அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3581

முரசொலி கடிதங்கள் · 3581

மந்தி அறியுமா; மலர்மாலை மணமும் அழகும்!

நாள் 13.8.2011சுமார் 9 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3581. மந்தி அறியுமா; மலர்மாலை மணமும் அழகும்!

உடன்பிறப்பே,

சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பதற்கேற்ப, தமிழக அரசு அதனை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதையொட்டி கல்வித் துறை சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் நீக்கப்பட வேண்டிய பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து விட்டும் சில இடங்களில் கறுப்பு நிற மார்க்கர் பேனா கொண்டு அடித்துவிட்டும் வழங்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். கல்வித்துறை சார்பில் நீக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளவற்றில் என்னென்ன உள்ளன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.

பொதுவாக எல்லா வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள செம்மொழி வாழ்த்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டுமாம். அப்படி அந்த வாழ்த்தை மறைக்க வேண்டிய அளவிற்கு அதிலே உள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே

உறைவிடம் என்பது ஒன்றேயென

உரைத்து வாழ்ந்தோம் -

உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்!

போரைப் புறம் தள்ளி

பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழி காட்டும்

அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்

ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

கம்ப நாட்டாழ்வாரும்

கவியரசி அவ்வை நல்லாளும்

எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற

எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் - தரும், புத்தாடை அனைத்துக்கும்

வித்தாக விளங்கும் மொழி!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை

அழகாக வகுத்தளித்து

ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -

ஓதி வளரும் உயிரான உலக மொழி -

நம் மொழி - நம் மொழி - அதுவே செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

வாழிய வாழியவே!

இந்த வார்த்தைகளில் மாணவர்கள் படிக்கக் கூடாத - படித்தால் அவர்கள் எதிர்காலம் பாழாகிடக் கூடிய வார்த்தை ஏதாவது ஒன்று இருக்கிறதா? ஒரே குற்றம், இந்தச் செம்மொழி வாழ்த்துப் பாடலை எழுதியது நான் என்பது தான். நான் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும் பாருங்கள்! அதே நேரத்தில்

ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது அவர் தஞ்சையிலே நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுப் பாடலில் உள்ள பின்வரும் வார்த்தைகளையும் பாருங்கள்.

“என்றும் உள்ள தென் தமிழ் போல் இனிக்கும் தமிழின் இலக்கியம் போல் என்றும் மொழிக்கு புகழ் சேர்க்க இனிய முதல்வர் வாழியவே”

“அவ்வை ஆண்டாள் அம்மையுமே அழகுறப் பாடி தமிழ் வளர்த்தார் அன்னை முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து வளர்க்கின்றார்”

“பாரதத் தாயும் தமிழ்த் தாயும் பாங்குடன் சேர்ந்து மிளிர்வது போல் வாராது வந்த மாமணியாம் வாழ்க அன்னை ஜெயலலிதா”

உலகத் தமிழ் மாநாட்டு வாழ்த்துப் பாடலில் தமிழை வாழ்த்துவதற்குப் பதிலாக இவ்வாறு ஜெயலலிதாவின் புகழ் பன்மடங்கு பெரிதுபடுத்தப்பட்டுப் பாடப்பட்டது போல, தி.மு. கழக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி வாழ்த்துப் பாடலில் முதல் அமைச்சரைப் பாராட்டி ஏதாவது ஒரு வார்த்தை இடம் பெற்றுள்ளதா? ஆனாலும் அதனைக் கிழிக்க வேண்டும் என்கிறார்கள்!

முதல் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 69, 70, 79, 80 ஆகிய நான்கு முழுப் பக்கங்களையும் நீக்க வேண்டுமாம்! அந்தப் பக்கங்களில் என்ன உள்ளது தெரியுமா? 69ஆம் பக்கத்தில் “வண்ணம் தீட்டுவேன்” என்ற தலைப்பில் ஒரு ஆப்பிள் படம் போடப்பட்டுள்ளது. அதில் பாதிப் பகுதிக்கு சிகப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. மீதிப் பகுதிக்கு மாணவன் வண்ணம் தீட்ட வேண்டும். இந்தத் தாளினையே நீக்க வேண்டுமாம். என்ன காரணம் என்றால், கறுப்பு சிகப்பு தி.மு. கழகத்தின் வண்ணமாம். 70ஆம் பக்கத்தில் ஒளவை, கெளதாரி, பெளர்ணமி, வெளவால் படங்கள் உள்ளன. அவற்றில் ஒருவேளை இவர்கள் யாருடைய

படமாவது இருக்கிறதோ என்று தெரியவில்லை! இந்தப் பக்கத்தை ஏன் கிழிக்கச் சொல்லியிருக்கிறார்கள் என்று பள்ளிக் கல்வித் துறைக்குத்தான் வெளிச்சம். அதுபோலவே 79ஆம் பக்கத்திலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. 80ஆம் பக்கத்தில் தமிழ் மாதங்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அந்த மாதங்கள் தை மாதம் முதல் தொடங்கியிருப்பதால் அந்த முழுப் பக்கத்தையும் கிழிக்கச் சொல்லிவிட்டார்கள்.

3வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 67வது பக்கத்தில் “2 படங்கள் மற்றும் ஜூன் 23 - 27, 2010ல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கலைநிகழ்ச்சி, ஊர்வலக் காட்சி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும்” - என்று சுற்றறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி, ஊர்வலக் காட்சி இரண்டின் படங்கள் சிறிதாக சிறுமிகள் நடனமாடுவதைப் போன்று அந்தப் பக்கத்திலே இடம் பெற்றுள்ளன. அதைத்தான் மறைக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

3வது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 26வது பக்கத்தில், கடைசி பத்தி நீக்கப்பட வேண்டுமாம். அதிலே என்ன இருக்கிற தென்றால், “உலகத் தமிழ் மாநாடு 2010 ஜூன் மாதம் 23ந்தேதி முதல் 27ந்தேதி வரை கோவையில் நடைபெற்றது” என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம்.

அதே புத்தகத்தின் 27வது பக்கத்தில் “அந்த மாநாட்டுக்கு தலைவராக முதலமைச்சர் இருந்தார். மாநாட்டு கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது” என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம். மாநாட்டுத் தலைவராக நான் இருந்தேன் என்றுகூட இல்லை, “முதலமைச்சர்” இருந்தார் என்றுதான் உள்ளது. ஆனாலும் அதனை அழிக்க வேண்டுமென்று தமிழக அ.தி.மு.க. அரசு கூறியிருக்கின்றது.

4வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 74வது பக்கத்தில், “செம்மொழி மாநாட்டுப் படங்கள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள் மறைக்கப்பட வேண்டும். கவிபாரதி இடம் பெற்ற படம்தான் அந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை மறைக்க வேண்டுமென்கிறார்கள்.

75வது பக்கத்தில், முதல் பத்தி நீக்கப்பட வேண்டும். அதாவது “செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ் மொழி என்று தொடங்கும் அந்தப் பத்தி முழுவதும் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்” - இது சுற்றறிக்கை. அந்தப் பத்தியில் உள்ள வாசகங்கள் என்ன தெரியுமா? “செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ்மொழி. தமிழக அரசால் கோவையில் நடத்தப் பெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி முதல் மாநாட்டில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் “இனியவை நாற்பது” என்ற பெயரில் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றிருந்தன. அவை தமிழ் மொழியின் தொன்மையையும் பண்பாட்டுச் சிறப்பையும் வெளிப்படுத்தின” என்ற வார்த்தைகளில் ஏதாவது ஒரு வார்த்தை தி.மு. கழகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ பெருமையாகக் கூறுவதாக இருக்கிறதா என்பதை தமிழ் மக்கள்தான் கூற வேண்டும்!

4-வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111வது பக்கத்தில் சென்னை சங்கமம் பற்றிய பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். அதாவது நாட்டுப்புறக் கலைகள் மக்களுக்கு புத்துணர்ச்சி அளித்து கலை உணர்ச்சிக்கு விருந்தளிக் கின்றன. நாட்டுப்புறக் கலைகளை வளர்த்திட தமிழக அரசு ஆண்டுதோறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது என்ற பகுதி கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் என்று கல்வித் துறை சார்பில் சொல்லியிருக்கிறார்கள். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பது குற்றமா என்று தெரியவில்லை. இந்த வரிகளை அழிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள்.

5வது வகுப்பு சமூக அறிவியலில் 80-வது பக்கத்தில் 3வது படம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் படம் மிகவும் சிறிதாக புதிய தலைமைச் செயலகம் என்பது கூட தெரியாத அளவிற்கு உள்ளது. அதைக் கூட இந்தப் புத்தகத்தில் வெளிவந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியாளரின் இதயத்தில் காழ்ப்புணர்ச்சி இடம் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

6வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் பக்கம் 56இல் அப்துல் ரகுமானின் புதுக்கவிதை - தாகம் - முழு பக்கமும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்கிறது அரசு உத்தரவு. அந்தக் கவிதையில், “வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே, வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்? - அப்துல் ரகுமான்” என்று உள்ளது. இந்தக் கவிதையை எதற்காக ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. கவிக்கோ மீதுள்ள கோபமா?

அதே புத்தகத்தில் பக்கம் 129இல் “தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் - கவிதை - தைத்தமிழ்ப் புத்தாண்டே வருக” என்ற வார்த்தைகள் இடம் பெற்றதற்காக அந்தப் பக்கம் முழுவதையும் நீக்க வேண்டுமாம். அடுத்து 130வது பக்கத்தில் இலவசப் பயண அட்டை விண்ணப்பப் படிவம் என்ற தலைப்பில் மாணவன் பெயர், பள்ளியின் பெயர், புறப்படும் இடம், சேரும் இடம் என்ற விவரங்களைப் பூர்த்தி செய்யும் படிவம் உள்ளது. அந்தப் பக்கத்தையே முழுவதுமாக நீக்க வேண்டுமென்று எதற்காகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை.

6ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் பக்கம் 53இல் இரண்டாவது பத்தியில் உள்ள “தப்பாட்டம்” என்ற பகுதியை முழுவதுமாக நீக்க வேண்டுமாம். தப்பாட்டம் என்றால் என்ன என்பதையும், சிலப்பதிகாரகாலத்திலே அது இடம் பெற்றிருந்தது என்பதையும் அந்தப் பத்தியில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் பத்தியின் இறுதியில் “பொங்கல் விழாவின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தப்பாட்டம் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று ஒரு வாக்கியம் இடம் பெற்ற காரணத்தால் அந்தப் பத்தி முழுவதையும் நீக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

6ஆம் வகுப்பு - அறிவியல் பாடப் புத்தகத்தில் 81ஆம் பக்கத்தில் உள்ள சட்டக்காந்தம் படம் மறைக்கப்படவேண்டுமாம். காரணம் அந்தப் படத்தின் வண்ணம் கறுப்பு, சிகப்பு போல இருக்கிறதாம்.

6ஆம் வகுப்பு - சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் - பக்கம் 11இல் “அண்மையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் உயிர்க் காப்பீட்டுத் திட்ட நிதி உதவியால் எங்குமுள்ள வசதியற்ற மக்களும் செலவு மிகுதியாகக் கூடிய உயர்ந்த மருத்துவ மனையில்

தரமான சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்பதை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவேண்டுமாம்!

பக்கம் 12இல் மூன்றாவது வரியில் உள்ள “அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்” என்ற வார்த்தைகளை நிரந்தர மார்க்கர் பேனா வைத்து அழிக்க வேண்டுமாம்! பக்கம் 17இல் “அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்”, “வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” என்ற வார்த்தைகளையும் நிரந்தர மார்க்கர் பேனா வைத்து அழிக்கவேண்டுமாம்! இவர்கள் ஆட்சியில் “அண்ணா” என்ற பெயரே ஆட்சேபணைக்குரியதா?

பக்கம் 24இல் “வருபவர் தமிழக முதல்வர் கலைஞர் என்பது குறிப்பிட வேண்டியதாகும்” என்ற வார்த்தைகளை அழிக்க வேண்டுமாம். புத்தகத்தில் என்ன உள்ளதென்றால், “கருவுற்ற தாய்மார்கட்கு நல்ல சத்துணவு கிடைத்திட வழிசெய்ய மகப்பேறுக்கு முன் மூன்று மாதத்திற்கும், பின் மூன்று மாதத்திற்குமாக, மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறாயிரம் ரூபாய் அரசே வழங்கும் நல்ல திட்டத்தை அறிவித்து நிறைவேற்றி வருபவர் தமிழக முதல்வர் கலைஞர் என்பது குறிப்பிட வேண்டியதாகும்” என்றிருக்கிறது. இதில் கடைசியாக உள்ள வார்த்தைகளை அரசின் அறிவுரைப்படி நீக்கி விட்டால் நிறைவேற்றி .. என்பதோடு வாக்கியம் முடியாமல் அப்படியே இருக்கும். அதைத்தான் மாணவர்கள் படிக்க வேண்டுமென்று இந்த அரசு கூறுகிறது.

பக்கம் 35இல் சூரிய கிரகணம் குறித்த படமும், பகல் இரவு படமும் வெளிவந்துள்ளன. சூரிய கிரகணம் படத்தை முழுவதுமாக அழிக்க வேண்டுமாம். காரணம் அந்தப் படத்தில் ஒரு பகுதி கறுப்பு சிகப்பு வண்ணம் போல இருப்பதால் அதை முழுமையாக அழிக்க வேண்டுமாம். பகல் இரவு படத்தில் சூரியன் படத்தை அப்படியே அழித்துவிட வேண்டுமாம். அ.தி.மு.க. ஆட்சியில் எந்தப் புத்தகத்திலும் சூரியன் படத்தை வெளியிடக் கூடாது என்று ஒரு ஆணையையே பிறப்பித்து விடலாம்!

பக்கம் 82இல் “தமிழக முதல்வர் கலைஞரின் கருத்தினை ஏற்று, கடந்த 2004ஆம் ஆண்டு மைய அரசு தமிழ் ஒரு செம்மொழி என்று அறிவித்துள்ளது. இதிலிருந்து தமிழின் இணையற்ற சிறப்பு விளங்கும்” என்ற வார்த்தைகளை அழிக்க வேண்டுமாம். இவற்றில்

என்ன தவறு என்பதை படிப்பவர்களே தெரிந்து கொள்ளலாம். அதே பக்கத்தில் தமிழ்நாடு படம் இருப்பதை மறைக்க வேண்டுமாம். காரணம் அதில் சோழர் வாழ்ந்த பகுதியை கறுப்பு வண்ணம் கொண்டும், சேரர் ஆண்ட பகுதியை சிகப்பு வண்ணம் கொண்டும், பாண்டியர் ஆண்ட பகுதியை நீல வண்ணம் கொண்டும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இந்த மூன்று வண்ணங்களில் கறுப்பு, சிகப்பு வண்ணங்கள் இடம் பெற்றிருப்பதால் அந்தப் படத்தையே மறைத்து விட வேண்டுமாம்!

7-வது வகுப்பில் 98-வது பக்கத்தில் கொ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், கந்தசாமி, என்.எஸ். கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, டி.கே.எஸ். சகோதரர்கள், ஆர்.எஸ். மனோகர் முதலியோர் இவர்தம் அடியொற்றி நாடகக் கலை வளர உறுதுணை புரிந்தோராவர் என்ற பகுதி கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் - என்று சுற்றறிக்கையிலே காணப்படுகிறது. “தமிழ் நாடக முன்னோடிகள்” என்ற தலைப்பில் பரிதிமாற்கலைஞர், சங்கரதாச சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் போன்றவர்களைப் பற்றி விரிவாக எழுதி விட்டு இறுதியாக ஒரு பத்தியில் மேலே சொன்ன பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு இவர்களும் நாடகக் கலை வளர துணை புரிந்தோர்கள் என்று சொல்லும்போது என் பெயரையும் சேர்த்து விட்டார்களாம், அதற்காக அண்ணா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றவர்களின் பெயர்களையெல்லாம் சேர்த்து கறுப்பு நிற மார்க்கரால் அடிக்க வேண்டுமென்று அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டுள்ள ஆட்சியிலே ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடா அல்லவா?

9-வது வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பக்கம் 203இல் “தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கவிழா” என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டும் என்கிறது சுற்றறிக்கை. அதிலே என்ன இருக்கிறது என்றால், “தமிழர் திருநாளாம் பொங்கல் விழா; தைத்திங்கள் நாள் விழா; தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க விழா; தமிழினத்தின் தனிவிழா; பண்பாட்டுப் பெருவிழா” என்பதுதான் அதிலே உள்ள வார்த்தைகள். தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க விழா என்பதை கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டுமாம்.

பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் பக்கம் 17இல் “மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் நிறைவுற்றது” என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் உள்ளது. என்ன காரணமாம்? “தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி, 2004 வரை தொடர்ந்தது. நடுவணரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது. இத்தொடர் முயற்சி மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் நிறைவுற்றது” என்று உள்ளதில் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் நிறைவுற்றது என்பதை கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

அதே புத்தகத்தில் 89வது பக்கத்தில் “அறிந்துகொள்வோம் என்ற பகுதி முழுவதும் நீக்கப்பட வேண்டும்” என்கிறது சுற்றறிக்கை. அந்தப் பகுதியில் நான் எழுதிய கவிதை ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனை முழுவதும் நீக்க வேண்டுமாம்.

100வது பக்கத்தில் “கலைஞரின் இனிய நடையை படித்தறிக. கொடிநாள்.......வெற்றி உங்களை தேடி வந்து மாலையிடும் என்ற பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும்” - இது சுற்றறிக்கை. கொடிநாள் பற்றி நான் எழுதிய ஒரு உரைநடையை, நான் எழுதியது என்பதனால் அதனை மறைக்கவேண்டுமென்று கூறியிருக் கிறார்கள்.

239வது பக்கத்தில் “பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்” இது சுற்றறிக்கை. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை இரவோடு இரவாக அப்புறப்படுத்திய ஆட்சி என்பதால் அந்த வாசகங்களை நீக்கச் சொல்லியிருக்கிறார்கள் போலும்!

114-வது பக்கத்தில் தற்போது புதிய தலைமைச் செயலகம் 2010 மார்ச் 13ந்தேதி முதல் அண்ணா சாலை ஓமாந்தூரார் தோட்டத்தில் இயங்கி வருகிறது என்ற தொடர் கறுப்பு நிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் 177-வது பக்கம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமாம். அந்தப் பக்கத்தில் என்ன இருக்கிறதென்றால், தஞ்சை பெரிய கோவிலில் என்ற பகுதி அழிக்கப்பட வேண்டுமாம்.

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இரண்டு இடங்களில் தி.மு.க. அரசு என்ற வார்த்தைகள் இடம் பெற்ற காரணத்தால், அதனை அழிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்த அரசு மற்றப் பாடப் புத்தகங்களில் நீக்கியுள்ள பகுதிகள் எல்லாம் எத்தகையது என்பதை நீங்கள் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத்தான் பெரிதாக நீதி மன்றங்களில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் தி.மு. கழகத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் பக்கம் பக்கமாக பாராட்டி சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்துவிட்டதாகக் கூறி, அந்தப் புத்தகங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்கள். சமச்சீர் பாடப் புத்தகங்களில் அப்படி என்னதான் வார்த்தைகள் கடந்த கால அரசையும், என்னையும் பாராட்டி வந்துவிட்டன என்ற விவரம் அனைவருக்கும் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இங்கே தொகுத்துள்ளேன். இந்த விவரங்களை நீயும் மக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் விளக்கிடுவாய் என்று நம்புகிறேன்.

அன்புள்ள, மு.க. 13-8-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 328–337. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்