அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3668

முரசொலி கடிதங்கள் · 3668

ஐ.நா. பயண வெற்றிக்கு; அனைவரும் வாழ்த்துவோம்!

நாள் 1.11.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3668. ஐ.நா. பயண வெற்றிக்கு; அனைவரும் வாழ்த்துவோம்!

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் தளபதி தம்பி மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்ற கழகக்குழுத் தலைவர் தம்பி டி.ஆர்.பாலுவும் இன்று (31-10-2012) விடியற்காலையில் அமெரிக்காவுக்கு “டெசோ” இயக்கத்தின் சார்பாக - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூதுவர்களாக - புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். நேற்றிரவு இருவரும் என்னிடம் வந்து விடை பெற்றுச் சென்றார்கள். அமெரிக்க நாட்டில் ஐ. நா. சபையில் அவர்கள் அளித்திட இருக்கின்ற அறிக்கைகளின் நகல்களையும், சி.டி. போன்றவற்றையும் என்னிடம் காட்டியதோடு, எனக்கும் அதிலே ஒரு பிரதியை அளித்துச் சென்றார்கள். இரவு முழுவதும் திரும்பத் திரும்ப அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானும், “டெசோ” உறுப்பினர்களும் அமர்ந்து வரி வரியாகப் படித்து, விவாதித்து, தக்கத் திருத்தங்களைச் செய்து, மிகுந்த கவனத்தோடு தயாரிக்கப்பட்ட அறிக்கைதான் அது. 4-9-2012 அன்று செய்தியாளர்களுக்கு நான் அளித்த பேட்டியில், “டெசோ” மாநாட்டுத் தீர்மானங்களை எல்லாம் நாங்கள் டெசோ மூலமாக ஐ.நா. மன்றத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம், இன்னும் ஓரிரு வார காலத்தில் ஐ.நா. மன்றத்தில் அந்தத் தீர்மானங்களை மு.க.ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் சென்று கொடுப்பதாக ஏற்பாடுகள் நடை பெறுகின்றன. அதற்கான தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் எந்தத் தேதியில் இருவரும் ஐ.நா. மன்றத்திற்கு அந்தத் தீர்மானங்களைக் கொண்டு சேர்க்கவிருக்கிறார்கள் என்பதை வெளியிடுகிறேன்” என்று சொல்லியிருந்தேன். அதன்படியேதான் இருவரும் இன்று ஐ.நா. மன்றத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை “டெசோ” இயக்கத்தின் சார்பில் கொண்டு சேர்க்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.

பொருளாளர் தளபதி தம்பி மு.க. ஸ்டாலின் பற்றி நான் எதுவும் புதிதாக எழுதத் தேவையில்லை. நெருக்கடி நிலை நேரத்தில் மு.க. ஸ்டாலின் “மிசா” சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டபோது, நான் கழகத் தலைவர் என்ற நிலையிலே அல்ல, அவருடைய தந்தை என்ற முறையில் தனியாக அமர்ந்து கலங்கினேன். அப்போது ஸ்டாலின் திருமணமாகி ஐந்து மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், ஸ்டாலினின் மனைவி கண்ணீர் நிறைந்த கண்களோடு “மாமா” என்று கதறிய போது, பதில் சொல்ல முடியாமல், ஆறுதலும் வழங்கிட வார்த்தை கிடைக்காமல் வாடித்தவித்தேன். இருந்தாலும் என் மகனும், ஜனநாயக வழியில் பொதுப்பணி ஆற்றியதற்காகச் சிறைக்குச் செல்கிறாரே என்பதை எண்ணி உள்ளுக்குள் பெருமிதமே ஏற்பட்டது. பின்னர் ஸ்டாலின் மேயராகி, சட்டப்பேரவை உறுப்பினராகி, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகி, தமிழகத்தின் துணை முதலமைச்சராகி, தற்போது கழகத்தின் பொருளாளராகத் தமிழகமெங்கும் நான் செல்ல வேண்டிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்று கழகத்தினரின் வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் நாளெல்லாம் கழகம், கழகம் என்று பம்பரம்போல் சுற்றிச் சுழன்று பாடுபடுவதைப் பார்த்து; இளம்வயதில் நாம் உழைத்ததைப் போலவே நம் மகனும் உற்சாகத்தோடு உழைப்பதை எண்ணி; மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி அடையும் நான்; நேற்றைய தினம் அமெரிக்க நாட்டிற்கு ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகப் பயணம் மேற்கொள்ள என்னிடம் விடை பெற்றுக் கொண்டபோது; “மிசா” கைதியாக ஸ்டாலின் சிறைக்குப் புறப்பட்ட நினைவும், சிறைச்சாலையிலே அடிக்கப்பட்ட கையிலே உள்ள காயத்தை மறைத்து முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு என்னைச் சந்தித்த அந்த நினைவும்தான் என் மனசைச் சூழ்ந்து கொண்டிருந்தன. ஸ்டாலின் பிறந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட - “மிசா” கைதியாக சிறைக்குள் இருந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட - ஈழத் தமிழர்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறந்திட வேண்டுமென்பதற்காக, அவர் பயணம் மேற்கொள்வதிலே எனக்கு தனிச் சிறப்பான மகிழ்ச்சி ஏற்பட்டது. தம்பி டி.ஆர். பாலுவைப் பற்றியும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் சென்னையில் “ஸ்கூட்டரில்” சுற்றிய காலத்திலிருந்து, கழகம், கழகம் என்று உழைத்ததை நான்

அறிவேன். அவருடைய மாமனார் செங்குட்டுவன் சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்து பணியாற்றினார். பின்னர் தம்பி ஆர்.டி. சீத்தாபதி மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த போது அவரிடம் துணைச் செயலாளராக இருந்து, கழகப் பணிகளைக் கற்று, பின்னர் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஆனவர். தம்பி முரசொலி மாறனின் பேரன்பைப் பெற்றவர். அவரிடம் பாராளுமன்றப் பணிகள் பற்றி பாடம் கற்றவர். நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவராக இன்று டி.ஆர்.பாலு சிறப்பாகப் பணியாற்றுகிறார் என்றால், அதெல்லாம் மாறனிடம் பெற்ற பயிற்சிதான்! என்ன, கொஞ்சம் பிடிவாதக்காரர், கோபக்காரர். அதுவும் என் முன் கோபப்படுவதைப்போலக் காட்டிக் கொள்வார். அவரும் என்னிடம் நேற்று விடைபெற்றார். அண்ணா அறிவாலய வாசலில் சாலையில் காவலர்கள் சூழ்ந்து கொண்டு அவரைத் தாக்கிய காட்சியும் - என்னை அ.தி.மு.க. அரசு கைது செய்தபோது, காவலர்களிடம் அவர் போராடி அடிகளைத் தாங்கிக் கொண்ட காட்சியும்தான் நேற்று எனக்குத் தெரிந்தது. அவரும் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கான என்னுடைய கோரிக்கையைத் தாங்கி ஐ.நா. மன்றத்திலே அதனை வழங்குவதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர்களின் இந்தப் பயணம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வாழ்த்துகள் மட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள அத்தனை தமிழர்களும் இந்தப் பயணம் வெற்றி பெறவும், ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் காணவும் அனைவரும் வாழ்த்த வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

12-8-2012 அன்று தமிழக அரசின் எதிர்ப்புக் கிடையில் “டெசோ” மாநாட்டினை சென்னையிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்திற்கிடையே மிகச் சிறப்பாக நடத்தி அதிலே முக்கிய பல தீர்மானங்களை வடித்தெடுத்தோம். அங்கே மக்கள் மத்தியிலே அந்தத் தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுவதற்கு முன்பு உலகத் தமிழர்களின் பிரதிநிதிகளையெல்லாம் காலையிலே அழைத்து நடத்திய ஆய்வரங்கில் நன்றாக விவாதித்த பிறகுதான் தயாரித்தோம். அந்தத் தீர்மானங்களை “டெசோ” அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டிலே

நிறைவேற்றியதோடு இருந்து விடாமல், அந்தத் தீர்மானங்களை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு ஒரு கடிதமும் நான் எழுதினேன்.

அந்தக் கடிதத்தில் இலங்கையிலுள்ள தமிழர்கள் கோரி வரும் அரசியல் தீர்வை, அவர்களே முடிவு செய்ய அவர்களுக்கு உரிமைகள் வழங்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச்சபையிலும், மனித உரிமைகள் ஆணையத்திலும் கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தேன். கடிதத்தை பிரதமரிடம் கடந்த 21-8-2012 அன்று கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இணைந்து நேரில் கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக, “டெசோ” சார்பிலும்; கழகத்தின் சார்பிலும் நேரடியாக ஐ.நா.மன்றத்திற்கே நமது கோரிக்கையைக் கொண்டு செல்கின்றோம். அதற்காகத்தான் இன்று தம்பிகள் ஸ்டாலினும், பாலுவும் அமெரிக்கப் பயணம் புறப்பட்டிருக்கின்றார்கள்.

நான் அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்து விட்டு பிரதமர் அவர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்ததோடு, ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா நமது வேண்டுகோளை ஏற்று ஆதரித்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்கள். பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அளித்தனர்.

நமது கழக உறுப்பினர்களிடம் நேரில் உறுதி அளித்ததோடு, என்னுடைய கடிதத்திற்கு எனக்குப் பதில் எழுதிய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், நல்வாழ்வுக்கும் தேவையான பணிகளில் இந்திய அரசு அக்கறை காட்டி வருகிறது என்றும், ஈழத் தமிழர்களின் மறு குடி அமர்வு மற்றும் மறுவாழ்வுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கிச் செயல்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அந்தக் கடிதத்தில், அதிகாரப் பகிர்வு குறித்து ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துச்

செல்ல வேண்டிய தன் அவசியத்தையும் இலங்கை அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம் என்றும், எதிர்காலத்தில் ஈழத் தமிழர்கள் சம உரிமை, கெளரவம், சமநீதி மற்றும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்கிட இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

கடந்த 3-10-2012 அன்று என்னுடைய தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ் ஈழம் ஆதரவாளர் (டெசோ) அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமரின் கடிதத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட ஐ.நா. மன்றத்தின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன் மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப் புள்ளி வைத்து, ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், தங்களுடைய உரிமைகள் குறித்து விவாதித்துத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், “டெசோ” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், அதன் உறுப்பினர்களான கழகப்பொதுச் செயலாளர் பேராசிரியர், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோருடன் நான் விரிவான முறையிலே விவாதித்து, தயாரிக்கப்பட்ட - ஈழத் தமிழர்கள் அரசியல் உரிமைகளையும், வாழ்வுரிமைகளையும் குறித்த - எனது கோரிக்கை மனுக்களை நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அவர்களிடமும் - ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க முடிவெடுத்து; இந்தக் கோரிக்கை மனுக்களை என்னுடைய சார்பிலும், “டெசோ” அமைப்பின் சார்பிலும், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் நேரில் சென்று அளிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இன்றையதினம் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக 1956ஆம் ஆண்டிலிருந்து தி.மு.கழகம் தொடர்ச்சியாக மேற்கொண்ட எத்தனையோ முயற்சிகளில், இந்தப் பயணமும் ஒன்றாக வரலாற்றுப் பதிவேட்டில் இடம் பெறும். இந்தப் பயணம், பயனுள்ள பயணமாக, வெற்றிப் பயணமாக அமைந்து, இலங்கைத் தமிழர் வாழ்வில் அமைதியும், அனைத்து ஜனநாயக உரிமைகளும் கிடைக்க வேண்டுமென்று உலகத் தமிழர்கள் எல்லாம் விரும்புவதைப் போலவே நாமும் பெரிதும் விரும்புகிறோம். ஆனால் நமது தமிழர்களிலேயே ஒரு சிலர் நமது இனப் பகைவர்களை எதிர்க்கிறார்களோ இல்லையோ, நம்மை எதிர்ப்பதிலேதான் இன்பம் காணுகிறார்கள். இலங்கை அரசு, நமது தமிழர்கள் போரிட்டு மாண்ட இடத்திலே வெற்றிச் சின்னம் அமைத்திருப்பது குறித்து 24-10-2012 “முரசொலி”யில் நான் கடிதம் எழுதியிருந்தேன். நமது தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில் 29-10-2012 அன்று சென்னை பெரியார் திடலில் அதற்காகக் கூட்டம் ஒன்றையே நடத்தி, அதில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் “ஈழத்தமிழர்கள் பகுதியில் போர் நினைவுச் சின்னம் என்பது சிங்கள அரசின் வெறிச் சின்னமே தவிர வெற்றிச் சின்னம் அல்ல” என்று பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர், தம்பி பேராசிரியர் சுப. வீரபாண்டியன், “அன்று கலைஞர் தலைமையில் “டெசோ” உருவாக்கப் பட்டது - போராளிகள் பக்கம் நின்று; இன்று கலைஞர் தலைமையில் “டெசோ” உருவாகியிருப்பது ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற! ஆனால் இன்றையதினம் ஈழத் தமிழர்களுக்காக என்று சொல்லப்படும் மேடைகள், ஈழத் தமிழர்களுக்காக என்ற நிலை மாறி, கலைஞரையும், தி.மு.க. வையும் தூற்றுவது என்கிற அளவுக்கு குறுகிவிட்டதே?” என்று வருத்தப்பட்டிருக்கிறார். சிலர் என்னைத் தூற்றுகிறார்கள் என்பதற்காக நான் என்றைக்கும் வருத்தப்பட்டதில்லை. என்னை இப்போது தூற்றுகிறவர்கள் எல்லாம் முன்பு என்னைப் பாராட்டியவர்கள் தான். நாளை மீண்டும் என்னைப் பாராட்டப் போகின்றவர்கள் தான். இன்றைய நிலையில் அந்த ஒரு சிலர் என்னைத் தாக்கிப் பேசுவதை ஏதோ சந்தர்ப்பவசத்தால், இக்கட்டால், பேசப்படுகின்ற ஒன்று என நினைத்து ஒதுக்கிட வேண்டும். “போற்றுவார் போற்றட்டும்; புழுதி

வாரித் தூற்றுவார் தூற்றட்டும்; என் கடன் பணி செய்துகிடப்பதே” என்பதை மனதிலே செதுக்கி வைத்துக்கொண்டு, சிந்தனையைச் சிதற விடாமல், நாளும் நாளும் நமது நல்ல பணியைத் தொடருவோம்! இங்கேயுள்ள தமிழர்களை மட்டுமல்ல; இலங்கைத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் உணர்வுப்பூர்வமாகக் காப்பாற்றவும், அவர்களை முன்னேற்றவும், நம்மால் முடிந்த பணிகளை முனைப்புடன் தொடருவோம், அதற்கெனவே ஐ.நா. பயணம் மேற்கொண்டுள்ள தம்பிகள் ஸ்டாலின், டி.ஆர். பாலு ஆகியோரின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம்.

அன்புள்ள, மு.க. 1-11-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 162–168. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்