முரசொலி கடிதங்கள் · 3579
வரியில்லா பட்ஜெட் என்பது வடிகட்டிய பொய்யல்லவா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3579. வரியில்லா பட்ஜெட் என்பது வடிகட்டிய பொய்யல்லவா?
உடன்பிறப்பே,
ஜெயலலிதா அரசின் நிதியமைச்சர் திரு. பன்னீர்செல்வம் பேரவைக்கு அளித்த நிதி நிலை அறிக்கையில் இரண்டாவது பத்தியிலேயே “மாநில அரசு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்குக் கூடுதலான கடன் சுமையில் மூழ்கியுள்ளது” என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து, மாநில அரசின் கடன் சுமையைக் குறைப்பதற்கு பல்வேறு வகையான திட்டங்களையும், யோசனைகளையும் நிதி நிலை அறிக்கையிலே தெரிவிப்பார் என்று எண்ணி அதை முழுவதும் படித்த போது - இறுதியாக இந்த 2011- 2012ஆம் ஆண்டுக்கு அரசு பெறப் போகும் கடன் 17,261 கோடி ரூபாய் என்றிருப்பதைக் கண்டு நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். மாநில அரசின் கடன் சுமையைப் பற்றி ஏதோ திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சியிலே இருந்த போது, கடன்களை வாங்கி அவற்றையெல்லாம் ஜெயலலிதாவின் தலையில் வைத்து விட்டுப் போய் விட்டதைப் போல ஆதங்கப்பட்டு அடிக்கடி சிலர் பேசி வந்த நிலையில் அவர்களும் ஏமாற்றமடைந்திருப்பார்களென்று எண்ணுகின்றேன்.
தமிழக அரசின் கடன் விவரங்கள் பற்றி அரசின் சார்பில் பலமுறை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். இந்த ஆட்சியினர் மீது 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை தி.மு.கழக அரசு ஏற்றி வைத்து விட்டதாகத் திரும்பத் திரும்பச் சொல்வது தவறு. 31-3-2006 அன்றே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பிறகு தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும். இது ஜெயலலிதா, தி.மு. கழக அரசின் மீது ஏற்றி வைத்து விட்டுச் சென்ற கடன் சுமை. அந்தக் கடன் சுமையைக் குறைக்க தி.மு. கழக அரசு எந்த வரியையும் விதிக்க வில்லை. ஆனால் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த
மூன்று மாத காலத்திற்குள்ளாகவே சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு - நிதி நிலை அறிக்கையை அவையிலே படிப்பதற்கு முன்பாகவே அவசரம் அவசரமாக - வரிகளை சுமத்தியிருக்கிறார். அவ்வாறு நிதி நிலை அறிக்கையைப் படிப்பதற்கு முன்பு வரிகளை சுமத்தி விட்டு, தற்போது வரிகளே இல்லாத பட்ஜெட் என்று வாய் நிறைய புகழ்ந்து கொள்வதிலே என்ன பொருள் இருக்க முடியும்?
நிதித் துறையின் செயலாளர், திரு. க. சண்முகம், ஐ.ஏ.எஸ்., அவர்கள் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு அளிக்கும் வழக்கமான பேட்டியில், கலால் வரிகள் மூலமாக மாநில அரசுக்கு நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரத்து 191 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும் என்றும், மதுபானங்கள் மீதான வருவாய் நீங்கலாக விற்பனை வரிகள் மூலம் மாநில அரசுக்கு 7 ஆயிரத்து 755 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், மதுபானங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வரி வருவாயையும்
சேர்த்தால் 17 ஆயிரத்து 810 கோடி ரூபாய் கிடைக்கும் என்று சொல்லியிருக்க - இந்தச் செய்தியை வெளியிட்ட “தினமணி” நாளேடு அதன் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் “வரி விதிப்பு இல்லா உபரி பட்ஜெட்” என்று “போற்றி” பாடியிருப்பது சரிதானா?
இன்றைய “இந்து” நாளிதழிலே கூட - “State may have to go in for heavy borrowings this year” என்ற தலைப்பில், “The AIADMK Government’s first budget presented to the Assembly on Thursday shows that it may have to go in for heavy borrowings this year to fund its ambitious social welfare programmes. The projection of net borrowings is Rs. 17,261 crore 2011-12 to fill the resource gap” என்று ஜெயலலிதா அரசின் கடன் வாங்க வேண்டிய நிலையை சுட்டிக்காட்டியுள்ள “இந்து” நாளிதழ் அந்தச் செய்தியிலேயே, “When the State’s public debt was projected to cross Rs. 1 lakh crore at the end of last fiscal, the AIADMK, then in the Opposition, had warned that the DMK regime was pushing the State into a debt trap” - அதாவது கடந்த நிதியாண்டின் இறுதியில் மாநில அரசின் கடன் அளவு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று குறிப்பிட்டு, தி.மு.க. ஆட்சி மாநிலத்தை கடன் வலையிலே மாட்டி விட்டது என்று அ.தி.மு.க. விமர்சனம் செய்ததை எடுத்துக்காட்டி, ஜெயலலிதாவின் கடந்த கால வாய்ச் சவடாலையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன் ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டதாக பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டதோடு அந்தத் திட்டங்களையெல்லாம் நிதி நிலை அறிக்கையிலே மூன்றாவது பத்தியில் விரிவாக வெளியிட்டுள்ள நிதித்துறை அமைச்சர், அந்த ஏழு திட்டங்களிலே ஒரு திட்டமான மகப்பேறு கால விடுமுறை சலுகை ஆறு மாதங்களாக உயர்த்தப்படும் என்பதைக் குறிப்பிட மறந்து விட்டது ஏனோ?
தி.மு. கழக அரசு இலவசத் திட்டங்களை அறிவித்த போதெல்லாம், மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கும் திட்டங்கள் என்று கேலியும் கிண்டலும் செய்த ஜெயலலிதா தற்போதைய நிதி நிலை அறிக்கையிலே இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறார். இந்த இலவசத் திட்டங்களைத் தவிர நிதி நிலை அறிக்கையிலே உள்ள மற்ற திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களாகவும், கழக அரசின் திட்டங்களாகவும் உள்ளன.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், மத்திய அரசின் திட்டங்களான தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய மீன் வளர்ச்சிக் கழக நிதித் திட்டம், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டம், ராஜீவ் வீட்டு வசதித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம், தேசிய ஊரக சுகாதார நலத் திட்டம், சொர்ண ஜெயந்தி வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களும், உலக வங்கித் திட்டங்களான நீர்வள நிலவளத் திட்டம், அணை பாதுகாப்புத் திட்டம், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், ஜப்பான் நாட்டு உதவியுடன் பசுமைத் திட்டம் மற்றும் சென்னை மாநகர வெளிவட்டச் சாலைத் திட்டம் போன்ற திட்டங்களும் - ஜெர்மன் வளர்ச்சி வங்கி மூலம் குடிநீர், மழைநீர், பாதாளச் சாக்கடைத் திட்டம் போன்ற திட்டங்களுமாகும்.
கழக ஆட்சியில் தொடங்கிய பல்வேறு திட்டங்களின் பலனை அ.தி.மு.க. ஆட்சி தற்போது அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். நிதிநிலை அறிக்கையில் பத்தி 6இல் “மின் ஆளுகை முயற்சிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது” என்றும், பத்தி 50இல் “உலக அளவில் தமிழ்நாடு உற்பத்தி சார்ந்த தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக கருதப்படுகிறது” என்றும், பத்தி 56இல்
“நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிலம் ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனம் 25 இடங்களில் 2,256 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது” என்றும் கழக அரசுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கழக அரசு தொடங்கிய நதி நீர் இணைப்புத் திட்டம், பொது விநியோகச் சிறப்புத் திட்டம், திறன் வளர்ப்புத் திட்டம் போன்றவையும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தத் திட்டங்களையும் இந்த ஆட்சியிலே தொடர்ந்தாலும் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட நல்ல பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவதிலும் இந்த அரசு முனைப்பாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றைக் கூற வேண்டுமேயானால், 2008ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் துறையின் பணிச் சுமையைக் குறைக்கவும், காவல் பணியைச் செம்மையாக்கவும், சென்னைப் புறநகர் காவல் ஆணையரகம் துவக்கப்பட்டது. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் சென்னைப் புறநகர் காவல் ஆணையரகத்திற்கு மூடு விழா செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவ்வாறு செய்வதால், கமிஷனருக்கு பணிச் சுமை கூடும் என்றும், நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்றும், பணி மாற்றத்தின் போது போலீசார் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு தூக்கி அடிக்கப்படும் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் “தினமலர்” நாளேடே இன்று கருத்து தெரிவித்துள்ளது.
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்திற்கும் மூடு விழா நடத்தியிருக்கிறார்கள். கழக ஆட்சியில் 3716 கோடி ரூபாய்ச் செலவில் 1 கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு - ஒரு கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 285 பெட்டிகள் விநியோகம் செய்யப்பட்டு விட்டன. தொலைக் காட்சி பெட்டி பெறாதவர்களுக்கும் அவைகளை வழங்கிட 249 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் கொள்முதல் செய்ய கழக ஆட்சியிலே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தத் திட்டத்திற்கு தற்போது அ.தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விட்டதால், அந்தத் தொலைக்
காட்சி பெட்டிகளைப் பெறுவதற்காக காத்திருந்தவர்களின் வயிற்றெரிச்சலை இந்த அரசு சம்பாதித்துத்தானாக வேண்டும்.
அதுபோலவே குடிசை வாழ் மக்களுக்காக - தமிழகத்திலே குடிசை வீடுகளே இருக்கக் கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்ட திட்டத்திற்கு “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” என்று பெயர் வைத்தபோதே, நான் அது கூடாது என்று கூறினேன். ஆனால் ஒரு சிலர் என் பேச்சைக் கேட்காமல் அந்தத் திட்டத்திற்கு என் பெயரை வைத்த காரணத்தால், அ.தி.மு.க. ஆட்சியினர் அந்தத் திட்டத்திற்கே முற்றுப் புள்ளி வைக்க முனைந்து, முதல் ஆண்டிலே கட்ட முற்பட்ட 3 லட்சம் காங்க்ரீட் வீடுகளில் ஒன்றரை லட்சம் வீடுகள் முற்றுப்பெற்றது போக எஞ்சியுள்ள ஒன்றரை இலட்சம் வீடுகளும் இன்று முற்றுப் பெறவேண்டிய நிலையில் காத்திருக்கின்றன. ஆனால் இந்த ஆட்சியிலே அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்று இந்த நிதிநிலை அறிக்கையிலிருந்து தெரிகிறது.
என் பெயரில் உள்ள திட்டத்தை ரத்து செய்து விட்டு, இந்த ஆட்சியிலே வேறு ஒரு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்து அதற்கு ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். தி.மு. கழக ஆட்சியில் இந்தத் திட்டத்திற்காக 75 ஆயிரம் ரூபாய் என்று அறிவித்ததால், வீம்புக்காக ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் தரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். கழக ஆட்சியிலே இந்தத் திட்டத்திற்கு 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியபோது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பயனடையும் இந்திரா காந்தி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கும் மாநில அரசின் சார்பில் 75 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்தோம். ஆனால் அ.தி.மு.க. அரசு இந்திரா காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு மாறாக ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே உதவி நிதியாகத் தரப்படும் என்று அறிவித்திருப்பது, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின்பால் இந்த ஆட்சியினர் காட்டுகின்ற பாரபட்சமாக ஆகிவிடும்.
நிதி நிலை அறிக்கை பத்தி 65இல் “கடந்த ஐந்தாண்டுகளில் கூடியுள்ள புதிய உற்பத்தித் திறன் 206 மெகாவாட் மட்டுமே” என்று கூறிவிட்டு - பத்தி 68இல் 2011-2012ஆம் ஆண்டில்
புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தித் திறன் 3,280 மெகாவாட் ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த 3,280 மெகாவாட் மின்சாரமும் கடந்த ஐந்தாண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டங்களால் கிடைக்கக் கூடியதே தவிர, அ.தி.மு.க. ஆட்சி இந்த மூன்று மாதங்களிலே உற்பத்தி செய்தது அல்ல. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மொத்தம் 4183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டன. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த மின்சார திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியினருக்குத்தான் பயனை அளிக்கப் போகின்றன என்பதே உண்மை.
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட “தொல்காப்பியர் பேரவை” போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போதைய நிதி நிலை அறிக்கையில் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. “தமிழ் வளர்ச்சி” என்ற தலைப்பில் வெறும் 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்து காட்டப்பட்டுள்ளதே தவிர, செம்மொழி மாநாட்டில் கூறப்பட்டிருந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுமா, அல்லது அந்தத் திட்டங்களுக்கும் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் நேர்ந்த கதிதானா என்று தெரியவில்லை.
நிதி நிலை அறிக்கை பத்தி 143இல் “மாநில அரசு பல்வேறு வகையான தொழிலாளர்களுக்காக 34 நல வாரியங்களை அமைத்துள்ளது. இவற்றுள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் 17 நல வாரியங்களை தொழிலாளர் நலத் துறை நிர்வகித்து வருகிறது. இந்த 17 நல வாரியங்களில் 51.37 இலட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது நாள் வரை 13.85 இலட்சம் பயனாளிகளுக்குத் திருமணம், மகப்பேறு, அறுவை சிகிச்சை, கல்வி, ஓய்வூதியம், விபத்து, இறப்பு நிவாரணம் போன்றவற்றிற்காக 356.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நல வாரியங்கள் திறம்பட செயல்படாத நிலையில் உள்ளதால் இந்த அரசு இவ்வாரியங்களை சீரமைத்து அவற்றின்
செயல்பாடுகளை மேம்படுத்தும்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதிலே உள்ள விவரங்களைப் படித்தாலே இந்த வாரியங்கள் செயல்பட்டிருக்கின்றனவா என்பதை அறியலாம். இருந்தாலும் இந்த வாரியங்கள் எல்லாம் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டன என்ற ஒரே காரணத்திற்காக அவைகளையெல்லாம் சீரமைத்து மேம்படுத்தப் போவதாக அறிவித்து விட்டு, அவைகளுக்கும் மூடு விழா நடத்தப் போகிறார்கள் என்பதுதான் நடக்கப் போகிறது. எனவே அ.தி.மு.க. நிதி நிலை அறிக்கையைக் கண்ணை மூடிக் கொண்டு படித்துப் பாராட்டி மகிழலாம்! அவ்வளவுதான்!
அன்புள்ள, மு.க. 6-8-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 313–319. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.