ஆற்றிடுவீர்! இளைஞனே! நீயே இந்த மண்ணின் மானம்! வானம் உனக்கு வணக்கம் தெரிவித்திட வாளேந்திய பரம்பரையின் வழித்தோன்றலென வாய்த்திடு!” என்று என் கைப்பட எழுதிக் கொடுத்தேன். 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில்தான் நெல்லையில் தி.மு. கழக இளைஞர் அணியின் மாநில முதல் மாநாடு நடைபெற்றது. இந்தத் தொடர் வளர்ச்சியில் மற்றும் ஓர் கட்டமாகத்தான், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் 18ந்தேதி மறைமலைநகரில் நடைபெறவுள்ளது. அந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ள இளைஞர் அணியின் தம்பிமார்களையெல்லாம் வாரீர், வாரீர் என்று அழைக்கின்றேன்.

அன்புள்ள, மு.க. 17-11-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 191–195. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்