முரசொலி கடிதங்கள் · 3664
சேது திட்டம் வந்தால் செழிப்புறும் தென்னகம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3664. சேது திட்டம் வந்தால் செழிப்புறும் தென்னகம்!
உடன்பிறப்பே,
16-10-2012 அன்று நான் விரிவாக எழுதிய அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்பதை விளக்கி இருந்தேன். கழக மாணவர் அணி சார்பிலும், மற்றும் பல மாவட்டக் கழகங்களின் சார்பிலும் அந்த அறிக்கையினை துண்டு நோட்டீசாக அச்சடித்து தென் மாவட்டங்களில் விநியோகம் செய்யப் போவதாகவும் என்னிடம் தெரிவித்தார்கள். சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு எத்தனை அவசியமானது என்பதைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணி அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் தா. பாண்டியன் அவர்களும், பா.ம.க. சார்பில் நிறுவனர் டாக்டர் திரு. ராமதாஸ் அவர்களும் தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார் அவர்களும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக எழுச்சி நாள் கொண்டாடும்படி 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே ஆணையிட்டு, அதனை நிறைவேற்றியவர்கள் நாம்.
முதலமைச்சராக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது, 1985-1990ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தைச் சமர்ப்பித்தபோது சேது சமுத்திரத் திட்டம் மன்னார் வளைகுடாவை பாக் ஜலசந்தியுடன் இணைப்பதற்கு பாம்பனுக்கு அருகே உள்ள குறுகிய பகுதியில் கப்பல் போக்குவரத்துக் கால்வாயை வெட்டுவதற்கு வகை செய்யும்
திட்டம் என்றும், பயணதூரம், பயண நேரம் ஆகியவை குறையும் என்றும் எடுத்துக் கூறி அத்திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்றும் கூறி இருக்கிறார்.
1981ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராய எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையில் அமைந்த குழு தமிழகத்திற்கு வந்த போது, எனது கோரிக்கையினை ஏற்று, அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., அந்தக் குழுவிடம் சேது சமுத்திரத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். அந்தக் குழு மதுரைக்கும் நெல்லைக்கும் சென்ற போது, கழகத்தின் சார்பில் திரு. வைகோ அவர்கள் அந்தக் குழுவினரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். நாடாளுமன்ற விவாதங்களின் போதும் முரசொலி மாறனும், அவரைத் தொடர்ந்து திரு. வைகோவும் வாதாடி, 2004ஆம் ஆண்டு தேர்தலில் கழகம் ஆதரவு தெரிவித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியிலே அமைந்த போது கப்பல், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தம்பி டி.ஆர். பாலு இத்திட்டத்திற்கு முழு வடிவம் தந்து மிக வேகமாக திட்டப் பணிகள் நடந்தன.
இதற்கிடையே, 8-5-2002 அன்று இந்தியப் பிரதமர் அவர்களுக்கு நான் ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் வருமாறு :-
“அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, வணக்கம்.
தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி இக்கடிதம் தங்களுக்கு எழுதுகின்றேன். இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக வலியுறுத்தி வருகிறது. நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக் குறித்து வலியுறுத்தி உள்ளேன். 23-7-1967இல் சேது சமுத்திரத்தின் ஒரு பிரிவாக உள்ள தூத்துக்குடி துறைமுகத் திட்டம், சேலம் இரும்பாலைத் திட்டம் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கோரி முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறிவித்தார். இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா
கால்வாய் போன்று சிறப்பைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும், இத்திட்டம் நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்டது என்பது கவலைக்குரிய செய்தியாகும். மத்தியில் ஆளும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இத்திட்டத்தை நிறைவேற்றிடவும், இத்திட்டத்தின் சாத்தியக் கூறினை ஆராய பணம் ஒதுக்கீடு செய்தது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இந்தச் சேதுக் கால்வாய் திட்டம் விரைவாகச் செயல்படுத்த வேண்டுமென்ற அடிப்படையில் இக்கடிதம் மூலமாக தங்களை வலியுறுத்துகிறேன்.
சேது கால்வாய் பற்றிய விவரங்களையும், அதனால் பொதுவாக இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்படும் பயன்களையும் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். சேதுக் கால்வாய் திட்டம் என்பது, பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும். இத்திட்டத்தை ஆங்கில அரசாங்கத்தின் கப்பல் படையைச் சேர்ந்த கமாண்டர் டெய்லர் என்பவர் 1860ஆம் ஆண்டு உருவாக்கினார். அன்றைக்கு அதனுடைய மதிப்பீடு ரூபாய் ஐம்பது இலட்சமாகும். பின்பு டவுண்ட் ஸ்டன் மற்றும்
சரி. ஜான்கூடே என்பவர்கள் இத்திட்டத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து, இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மெனப் பல வழிகள் வகுத்தனர். ஆனால், ஒரு சாரார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மறுபடியும் 1921ஆம் ஆண்டு சென்னை மாநில அரசு இத்திட்டத்தை வகுத்தும், ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியின்மையால் நிறைவேற்றப்படவில்லை.
1945ஆம் ஆண்டு மறுபடியும் ஆங்கில அரசாங்கம் இத்திட்டத்தைப் பற்றி அறிய ஒரு குழுவை அமைத்தது. ஆனால், இந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு 1955ஆம் ஆண்டு டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார்
தலைமையில், சேதுக் கால்வாய் திட்டத்தைப் பரிசீலிக்க ஒரு குழு இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. “சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், இந்தியாவிற்கு அந்நியச் செலாவணியும், கிழக்கு கடற்கரையோரமாய்க் கப்பல் போக்குவரத்தும் எளிதாக இருக்கும்” என இக்குழு தனது அறிக்கையில் கூறியதோடு, உடனே இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனவும் தெளிவாக இந்திய அரசுக்கு தெரிவித்தது. அதற்கு ரூ. 9.98 கோடி திட்ட மதிப்பையும் அக்குழு வெளியிட்டது. சர். ஏ. இராமசாமி முதலியார் குழுவின் அறிக்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய அரசாங்கம் விட்டு விட்டது. 1963ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது திட்டக் காலத்தில் இந்தச் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென முடிவு செய்தும், இத்திட்டம் செல்லவடிவம் பெறாமல் போய் விட்டது. அதன் பிறகு டாக்டர் நாகேந்திர சிங் குழுவும் (1963ல்) சி.வி. வெங்கடேஸ்வரன் குழுவும் (1965ல்) அமைக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு சி.வி. வெங்கடேஸ்வரன் தலைமையில் ஒரு குழு இத்திட்டத்தை அறிய நியமிக்கப்பட்டது. இந்தக் குழு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சுமார் 37 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஆனால் இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி வருவாய் உள்ளதெனவும் கூறியது. அதன் பின்பு இறுதியாக எச்.ஆர். இலட்சுமி நாராயணன் தலைமையில் ஐவர் குழு ஒன்றும் மத்திய அரசால் 1981-82ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இக்குழு தமிழகமெங்கும் சென்று இத்திட்டத்திற்கான பல்வேறு தரப்பாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.
இத்திட்டத்தின் பயனைப் பற்றி 1981-82ஆம் ஆண்டு மத்திய அரசின் குழு பின்வருமாறு ஆராய்ந்து மதிப்பிட்டது.
1. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் தொடர்ச்சியான கடல் வழிப் போக்குவரத்திற்கு
தற்போது வழி யில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத்தால் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
2. சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடித் துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும். தூத்துக்குடியிலிருந்து பின்வரும் துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும்.
அ. தூத்துக்குடியிலிருந்து சென்னை 434 மைல் (மிச்சப்படும் தூரம்)
ஆ. தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் 376 மைல் (மிச்சப்படும் தூரம்)
இ) தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா - 340 மைல் (மிச்சப்படும் தூரம்)
3. இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலின் எரி பொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி செலவில் சுமார் 130 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.
4. இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி கணிசமான அளவு உயரும். இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, இராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.
5. இக்கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகத்தின் வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம்
பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.
6. இந்தக் கால்வாய் வெட்டப்பட்டால், இந்தியாவின் தெனபகுதியில் அந்நியச் சக்திகள் ஊடுருவாமல் அது ஓர் அரணாக விளங்கும்.
7. இக்கால்வாயின் மூலம் மீன்பிடித் தொழில் தென்னிந்தியாவில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும்.
8. நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருள்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.
9. சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால், புயல் அபாயம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.
10. இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பல பகுதிகளில் இருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது.
11. ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் இக்கால்வாயினால் பெருகி, இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
12. இக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளில் ஈடு செய்து விடலாம்.
13. இத்திட்டம் பொருளாதாரரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமானதாகும். இந்தியாவின் நலன்கருதி உடனடியாக இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப்
போக்குவரத்து அமைச்சகத்தின் 1981-82ஆம் ஆண்டின் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
எனவே பொருளாதாரரீதியாக எவ்வாறெல்லாம் இத்திட்ட தாமதத்தினால் இழப்பு ஏற்படுகிறது என்பதை என் கடிதம் மூலம் தாங்கள் அறிவீர்கள். எனவே பொருளாதார வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகள் வழங்கிடும் இத்திட்டத்தை நாட்டு வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தாங்கள் தலையிட்டு தாமத மில்லாமல் நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.”
என்று, விளக்கமாகவும், விரிவாகவும் எழுதினேன். இக்கடிதத்தை நான் எழுதிய போது தி.மு. கழகம் தமிழகத்திலே ஆளுங்கட்சி அல்ல. இருந்தாலும் தமிழகத்தின் நலன் கருதி இந்தக் கடிதத்தை பிரதமருக்கு நான் எழுதினேன்.
அந்தக் கடிதம் பற்றி 11-5-2002 தேதிய “தினமணி” ஒரு தலையங்கத்தை “தூங்காத கருணாநிதி” என்ற தலைப்பில் எழுதியிருந்தது. அதன் சுருக்கம் வருமாறு :-
“கருணாநிதியின் சுறுசுறுப்பு அலாதியானது. அது எத்தகையது என்பதை அவரது அரசியல் எதிரிகளும்கூட நன்றாக அறிவார்கள். ஆட்சியைப் பறி கொடுத்து ஓராண்டு ஆகிறது. ஆயினும் கருணாநிதியின் வேகமான அரசியல் தடைப்பட்டு விடவில்லை. அநேகமாக நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்சினை மீது அறிக்கையை அவர் வெளியிடத் தவறுவதில்லை. ஏதோ புதிய புதிய பிரச்சினைகளை ஆட்சியாளர்களுக்குக் கிளப்பி விடுவதிலும் அவர் பின்வாங்குவதில்லை. இதற்கிடையே திடீரென சேது சமுத்திரத் திட்டம் கருணாநிதிக்கு நினைவுக்கு வந்து விட்டிருக்கிறது. அவ்வளவுதான், உடனடியாக பிரதமருக்கே நேரிடையாகக் கடிதம் எழுதிவிட்டார். இத்திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் கப்பல் போக்குவரத்து மற்றும் தொழில் வணிக வளர்ச்சிக்குப் பெரிய வாய்ப்பு ஏற்படுவதுடன் தென் தமிழகத்தின் பல முனை முன்னேற்றத்திற்கும் வாய்ப்பிரசாதமாக அமையும் என்பதையும் நினைவுபடுத்தியிருக்கிறார். கருணாநிதி இப்பொழுது ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் பொறுப்புள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் அல்லவா?
அவரால் எப்படி தமிழக நலன்களை மறக்க முடியும்? அதோடு இங்கு அதிகாரத்தில் தி.மு.க. இல்லாவிடினும், டில்லியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகிக்கிறது அல்லவா? எனவே சேதுத் திட்டம் வேகமாக நிறைவேற்றப்படுவதில் தி.மு.க.வும் தனி அக்கறை இருப்பதை கருணாநிதியால் நியாயப்படுத்த முடியும். தூங்காத கருணாநிதியால் சும்மா இருக்க முடியாது. ஆட்சியில் இருந்தால் எதிர்க் கட்சிகளைத் தூங்க விடமாட்டார். எதிர் வரிசையில் இருந்தால் ஆட்சியாளர் - நண்பர்கள் ஆகிய இரு தரப்பையுமே தூங்க விடமாட்டார். “தூங்காமை, கல்வி, துணிவுடைமை” ஆகிய மூன்றும் ஆட்சியாளர்களுக்கு அவசியமான பண்புகள் என்று திருவள்ளுவர் இலக்கணம் வகுத்து இருக்கிறார் அல்லவா? எனவேதான் இந்த அபார சுறுசுறுப்பு!”
உடன்பிறப்பே, இந்தக் கடிதம் என்னைப் பாராட்டி எழுதியிருந்தது என்பதற்காக இப்போது நான் கூறவில்லை. இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியமான திட்டம், அது நிறைவேற்றப்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் எடுத்துக்காட்டினேன். ஆனால் இந்தத் திட்டம் தேவையில்லை என்று தமிழக அரசின் முதல் அமைச்சரே உச்ச நீதிமன்றத்திலே, அதுவும் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவு செய்து திட்டத்தின் 75 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அறிக்கை கொடுத்திருப்பது முறைத்தானா என்பதை அரசியல் கட்சி வேறுபாடுகளை எல்லாம் மறந்து, தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வை ஒருகணம் எண்ணிப் பார்த்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இக்கடிதம்!
அன்புள்ள, மு.க. 21-10-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 133–140. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.