முரசொலி கடிதங்கள் · 3584
அடிநாதமே; அறுக்கப்படுவதா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3584. அடிநாதமே; அறுக்கப்படுவதா? உடன்பிறப்பே,
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக “சட்ட மன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு” என்ற தலைப்பில், மாநிலமெங்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களைச் சந்தித்துப் பெருமளவுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம்.
வடசென்னை தங்கசாலையில் 25-8-2011 அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில், “நம்முடைய கழக முன்னணியினர் ‘தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பிலே கண்டன முழக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ‘தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்று சொல்லுகின்ற தலைப்பிலேயே ஒரு திருத்தம் காண விரும்புகின்றேன். தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் இருந்தால் அல்லவா, அது படும்பாடு பற்றி நாம் பேச முடியும்? ஜனநாயகமே இல்லாத ஒரு இடத்தில், எப்படி ‘அது படும்பாடு’ என்று நாம் வருத்தப்பட முடியும் என்பதால்தான், தலைப்பிலே ஒரு திருத்தத்தை இணைக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று நான் உரையாற்றினேன்.
ஜனநாயகத்தின் அடிநாதமே - எந்த முனையிலும் அச்சமில்லாத சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம், ஆரோக்கியமான கலந்தாலோசனை, விரிவான விவாதங்கள் என்பவைதான். இன்றைய தமிழக சட்டமன்றத்தில் இந்த அடிநாதம் அறுத்தெறியப்பட்டு, ஜனநாயகத்தின் உண்மை உருவம் கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்குலைக்கப்பட்டு வருவதை நாம் காணுகிறோம்; நாட்டினரும் அமைதியாகக் கண்டு வருகிறார்கள். அதனால்தான் ஜனநாயகமே இல்லாத இடமாக தமிழக சட்ட மன்றம் மாறி வருகிறது என்று நான் குறிப்பிட்டேன்.
இன்றைய தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினர்யாரும் பேச வேண்டுமென்றால்; ஒன்று, தி.மு.கழக ஆட்சியில் கொண்டு
வரப்பட்டு, மக்களின் அமோக ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் குறை சொல்லிப் பேச வேண்டும் அல்லது தமிழக சட்டமன்றத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருந்து பொன்விழா கண்ட - ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பேற்று பத்தொன்பது ஆண்டுக்காலம் முதலமைச்சராக இருந்த என்னை ஏசிப் பேசவேண்டும் அல்லது “தாயே, அகிலாண்டேஸ்வரி” என்றெல்லாம் “போற்றிப் புராணம்” பாட வேண்டும். இந்த அடிப்படை அம்சங்களைப் பின்பற்றாதவர்களுக்கு அங்கே இடமில்லை. அதனால்தான் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் மன்றத்திற்கு வந்து, ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாதவாறு வெளியேற்றப்படுகிறார்கள்; அப்படிச் செய்வதன் மூலம் சட்டமன்றத்திலிருந்து ஜனநாயகத்தையும் வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலேயே, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள கட்டடங்கள், சட்டப்பேரவை - தலைமைச் செயலகம் ஆகியவற்றின் தேவைக்குப் போது மானவை அல்ல; பராமரிக்க இயலாத அளவுக்கு பழையதாகி, பழுதடைந்துவிட்டன என்று சொல்லி; வேறு வேறு இடங்களைப் பார்த்து, இறுதியாக கோட்டூர்புரத்தில் “பூமிபூஜை” எல்லாம் போட்டார்கள். சட்டப்பேரவை - தலைமைச் செயலகக் கட்டடங்களை இன்றைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்பவும், நவீன வசதிகளுடனும் கட்டியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு; அண்ணா சாலையில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இடத்தேர்வு செய்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு அரசுப் பணத்தைச் செலவழித்து, உலகத் தரத்தில், நடுநிலையாளர்கள் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் கட்டிடங்களைக் கட்டி முடித்து, புதிய சட்டப்பேரவை - தலைமைச் செயலகம், திருமதி சோனியா காந்தி அவர்களின் முன்னிலையில், இந்தியத் திருநாட்டின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு; தி.மு.க. ஆட்சியிலேயே அங்கு ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டு, இடைக்கால நிதிநிலை அறிக்கை வழங்கப்பட்டு, முதலமைச்சர் - ஏனைய அமைச்சர்களின் அலுவலகங்கள் பணியாற்ற ஆரம்பித்தபோது தான், சட்டப்பேரவைக்கான தேர்தல்கள் வந்தன. தேர்தல்கள் முடிந்து அ.தி.மு.க. வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னரேயே, யாரையும் கலந்தாலோசிக்காமல், கழக ஆட்சிக்
காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, சட்டப்பேரவையையும் தலைமைச் செயலகத்தையும், பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே அமைத்துக் கொள் வதாக அறிவித்தவர் ஜெயலலிதா! இவ்வளவு பெரிய கொள்கை முடிவினை மேற்கொள்வதற்கு முன்; அமைச்சரவையைக் கூட்டி, விரிவாக விவாதிக்க வேண்டாமா? தோழமைக் கட்சிகளுடனாவது கலந்தாலோசனை செய்து கருத்தறிய வேண்டாமா? இப்படி, ஆட்சிப் பொறுப்பேற்று சட்டமன்றத்தைத் தொடங்குவதற்கு முன்பே, ஜனநாயகத்துக்கு விடை கொடுத்தவர்கள் தான் அ.தி.மு.க. ஆட்சியினர்!
கிராமத்து மாணவர்கள் - நகரத்து மாணவர்கள், வசதி படைத்த மாணவர்கள் - வசதி இல்லாத ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் ஒரே தரமான சமமான கல்வியைப் பெறுவது தான் சோஷலிச சமுதாயம் என்ற நோக்கில்; கழக ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு “சமச்சீர் கல்வித் திட்டத்தை” தமிழகத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற இலட்சியத்தோடு, மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு, அவசரப்படாமல், மீண்டும் ஒரு குழுவை அமைத்து - மற்ற மாநிலங்களுக்குச் சென்று, கலந்தாலோசனை செய்து, அந்தக் குழுவின் கருத்துரைகள் பெறப்பட்டு, சமச்சீர் கல்விக்கான சட்டத்தை நிறைவேற்றி, அதனைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தலாம் என்று முடிவு செய்து, தொடக்கத்தில் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் 2010-11 கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2011-2012 கல்வி ஆண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கு விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டு, அதன்பிறகே சமச்சீர் கல்வித் திட்டம் நிலை நிறுத்தப்பட்டது. இப்படி அனைத்து எச்சரிக்கை உணர்வோடும், நீதிமன்றங்களின் ஒப்புதலோடும் நிறைவேற்றப்பட்ட “சமச்சீர் கல்வித் திட்டத்தை” ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக, ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. முதல்கட்டத் தொடரிலேயே ரத்து செய்வதற்கான சட்டத் திருத்தத்தைக்
கொண்டு வந்து நிறைவேற்றியது. அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும்கூட; விரிவான விவாதங்களுக்கு இடமளிக்காமல், சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டது - சமம், சமத்துவம் என்பவற்றில் எல்லாம் சற்றும் நம்பிக்கையில்லாத அ.தி.மு.க.! இப்படி, அவசரம் அவசரமாக, சட்டமன்றத்திலிருந்து ஜனநாயகத்தை வெளியேற்றத் தொடங்கியவர்கள் அ.தி.மு.க. ஆட்சியினர்!
நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வழங்குவதற்கான நாள் குறிப்பிட்டு, ஆளுநர் ஒப்புதல் பெற்று, அறிவிக்கை செய்ததற்குப் பிறகு, 4000 கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு வரி விதிப்புகளை அ.தி.மு.க. ஆட்சியினர் அறிவித்தனர். சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கும், சட்டப்பேரவை நீண்ட நெடிய பாரம்பரிய மரபுகளுக்கும் மதிப்பளிப்பவர்கள், இந்த வரி விதிப்புகளை நிதிநிலை அறிக்கையிலேதான் இணைத்து அறிவித்திருக்க வேண்டும். அப்படி அறிவித்தால்தான் சட்டப்பேரவையில் பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்து, விவாதிக்க வாய்ப்பாக இருந்திருக்க முடியும் என்று கூறிய தற்கு மாறாக; ஜனநாயக ரீதியில் வழங்கப்பட்டிருக்கின்ற வாய்ப்பை நசுக்கி, ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சி யினர்!
கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது தமிழ் நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி,
7-8-2006 அன்று விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்குமான பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறை அமைச்சரின் தலைமையில்
18-1-2007 அன்று விவசாயத் தொழிலாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ், 1 கோடியே 74 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். கழக ஆட்சிக் காலத்தில் 8 லட்சத்து 73 ஆயிரம் விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 684 கோடியே 2 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியினர், விவசாயிகளுக்கும் விவசாயக் குடும்பங்களுக்கும் பாதுகாப்பும்
நலத்திட்டங்களும் வழங்கிடும் இந்தச் சட்டத்தை -கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம் என்ற வெறுப் புணர்ச்சியோடு ரத்து செய்தனர். அறிமுக நிலையிலேயே, அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும் கூட, எந்தவிதமான விவாதத்திற்கும் கருத்துரைக்கும் சட்டமன்றத்தில் இடமளிக்காமல், ரத்து சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டனர். ஜனநாயக ரீதியான விவாதங்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் இடமேது?
“பெரும்புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921ஆம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி, தமிழர்களுக்கென்று ஒரு ‘தனி ஆண்டு’ தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு ஒன்றினை பின்பற்றுவ தென்றும், அதையே ‘தமிழ் ஆண்டு’ எனக் கொள்வ தென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள். அந்தக் கருத்தினை கழக ஆட்சியில் ஏற்றுக் கொண்டு, 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தது. திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப் படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது” என்று 23-1-2008 அன்று தமிழக சட்டப் பேரவையில் மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் ஆற்றிய உரையில் அறிவித்ததற்கிணங்க,
1-2-2008 அன்று சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் இனத்திற்குரிய தகுதி மிக்க அடையாளங்களில் ஒன்றான, இந்தச் சட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியினர், எந்தவித விவாதமும் இன்றி, சட்டமன்றத்தில் ரத்து செய்தனர். அன்று, ஜனநாயகம் காற்றோடு காற்றாய்க் கலந்தது!
தமிழகச் சட்டமன்றத்திற்கென்று, சான்றாண்மை மிக்க மரபுகள் உண்டு. அந்த மரபுகளெல்லாம் இன்றைக்கு அ.தி.மு.க.
ஆட்சியில் ஒவ்வொன்றாய் விடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா - பேரவைத் தலைவர் மீதே, மரபுகளுக்கு முரணாக, சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டுகிறார். வினாக்களைத் தேர்வு செய்யும் போது, சாதகமான பதில்கள் அளிக்கக்கூடிய வகையில் தேர்வு செய்ய வேண்டுமாம்! இப்படி எந்த விதியில் உள்ளது என்று தெரியவில்லை. அப்படித் தேர்வு செய்ய பேரவைத் தலைவர் தவறிவிட்டாராம். அதற்குத்தான் அவர் மீது குற்றச்சாட்டு! பேரவைத் தலைவரே, பேரவையிலேயே எல்லோர் முன்னிலையிலேயும், ஜெயலலிதாவின் காலில் விழுந்து, ஆசீர்வாதம் பெற்ற வரலாறு மறந்துவிடுமா? ஜெயலலிதா பேரவைத் தலைவரின் ஆசனத்திலும் - உடன்பிறவாச் சகோதரி பேரவைத் துணைத் தலைவரின் ஆசனத்திலும் அமர்ந்து பெருமிதம் கொண்ட அ.தி.மு.க. சட்டப்பேரவை நிகழ்வினை, தமிழகம் மறந்துவிடுமா?
அன்புள்ள,
மு.க. 8-9-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 352–357. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.