முரசொலி கடிதங்கள் · 3651
எதையும் தாங்கும் இந்த இதயம் - வாழ்க வசவாளர்கள்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3651. எதையும் தாங்கும் இந்த இதயம் - வாழ்க வசவாளர்கள்!
உடன்பிறப்பே,
கடந்த 23-8-2012 அன்று நெடுமாறன் “தினமணி” நாளேட்டில் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில் இலங்கையில் விடுதலைப் போராளிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே போர் நடைபெற்றபோது, அதைத் தடுக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்று எழுதியிருந்தார். அதற்கு நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆதாரப்பூர்வமாகச் சில விவரங்களைக் குறிப்பிட்டு; இலங்கையில் போர் நடைபெற்றபோது அதனைத் தடுக்க நான் எதுவுமே செய்யவில்லையா? என்னென்ன செய்தேன்? என்பதை யெல்லாம் தொகுத்து தேதிவாரியாக விளக்கியிருந்தேன்.
இலங்கைப் போரை நிறுத்துவதற்காக சென்னையில் நான் உண்ணாநோன்பை மேற்கொண்டபோது, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் நகல் ஒன்றினை நான் உண்ணாநோன்பு இருந்த இடத்திற்கே அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையை நம்பித்தான் நான் உண்ணா நோன்பை நிறுத்திக் கொண்டேன் என்பதற்குச் சான்றாகவும் - நெடுமாறன் போன்றவர்களும், அல்லது நெடுமாறனால் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வைக்கப்பெற்றுள்ளவர்களும் விளக்கம் பெறுவதற்காகவும் - இதோ அந்த ஆங்கில அறிக்கையின் தமிழ் மொழி ஆக்கத்தை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.
“போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது
என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.”
இவ்வாறு இலங்கை அரசு அறிவித்துள்ளதாகவும், மேலும் “குடி மக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்” என்றும்,
“போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்” என்றும்
“போர் முனையிலிருந்து வெளிவந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டுமன்றி; போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தான் தற்போதைய உடனடித் தேவையாகும்” என்றும், இலங்கை அரசு கூறியிருப்பதாகத் தெரிவித்த பிரணாப் அவர்கள், “போர்ப் பகுதியிலிருந்து வெளிக்கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அவர்கள் 100கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை அறிவித்திட மகிழ்ச்சி அடைகிறேன்”
- என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நெடுமாறனைப் பொறுத்தவரையில் அவருக்கு எப்படியாவது தற்போது ஆளுங்கட்சியோடு இணைந்து ஏதாவது பயன் பெற வேண்டுமென்பதுதான் குறிக்கோள். அங்கே நெருங்க வேண்டுமென்பதற்கு என்ன வழி என்று பார்த்து, நம்மைத் தாக்கினால்தான், அங்கே உள்ளவர்கள் மனம் குளிர்வார்கள், தனக்கு தக்க இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, 24 மணி நேரமும் நம்மைச் சாடுவதிலேயே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
1984 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். ஈழ விடுதலைப் போராளிகள் அனைவரும் ஒன்று பட வேண்டுமென்று கூறியதாகவும், நான் அந்த முயற்சியை முறியடிக்கும் செயலிலே ஈடுபட்டேன் என்றும் ஜூ.வி. இதழிலே தற்போது நெடுமாறன் கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதில் 1984-85களில் போராளிகளிடையே சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவனே கருணாநிதிதான் என்று எழுதியிருக்கிறார். சகோதர யுத்தத்தைப் போராளிகளிடையே நான் தூண்டி விட்டேனா? அல்லது நெடுமாறன் கும்பல் தூண்டி விட்டதா? என்பதை அந்தப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களே நன்குணர்வார்கள். அந்தப் போராளிகள் இயக்கங்களை நான் தான் தூண்டிவிட்டேன் என்று நெடுமாறன் கூறுவதை வாதத்திற்காக ஒப்புக் கொண்டு கேட்கிறேன். நான்தான் போராளிகள் இயக்கத்தைத் தூண்டி விட்டவன் ஆயிற்றே? 1985ஆம் ஆண்டு மே திங்களில் என் தலைமையில் உருவான “டெசோ” அமைப்பில் இந்த நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராகச் சேர்ந்தார்? “டெசோ” அமைப்பின் சார்பில் கோவை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் என்னுடன் எதற்காக நெடுமாறன் கலந்து கொண்டார்? கடைசியாக நடைபெற்ற வேலூர் பேரணியில் நெடுமாறன் கலந்துகொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் இலங்கை சென்றபோது, 10-10-1985 தேதியிட்டு எனக்கொரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “டெசோ இயக்கத்தை மேலும் வளருங்கள். ஏனெனில் தமிழீழம் காணப் போராடும் விடுதலைப் போராளிகளுக்கும் மக்களுக்கும் நமது “டெசோ” இயக்கத்தைத் தவிர உற்ற துணைவன் - உண்மையான துணைவன் வேறு யாருமில்லை” என்று எழுதிய கை நெடுமாறன் அவர்களுடைய கை தானே? அப்போது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்., நெடுமாறன் குறிப்பிட்டுள்ள உணர்வோடு இருந்தார் என்றால், நெடுமாறன் அப்போது எழுதிய கடிதத்தில் “விடுதலைப் போராளிகளுக்கும் மக்களுக்கும் நமது டெசோ இயக்கத்தை தவிர உற்ற துணைவன், உண்மையான துணைவன் வேறு யாருமல்ல” என்று எழுதியது இட்டுக்கட்டிய கற்பனையா? அல்லது; யாருக்கோ முட்டுக்கொடுக்கும் வேலையா?
அதுமாத்திரமல்ல; அந்தக் காலகட்டத்தில் இதே நெடுமாறன்; அவர் எழுதிய “மத்தியமாநில உறவுகள் - சில குறிப்புகள்” என்ற நூலினை நான் தான் வெளியிட வேண்டுமென்று கேட்டு, 30-6-
1985 அன்று சென்னை பெரியார் திடலில் தி.சு. கிள்ளிவளவன் தலைமையில் நான் வெளியிட்டேன். அப்போது நெடுமாறனுக்கு நான்தான் இலங்கையில் சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவன் என்று தெரியாமல் போய்விட்டதா?
நெடுமாறன் தனது கட்டுரையில் நான் ஏதோ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பம் முதல் நடந்து கொண்டேன் என்று சொல்லியிருக்கிறார். திம்பு பேச்சுவார்த்தைகள் முறிந்து விட்ட நிலையில் திடீரென ஒரு நாள் மத்திய அரசு சென்னையிலே தங்கியிருந்த தமிழீழத் தலைவர்களை வெளியேற்ற முடிவெடுத்து, அதன் முதற்கட்டமாக 23-8-1985 அன்று தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திரஹாசன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆலோசகர் பாலசிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சத்தியேந்திரா ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற்ற ஆணை பிறப்பித்து, தமிழகக் காவல் துறை மூலம் அவர்களைக் கைது செய்தது. இந்திய அரசின் இந்தக் கொடுமையான உத்தரவை எதிர்த்து “டெசோ” அமைப்பின் சார்பில் 25-8-1985 அன்று சென்னையில் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினோம். பேரணி முடிவில் நான் பேசும்போது, நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படா விட்டால், பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்தேன்.
நாடு கடத்தும் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி 30-8-1985 அன்று தமிழகத்தில் ரயில் நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், இதே நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானவர்களும் கைது செய்யப்பட்டார்கள். இதன் விளைவாக பாலசிங்கம் மீதும், மற்றவர்கள் மீதும் பிறப்பிக்கப்பட்ட நாடு கடத்தும் உத்தரவை இந்திய அரசு திரும்பப் பெற்றது.
நெடுமாறன் அறிக்கையில் திரும்பத் திரும்ப நான் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து கொண்டதைப் போல தோற்றமளிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். அது ஏதோ திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எழுதியுள்ளதாகவே தெரிகிறது. மதுரை “டெசோ” மாநாட்டிற்கு முன்பாக 1-5-86 அன்று இலங்கை வானொலியிலும், 2-5-1986 அன்று சில ஏடுகளிலும், இலங்கையில் விடுதலைப் புலிகளின் இயக்கமும், டெலோ
இயக்கமும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதாகவும், அதிலே டெலோ இயக்கத் தலைவரான சிறீ சபாரத்தினத்தை விடுதலைப் புலி இயக்கத்தினர் கைது செய்து கொண்டு போய் விட்டதாகவும் செய்தி வந்தது.
அதைப் பற்றி “டெசோ” மாநாட்டையொட்டி; மதுரையில் என்னிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பதற்குத் தமிழ்நாட்டிலே உள்ள அரசியல் தலைவர்கள் மாத்திரமல்லாமல், இந்திய நாடு முழுமையுமுள்ள பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டு “டெசோ” மாநாட்டின் மூலம் குரல் கொடுக்கும் இந்த முக்கியமான நேரத்தில் இப்படியொரு சம்பவம் போராளிகளுக்குள் நடைபெற்றிருக்குமானால் அது விரும்பத்தக்கதல்ல. யார் முதலில் தவறு செய்தார்கள் என்பது இப்போது முக்கியமல்ல. போராளிகள் இயக்கத்தில் இரண்டு பெரும் பிரிவுகளான புலிகள் இயக்கமும், டெலோ இயக்கமும் ஒருவரையொருவர் அழித்துக் கொள்ள முயற்சி செய்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றுதான் கூறினேன்.
அந்த மாநாட்டிற்காக வருகை தந்திருந்த வாஜ்பாய், என்.டி. ராமராவ், ராமுவாலியா போன்றவர்களின் முன்னிலையில், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளிடம் “நமக்குள் நாமே மோதிக் கொள்ளக் கூடாது, சகோதர யுத்தம் கூடாது, சபாரத்தினத்தைக் கொன்று விட வேண்டாம், இலங்கைத் தமிழர்களுக்காக அனைவரும் சேர்ந்து தான் பாடுபட வேண்டும்” என்று அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு உருக்கத்தோடு கேட்டுக் கொண்டேன். நெடுமாறனுக்கு இது தெரியாதா? இதே பிரச்சினை பற்றி வாஜ்பாய் அவர்கள் கூட அந்த நேரத்தில், “ஈழ விடுதலைப் போராளிகளே உங்கள் மோதலை நிறுத்துங்கள், ஒன்று படுங்கள், தனித் தமிழ் ஈழம் காண என்ன வழி என்பதை முடிவு செய்யுங்கள்” என்றுதான் கூறினார்.
4-5-1986 அன்று மதுரையில் நடைபெற்ற “டெசோ” மாநாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பாக திலகரும் பேபி சுப்பிரமணியமும் கலந்து கொண்டனர். அந்த இயக்கத்தின் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமானால் அவர்களை நான் அழைத்திருப்பேனா? மேலும் அந்த மாநாட்டில் பேசும்போது, “எட்டுப் பிரிவாக இயங்கும் தமிழீழத் தலைவர்கள் ஒற்றுமை
யாகச் செயல்படுவது குறித்து அந்தக் கூட்டத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன்”. இன்று திரிபுவாதம் பேசுகின்ற நெடுமாறன் அப்போது அந்த மாநாட்டிலேதான் இருந்தார். இதை இல்லை என்று மறுக்கிறாரா? அந்த மாநாடு நடைபெற்ற போதுதான் 6-5-1986 அன்று சிறீசபாரத்தினம் விடுதலைப் புலி இயக்கத்தினரோடு நடந்த மோதலில் கொல்லப்பட்டார் என்பதை அந்த இயக்கத்தின் ஆலோசகர் பாலசிங்கம் சென்னையிலே அறிவித்தார்.
அந்த சபாரத்தினத்தின் படத்திறப்பு நிகழ்ச்சி 18-5-1986 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற போது, “போராளி இயக்கங்கள் இனியாவது ஒன்றுபட்டு வேற்றுமைகளை மறந்து செயல்பட வேண்டும்” என்றுதான் நான் கேட்டுக் கொண்டேன். நெடுமாறன் இதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு இப்போது அறிக்கை விடுவது ஏன்?
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு முதுகெலும்பு இல்லை என்று ஒரு வார்த்தையை நெடுமாறன் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா என்பதைத் தமிழ் நாட்டு மக்கள் அறிவார்கள். முதுகில் பெரிய அறுவை சிகிச்சை வரை நடைபெற்று அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. என்னை இவ்வாறு அர்ச்சனை செய்யும் நெடுமாறனின் முதுகெலும்பு எப்படியெல்லாம் வளையக் கூடியது என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நான் அவருடைய பாணியிலே இறங்கி வந்து பதில் சொல்ல விரும்பவில்லை.
தன்னுடைய அறிக்கைக்கு ஆதரவு தேடுவதற்காக; நான் ஏதோ விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்டுவதாக நெடுமாறன் கதை கட்டி யிருக்கிறார். விடுதலைப் புலிகளும், அந்த இயக்கத்தினரும் எனக்கு ஆதரவாக இருந்து விட்டால்; தங்கள் பிழைப்பை நடத்த முடியாது என்று நெடுமாறன் போன்றவர்கள் எண்ணி யிருக்கலாம். அதற்காக அவர்கள் ஆரம்பத்திலிருந்தே முயற்சித்திருக்கலாம். விடுதலைப் புலிகளிடம் எனக்கு அபிப்பிராய பேதம் என்றெல்லாம் பொய்யாக கதையளந்துதான் தங்கள் பிழைப்பை நடத்த வேண்டுமென்று இவர்கள் முற்பட்டால்; அவர்களுக்காக நான் பரிதாபப்படத்தான் முடியும்.
3-6-1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவினையொட்டி உண்டியலில் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மாலைக்குப் பதிலாக சேர்ந்தபோது, அந்த நிதியினை பல்வேறு போராளி இயக்கங்களுக்கு எவ்வாறு பிரித் தளிப்பது என்று பேசியபோது, விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட அனைத்துப் போராளி இயக்கங்களுக்கும் அளிப்பதென்றுதான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் நெடுமாறன் போன்றவர்களின் மறைமுகத் தூண்டுதல் காரணமாகவோ என்னவோ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் அன்றிரவு 12 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் திரு. பாலசிங்கம் அவர்கள் என்னை என் இல்லத்தில் வந்து சந்தித்து, தங்களால் ஏன் அந்த நிதியைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்பதை விளக்கினார். என்ன காரணம் சொன்னார் என்பதை நான் இப்போது நாகரிகம் கருதி வெளியிட விரும்பவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும், அங்கேயுள்ள தமிழர்கள் அமைதியாகவும், நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவும் நான் என் மனச்சாட்சிப்படி என்னால் முடிந்த அளவிற்கு என் வாழ்க்கையில் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன். இதிலே நெடுமாறன் போன்றவர்களின் சான்றிதழ்களை நான் ஏற்கனவே பெற்றிருக்கிறேன். எனவே இப்போது அவரைப் போன்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறேன். என் மீது குறை கூறி விரலை நீட்டுகின்ற நெடுமாறன் போன்றவர்கள் வாய் ஜாலம் காட்டுவதைத் தவிர இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள். என்னைப் பற்றியும் நன்கறிவார்கள். ஏதோ என்னைத் தாக்கி எழுதினால் தங்கள் பிழைப்பு நடக்காதா என்பதற்காக எழுதுகிறார்கள் என்றால் எழுதி விட்டுப் போகட்டும்! எதையும் தாங்கும் இந்த இதயம் - வாழ்க வசவாளர்கள்! என்று மட்டும் அண்ணா வழியில் கூறி, அவ்வழியில் நடப்போம் நாம்!
அன்புள்ள, மு.க. 03-09-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 53–59. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.