அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3669

முரசொலி கடிதங்கள் · 3669

எத்தனைக் காலம் இப்படி ஏமாற்றுவார்?

நாள் 3.11.2012சுமார் 9 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3669. எத்தனைக் காலம் இப்படி ஏமாற்றுவார்?

உடன்பிறப்பே,

31-10-2012 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் தி.மு.கழக உறுப்பினர்கள், மின் வெட்டு குறித்து, ஒத்திவைப்புத் தீர்மானத்தினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டபோது, அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு, அதற்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா மின்சாரப் பற்றாக்குறை பற்றியும், மின்வெட்டு பற்றியும் நீண்ட நேரம் உரையாற்றியிருக்கிறார்.

கழக ஆட்சியிலே ஒத்திவைப்புத் தீர்மானங்களைக் கொண்டுவர எதிர்க் கட்சிகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன என்பதை பேரவையின் கடந்த கால நடவடிக்கைக் குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஒரு பிரச்சினையின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒத்திவைப்புத் தீர்மானமோ, கவன ஈர்ப்புத் தீர்மானமோ கொடுத்திருந்தால், அதன் மீது அரசு பதிலளிக்க விரும்பினால், முதலில் அந்தத் தீர்மானங்களைக் கொடுத்தவர்களை அந்தத் தீர்மானத்தின் மீது பேச அனுமதித்து, அவர்களின் கருத்துக்களுக்குப் பின்னர் அரசு விளக்கம் தருவதுதான் கடந்த காலத்தில் இருந்து வந்த நடைமுறை.

கழக ஆட்சிக் காலத்தில் 13-11-2008 அன்று மின்வெட்டு குறித்து எதிர்க் கட்சிகள் எல்லாம் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொடுத்திருந்தபோது, பேரவைத் தலைவர் அந்தத் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து, அதன் மீது உறுப்பினர்களை நீண்ட நேரம் பேச அனுமதித்து, அதற்குப் பிறகு அந்தத் துறையின் அமைச்சரான, ஆற்காடு வீராசாமி விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தை அவை நடவடிக்கைக் குறிப்பில் இன்றைக்கும் பார்க்கலாம். எதிர்க் கட்சிகளின் சார்பில் பல குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்கள்.

எதிர்க்கட்சிக்காரர்கள் பல்வேறு பிரச்சினைகளின் மீது குற்றச்சாட்டுகளை பேரவையிலே வைப்பது அவர்களுடைய உரிமை; அதற்கு உகந்த பதில்களை அளிக்க வேண்டியது ஆளுங்கட்சியின் கடமை என்பதற்கேற்ப, அமைச்சர் தன் பதிலுரையில், “பேசியவர்கள் எல்லாம் பல நல்ல அரிய கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள்” என்றுதான் குறிப்பிட்டார். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் பேரவை நடவடிக்கைகளிலே பின்பற்றி வந்த பண்பாடு.

அது மாத்திரமல்ல; அதற்கு முதல் நாள், 12-11-2008 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்மானத்தின் மீது பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு என்னுடைய பதிலுரை முடியும்போது மதியம் 1.10 மணியாகிவிட்டது. அதற்குப் பின்னர் சில மசோதாக்களை அறிமுகம் செய்ய வேண்டிய அவசரத்தில் அமைச்சர்கள் இருந்தபோது, அ.தி.மு.க.வின் கொறடாவாக இருந்த திரு. செங்கோட்டையன், “மிகவும் முக்கியமான மின்வெட்டுப் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளேன். அது பற்றி விவாதிக்க வேண்டும்” என்றார். அதற்கு பேரவைத் தலைவர், திரு. ஆவுடையப்பன் அவர்கள், “நேரமாகிவிட்டது, மின் வெட்டு குறித்து விவாதத்துக்கு அடுத்த நாள் எடுத்துக் கொள்ளப்படும்” என்றார். அதனை செங்கோட்டையனும் ஏற்றுக் கொண்டு அமர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலபாரதியும் மின்வெட்டு குறித்துப்பேச வேண்டுமென்றார். அப்போது மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, “மதிய உணவையும் விட்டு விட்டு மின்சாரம் பற்றி விவாதிப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால், எவ்வளவு நேரம் உறுப்பினர்கள் பேசினாலும் அதற்கு பதிலளிக்கத் தயாராக உள்ளேன்” என்றார். உடனே அ.தி.மு.க.வினர் விவாதத்துக்கு நாங்கள் தயார் என்றனர். ஆனால் பேரவைத் தலைவர், “இன்று நேரமாகி விட்டது, அடுத்த நாள் அதை எடுத்துக் கொள்ளலாம்” என்றார். ஆனால் அ.தி.மு.க. வினர் வெளிநடப்புச் செய்தனர். பேரவைத் தலைவரின் அறிவிப்பின்படியே மறுநாள் விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மறுநாள் மின்சாரப் பிரச்சினை பற்றிய விவாதம் வருவதற்கு முன்பு நடைபெற்ற சட்டக் கல்லூரி மாணவர்கள்

மோதல் காரணமான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு மின்சாரப் பிரச்சினை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் அதிலே பேச வேண்டுமென்று அதற்கு முன்தினமே கேட்டுக் கொண்டார்களே என்பதற்காக, முதலமைச்சராக இருந்த நான், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் அறைக்கே அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு ஆகியோரை அனுப்பி அங்கேயிருந்த ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்ற மற்ற அ.தி.மு.க. உறுப்பினர்களையெல்லாம் மீண்டும் அவைக்கு வந்து மின் வெட்டு குறித்த விவாதத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளச் செய்தேன். ஆனால் அ.தி.மு.க.வினர் சபைக்கு வரவில்லை. அவர்கள் வராவிட்டாலும் மற்ற எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லாம் அந்த விவாதத்தில் பங்கேற்றார்கள். கழக ஆட்சியில் பேரவை விவாதங்கள் ஜனநாயக முறைப்படி இப்படித்தான் நடைபெற்றன என்பதற்கு இந்த ஒரு உதாரணம்போதும் என்று நினைக்கிறேன். வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் அவை விவாதத்தில் கலந்து கொள்ளும்படி நேரில் சென்று அழைத்தது தி.மு.கழக ஆட்சியின் பெருந்தன்மையும், அரசியல் பண்பாடும் ஆகும். அமைச்சர் ஆற்காடு வீராசாமி அப்போது பதிலளிக்கும்போது, 2007ஆம் ஆண்டு வரையிலே உபரி மின்சாரம் தமிழகத்திலே இருந்ததைக் குறிப்பிட்டதோடு, அதற்குப் பிறகு மின் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது என்பதையும், அதனைப்போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் விளக்கினார். அந்தப் பதிலில், “நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்களே டெல்லிக்குச் சென்று, பிரதமரைச் சந்தித்து, அன்னை சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து, தமிழ் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டபோது, 300 மெகாவாட் மின்சாரத்தை உடனடியாக முதலமைச்சர் அவர்கள் சென்னைக்கு வந்து இறங்குவதற்கு முன்னாலேயே கொடுத்தார்கள். அதைப் போலவே அடுத்து இரண்டு மாதங்கள் கழித்து நான் (ஆற்காடு வீராசாமி) டெல்லிக்குச் சென்று மின் துறை அமைச்சரைச் சந்தித்து, மேலும் அதிகமாக மின்சாரம் வேண்டும் என்று கேட்டபோது, அப்போதும்

300 மெகாவாட் மின்சாரம் உடனடியாக வழங்கப்படும் என்று அறிவித்தார்” என்று குறிப்பிட்டு, இதுவும் அவை நடவடிக்கைக் குறிப்பிலே உள்ளது.

ஆகவே “அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்!” என்பது பழமொழி! அப்போது முதல் அமைச்சராகிய நானும், மின் துறை அமைச்சரும் நேரில் சென்று கோரிக்கை வைத்ததால் உடனடியாக மின்சாரம் கிடைத்தது என்பதற்காகச் சொல்கிறேன்.

தற்போதுள்ள மோசமான மின் வெட்டுக்குக் காரணமே முந்தைய தி.மு.க. அரசுதான் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா, பேரவையில் சொல்லியிருக்கிறார். தி.மு.க. ஆட்சி நடத்தியபோது தற்போது உள்ளதைப் போல 15 மணி நேரம் மின் வெட்டா இருந்தது என்று கேட்டால் இல்லை, இல்லவே இல்லை.

மின் தட்டுப்பாடு நிலைமைக்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று ஒரு சில எதிர்க்கட்சிகள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என்று முதல்அமைச்சர் சொல்லியிருக்கிறார். மின் தட்டுப்பாடு நிலைமைக்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று சில எதிர்க்கட்சிகள் அல்ல - தமிழ்நாட்டிலே உள்ள மக்கள் அனைவரும், ஒருமுகமாக இந்த மின் வெட்டுக்கும், அதைச் சமாளிக்க முடியாத இயலாமைக்கும் இந்த அ.தி.மு.க. அரசுதான் காரணம், காரணம் என்று அய்யம் திரிபற அழுத்தந் திருத்தமாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறைக்கு, ஏற்கனவே இருந்த தி.மு.க. அரசுதான் காரணம் என்கிறாரே முதல் அமைச்சர், அப்படியென்றால் 1991 முதல் 1996 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1,302 மெகாவாட் மின் நிறுவு திறனும், 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2,518 மெகாவாட் மின் நிறுவு திறனும் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே, இதற்கு மட்டும்; அவருடைய அந்த ஆட்சிக் காலத்திற்கு முன்பு நடைபெற்ற தி.மு.கழக ஆட்சி காரணம் இல்லையா? பற்றாக்குறை என்றால் கடந்த கால ஆட்சி தான் காரணம், மின் உபரி என்றால் அதற்கு மட்டும் கடந்த கால ஆட்சி காரணம் இல்லையாம்! இதற்குப் பெயர்தானே விதண்டாவாதம் என்பார்கள்!

2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது, மின் தட்டுப்பாடே தமிழகத்தில் இல்லை என்று ஜெயலலிதா சொல்கிறாரே, அதற்குக் காரணம் 2001 ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற தி.மு. கழக ஆட்சியின் செயல்பாடுகள் அல்லவா? கழக ஆட்சியில் அப்போது மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணத்தால்தான் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் மின் தட்டுப்பாடே தமிழகத்தில் இல்லாத நிலை ஏற்பட்டது. இப்போதும்கூட, கடந்த கால தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் எல்லாம் முழுமை அடைந்து அவற்றிலிருந்து மின் உற்பத்தி கிடைத்திருக்குமேயானால், தற்போதுள்ள மின் பற்றாக்குறை இருக்காது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்சாரத்தில் உபரி மாநிலமாக இருந்தது என்று சொல்கிற முதல் அமைச்சர், தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி 3-4-2007 அன்று அவையில் பேசியதையும் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது அவர் என்ன சொன்னார்? “....நாம் மின்சார உற்பத்தியிலே உபரி மாநிலமாகத்தான் இருக்கிறோம். இந்தியாவிலேயே மின்சார உற்பத்தியிலே உபரி மாநிலமாக இருப்பது தமிழ்நாடு மட்டும்தான். இப்போது மராட்டிய மாநிலத்திற்கு உபரி மின்சாரத்தை விற்பனை செய்கிறோம். பஞ்சாப் மாநிலத்திற்கு விற்பனை செய்கின்றோம்...” என்றெல்லாம் பேசியிருப்பதில் இருந்தே, கழக ஆட்சிக் காலத்திலும் மின்சாரத்தில் தமிழகம் உபரி மாநிலமாகத்தான் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?

கடந்த தி.மு.கழக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது என்று ஒரு குறைபாட்டை ஜெயலலிதா சொல்கிறார். மக்களின் தேவைக்காக, நாட்டை இருண்ட நாடாக ஆக்காமல் இருக்க, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகக் கழக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப் பட்டிருக்கலாம். உரியதைச் செய்து மக்கள் அல்லல்படாமல் பாதுகாப்பதுதான் ஒரு நல்லரசு.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் வி.பாலாஜி அவர்கள் தாக்கல் செய்த மனுவிலேயே; தமிழ்நாடு மின் வாரியம் 1100 மெகாவாட் மின்சாரம் வாங்க பல்வேறு மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும், ஆனால்

மாநிலங்களுக்கிடையே மின்சாரம் தடையின்றி கொண்டு வரப் போதுமான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை; அதனால் அந்த மின்சாரம் வரவில்லை என்றும், மின் கடத்தி இடைவழிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நமது முதலமைச்சர் இந்த வழக்கைத் தொடுப்பதற்கு முன்பு பிரதமருக்கு மின்சாரம்கோரி கடிதம் ஒன்றை 24-10-2012 அன்று எழுதியதற்குப் பிறகு, மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் திரு.கே.சி. வேணுகோபால் அவர்கள் கூறும் போது, “மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான மின் வழித்தடத்தில் பிரச்சினை உள்ளது. தற்போதுள்ள மின் வழித் தடத்தில் கொண்டு வந்தால் கடும் மின்சார இழப்பு ஏற்படும். எனவே ரெய்ச்சூர் வழியாக புதிய மின் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய மின் வழித்தடம் அமைக்கும் பணி வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரிக்குள் நிறைவுபெறும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக தமிழகத்துக்கு வழங்க இயலாது. மத்திய மின் தொகுப்புக்குக்கொண்டு சென்று அதிலிருந்து எந்த மாநிலத்துக்கு எவ்வளவு கொடுப்பது என்பதைப் பிரதமர் முடிவு செய்வார்” என்று கூறியிருக்கிறார்.

தற்போது தமிழக அரசின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் (டான்ஜெட்கோ) மூத்த அதிகாரி ஒருவரே “டெக்கான் கிரானிக்கல்” நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில்,

“தேசிய மின் இணைவமைப்பிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யவோ, தெற்கு மின் இணைவமைப்பில் வழியில் தற்போதுள்ள நெரிசல் நீங்கி சுலபமாவதற்கோ, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழகம் காத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுவை மாநிலங்கள் அடங்கிய தெற்கு மின் இணைப்பு; தேசிய மின் இணைவமைப்புடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. தெற்கு மின் இணைப்பை; தேசிய மின் இணைவமைப்பின் பகுதியோடு இணைப்பதற்காக இந்திய மின்சார மின் இணைவமைப்புக் கார்ப்ப

ரேஷன் கர்நாடகாவிலுள்ள ரெய்ச்சூருக்கும், மகாராஷ்டிராவிலுள்ள ஷோலாப்பூருக்கும் இடையில் 800 கிலோ வோல்ட் மின் கடத்தி இணைவமைப்பை அமைத்து வருகிறது” என்று அந்த அதிகாரியே விளக்கினார். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்திக்காக என்னென்ன திட்டங்கள் தொடங்கப்பட்டன என்பது பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா தனது பேச்சில் ஏன் தெரிவிக்கவில்லை என்று நான் கேட்டதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் சில திட்டங்களின் பெயர்களைச் சொல்லியிருக்கிறார். நான் முதல்வரிடம் தெரிந்து கொள்ள விரும்பியது, அவருடைய ஆட்சிக் காலத்தில் எந்தெந்த மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன, அவற்றிலிருந்து எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்ற விவரங்களைத் தான்! ஆனால் அவர் என்ன பதில் அளித்திருக்கிறார் என்றால், அவரது ஆட்சியில் வல்லூரில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை தேசிய மின் கழகத்துடன் இணைந்து நிறுவிட 12-7-2002 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்.ஓ.யு.) கையெழுத்திட்டோம் என்று சொல்லியிருக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்.ஓ.யு.) கையெழுத்துப் போடுவதுதான் மின் உற்பத்திக்கான தொடக்கமா? 2002இல் புரிந்துணர்வில் கையெழுத்திட்டார்கள் என்றால், அதற்குப் பிறகு 2006ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சிதானே நடைபெற்றது. அந்த நான்கு ஆண்டுகளில் அந்தத் திட்டத்தை ஏன் தொடங்கவில்லை? புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும், ஒப்புதல் வழங்குவதும் மின் உற்பத்திக்கான திட்டங்களைத் தொடங்கியதாக அர்த்தம் ஆகாது. ஜெயலலிதா தனது அறிக்கையில், அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, புதிய மின் திட்டங்களை முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததன் காரணமாக - 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம், மற்றும் 500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூர் மின் திட்டத்தின் முதல் அலகு டிசம்பர் 2012இல் இருந்தும், 500 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் மின் திட்டத்தின் இரண்டாவது அலகு மார்ச் 2013இல் இருந்தும், 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வட சென்னை அனல்மின் திட்டத்தின் முதல் அலகு ஏப்ரல் 2013இல் இருந்தும் முழு உற்பத்தியைத் தொடங்க

இருக்கின்றன, இவைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 1,900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

நான் கேட்க விரும்புவது - அம்மையார் இங்கே சொல்லியிருக்கின்ற இந்த மின் திட்டங்கள் அனைத்தும் எந்த ஆட்சியில், யாரால் தொடங்கப்பட்டன? தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள்தானே இவை! எனவே தமிழ்நாட்டிற்கு இந்த 1,900 மெகாவாட் மின்சாரம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து கிடைப்பதுதான் என்பதை ஜெயலலிதா தனது பேச்சிலேயே ஒப்புக் கொள்கிறார் என்று தானே பொருள்.

மேலும் ஜெயலலிதா தனது உரையில் - 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டத்தின் முதல் அலகு ஏப்ரல் 2013இல் இருந்தும், 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டத்தின் இரண்டாவது அலகு மே 2013இல் இருந்தும் முழு உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார். இந்தத் திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தான். இதில் வடசென்னை முதல் அலகு 18-2-2008 அன்றும், இரண்டாம் அலகு 16-8-2008 அன்றும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டவைகளாகும். கழக ஆட்சியில் இந்தத் திட்டங்கள் ஆரம்பித்த காரணத்தால், இதன் மூலம் 1,200 மெகாவாட் மின்சாரம் 2013ஆம் ஆண்டிலே தமிழகத்திற்குக் கிடைக்கவுள்ளது.

ஜெயலலிதா நேற்று பேரவையில் பேசும்போது, தனது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மின் திட்டங்களைக் காழ்ப்புணர்வோடு தி.மு.கழக ஆட்சியில் தொடராமல் விட்டதால்தான் தற்போது மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். தொடங்கிய சத்துணவுத் திட்டத்தை மேலும் விரிவாகவும், முனைப்பாகவும் நடத்திக் காட்டிய ஆட்சிதான் கழக ஆட்சி. வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஒரு மின் திட்டத்தை தி.மு.கழக ஆட்சியில் 26-6-2007 அன்று தொடங்கினோம் என்று நான் எழுதியிருந்தேன். அந்தத் திட்டத்திற்கு ஜெயலலிதா ஆட்சியிலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்; ஏற்றுக் கொள்கிறேன். அந்தத் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியிலே ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டம்

என்பதற்காக, தி.மு.கழக ஆட்சியிலே அதைத் தூக்கிப்போட்டு விட்டோமா? அந்தத் திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்தியிருக்கிறோம் என்பதற்கான உதாரணம்தான் இது. ஆனால் ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்காக காழ்ப்புணர்வோடு நாங்கள் செயல்படுத்தவில்லை என்று சொல்லியிருக்கிறார். இப்படியெல்லாம் முரணான பல தகவல்களை இன்றைய தமிழக முதலமைச்சர் கூறி, தமிழ்நாட்டு மக்களை இன்னும் எத்தனைக் காலம் இப்படி ஏமாற்றுவார்?

குஜராத்திலிருந்து மின்சாரம் வாங்கிட ஒப்பந்தம் போட்டதைப் பற்றி - அப்படி வாங்கினால், அதைத் தமிழகத்திற்குக் கொண்டுவர முடியுமா என்பதைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா அரசு ஒப்பந்தம் போட்டதைப் பற்றி நான் எழுதியதற்கு; ஒப்பந்தம் போட்ட பிறகுதான் மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது எனக்குத் தெரியாதா என்று கேட்டிருக்கிறார். மத்திய அரசுக்கு விண்ணப்பிப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை. ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாக, அந்த மின்சாரத்தை நாம் வாங்கினால், அதைத் தமிழகத்திற்குக் கொண்டுவர இயலுமா என்பதைப் பற்றி ஏன் முன் ஆலோசனையுடன் செயல்படவில்லை என்றுதான் கேட்டிருந்தேன்.

2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. ஆட்சி - ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி - தமிழகத்தில் நடைபெற்றபோது மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத நிலைதான் நிலவியது என்று பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். ஆனால் நான் என்னுடைய “உடன்பிறப்பு” கடிதத்தில் 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சி தானே நடைபெற்றது, அப்போது மின்வெட்டு இருந்தது உண்மையா இல்லையா என்றுதான் கேட்டிருந்தேன். ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடைபெற்ற அந்தக் காலக்கட்டத்தில் 1991 செப்டம்பர் மாதம் 1ந்தேதி முதல் 30 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம் வரையிலே மின் வெட்டு இருந்தது உண்மை. மறுக்க முடியுமா? அதைப் போலவே அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, கிட்டத்தட்ட ஆறு முறை மின்சாரவெட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 1982இல் நான்கு நாட்களுக்கு 100 சதவிகிதம் மின்சாரவெட்டு இருந்தது.

“பல்வேறு மின் திட்டங்கள் மூலமாக 2014ஆம் ஆண்டுக்குள் சுமார் 7000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதற்கு தி.மு.க. அரசு வழி செய்ததாக திரு. கருணாநிதி கூறியிருப்பது வெறும் கற்பனைக் கதை” என்று ஜெயலலிதா பேரவையில் சொல்லியிருக்கிறார். 13-11-2008 தேதிய பேரவையின் நடவடிக்கைக் குறிப்பை எடுத்துப் படித்துப் பார்த்தாலே நான் சொன்னது உண்மையா, கற்பனைக் கதையா என்பதைப் புரிந்து கொள்ளலாம். வடசென்னை 1,200 மெகாவாட் மேட்டூர் 600 மெகாவாட் தூத்துக்குடி 1,000 மெகாவாட் உடன்குடி 1,600 மெகாவாட் வல்லூர் 1,200 மெகாவாட் ஜெயங்கொண்டம் 1,500 மெகாவாட் ஆக மொத்தம் இதிலிருந்து 7,100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க கழக ஆட்சியில் வழிவகை காணப்பட்டது. அன்றையதினம் அவையில் உரையாற்றிய மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களே, 7,400 மெகாவாட் மின்சாரத்தை மத்திய, மாநில அரசுகள் மூலமாக உற்பத்தி செய்யவிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்தத் திட்டங்களில் ஒன்றிரண்டு செயல்படாமல் விட்டுப் போயிருக்கலாம். ஆனால் கழக ஆட்சியில் வழி வகை காணப்பட்டதைத்தான் நான் சொல்லியிருந்தேன். நான் சொல்வது கற்பனைக் கதையா? மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

அன்புள்ள, மு.க. 3-11-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 169–178. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்