அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3578

முரசொலி கடிதங்கள் · 3578

உனக்கொரு நீதி; ஊருக்கொரு நீதியா?

நாள் 5.8.2011சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3578. உனக்கொரு நீதி; ஊருக்கொரு நீதியா?

உடன்பிறப்பே,

பழிவாங்கும் பொய் வழக்கு நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு எந்த அளவிற்கு ஈடுபடுகிறது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணத்தை உனக்கு விளக்கிட விரும்புகிறேன். கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர்தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த திரு. ஜாபர் சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை. ஆனால் தற்போதுள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணி புரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம்? அது தவறல்லவா? அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம்தான்! எனவே உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று தூக்கி அடித்ததோடு, பழி வாங்கிடும் நோக்கத்திற்குப் பால் வார்த்திடும் வகையில், அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மேல் அதிகாரிகளிடம் இந்த அரசு பணித்தது. மேல் அதிகாரிகள், அவர் நல்ல ஓர் அதிகாரி, எந்தக் கட்சி அரசிலே இருந்தாலும், அந்த அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றக் கூடியவர். அவரைப் போல பல அதிகாரிகள் இருக்கிறார்கள், எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்தால் காவல் துறையின் நெறிமுறைகள் சீர்குலைந்து போகும் என்று கூறியும் கேளாமல், “நீங்கள் எல்லாம் கருணாநிதிக்குத்தான் விசுவாசமாக இருப்பீர்களா, உடனடியாக ஜாபர் சேட் மீது ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்” என்று கூறி, அதற்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பழி வாங்கும் அஸ்திரம் பாய்ந்துள்ளது.

கூடுதல் டி.ஜி.பி. நிலையிலே பணியாற்றும் அந்த அதிகாரியின் மீதான குற்றச்சாட்டு தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய மனை

ஒதுக்கீட்டினைப் பெற்று அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பதுதானாம்! இந்த வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு என்பதில் - அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அ.தி.மு.க. ஆட்சியிலேதான். அதற்கான அரசாணை 25-1-1979இல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் முதலில் இதைத் தொடங்கிய போது 10 சதவிகித வீடுகள் அல்லது மனைகளைத்தான் விருப்புரிமை அடிப்படையிலே அரசு வழங்கலாம் என்று இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு 1991ஆம் ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரத்தில் விருப்புரிமை 10 சதவிகிதம் என்பதை 15 சதவிகிதம் என்று உயர்த்தி வழங்கலாம் என்று முடிவெடுத்ததும் அவர்கள்தான். இவ்வாறு விருப்புரிமை அடிப்படையில் அரசு வீட்டு வசதி வாரிய மனைகளை ஒதுக்கீடு செய்தது பற்றி புகார் தி.மு.கழக ஆட்சியில் எழுந்தவுடன் கழக ஆட்சிக் காலத்திலேயே பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த அரசின் விருப்புரிமையில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டு ஆளுநர் உரையிலேயே அது அறிவிக்கப்பட்டது. தி.மு. கழக ஆட்சி இருந்த போதே இந்தக் குற்றச்சாட்டினை திரு. சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் கூறி, அதற்கு சட்டப் பேரவையில் விதி 110இன் கீழ் நான் விரிவாகவும், விளக்கமாகவும் பதில் கூறி, அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவிகிதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் - மீதியுள்ள 15 சதவிகிதத்தை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும். அரசு தனது விருப்புரிமை ஒதுக்கீடான 15 சதவிகித இடங்களை திருமணம் ஆகாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், சமூக சேவகர்கள், சமூகத்தில் சிறப்பு வாய்ந்தோர், தனியாக வசிக்கும் முதியோர், பொது நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணி புரிவோர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர், பத்திரிகையாளர்கள், தேசியமயமாக ஆக்கப்பட்ட வங்கிகளில் பணி புரிவோர், தேசிய மயமாக ஆக்கப்பட்ட ஈட்டுறுதி நிறுவனங்களில் பணி புரிவோர், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து

வாரியங்களில் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைத் தவிர) பணி புரிவோர், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளில் பணி புரிவோர், இராணுவத்தினர், மற்றும் முன்னாள் ராணுவத்தினர், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிக் காவலர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் ஆகியோர்க்கு விருப்புரிமையைப் பயன்படுத்தி ஒதுக்கீடு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையிலே தரப்படுவதில்லை. குலுக்கல் முறையிலே விற்கப்படுபவர்களிடம் பெறப்படும் அதே தொகை தான் - அதாவது சந்தை மதிப்பைத்தான் (Market Rate), விருப்புரிமை அடிப்படையில் பெறுபவர்களிடமும் வசூலிக்கப் படுகிறது. அதிலும் தற்போது தி.மு.கழக அரசின் ஆட்சிக் காலத்தில் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் வீட்டு மனை பெற்றவர்கள், அவர்கள் மனையின் விலையாகக் கட்ட வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்தத் தொகையை கட்ட முடியாத நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கே மீண்டும் அந்த வீட்டு மனைகளை ஒப்படைத்து விட்டார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. எந்த விதிமுறைகளையும் மீறி இந்த வீட்டு மனைகள் கழக ஆட்சிக் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில் ஒன்றைக் கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்ற வில்லை. “விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் - குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால் - அரசு அதனைப் பரிசீலனை செய்து, அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும்” என்று 7-12-2010 அன்று கழக அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த தம்பி ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம்கூறி, அது ஏடுகளிலேயே வெளி வந்துள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்தின் வீட்டு

மனைகளை விருப்புரிமை அடிப்படையிலே பெற்றவர்கள் --

● தலைமைச் செயலாளராக இருந்த திரு. என்.

நாராயணன், ஐ.ஏ.எஸ்.க்கு 1993ஆம் ஆண்டு

4115 சதுர அடி.

● தற்போது அமைச்சராக உள்ள திரு. கே.ஏ. செங்கோட்டையன் மகன் கே.எஸ். கார்த்திகேயனுக்கு பெசண்ட் நகர் பகுதியில் 1995 ஆம் ஆண்டு 4535 சதுர அடி.

● முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமீலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993ஆம் ஆண்டு 2559 சதுர அடி.

● நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதி தம்பிதுரைக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம்.

● அ.தி.மு.க.வின் தொழிற்சங்கப் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்.

● அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.எம். வேலுச்சாமியின் மனைவி திருமதி பானுமதிக்கு கோவையில் 1993ஆம் ஆண்டு வீடு.

● அதிகாரிகள் என்று எடுத்துக் கொண்டால் காவல் துறை அதிகாரிகளிலேயே திருவாளர்கள் தேவாரம், கே.விஜயகுமார், ஆர்.நடராஜ், பி.காளிமுத்து, இக்பால் முகமது, ஏ.பி.முகமது அலி, கே.ராதா கிருஷ்ணன், வி.பாலசந்திரன், சி.சைலேந்திரபாபு, எஸ்.வி.கருப்பசாமி, சிற்றரசு, ஆர். திருநாவுக்கரசு. எப்.எம்.உசேன், ஜி. சம்பத் குமார், செந்தாமரைக் கண்ணன், கே.சண்முகவேல், பி. சின்னசாமி, சஞ்சய் அரோரா, தமிழ்ச் செல்வன், கோபாலகிருஷ்ணன், பெரியய்யா, அசோக் குமார் போன்றவர்கள் வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளையோ வீடுகளையோ பெற்றிருக்கிறார்கள். ஆனால் இதில் எதையும் தி.மு.கழக ஆட்சியிலே தவறு என்று சுட்டிக் காட்டவில்லை.

● ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்று எடுத்துக் கொண்டால் திருவாளர்கள் மாலிக் பெரோஸ்கான், பி.ஏ. ராமையா, எஸ். கபிலன், ராகவன், சியாம் சுந்தர், சீனிவாசன், லால் ரெய்னா சைலோ, வி. ராமு, வி.

வரப்பிரசாத ராவ், டி. நடராசன் (இவர் அம்மையார்

ஜெயலலிதாவிடம் துணைச் செயலாளராகப் பணியாற்றியவர் - கழக ஆட்சியில் இவர் வீட்டிற்குச் சென்று சோதனை செய்ய வில்லை), எம்.தேவராஜ், சையத் முனீர் ஹோடா போன்ற அதிகாரிகள் வீடு அல்லது மனை பெற்றிருக்கிறார்கள் (இதில் தேவ ராஜ், சையத் முனீர் ஹோடா இருவரும் அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு மனை வாங்கியவர்கள் ஆயிற்றே என்று கருதாமல் நான் முதல்வராக இருந்த போது என்னிடம் செயலாளராகவே இவர்கள் பணியாற்றி னார்கள்)

● இவர்கள் தவிர அரசியல்வாதிகள் பட்டியல் வேறு உள்ளது. இரண்டு மனை பெற்றவர்களின் பட்டியலும் உள்ளது.

உடன்பிறப்பே,

இத்தனை பேர் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் - அதன் பிறகு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அந்த ஆட்சிக் காலத்திலும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மனைகளைப் பெற்றிருக்கிறார்கள். இதில் குறி பார்த்து ஒருசிலர் மீது மட்டும் தற்போது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுப்பது என்பது பழி வாங்கும் செயலல்லவா? இந்த அதிகாரிகள் அந்த இடங்களைப் பயன்படுத்தி கூட்டுப் பொறுப்பில் வேறு சில தனியாரோடு சேர்ந்து பெரிய கட்டிடங்களாகக்கட்டி பிறருக்கு விற்று கோடிக் கணக்கிலே சம்பாதித்து விட்டார்கள் என்று ஏடுகளிலே செய்தி வெளியிடுகிறார்கள். இந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளுக்காக வாரியம் குறிப்பிடும் தொகையை முழுவதுமாகக் கட்டி விட்டால் அந்த இடங்கள் அவரவர்களுக்குச் சொந்தமாகி விடும். சொந்தமாகி விட்ட அந்த இடங்களை இப்படி இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்று யாரும் கூற முடியாது; அதற்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லை. வீட்டு மனைக்குச் சொந்தக்காரர் விருப்பப்படி அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த மனைகளின் விலைகள் சுமார் ஒரு கோடி ரூபாய் என்கிறபோது, அந்தத் தொகையைக் கட்டுவதற்கும், வீடு கட்டுவதற்கும் அரசு அதிகாரிகள் என்ன செய்வார்கள்? தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து கூட்டாக (Joint Venture) அந்த மனையில் வீடுகளைக் கட்டுவதென்பது வீட்டு

வசதி வாரியம் சாதாரணமாக அனுமதிக்கும் ஒன்றாகும். இதில் விதி மீறல் எதுவும் இல்லை. பலர் இந்த முறையைப் பின்பற்றி வீடுகள் கட்டியிருக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்? அது மாத்திரமல்ல; கூடுதல் டி.ஜி.பி., ஜாபர் சேட் அவர்கள் இந்த மனையை முதலில் தன் பெண் பெயரிலே வாங்கிவிட்டு, பிறகு அதைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு, அதன் பிறகு தன் துணைவியார் பெயரிலே அதே மனையைப் பெற்றிருக்கிறார். ஒவ்வொருவர் பெயரிலும் ஒவ்வொரு மனையை வாங்கினால் தான் தவறு. இது ஒரே மனையை தன் குடும்ப சூழ்நிலை கருதி மற்றவர் பெயருக்கு மாற்றியதிலே என்ன பெரிய தவறு இருக்க முடியும்? மனைவி, மகள் பெயர்களையும் இதிலே இழுத்து வழக்கு தொடுக்கிறார்கள் என்றால்; அது வேண்டுமென்றே குடும்பத் தையே பழிவாங்குகின்ற செயல்தானே?

அந்த அதிகாரி மீது வழக்கு தொடுத்ததோடு மட்டுமல்லாமல் - நள்ளிரவிலே அவரைப் பணியிலிருந்து தற்காலிகப் பணி நீக்கம் செய்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கையும் எடுத்துள்ளது. அதிலும் பழிவாங்கும் எல்லைக்கு மற்றொரு உதாரணமும் கூறுகிறேன். இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர்? அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர். தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்? அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளையெல்லாம் பழி வாங்கினால், மற்ற அதிகாரிகள் எல்லாம் ஒரு அரசுக்கு விசுவாசமாக நாம் பணியாற்றினால், அடுத்து வரும் ஆட்சியிலே தாங்கள் பழி வாங்கப்பட நேரிடும் என்று நினைத்தால், தங்கள் பணியினை முறையாகவும் நிறைவாகவும் ஆற்ற முடியுமா? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கெல்லாம் சங்கங்கள் எல்லாம் இருப்பதாகச் சொல்கிறார்களே? அந்தச் சங்கங்கள் எல்லாம் இது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கிறதா? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய

அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா? இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது? பழிவாங்கு வதிலே நிர்வாகத் திறனைக் காட்ட முயற்சிப்பதை, நிர்வாக வரலாறு நிச்சயமாக ஏற்காது!

அன்புள்ள, மு.க. 5-8-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 306–312. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்