முரசொலி கடிதங்கள் · 3658
வெளிச்சத் துளி கிடைத்திட!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3658. வெளிச்சத் துளி கிடைத்திட!
உடன்பிறப்பே,
தமிழ்நாடே இன்று இருளில் மூழ்கிக் கிடக்கிறது. ஏழையெளிய நடுத்தர மக்கள், ஏன் - வசதி வாய்ப்புள்ளவர்கள்கூட வரலாறு காணாத மின் வெட்டினால் படுகின்ற அல்லல் கொஞ்சம் நஞ்சமல்ல! லகானை விட்டுவிட்டு; அதை மீறி பாய்ந்தோடும் நாலு கால் பாய்ச்சல் குதிரையை அடக்குவதற்கு; அதன் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழுவதுபோல இந்த இருண்ட இழிநிலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற அம்மையார் ஜெயலலிதா திசை திருப்பும் பணியிலே ஈடுபட்டு, அதற்கேற்ப அறிக்கைகளைப் பறக்க விட்டாலே தனது “ஆத்மா”வுக்கு ஒரு சாந்தி என்று கருதிக் கொண்டு செயல்படுவது போலத் தெரிகிறது. அடுக்கடுக்காக தான் செய்த தவறுகளுக்கு அவரே சுவரில் முட்டிக் கொள்வது போல ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு விட்டு; தனது மந்திரி, பிரதானியர், அதிகார வர்க்கத்தினர் “ஆகா! ஊகூ! பேஷ்! பேஷ்!” என்று கை தட்டுகிற அந்த ஒலியில் சுகம் காணுகிறார் என்பதைப் பார்க்கும்போதும் - அதை நினைக்கும் போதும் - இப்படி அவதூறு பரப்புவோர்களுக்கு - அருந்திட பழமும் பாலும் தந்து - அயர்ந்து தூங்கிட பஞ்சணையும் ஏற்பாடு செய்து - ஏமாந்து கிடக்கும் பஞ்சை பராரிகளாம் ஏழைத் தமிழர்கள்மீது நமக்கு இரக்கம்தான் ஏற்படுகிறது! ஒரு துக்க நிகழ்ச்சி நடைபெறும்போதுகூட அதில் பங்கு பெற்று ஆறுதல் கூறிடவோ; அல்லது அந்தத் துக்க நிகழ்ச்சி தொடர்பாக ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களைக் களைவதற்கு ஒரு
சிலர் முன் வந்தால் அவர் மீதும் சீறிப் பாயும் சேட்டைக் குணம் ஜெயலலிதா போன்றவர்களுக்கு இன்னமும் அவர்களை விட்டு விலகாமல் இருக்குமானால் அதன் பயனையும் அவர்கள்தான் அனுபவிக்க வேண்டும். அனுதாபம் கூறி - நடந்தவைகளை இடித்துக் காட்டி - இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக இருப்பதற்கு ஆலோசனை கூற வருகிறவர்களைக்கூட அவமதிப்பதும்; அவர்கள் மீதுள்ள பழைய காழ்ப்புகளை மறந்து விடாமல் விலகிச் செல்லுங்கள் என்று அவர்களை நோக்கி வெறியாட்டம் போடுவதும்; விளைந்துள்ள துன்பங்களின் எதிரொலியாகக்கூட இருக்கலாம். அதற்காக “என்னம்மா உதவி தேவை?” என்று இரக்க உணர்வோடு ஆறுதல் கூற வருபவர்களையும், கடந்த காலத் தவறுகளைச் சுட்டிக்காட்டி இனி அவ்வாறு எதுவும் நடந்திடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையை அறிவுரையாகக் கூறினால்கூட, “எடுத்தேன்; கவிழ்த்தேன்” என்ற பாணியில் “நீ யார் எனக்கு அறிவுரை கூற?” என்று சல்லடம் கட்டிக் கொண்டு சண்டைக்கு வருபவர்களிடம்;
என்ன பேசுவது?
எதைப் பேசுவது?
எப்படிப் பேசுவது?
இந்த நிலையில் என்ன பேசுவது? என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் - எப்படிப் பேசுவது என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் - சும்மா இருப்பதே சுகம் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். எனினும், நம் தமிழ்நாட்டு மக்களின் தவிப்பு - அவர்களை வாட்டி வதைக்கும் இருட்டு - வாய் பிளந்து நிற்கும் பசி, பஞ்சம், பட்டினி என்ற வேதனையான கொடுமைகள் - இவற்றிலிருந்து நாமும் தமிழர்கள் என்ற காரணத்தால் - இன்னமும் நம்மை நம்பியிருக்கிற தமிழர்களை நினைத்து நினைத்து நெஞ்சுருக - சிலவற்றைச் சொன்னால் அந்த நெஞ்சிலேயே - நெடிய வாளால் - ஈட்டியால் குத்துகிற வகையில் அல்லவா;
ஜெயலலிதாவின் அறிக்கையும் - அந்த அறிக்கையிலே அள்ளித் தெளிக்கப்பட்ட அவதூறு அர்ச்சனைகளும் இருக்கின்றனவே அல்லாமல்; தமிழக உழவர்களின் தவிப்பைப் போக்கிட - தானியக் களஞ்சியங்கள் தரிசு நிலங்களாகி விடாமல் தடுத்திட - உரிய வழி என்ன - உகந்த முறை என்ன என்பது பற்றி ஒருவருக்கொருவர் கலந்து பேசி முடிவெடுக்கவே இயலாமல்; ஆத்திரத்தில் அலறித் துடிப்பது போல் அம்மையாரின் அறிக்கை வாசகங்கள் அணுகுண்டுகளாகச் சிதறி வெடிக்கின்றன!
இது நியாயமா?
நேர்மையா?
இல்லாததும், பொல்லாததும் கூறி எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்கு முற்படாமல் இனியாவது ஜெயலலிதா; தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் - மக்களைக் காப்பாற்றக் கடமைப்பட்டவர் என்பதை உணர்ந்து - தெளிந்து உதவிட முன்வருவாரா? என்று தமிழக மக்கள் தாங்கொணா துயரத்தோடு ஒலி எழுப்பும் இந்த
நேரத்திலாவது -
தன்னை உணர்ந்து -
தமிழர்களின் கஷ்டத்தை உணர்ந்து -
அவருடைய அலட்சியத்தால் தமிழகமே இருண்டு கிடக்கிற நிலைமையிலிருந்து - சிறியதோர் வெளிச்சத் துளி கிடைப்பதற்குப் பாடுபட முன்வருவாரா? பணியாற்றக் கிளம்புவாரா? இந்தக் கேள்விகள்தான் அவருடைய அவதூறு அறிக்கைக்கு பதிலாக அமைகின்றன! அன்புள்ள, மு.க. 27-9-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 97–99. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.