முரசொலி கடிதங்கள் · 3585
அய்யோ பாவம்! அ.தி.மு.க. அமைச்சர்கள்!!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3585. அய்யோ பாவம்! அ.தி.மு.க. அமைச்சர்கள்!!
உடன்பிறப்பே,
தமிழகச் சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும், பல்வேறு துறைகள் குறித்த மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று அந்தத் துறைகளின் அமைச்சர்கள் இறுதியாக விவாதத்திற்குப் பதிலுரை கூறி, தங்கள் துறைகளின் சார்பில் அறிவிப்புகளை வெளியிடுகின்றார்கள். இதிலே “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை” பற்றிய விவாதம் கடந்த 25-8-2011 அன்று நடைபெற்று துறை அமைச்சரும் பதிலளித்து விட்டார். ஆனால் அந்தத் துறைக்கான முக்கிய சில அறிவிப்புகளையெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் 6-9-2011 அன்று 110வது விதியின் கீழ் படித்திருக்கிறார். அது போலவே வீட்டு வசதித்துறை அமைச்சர் தனது மானியத்தின் மீதான விவாதத்தை 25-8-2011 அன்றே முடித்திருக்கும்போது, அந்தத் துறைக்கான அறிவிப்புகளை 8-9-2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ் பேரவையில் படித்திருக்கிறார். ஏன் அந்தத் துறைக்கான அமைச்சர்கள் அந்தத் துறை பற்றிய மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட நேரத்தில் இந்த அறிவிப்புகளைச் செய்யவில்லை? இந்தத் துறையிலே மாத்திரமல்ல, ஒவ்வொரு துறை பற்றிய மானிய விவாதத்தின்போதும், உப்பு சப்பில்லாத ஒரு சில அறிவிப்புகளையும், தி.மு. கழகத்தைத் திட்டுவதையும் அந்தத் துறையின் அய்யோ பாவம், அமைச்சர்களிடம் விட்டு விட்டு, முக்கிய அறிவிப்புகளையெல்லாம் முதல் அமைச்சரே 110வது விதியின் கீழ் அவையிலே படிக்கிறார். முதலமைச்சர் 110வது விதியின்கீழ் இந்த அறிவிப்புகளைச் செய்கின்ற காரணத்தினால் தான், அவர் படித்தவுடன் அவையிலே உள்ள ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒருவர் எழுந்து அந்த அறிவிப்புகளுக்கு வரிசையாக பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப்
பாராட்டுகளுக்காகத்தான் இந்தப் புதிய ஏற்பாடு போலும்!.
முன்பெல்லாம் 110வது விதியின் கீழ் அறிவிப்புகளைச் செய்தால் இப்படியெல்லாம் பாராட்டுகள் இருக்காது. ஆனால் சில நாட்களுக்கு முன்னால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவே; பேரவையில் 110வது விதியின் கீழ் அறிக்கை படித்தால் அதிலே கேள்விதான் கேட்கக்கூடாது, பாராட்டு கூறலாம், நன்றி தெரிவிக்கலாம் என்று கூறிய பிறகு; ஒவ்வொரு முறை 110வது விதியின் கீழ் அவர் அறிவிப்புகளைச் செய்யும்போதும் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும், இதையே பெரிய வாய்ப்பாகக் கருதி, வரிசையாக எழுந்து பாராட்டுரைகளை வழங்கிக் கொண்டிருக் கின்றார்கள்.
முதலமைச்சர், அவையிலே 110வது விதியின் கீழ் 6-9- 2011 அன்று அறிக்கை படித்த; அந்தத் துறையின் “மானியக் கோரிக்கையின் விளக்கக் குறிப்பு” அந்தத் துறையின் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்களால் தயாரிக்கப்பட்டு, அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த 2011-12ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பின் முதல் பத்தி வருமாறு :-
“மனிதவள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இளைஞர்களிடையே சுகாதாரம், தோழமை, நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த தெளிவான தாக்கத்தை உண்டாக்கும்” என்பதாகும். 2010-2011ஆம் ஆண்டுக்கான இந்த துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு தி.மு.க. அரசால் 13-5-2010 அன்று பேரவையில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்தக் கொள்கை விளக்கக் குறிப்பின் முதல் பத்தி வருமாறு :- “மனிதவள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இளைஞர்களிடையே சுகாதாரம், தோழமை, நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த தெளிவான
தாக்கத்தை உண்டாக்கும்” என்பதாகும்.
அதாவது தி.மு.கழக ஆட்சியில் கடந்த ஆண்டுகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் என்ன எழுதப்பட்டிருந்ததோ, அதை அப்படியே “ஈயடிச்சான் காப்பி” என்பார்களே, அதைப்போல எழுத்து பிசகாமல் அப்படியே இந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் எடுத்து எழுதியிருக்கிறார்கள்.
இந்த முதல் வாக்கியம் மட்டுமல்ல; 2011-12ஆம் ஆண்டுக்கான கொள்கைக் குறிப்பின் அடுத்த வாக்கியம் “அனைத்து தரப்பு இளைஞர்களிடையே” என்று தொடங்கி “மலரச் செய்கின்றன” என்று முடிகின்ற வரையில், அப்படியே 2010-11ஆம் ஆண்டுக்கான கொள்கைக் குறிப்பில், தி.மு.கழக ஆட்சியில் என்ன எழுதப்பட்டிருந்ததோ அதை அப்படியே எடுத்து வெளியிட்டிருக்கின்றார்கள். அதற்கு அடுத்தபத்தி “நமது மாநிலம்” என்று தொடங்கி “கவனம் செலுத்தப்படும்” என்று முடிகிறது. கடந்த ஆண்டுகளில் தி.மு.கழக ஆட்சியில் அதே பத்தி அப்படியே இடம் பெற்றுள்ளது. அதற்கடுத்த பத்தி இன்னும் வேடிக்கை. கழக ஆட்சியின் கொள்கைக் குறிப்பில், “நாட்டு நலப் பணித் திட்டம் இந்திய நாட்டிலேயே அதிகமான தொண்டர்களைக் கொண்டிருப்பது தமிழ்நாடே (3,70,018 நபர்கள்). இம்மாநிலத்தில் 98,790 மாணவர் மற்றும் மாணவியர் தேசிய மாணவர் படையில் உள்ளனர்” என்று உள்ளது. இந்த ஆண்டு அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களால் தரப்பட்டுள்ள கொள்கைக் குறிப்பிலும், “நாட்டு நலப் பணித் திட்டம் இந்திய நாட்டிலேயே அதிகமான தொண்டர்களைக் கொண்டிருப்பது தமிழ்நாடே (3,70,018 நபர்கள்). இம்மாநிலத்தில் 98,790 மாணவர் மற்றும் மாணவியர் தேசிய மாணவர் படையில் உள்ளனர்” என்றுதான் அந்த எண்ணிக்கைகளைக்கூட மாற்றாமல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே போல பல பத்திகள் கடந்த தி.மு.க. ஆட்சியில் தரப்பட்ட கொள்கைக் குறிப்புகளிலே உள்ளவைகளே இந்த ஆண்டு கொள்கைக் குறிப்பிலும் அப்படியே உள்ளன. இது அந்தத் துறையின் அமைச்சரின் சோம்பேறித் தனத்தால் - கொள்கைக் குறிப்பினையே பார்க்காமல் இருந்ததின் விளைவா அல்லது அதிகாரிகளின் தந்திரமா?
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 110வது விதியின் கீழ்படித்த அறிக்கையில் விளையாட்டுத்துறை சார்பில் என்னென்ன
செய்ய விருக்கிறோம் என்பதையெல்லாம் பட்டியலிட்டிருக்கிறார். இந்தத் துறையின் அமைச்சர் தனது பதிலுரையின்போது “கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்தத் துறையிலே எதுவுமே நடக்கவில்லை, கவியரங்கமும், சங்கமமும்தான் நடைபெற்றன” என்று கூறிய காரணத்தால் தி.மு.கழக ஆட்சியில் இந்தத் துறையின் சார்பாக எதுவும் நடக்காமல் இல்லை, என்னென்ன செய்யப்பட்டது என்பதைப்பற்றி ஒருசிலவற்றை மட்டும் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். கடந்த நான்காண்டுகளில் தி.மு.கழக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்காக ஊக்கத் தொகையாக மட்டும் வழங்கிய தொகை 3 கோடியே 71 லட்சத்து 67 ஆயிரத்து 655 ரூபாய். இது தவிர, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுகளப்பாதை ரூ.240 இலட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகள் சென்னையில் நடத்திட ஆண்டு தோறும் ரூ.1கோடி வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் பங்களிப்புடன் ரூ.60 இலட்சம் செலவில் புதிய நவீன நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் தலா ரூ.20 இலட்சம் வீதம் ரூ.60 இலட்சம் செலவில் சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டுக் கிராமம், காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டரங்கம், சென்னை செனாய்நகர் நீச்சல் குள வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி, மதுரை மாவட்ட விளையாட்டு வளாகங்களில் விளையாட்டு வீரர்களுக்கான விடுதிகள் தலா ரூ.70 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ரூ.70 இலட்சம் வீதம் இரண்டு நவீன நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ரேஸ் கோர்ஸ் விளையாட்டரங்கத்தில் ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் நவீன மின்னொளி அமைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னை உள் விளையாட்டரங்க மேற்கூரை ரூ.131 இலட்சத்தில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டது. திருநெல்வேலியில் ரூ.70 இலட்சத்தில் புதிய விளையாட்டு விடுதி கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. சென்னை ஜவஹர்லால்
நேரு விளையாட்டரங்கில் ரூ.70 இலட்சத்தில் புதிய விளையாட்டு விடுதி கட்ட அனுமதிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தலா ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் உள் விளையாட்டரங்கம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தருமபுரி மாவட்டம் அரூரிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும் ரூ.60 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சிறிய விளையாட்டரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ.70 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் நவீன நீச்சல் குளம் அமைத்திட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை ஆக்கி மைதானம் அமைக்க ரூ.300 இலட்சம் அனுமதித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு திருவண்ணா மலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.310 இலட்சத்தில் விளையாட்டு விடுதி அமைக்கப் பட்டது. கிருஷ்ணகிரி விளையாட்டு விடுதியில் 75 மாணவர்களும், திருவண்ணாமலை விளையாட்டு விடுதியில் 75 மாணவிகளும் பயனடைந்து வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கத்தில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்ச் செலவில் செயற்கை இழை ஓடுகளப் பாதை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, ரூ.134 இலட்சம் அரசு மான்யம் பெறப்பட்டு பணிகள் துவங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான நீச்சல் குளம் ரூ.175 இலட்சத்தில் அமைக்க அரசு அனுமதித்து, நீச்சல் குளம் கட்ட துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகங்கை, நாகப்பட்டினம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், கரூர், அரியலூர், சென்னை ஆகிய 12 இடங்களில் 120 இலட்சம் ரூபாய்ச் செலவில் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதில், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய இடங்களில் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டில் உள்ளது; பிற இடங்களில் துரிதமாக பணி நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் நென்மேனிப்பட்டி-சாத்தூர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் ஆகிய இடங்களில் ரூ. 50 இலட்சத்தில் சிறு விளையாட்டரங்கம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் நடைபெறுகின்றன. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் நீச்சல் குளங்கள் அமைத்திட தலா ரூ. 50 இலட்சம் வீதம் மானியமாக ரூ. 1 கோடி அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் கட்டுவதற்கு ரூ. 50 இலட்சம் வீதம் மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் அனுமதிக்கப்பட்டு, உள் விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. உலக ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் உள்ள நவீன ஸ்குவாஷ் விளையாட்டரங்கத்தில் சென்னை ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு
2010-2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடி வழங்க ஒப்புதல் அளித்து, 2010-2011-ம் ஆண்டுக்காக ரூ.1.கோடி வழங்கப்பட்டுள்ளது.
2011இல் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை எதிர்த்து கோப்பையை வென்ற திரு.எம். எஸ். தோனி தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணிக்கு 3 கோடி ரூபாயும், அணியில் இடம் பெற்ற தமிழக சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் அவர்களுக்கு 1 கோடி ரூபாயும் சிறப்புப் பரிசாக வழங்கப்படும் என அறிவித்ததற்கேற்ப; 5.5.2011 அன்று முதலமைச்சராக இருந்த என்னால் அணிக்கு உரிய 3 கோடி ரூபாய் 14 வீரர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது. திரு.அஸ்வினுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
எனவே, உடன்பிறப்பே, இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து இந்தத் துறையின் அமைச்சர்; அவையில் கூறியதைப் போல தி.மு. கழக ஆட்சியில் கவியரங்கம், சங்கமம் மட்டும் நடக்கவில்லை, அதுவும் நடந்தது, இது போன்ற எண்ணற்ற சாதனைகளும் செய்யப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ளலாம். செம்மொழி,
கவியரங்கம், சங்கமம் இவைகள் எல்லாம் அவர்களுக்குப் பிடிக்காத அம்சங்களாகும். அ.தி.மு.க. அமைச்சர்களில் இந்த அமைச்சர் ஒரு வித்தியாசமானவர் என்று நான் சற்று உயர்வாக இவரைப் பற்றி எண்ணியிருந்தேன். அவரும் அப்படித்தான் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.
அன்புள்ள,
மு.க.
10-9-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 358–364. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.