அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3580

முரசொலி கடிதங்கள் · 3580

பரவாயில்லை; ஆடும் வரை ஆடட்டும்!

நாள் 12.8.2011சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3580. பரவாயில்லை; ஆடும் வரை ஆடட்டும்!

உடன்பிறப்பே,

6-8-2011 நாளிட்ட “தினமணி” இதழ் “உண்மை சுடத்தான் செய்யும்!” என்ற தலைப்பில் ஆளுங் கட்சிக்கு வழக்கம் போல ஆதரவாக ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. அதில் “எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுகிறது தமிழக அரசு என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்

மு. கருணாநிதி திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஒருவர் பொய் சொல்லலாம், இரண்டு மூன்று பேர் சேர்ந்தும் பொய் சொல்லலாம். ஊர் முழுவதும், மாநில முழுவதிலும் மக்கள் பெருவாரியாக வந்து பொய் சொல்வார்களா?” என்று தினமணி அதிலே கேள்வி கேட்டுள்ளது. நான் தினமணியாருக்கு ஒரு சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பூண்டி கலைவாணன் மீது ஜெயலலிதா அரசு ஒரு வழக்கினைப் பதிவு செய்து கைது செய்ய முன் வந்தது. அவர் என்ன குற்றம் செய்ததாக இந்த அரசு கூறியது? 29ஆம் தேதி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து நடைபெற்ற அறப்போரில் இலட்சக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளிகளைப் புறக்கணித்தனர். அதிலே கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவருடைய மகனும் கலந்து கொண்டு, பின்னர் அவர் இல்லம் திரும்பும்போது அவர் சென்ற பேருந்து லாரி ஒன்றோடு மோதியதில் அந்தச் சிறுவன் இறந்து விட்டார். அதற்கும் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளருக்கும் என்ன தொடர்பு?

கலைவாணனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றத்தில் கோரியபோது அந்த மனுவினை விசாரித்த நீதிபதி திரு.சந்திரசேகர் அவர்கள், “இது அரசியல் காழ்ப்புணர்வுடன் போடப்பட்ட வழக்கு என பூண்டி கலைவாணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அசன் முகமது தெரிவித்த கூற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது,

நீதி மன்றமும் அவ்வாறே கருதுகிறது” என்று கூறி பூண்டி கலைவாணன் ஜாமீனில் வெளியே வர ஆணை பிறப்பித்தார். எனவே இது பொய்யான வழக்கு என்று நாங்கள் கூறவில்லை. ஒரு நீதிபதியே சொல்லி யிருக்கிறார்.

அடுத்து, 30-7-2011 அன்று காலை 10 மணி யளவில் திருத்துறைப்பூண்டியில் சொத்து மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாக பூண்டி கலைவாணன் மீது 7 பிரிவுகளில் மற்றொரு வழக்கை அ.தி.மு.க. அரசு அவசரம் அவசரமாக பதிவு செய்து பாளையங்கோட்டை வரை காவல் துறையினர் சென்று ஜாமீனில் கலைவாணன் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அங்கேயே கைது செய்தார்கள். தினமணியார் இதை நியாயம் என்று கூறுகிறாரா?

இரண்டாவது முறையாக கலைவாணனை கைது செய்து நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய முற்பட்டபோது, கலைவாணனே நீதிபதியிடம் 29-7-2011 அன்று இரவு சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி வந்த கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தான் சென்றிருந்த தாகவும், அன்றிரவு அவரோடு தஞ்சையிலே தங்கியிருந்ததாகவும், 30ஆம் தேதி காலையில் அவருடனேயே வேனில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது காவல் துறையினர் வழியிலே மறித்து தன்னை கைது செய்து விட்டதாகவும், இரண்டாவது வழக்கிலே காவல் துறையினர் குறிப்பிட்டுள்ள அந்த நேரத்தில் தான் திருத்துறைப்பூண்டியிலேயே இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதையும் தினமணி மறுக்கிறதா? அவர் திருத்துறைப்பூண்டியில் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக அ.தி.மு.க. அரசு கூறியுள்ள புகாரை பொய் இல்லை என்று மறுக்கிறதா?

இதற்குப் பிறகும் அந்தக் கலைவாணன் மீது அ.தி.மு.க. அரசு குண்டர் சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றால், இந்த ஆட்சியில் பொய் வழக்குப் போடவில்லை என்று “தினமணி” கூற முடியுமா?

அடுத்து, ஈரோட்டில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளருமான என்.கே.கே.பி. ராஜா அவர்களை நள்ளிரவு 2 மணி அளவில் கைது செய்யச் சென்ற

காவல் துறையினர், காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்துத்தான்

உள்ளே சென்றிருக்கிறார்கள். நீதிபதியின் இல்லத்திற்கு அவரை அழைத்துச் சென்று தமிழகக் காவல் துறையினர் அவரை “ரிமாண்ட்” செய்யவேண்டுமென்று கோரி யிருக்கிறார்கள்.

ஆனால் ஈரோட்டில் உள்ள நீதிபதி அவர்கள், காவல் துறையினர் என்.கே.கே.பி. ராஜா அவர்களை கைது செய்து, ரிமாண்டில் வைப்பதற்கு எந்தச் சான்றுகளையோ, காரணங்களையோ தெரிவிக்கவில்லை என்று கூறி அவரை ரிமாண்டில் வைப்பதற்கு தான் ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதிலிருந்தே ராஜா மீதான வழக்கு பொய் வழக்கு என்று தினமணியாருக்குத் தெரிகிறதா இல்லையா?

அடுத்து தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ. அன்பழகனை அவசர அவசரமாக அதிகாலையில் சென்று தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் புகாரைக் கொடுத்தவர் யார் தெரியுமா? 2009ஆம் ஆண்டு ஆகஸ்டில் நலிவடைந்த மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் மூலம் 250 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதாகி, ஜாமீனிலே வெளிவந்த ஒருவர். இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்தவர். அவரும், அவரது நண்பர்களும் ஈடுபட்ட வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மோசடிப் பேர்வழி செய்த புகாரை வைத்துக் கொண்டு, அன்பழகனை சென்னையிலே கைது செய்து, கோவைக்கு அழைத்துச் சென்று சிறையிலே அடைத்திருக்கிறார்கள் என்றால், அதனை உண்மை வழக்கு என்று தினமணியார் நம்புகிறாரா?

புரசையில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ரெங்கநாதன் இந்த ஆட்சியினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அதன் கதி என்ன? ஏற்கனவே அதே வழக்கு நீதி மன்றத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் மீது இப்போது எதற்காக திடீர் நடவடிக்கை? பொய் வழக்குகள் என்பதற்கு ஒன்றிரண்டைக் கோடிட்டுக் காட்டினேன். அவ்வளவுதான்.

சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் வெளியே வந்து காவல் நிலையத்திலே அன்றாடம்

கையெழுத்து போட வேண்டுமென்ற நிபந்தனையை நிறைவேற்றச் சென்றபோது, மேலும் அவர் மீது மற்றொரு வழக்கைப் பதிவு செய்து கைது செய்தார்கள்.

மதுரையிலே அவ்வாறே பல கழகத் தோழர்கள் மீது வழக்குகள் - ஜாமீனிலே வெளியே வர முடியாத அளவிற்கு குண்டர் சட்டங்கள்.

திருச்சியில் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ஒருவரை கைது செய்து, குண்டர் சட்டத்திலே அவரை காராக்கிருகத்தில்

அடைத்தார்கள். ஆனால் அது என்னவாயிற்று? தற்போது அவர் வெளியே வந்துவிட்டார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவான வார இதழ் ஒன்று, வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் முதல் பத்தியே “வாபஸ் பெறப்பட்ட புகாரின் மீது எப்.ஐ.ஆர். போட்டு சாதனை செய்துள்ளனர் கொடைக்கானல் போலீசார்” என்றுதான் தொடங்குகிறது. அந்தச் சம்பவத்தில் புகார் கொடுத்தவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே அதை வாபஸ் வாங்கிய பிறகும், காவல்துறையினர் அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்து கொடைக்கானல் நகர் மன்றத் தலைவர் உள்ளிட்ட தி.மு.க.வினர் சிலரை கைதே செய்துள்ளார்கள்.

இவைகளை பொய் வழக்கு என்று நான் கூறினால், தினமணியார் எல்லாமே பொய் வழக்குகளா என்று தலையங்கம் எழுதி பதில் கூறுகிறதே, இதற்கெல்லாம் தினமணி சொல்லப் போகும் பதில் என்ன? புகார் கொடுப்பவர் உண்மையானவராக இருந்து, புகாரில் உண்மைத் தன்மை இருப்பது உறுதி செய்யப்பட்டால்; அந்தப் புகாரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்க முடியாது; சட்டம் தன் கடமையைச் செய்கிறது என்று சமாதானம் அடைந்திட முடியும். ஆனால், தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடப்பது என்ன? “அ.தி.மு.க. வினர் மீது நில அபகரிப்புப் புகார்கள் உண்மையாகவே வந்தாலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல், சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைத்துப் புகார் கொடுக்க வந்தவர்களுடன் பேசி சமாதானம் செய்து அனுப்புகிறார்கள். ஆனால் நிலத்தை விற்றவர்கள் தி.மு.க. வினர் மீது புகார் கூறினால் அந்தப் புகார் உண்மையா? அல்லவா? என்று விசாரிக்காமலேயே

வழக்குப் பதிவு செய்து கைது செய்கிறார்கள்” என்று நான் ஏற்கனவே சொன்னதைத்தான் இப்போதும் வலியுறுத்துகிறேன். எனது இந்தக் கருத்தை எடுத்துக்காட்டியுள்ள “தினமணி” தலையங்கம், தொடர்ந்து, “அ.தி.மு.க. ஆளுங்கட்சி என்பதால் காவல் துறை இந்த அணுகுமுறையைக் கையாளக் கூடும்தான்; அதில் சந்தேகம் இல்லை” என்று சொல்லியிருக்கிறது. இப்படிச் சொல்வது “உண்மை சுடத்தான் செய்யும்” என்ற தலைப்புக்குப் பொருத்தமான கருத்துதானா?

ஆளும் அ.தி.மு.க.வினரின் இந்த அடாவடியைக் கடுஞ்சொற்களால் கண்டனம் செய்திட முன்வராமல்; நடப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பதைப்போல எழுதியிருப்பது “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற இலட்சியத்துக்குச் சாவு மணி அடிப்பதற்குச் சமமாகும். இந்தியத் தண்டனைச் சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதானே?

ஆளுங் கட்சிக்குத் தனிச் சட்டம், எதிர்க்கட்சிகளுக்குத் தனிச்சட்டம் என்று; “வருண பேதங்கள்” மாதிரி இதிலும் வேறுபாடுகள் உண்டா?

திருவண்ணாமலையில் அ.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி சி.மூர்த்தி என்பவர் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் மீது புகார் கூறியவுடன் அந்தப் புகார் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டதா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா? யாராவது கைது செய்யப்பட்டார்களா? என்ன நடந்தது? மூத்த அமைச்சர் ஒருவர் அந்த மூர்த்தியை அழைத்து வந்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, சமாதானம் செய்து புகாரையே திரும்பப் பெறச் செய்யவில்லையா?

திருவாரூர் தியாகராசர் ஆலயச் சொத்தை மோசடி செய்து விற்பனை செய்திருக்கிறார்கள். மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் கைது செய்யப்பட வில்லை. புகார் கொடுத்த ஆலய அலுவலர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தினமணிக்கு இந்தச் செய்திகள் எல்லாம் தெரியாதா? இது ஒன்றல்ல, ஆளுங் கட்சியினர் மீது பல புகார்கள் கூறப்பட்டு, அவற்றில் எல்லாம் காவல்துறை நடவடிக்கையே எடுக்கவில்லை.

நில அபகரிப்பு தொடர்பான பிரச்சினைகளில் இப்போது ஜெயா அரசின் காவல் துறையினர் எப்படி நடந்து கொள்கிறார்கள்? சட்டம், ஒழுங்குக்குப் பொறுப்பு வகித்திடும் காவல் துறை கூடுதல் இயக்குநர் திரு. ஜார்ஜ், ஐ.பி.எஸ்., இது சம்பந்தமாக என்ன சொன்னார்?

“We have asked the Police to carefully scrutinise every petition. Verification is done at different levels and a decision to register a case is taken by the concerned Commissioner or Superintendent of Police” (ஒவ்வொரு புகாரையும் காவல் துறை ஆழ்ந்து பரிசீலித்திட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். புகாரை வெவ்வேறு நிலைகளில் தீவிரமாகச் சரி பார்த்ததற்குப் பின்னரே; சம்பந்தப்பட்ட காவல் ஆணையாளரால் அல்லது காவல் கண்காணிப்பாளரால் வழக்குப் பதிவு செய்வது பற்றிய முடிவு மேற்கொள்ளப்படுகிறது) என்று திரு. ஜார்ஜ் சொன்னபடி தான் புகார்கள் மீது விசாரணைகள் நடைபெற்று வழக்குகள் பதிவு செய்வது சம்பந்தமான முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

கழகத் தோழர்கள் புகாரே இல்லாமல் கைது செய்யப்படுகிறார்கள்; கைது செய்து விட்டு, காவல்துறையினர் புகார்களைத் தேடி அலைகிறார்கள்; ஒரு புகாரில் கைது செய்யப்பட்ட கழகத் தோழர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துவிட்டால், இன்னொரு புகாரைத் தயார் செய்து கைது செய்கிறார்கள். கழகத் தோழர்கள் மீதும், நீதிமன்றங்களின் மீதும் உள்ள கோபத்தின் காரணமாக கடைசியில் “குண்டர் சட்டம்” என்ற கொடுமையான அஸ்திரத்தை ஏவி விடுகிறார்கள். அதற்கான உதாரணங்களைத்தான் நான் மேலே எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. ஜார்ஜ் சொன்னபடி; புகார் தானாக வரட்டும் என்றா தற்போது காத்திருக்கிறார்கள்? புகார் வந்ததும், புகார் கொடுப்பவரின் நேர்மையையும், புகாரின் உண்மைத் தன்மையினையும் ஆழ்ந்து பரிசீலித்திடத் தேவையான முதல் நிலை விசாரணைகளைச் செய்கிறார்களா? புகாரின் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்ற முடிவு காவல் ஆணையாளரினாலா அல்லது காவல் கண்காணிப்பாளராலா மேற்கொள்ளப்படுகிறது? எங்கிருந்தோ வரும் கட்டளைகளைக் கேட்டு, கழகத் தோழர்களைப் பொறுத்தவரை மட்டும் அவசரம்

அவசரமாக இரவோடு இரவாக அள்ளித் தெளித்த கோலத்தில் அல்லவா காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

“நில அபகரிப்பு” என்று சொல்லி அதற்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அளித்து வரும் ஊக்கமும், முன்னுரிமையும் பின்வரும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

• நிலம் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகள் “சிவில் தாவா” சம்பந்தப் பட்டதால்; அவற்றில் தொடர்ந்து ஆர்வம் காட்டும் மனோ பாவம் காவல் துறையில் வளர்ந்துவிடும்.

• அதன் காரணமாக “கட்டப்பஞ்சாயத்துகள்” ஏராளமாக முளைக்கும். ஆட்சியாளர்கள் நினைத்தாலும், கட்டுப்படுத்த முடியாத எல்லைக்கு அவை சென்றுவிடும்.

• பொருள் கறக்கும் பேராசை காரணமாக பொய்ப் புகார்கள் புற்றீசல் போலத் தோன்றிவிடும்.

• “நில அபகரிப்பு” பிரச்சினைகளில் பல்வேறு காரணங்களுக்காகவும், உள் நோக்கங்களுக்காகவும் காவல் துறை அபரிமிதமான ஆர்வம் காட்ட முற்படும்போது; கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் மலிந்து, அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

• சமூக விரோதிகளின் கைக்கு “நில அபகரிப்புப் புகார்” என்ற மலிவான ஆயுதம் கிடைத்துவிடும்.

• “நில அபகரிப்பு” பிரச்சினைகள் சட்டத்தின் நியாயமான பார்வையிலிருந்து, காவல் துறையினரின் விருப்புரிமையின்கீழ் வந்து விடும்.

• எல்லாக் காலங்களிலும் அரசியல் கட்சிகளைப் பழிவாங்கிட எளிதாகப் பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறிவிடுகிற ஆபத்து ஏற்பட்டு விடும்.

இப்படிச் சொல்வதால் “நில அபகரிப்பு” பிரச்சினைகளை அலட்சியப்படுத்த வேண்டும் என்பது பொருளல்ல. கொலை,

கொள்ளை போன்ற குற்றங்களைப் புலனாய்வு செய்வதைப் போல - அரசியல் கலப்பில்லாமல், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை மட்டும் குறி வைக்காமல் - தீர விசாரித்து, நில அபகரிப்புப் புகாரின் உண்மைத் தன்மையினை அறிந்து - சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை அனுமதிக்கப்பட வேண்டும்.

“நில அபகரிப்பு” என்ற பொய்ப் புகார்களை வைத்துக் கொண்டு; காவல் துறையின் துணையோடு, கழகத் தோழர்களை நிலைகுலையச் செய்யலாம் என்று அ.தி.மு.க. ஆட்சியினர் கனவு காண்கிறார்கள். பழிவாங்கிடத் துடிக்கும் அவர்களது கனவு பகல் கனவாகிப் போகும். நிறைவேறப் போகாததை நினைத்து நெஞ்சத் தைப் புண்ணாக்கிக் கொள்வதை விட்டு விட்டு; தமிழ்நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதே ஆட்சியாளர்களுக்கு அழகு! அ.தி.மு.க.வினரும், காவல் துறையினரும் மோசமான முன்மாதிரிகளை உருவாக்குவதில் நேரத்தையும் நினைப்பையும் வீணாக்குவது நல்லதல்ல! பரவாயில்லை; ஆடும் வரை ஆடட்டும்!

அன்புள்ள, மு.க. 12-08-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 320–327. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்