அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3659

முரசொலி கடிதங்கள் · 3659

எழுதுவதை நிறுத்தும் எண்ணம் எனக்கில்லை!

நாள் 28.9.2012சுமார் 9 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3659. எழுதுவதை நிறுத்தும் எண்ணம் எனக்கில்லை!

உடன் பிறப்பே,

அண்மையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் தற்போதுள்ள முக்கிய பிரசினைகளில் “இரட்டை நிலையை நான் கடைபிடித்து வருவதாகவும், ஏமாற்று வித்தையில் நான் கை தேர்ந்தவன் என்பதை ஒரு முறை நிரூபித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இரட்டை நிலைமை எப்போதும் கடைப்பிடிப்பவர் யார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும். எனினும் ஒருவேளை மறந்திருந்தால் அதற்காக ஒன்றிரண்டை மட்டும் நினைவூட்டுகிறேன்.

பேரவையிலே முதல் நாள் ஆத்திரக் கோலத்தில் நீதிபதிகளையெல்லாம் கடுமையாகத் திட்டிவிட்டு, அடுத்த நாளே அதே பேரவையில் முதல் நாள் திட்டியதையெல்லாம் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தவர் ஜெயலலிதா. இவர்தான் எனக்கு “இரட்டை நாக்கு” என்கிறார். சிரிப்புத்தான் வருகிறது.

சர்க்காரியா கமிஷன் விசாரணையிலிருந்து தப்பிக்க 1972ஆம் ஆண்டு இந்திரா காந்தியை அணுகி காவேரி வழக்கினை நான் வாபஸ் பெற்றேன் என்று பேரவையில் தெரிவித்தார். உடனே திரு. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எழுந்து நீங்கள் சொல்வது தவறு, காவேரி வழக்கினை வாபஸ் பெற்றுப் பல ஆண்டுகளுக்கு பிறகு 1977இல் தான் சர்க்காரியா கமிஷனே வந்தது என்று தெளிவாக்கியதும் “தவறிச் சொல்லி விட்டேன், ‘டங் ஸ்லிப்’” என்று ஆங்கிலத்தில் கூறினார். சிரிக்காமல் இருக்க முடியுமா?

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று இந்து எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தார். விடுதலைப் புலிகளுக்காகப் கருணாநிதி எதுவுமே செய்யவில்லை

என்றார். பிறகு சில நாட்களுக்கெல்லாம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்று பேரவையில் இவரே தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். இது இரட்டை நிலையா? அல்லவா? இவ்வளவு ஏன்? 8-5-1995 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், சசிகலா மீது யாராவது குறை கூற முற்படுவார்களேயானால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு 27-8-1996 தேதிய அறிக்கையில் சசிகலாவோடு எனக்கு இருந்த தொடர்புகள் அனைத்தையும் இந்த நாள் முதல் விலக்கிக் கொள்கிறேன் என்றும் அறிவித்துவிட்டு, மீண்டும் ஒரு முறை அவரை ஒன்று சேர்த்துக் கொண்ட இதற்குப் பெயர் இரட்டை நிலையா? நிலையில்லாத நிலையா? சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் பிரச்சினையிலே போராட்டக்காரர்களையெல்லாம் தலைமைச் செயலகத்திற்கே ஜெயலலிதா அழைத்துப் பேசினாரா? இல்லையா? அவர்களையெல்லாம் பிரதமரைச் சந்திக்க தமிழக நிதியமைச்சர் துணையோடு அனுப்பி வைத்தாரா இல்லையா? போராட்டக்காரர் களுக்கு ஆதரவாக அவசர அவசரமாகத் தமிழக அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, கூடங்குளம் ஆலைப் பணிகளைத் தொடரக் கூடாது என்று தீர்மானமே நிறைவேற்றி, பிரதமருக்கு அனுப்பி வைத்தாரா இல்லையா? ஆனால் தற்போது என்ன நிலை? கூடங்குளம் போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்க; படாதபாடு படுகிறாரா இல்லையா? இதற்குப் பெயர் இரட்டை நிலையா இல்லையா? ஏமாற்று வித்தையில் கைதேர்ந்தது நானா அவரா? தமிழ்நாட்டு மக்களே, பத்திரிகையாளர்களே, நீங்களே கூறுங்கள்! குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது யார்? ஜெயலலிதாவா? நானா? தமிழ்நாட்டிலே எந்தப் பிரச்சினை என்றாலும், உடனே காவேரியில் துரோகம் செய்தது கருணாநிதி என்ற ஊசிப்போன ஒப்பாரியை எத்தனையோ ஆண்டுக் காலமாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். அதற்கு நானும் எத்தனை முறைதான் பதில் கூறுவது? நான் துரோகம் செய்து விட்டதாகவும், முதல் துரோகம், இரண்டாவது, துரோகம் என்றெல்லாம் பட்டியலிட்டிருக்கிறார். அவர் குற்றஞ்சாட்டியிருப்பதால் நான் பதில் சொல்கிறேன். மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். எம்.ஜி.ஆர். செயல்பட

முடியாதவராகி விட்டார், அவரை நீக்கிவிட்டுத் தன்னை முதலமைச்சராக ஆக்கும்படி பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதியவர், துரோகத்தைப் பற்றிப் பேசுவதும், அறிக்கை விடுவதும், தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போலத்தானே?

“ஹேமாவதி அணைக்கட்டு கட்டுவதில் தமிழக அரசுக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை” என்று நான் கூறியது முதல் துரோகமாம்! இதற்கு 2-5-2002லேயே நான் “முரசொலி”யில் பதிலளித்து விட்டேன். அதாவது ஹேமாவதி அணைக்கட்டு, கபினி அணைக்கட்டு ஆகியவை எல்லாம் கர்நாடக அரசினால் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில்தான்; பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.கழக ஆட்சியே அமைந்தது! அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 8-7-1971 அன்று பேரவையில் நான் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானமே ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, சொர்ணவதி ஆகிய அணைத் திட்டங்களைத் தமிழ்நாடு அரசுக்கு முறைப்படி தெரிவித்து தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் பெறாமல் நிறைவேற்றியது குறித்து இப்பேரவை தனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது என்பதுதான்.

அடுத்து, எனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக இரு அவைகளுக்கும் தெரிவிக்காமல் நான் வழக்கை வாபஸ் பெற்றதாகவும், அது ஒரு துரோகம் என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். பொன்னையனும் ஜெயலலிதாவும் இதே பொய்யைப் போட்டி போட்டுக்கொண்டு சட்டமன்றத்தில் கூறி அந்தப் பொய்யை மறுத்து தி.மு.க. சார்பில் அவர்கள் இருவர் மீதும் உரிமைப் பிரச்சினை கொண்டு வந்தபோது, அதை ஜெயலலிதா சமாளித்து, வழக்கு வாபஸ் பற்றிய அ.தி.மு.க.வினரின் குற்றச்சாட்டு கொஞ்சமும் வாய்மையற்றது; நஞ்சு கலந்த வஞ்சகப் பிரச்சாரம் என அப்போதே நிரூபிக்கப்பட்டது.

பிரதமர் இந்திரா காந்தியின் வாக்குறுதிப்படி வழக்கு திரும்பப் பெறப்பட்டது. அதுவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி மீண்டும் தமிழக அரசு விரும்பினால் அந்த வழக்கைத் தொடரலாம் என்ற நிபந்தனையோடுதான் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் பலன் காண முடியாமல் போனதால்தான்

நடுவர் மன்றம் வேண்டுமென்ற முடிவுக்கு தமிழக அரசு வந்தது. பிரதமர் வி.பி. சிங் அவர்கள் காலத்தில் கழக அரசின் முயற்சியின் காரணமாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இடைக்கால ஆணையும் நடுவர் மன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தான் ஜெயலலிதா, “தமிழகத்திற்குத் துரோகம் இழைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள கருணாநிதி” என்று அவருக்கே உரிய பண்பார்ந்த(?) வார்த்தைகளால் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில், தி.மு.க. அரசின் முதல் அமைச்சராக நான் இருந்த போது, கர்நாடக அரசு தமிழகத்திற்குக் காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று சொல்லியிருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பத்திரிகைகளிலே வரும் செய்திகளை வைத்துக் கொண்டு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகைகளிலே வரும் செய்திகளினால் நான் சொல்கிற பதில்களினால் இரண்டு மாநிலங்களுக்கும் இடையிலே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு நான் இடம் தர விரும்பவில்லை “ என்று தன்னலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், பதில் அளித்தவர் கருணாநிதி” என்று எழுதியிருக்கிறார். நான் அளித்த பதிலில் ஏதாவது தவறு இருக்கிறதா? அந்தப் பதில் தன்னலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற

அச்சத்தில் சொல்லப்பட்ட பதிலா அல்லது இரண்டு மாநிலங்களும் நேச மனப்பான்மையோடு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, தமிழகத்திற்குத் தண்ணீர் வர வேண்டும், தமிழக விவசாயிகள் வாழ வேண்டும் என்ற அக்கறையோடு சொல்லப்பட்ட பதிலா என்பதை இதைப் படிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும். அண்டை மாநிலங்களோடு மன வேறுபாடு கொண்டு விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் கூடுமானவரையில் ஒற்றுமையோடு பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லதா? “வா, ஒரு கை பார்க்கலாம்” என்று வாய் ஜாலம் காட்டும் ஜெயலலிதாவைப் போல வார்த்தையிலேயே வம்புக்கு இழுத்து விவசாயிகளைப் பாதிப்புக்கு உள்ளாக்குவது நல்லதா?

“மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும்,

காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை” என்று ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகிறார். இந்தக் காவிரி நதி நீர் ஆணையம் அமையக் காரணமாக இருந்ததே நான்தான்! ஆனால் அந்த ஆணையம் பற்றி இதே ஜெயலலிதா என்னவெல்லாம் சொன்னார் தெரியுமா?

காவிரி நதி நீர் ஆணையம் (Cauvery Authority) அமைக்கப்பட்டு, 11-8-1998 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 21-8-1998 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் போதிய அதிகாரம் உள்ள அமைப்புக்குத்தான் ஆணையம் என்று பெயர். ஆனால் பிரதமர் தலைமையில் ஆணையத்துக்குக் காவிரி தொடர்பாக உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. காவிரி பிரச்சினையைத் தீர்க்க இயலாத, எந்த முடிவும் எடுக்கவிடாமல் தடுக்கிற விவாத அமைப்பாகத்தான் இப்புதிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்துக்குச் சிறிதும் பாதிப்பில்லை; பாதிக்கப்படப் போவது தமிழகம்தான்” என்று ஆத்திர அவசரத்தோடு சொன்னார்.

காவிரி நதி நீர் ஆணையத்தின் முதல் கூட்டம் 28-10-1998 அன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், கர்நாடக முதல்வர் பட்டேல், கேரள முதல்வர் நாயனார், புதுவை முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் ஆகியோரும் கலந்து கொண்டோம். ஆனால் ஜெயலலிதா, கருணாநிதியால் காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டச் செய்ய இயலவில்லை” என்று சொல்லியிருக்கிறார்.

14-7-2000 அன்று டெல்லியில் காவிரி ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நானும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா அவர்களும், கேரள முதல்வர் ஈ.கே. நாயனார் அவர்களும், புதுவை முதல்வர் பி. சண்முகம் அவர்களும்

கலந்து கொண்டோம். அந்தக் கூட்டத்தில் அடுத்த 30 நாட்களில் ஜூன் மாதம் வரை அளிக்க வேண்டிய தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட கர்நாடகம் ஒப்புக்கொண்டது. நான் முதலமைச்சராக இருந்த போது கூட்டமும் நடைபெற்று, அதில்

தமிழகத்திற்கு இவ்வாறு பலனும் ஏற்பட்டதற்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார்?

2-4-2002 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறும்போது, “செயல்படாத ஆணையம் காவேரி ஆணையம்”, “பல் இல்லாத ஆணையம்”; அந்த ஆணையத்தை ஏற்காமல் நாங்கள் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம்,” என்று சொன்னார்.

21-6-2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் “எவ்வித அதிகாரமும் இல்லாமல், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் திறம்படச் செயல்படுத்த இயலாத நிலையில் காவிரி நதி ஆணையம் உள்ளது. எனவே இந்த ஆணையத்தின் கூட்டங்களில் இனிமேல் தமிழ்நாடு கலந்து கொள்ளாது” என்று விளைவுகளைப் பற்றி முழுதும் ஆராயாமல் முடிவெடுத்து அறிவித்தார்.

அ.தி.மு.க. அரசின் இந்த அமைச்சரவை முடிவினைப் பற்றி என்னிடம் கருத்து கேட்ட போது, “ஆணையத்தைப் புறக்கணிக்க ஜெயலலிதா அரசு எடுத்த முடிவு; விவேகமானதல்ல; குறுவை நெல் பயிரிடுவதற்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்கு மத்திய அரசின் தலையீட்டையும் உதவியையும் பெற அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்; தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை எல்லாம் மாற்றும் போக்குதான் அ.தி.மு.க. அரசில் மேலோங்கி நிற்கிறது. காவிரிப் பாசனப் பகுதிக்கு; உரிய நேரத்தில் நீர் கிடைக்க முயற்சி மேற்கொண்டது தி.மு.க. ஆட்சிக் காலம். ஆணையக் கூட்டத்துக்குச் செல்ல மாட்டேன் என்பது அ.தி.மு.க. ஆட்சிக்

காலம்” என்று நான் கூறினேன்.

காவேரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா முதலில் சொன்னார். அதற்கடுத்த நாள்; “அழைத்தால் பார்க்கலாம்” என்றார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் 5-7-2002 அன்று எதிர்க்கட்சியாக இருந்த நிலையிலும், பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டுமென்று கோரி கடிதம் ஒன்று எழுதினேன். அதற்கு 10-7-2002 அன்று பிரதமர் எழுதிய பதில் கடிதத்தில் அதைப்பற்றிக் கவனிப்பதாகக் கூறியிருந்தார். அவ்வாறே காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்பட்டது.

காவேரி ஆணையத்தைப் “பல் இல்லாத ஆணையம், செயல்படாத ஆணையம்” என்றெல்லாம் குறிப்பிட்ட ஜெயலலிதா, அதை அனைவரும் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில், 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27இல் டெல்லியில் நடைபெற்ற காவேரி ஆணையக் கூட்டத்திலே கலந்து கொண்டார். ஆனால் அங்கே சுமுகமாகப் பேசி தண்ணீரைப் பெறுவதற்கான வழிவகை காணாமல், அவருக்குள்ள முன் கோபம் காரணமாக பிரச்சினையின் அவசர முக்கியத்துவத்தை மறந்து, இடையிலே வெளி நடப்பு செய்வதாகக் கூறி விட்டு வெளியே வந்து விட்டார். அப்போது அவர் வெளி நடப்பு செய்தது, தற்போது கர்நாடக முதல்வர் வெளி நடப்பு செய்ய முன்னுதாரணமாக அமைந்தது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ தமிழ்நாட்டு விவசாயிகள்தான்! பாழானதென்னவோ அந்த விவசாயிகளின் வாழ்வாதாரம்தான்!

29-11-2002 அன்று பிரதமர் தலைமையில் காவேரி ஆணையக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. கர்நாடக முதலமைச்சர் முதல் நாளே டெல்லி சென்று விட்டார். ஆனால் காவிரி நீர் தேவைப்பட்ட நமது மாநில முதல் அமைச்சர் கடைசி நிமிடம் வரை வருவதாகச் சொல்லிவிட்டு, பிறகு டெல்லி பயணத்தையே ரத்து செய்துவிட்டார். இந்தத் தலைகீழ் நடவடிக்கையால் யாருக்கு நட்டம்? முதல் அமைச்சருக்கு அல்ல; நமது மாநில விவசாயிகளுக்குத்தான்.

இதற்கிடையில் “பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியது, கடுமையான ஆட்சேபத்துக்குரியது; அந்த அவதூறுக் கடிதத்தை நான்கு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்” என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் வழக்கறிஞரான திரு. கே.கே. வேணுகோபால், நீதிபதிகளிடம், “பிரதமர் மீதும், அவரது தலைமையில் செயல்படும் காவிரி நதிநீர் ஆணையத்தின் மீதும் தமிழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தும், பிரதமர் வாஜ்பாய்க்கு இது தொடர்பாக எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெறுவதற்காகவும் மீண்டும் ஒரு கடிதத்தை வெகு விரைவில்

பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதி அனுப்புவார்” என்றும் தெரிவித்தார். அதற்கிணங்க, 16-11-2002 அன்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், பிரதமர்மீது தனிப்பட்ட முறையில் தான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், ஏற்கனவே தான் சொன்ன அத்தனையையும் மறந்து விட்டு காவேரி ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அப்படியெல்லாம் இரட்டை வேடம் போட்ட ஜெயலலிதாதான் ஏமாற்று வித்தையில் நான் கைதேர்ந்தவன் என்றும், காவேரி பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டேன் என்றும் அறிக்கை விடுகிறார். ஒரு முதலமைச்சர் விடுகின்ற அறிக்கையில் முன்னாள் முதலமைச்சரைப் பற்றி இப்படியெல்லாம் தரத்தையும், பண்பாட்டையும் தூக்கியெறிந்து விட்டு, தாறுமாறாக வார்த்தைகளை பயன்படுத்துவது முறைதானா? நியாயம்தானா? “கூடங்குளம் பிரச்சினையில் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் மத்திய மாநில அரசினர் அழைத்துப் பேச வேண்டும், ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்படவேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும், உத்தரவாதம் அளிப்பதோடு அவற்றை செய்து முடிக்கவும் ஆவன செய்ய வேண்டும். போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள்தான். அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப் போல இந்த அரசு நினைக்கக் கூடாது” என்று நான் எழுதியிருந்ததை தன் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, “இவ்வாறு நீட்டி முழக்கியிருக்கிறார் கருணாநிதி” என்று சொல்லியிருக்கிறார். நான் எழுதியது எவ்வாறு அடக்கமாகவும், அக்கறையோடும் இருக்கிறது என்பதையும், முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியிருப்பது எத்தகைய நல்ல பண்பாடு (?) என்பதையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய அறிக்கையைப் படித்து விட்டு, அந்தப் பகுதியிலே உள்ள பொதுவானவர்கள் எல்லாம் வரவேற்றுப் பாராட்டித் தொலைபேசியில் பேசியதோடு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. அப்பாவு அவர்களையும் சந்தித்துச்

சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் ஏதோ ஆறு மாதத்தில் “அந்தர் பல்டி” அடித்துள்ளதாக ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகிறார். எனக்கு; முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போல, சொன்னதை, மாற்றி மாற்றி “அந்தர் பல்டி” அடிக்கத் தெரியாது!

ஜெயலலிதா; 19-9-2011 அன்று விடுத்த அறிக்கையில், “கூடங்குளம் அணு மின் திட்டப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு எட்டப்படுகிற வரையில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம்” என்று சொல்கிறார். 19ஆம் தேதியன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பணிகளை நிறுத்தும்படி வேண்டிக் கொள்கிறார். 21ஆம் தேதியன்று கூடங்குளம் கூடாது என்று இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்தவர்களின் பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து, அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக 22-9-2011 அன்று தமிழக அமைச்சரவை அவசர அவசரமாகக் கூடி அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

இப்படியெல்லாம் கூடங்குளம் எதிர்ப்பாளர்களை ஈர்ப்பதற்காகச் சொன்ன அதே முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு 31-3-2012 அன்று எழுதிய கடிதத்தில், “கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படவுள்ள 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும்” என்றார். எது அந்தர் பல்டி? கூடங்குளம் போராட்டக்காரர்கள் எல்லாம் முதல் அமைச்சரைப் பார்த்துச் சிரிப்பாய் சிரிக்கிறார்களே? எது இரட்டை நிலை?

அடுத்து, மின்சாரப் பற்றாக்குறைக்கு தி.மு. கழக அரசுதான் காரணம் என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். இதற்குப் பதில் பல முறை சொல்லி ஆயிற்று; எனினும் எது உண்மை என்பதை நேற்று ஏடுகளில் வெளிவந்துள்ள ஒரு செய்தியைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர் திரு. வேணுகோபால் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “வல்லூர், வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் மின் உற்பத்தித் திட்டம் மூலம் அடுத்த ஆறு மாதங்களில் 3000 மெகாவாட் மின்சாரம்

கிடைக்கும்” என்று சொல்லியிருக்கிறார். இந்த 3000 மெகாவாட் மின்சாரம், தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலமாகத்தான் கிடைக்கவுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால்; கழக ஆட்சியில் மின் உற்பத்திக்காக எதுவும் செய்யவில்லை என்று திரும்பத் திரும்ப புழுதி வாரித் தூற்ற மாட்டார்கள். கூடங்குளத்திலிருந்து மின் உற்பத்தி அடுத்த ஆண்டுதான் கிடைக்கும் என்றும் ஒரு செய்தி வந்துள்ளது. ஜெயலலிதா இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்துகின்ற வகையில் போராட்டக்காரர்களை ஊக்குவிக்காமல், அவர்களிடம் உண்மை நிலையை விளக்கி, திட்டப் பணிகள் தொடர்ந்து நடந்திட ஒத்துழைத்திருந்தால், கூடங்குளத்திலிருந்து இந்த ஆண்டு மத்தியிலேயே மின் உற்பத்தி தொடங்கியிருக்கும். தற்போதுள்ள மின் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. எனவே இந்த மின் பற்றாக்குறைக்கும், இருள் விலகாமல் இருப்பதற்கும் முழுமுதற்காரணம் ஜெயலலிதாவின் எதிர்மறை நடவடிக்கைகள் தான். கூடங்குளம் பகுதியில் 500 கோடி ரூபாய்க்கு நலத் திட்ட உதவிகளை அங்கே அமைதியான சூழ்நிலை உருவானவுடன் செய்யப்போவதாக தற்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். 19-3-2012 அன்று அதாவது ஆறு மாதங்களுக்கு முன்பு அமைச்சரவையிலே முடிவெடுத்து கூடங்குளத்தில் வீட்டு வசதி, - சாலை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதிலே இதுவரை ஒரு கோடி ரூபாய்கூடச் செலவு செய்யப்படவில்லை. நான் அதைக் குறிப்பிட்டுக் கேட்ட பிறகு, அங்கே அமைதியான சூழல் ஏற்பட்ட பிறகு அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்கிறார். அறிவித்தவுடன், பணிகளை மேற்கொண்டிருந்தால், அந்தப் பகுதி மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டு, அங்கே அமைதி நிலை உருவாகியிருந்தாலும் உருவாகியிருக்கக் கூடும். எனவே அங்கே போராட்டம் இந்நாள் வரை தொடர்வதற்கே ஜெயலலிதாவின் செயற்பாடுகள்தான் காரணம்! இறுதியாக ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை வெளியிடுவதாகவும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுவதை

வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். தமிழ் மாநிலப் பெருமக்களே! அவரது அறிக்கையையும் படித்திருப்பீர்கள். என்னுடைய இந்த விரிவான பதிலையும் படியுங்கள். யார் சொல்வது முன்னுக்குப் பின் முரணானது, திரித்தும் குறைத்தும் திசை திருப்பக் கூடியது, யார் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறார்கள், யார் குறைந்தபட்சப் பண்பாடு இல்லாமல், நாகரிகம் இல்லாமல் அறிக்கை கொடுக்கிறார்கள் என்ற முடிவுக்கு நீங்களே வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். “தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டு”மென்று எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுதான் நாளும் நாளும் எழுதுகிறேன். ஜெயலலிதாவின் அறிவுரையைக் கேட்டு எழுதுவதை நிறுத்துகின்ற எண்ணம் எனக்கில்லை. அன்புள்ள, மு.க. 28-9-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 100–110. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்