அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3650

முரசொலி கடிதங்கள் · 3650

முரண்பாடுகளின் மொத்த உருவம்!

நாள் 31.8.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3650. முரண்பாடுகளின் மொத்த உருவம்!

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த காலத்தில் தவிர்த்திட இயலாத நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மின் வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா விடுத்த அறிக்கைகளையும், அதிலே கழக அரசையும் குறிப்பாக என்னையும் அந்த அம்மையார் எந்த அளவிற்கு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கோபமாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் என்பதையும் - அவர் பேசியதற்கு மாறாக; இப்போது தமிழகம் எந்த அளவிற்கு இருண்டு கிடக்கிறது, மின்வெட்டு காரணமாக எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் அனுபவ ரீதியாக நாள்தோறும் உணர்ந்து வருகிறார்கள்.

இந்த லட்சணத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சர்களையும், மின் வாரிய அதிகாரிகளையும் அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதாகவும், அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து “அம்மா” அவர்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் ஏடுகளில் எல்லாம் செய்தி வந்துள்ளது.

ஏடுகளில் இந்தச் செய்தி மாத்திரம் வரவில்லை. அதே நாளில் தமிழகத்தில் தற்போது இருந்து வந்த மின்வெட்டு 5 மணி நேரம், 6 மணி நேரம் என்பது; இனி 10 மணி, 12 மணி என்ற அளவிற்கு நீடிக்கும் நிலை வந்துள்ளது என்றும் செய்தி வந்துள்ளது. இந்த அளவிற்கு தமிழ்நாட்டில் கடும் பற்றாக்குறை வரக் காரணம் என்ன?

16-9-2011 அன்று அதாவது சரியாக ஓராண்டு காலத்திற்கு முன்பு முதல் அமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்,

“தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அதனை மூடி விட வேண்டும் என்று கோரி வருகின்றனர். மேலும், இந்த அணு மின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தி இடிந்தகரையில் மீனவர்கள் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், அணு விஞ்ஞானிகள் ஆகியோருடன் எனது அரசு ஆலோசனை நடத்தியது. கூடங்குளம் அணு மின் நிலையம், நில நடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லாத, இரண்டாம் நிலை மண்டலத்தில்தான் உள்ளது. அங்கே சிறந்த, மிகவும் பாதுகாப்பான அணு உலை குளிர்விப்பு முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சுனாமி தாக்கிய போதும், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

16-9-2011 அன்று கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றி பொறியாளர்களுடனும், அணு விஞ்ஞானிகளுடனும் ஆலோசனை நடத்தி விட்டு, பொதுமக்கள் யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை, அணு மின் நிலையத் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென்று கேட்டுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா; 19-9-2011 அன்று மீண்டும் ஓர் அறிக்கை விடுத்தார். அதிலே என்ன சொன்னார் தெரியுமா?

“கூடங்குளம் அணு மின் திட்டம் மத்திய அரசு மற்றும் இந்திய அணு மின் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணு மின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற அந்தப் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவது, மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால் மத்திய அரசு இதற்கான எந்த நடவடிக்கைகளையும்

இதுவரை எடுக்க வில்லை. அந்தப் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான முழுப் பொறுப்பும் மத்திய அரசிடமே உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, இந்தப் பிரச்சினை தன்னுடைய துறை சம்பந்தப்பட்டது அல்ல என்று கூறி கை கழுவி விட்டது வருந்தத் தக்கதாகும். மத்திய அரசு தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இந்தப் பிரச்சினை குறித்து நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். நிதியமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிகள், போராட்டக் குழுவினர் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து மனு கொடுப்பார்கள். இந்தப் பிரச்சினையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் வரையில் பணிகள் எதையும் மேற் கொண்டு தொடர வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

16ஆம் தேதி அறிக்கையில் எந்தவிதமான ஆபத்தும் இல்லை, பாதுகாப்பாக உள்ளது, அணு விஞ்ஞானிகளுடன் பேசப்பட்டு விட்டது, சுனாமியினால் கூட பாதிப்பு ஏற்படவில்லை, பணிகள் தொடர அமைதிப்பீர் என்றெல்லாம் கூறிய முதல்வர் ஜெயலலிதா, 19ஆம் தேதியன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பணிகளை நிறுத்தும்படி வேண்டிக் கொள்கிறார். இதிலே எது உண்மை? மூன்றே நாளில் ஏன் இந்த பல்டி? ஏன் இந்த முரண்பாடு? முதல்வர்தான் கூற வேண்டும்.

மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டது என்றெல்லாம் அறிக்கையில் கூறிய முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய தினமே பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தொலைபேசி வாயிலாகவும் பிரதமருடன் பேசினார். அம்மையார் அறிக்கையிலே தெரிவித்ததுபோல் பிரதமர் தட்டிக் கழித்தாரா? இல்லை. கூடங்குளத்திற்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை நேரில் அனுப்பி வைப்பதாகவும், ஐ.நா. சபை கூட்டத்திற்கு தான் நியூயார்க் செல்வதால் 27ஆம் தேதியன்று தமிழ்நாட்டுக் குழுவினரைச் சந்திப்பதாகவும் கூறியதோடு, “இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதலமைச்சராகிய தங்களின் வழிகாட்டுதல் தேவை என முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவிடம் பிரதமர் வேண்டுகோள்” என்று அவர்களின் ஏட்டிலே

பெருமிதத்தோடு வெளியிட்டுக் கொள்கின்ற அளவிற்கு பிரதமர் பாராட்டிய செய்தியும் வந்தது.

இன்னும் வேடிக்கை பாருங்கள்! 21ஆம் தேதியன்று கூடங்குளம் கூடாது என்று இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்தவர்களின் பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து, அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக 22-9-2011 அன்று தமிழக அமைச்சரவை அவசர அவசரமாகக் கூடி அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

கடிதத்தின் வாயிலாகவும், தொலைபேசி மூலமாகவும் அணு மின் நிலையத் திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டாமென்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்குப் பிறகு - பிரதமர் அவரிடம் கூறியவாறே மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அவர்களை முதலமைச்சரைச் சந்திக்க அனுப்பி வைத்து, அவரும் கூடங்குளம் சென்று நிலைமைகளை அறிந்ததோடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரையும் சந்தித்தார்.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தால் கடந்த ஆறு மாதங்களாக தினமும் 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என இந்திய அணுமின் கழக இயக்குநர் பாரத்வாஜ் அவர்கள் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தால் ஆறு மாதங்களாக, கூடங்குளம் மின் நிலையப் பணிகள் முடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் முதல் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் மேலும் ஆறு மாதங்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளொரு பிரச்சினை, பொழுதொரு காரணம் சொல்லி, கூடங்குளம் செயற்படத் துவங்க தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைப்பது தாமதமாகிறது. இதனால் அணுமின் நிலையப் பணிகளில் ஈடுபடும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட 1000 பேர், தினமும் எந்தப் பணியும் இன்றி முடங்கிக் கிடக்கின்றனர். வழக்கமான தங்களது பராமரிப்புப் பணியைக்கூட மேற்கொள்ள

முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்திய அணுமின் கழகம், பணிகள் செய்ய முடியாமல் காத்திருக்கும் கூடங்குளம் நிலைய அலுவலர்கள் 1000 பேருக்கும் சம்பளம் அளித்து, நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ஆறு மாதங்களாக 900 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பண வீக்கத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியாவில், இதுபோன்ற போராட்டங்களால், பொருளாதாரத் தைச் சீர் குலைக்கும் சக்திகளை, தமிழக அரசு விரைவில் அடையாளம் கண்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளுமா என்றெல்லாம் அணு மின் கழக இயக்குநர் கூறினார்.

இதற்குப் பிறகு 17-12-2011 அன்று மீண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூடங்குளத்தில் பணிகளைத் தொடங்குவதற்கு முன் அந்தப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார். இதற்குப் பிறகு என்ன நடைபெற்றது?

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில், சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று, ஆளுங்கட்சி வெற்றி பெறுகிறது. மேலும் தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்து, கூடங்குளத்தில் மின் உற்பத்தி உடனடியாக தொடங்கினால் பற்றாக்குறை பைச் சமாளிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. கூடங்குளத்தில் ஆறு மாதகாலம் அ.தி.மு.க. ஆட்சியினர் பணிகளை முடக்கி வைக்காமல் இருந்திருந்தால், மின் உற்பத்தி தொடங்கி யிருக்குமே, ‘மின் பற்றாக்குறை வராமல் சமாளித்திருக்கலாமே என்றெல்லாம் மக்கள் பேசத் தொடங்கினார்கள்.

29-2-2012 அன்று சென்னையில் நான் பேசும்போது, கூடங்குளம் அணு மின் நிலையம் மூடிக் கிடப்பதைப் பற்றிக் குறிப்பிட்டு, “அந்தப் போராட்டத்தைத் தமிழக அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறதா? அதிலே தமிழக அரசின் நிலை என்ன? கையிலே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகின்ற காரியம் போன்றது அல்லவா தமிழகத்திலே நடைபெறு கிறது; அதன் ரகசியம் என்ன?” என்றெல்லாம் கேட்டிருந்தேன்.

அதற்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு 31-3-2012 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படவுள்ள

2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை! பிரதமர் தனக்குள் சிரித்துக் கொள்ளமாட்டாரா? என்னடா? ஒரே முரண்பாடாக இருக்கிறதே? இதே முதலமைச்சர் தானே, சில மாதங்களுக்கு முன்பு மக்களின் அச்சத்தைப் போக்குகின்றவரை பணிகளை முடக்கி வைக்க வேண்டுமென்று எழுதினார்; இப்போது இப்படி மாற்றி எழுதியிருக்கிறாரே என்று நினைத்துக் கொள்ளமாட்டாரா?

பிரதமருக்கு மட்டுமல்ல; கூடங்குளத்தில் போராடிய, உண்ணாவிரதம் இருந்த மக்களுக்கும் ஆச்சரியம்! சில மாதங்களுக்கு முன்பு முதல் அமைச்சரைச் சந்தித்தபோது, தங்களுக்கு ஆதரவு காட்டி உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதினாரே, தொலைபேசியில் பேசினாரே, தூதுக்குழு அனுப்பி வைத்தாரே, அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றினாரே, இப்போது கூடங்குளத்தில் பணிகளைத் தொடங்கி, உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கே ஒதுக்கிட வேண்டுமென்று கடிதம் எழுதியிருக்கிறாரே என்று இப்படி அனைவருக்கும் ஒரே குழப்பம்!

இப்படி ஜெயலலிதா, முரண்பாடாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும், கால - நேர வசதிப்படி கடந்த கால நிகழ்வுகளை மறைத்தும், மறந்தும்; பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழி என்று இரட்டை வேடம் போடுவதால்; தொடர்ந்து இன்னலுக்குள்ளாவோர் தமிழகத்து மக்களே! ஜெயலலிதாவின் முரண்பாடுகள் இவ்வளவு தானா? இன்னும் வருமா? “சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும் என்றார்கள்; பிறகு எல்லா பழங்களையும் எங்களுக்கே கொடு” என்று கேட்பதைப்போல அல்லவா தமிழக அரசின் நாளொரு பேச்சு; பொழுதொரு போக்கு இருக்கிறது!

அன்புள்ள, மு.க 31-08-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 47–52. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்