அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3576

முரசொலி கடிதங்கள் · 3576

உலகப் புகழ் உத்தமத் தமிழச்சி, பாரீர்!

நாள் 31.7.2011சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3576. உலகப் புகழ் உத்தமத் தமிழச்சி, பாரீர்!

உடன்பிறப்பே,

“இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கச் செய்து, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய உலகத் தமிழர்களின் தலைவர் அம்மா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்” - இப்படி பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! “போற்றி! போற்றி!” விளம்பரங்கள்! போலிப்புகழ் பாடும் விளம்

பரங்கள்!

அடுத்து நம்முடைய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அரைப் பக்கத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். “நன்றி! நன்றி!! நன்றி!!! இலங்கை அரசு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க அயராது முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்ட அரசியல் சாணக்கியமே! உலகம் வாழ்த்தும் அருந்தவமே! உலகத் தமிழர்கள் போற்றிடும் ஓய்வறியா தலைவியே! வல்லரசுக்கு வழி காட்டிய வல்லாண்மையே! அம்மா அவர்களே, தங்கள் பொற்பாதங்களை பணிந்து வணங்குகிறேன்” என்பதுதான் விளம்பர வாசகங்கள்!

அடுத்து ஒரு அமைச்சர் - கே.ஏ. செங்கோட்டையன், வேளாண்மைத் துறை அமைச்சர் - அவரும் அரை பக்கத்தில் ஒரு விளம்பரம் - அதிலே உள்ள வார்த்தைகள் - அதே நன்றி! நன்றி! நன்றி! இத்தியாதி, இத்தியாதி.....

எதற்காக இந்த நன்றிகள்? அமெரிக்கா இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறதா? அமைச்சர்களே விளம்பரம் கொடுத்திருக்கிறார்களே? இல்லாமலா கொடுப்பார்கள்? எல்லோருக்கும் சந்தேகம்!

பிரகாஷ் எம். ஸ்வாமி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் - தற்போது நியூயார்க்கில் இருக்கிறார் - தமிழகம் வரும்போது ஒவ்வொரு முறையும் என்னைச் சந்திக்க நேரம் கேட்டு ஓரிரு முறை சந்தித்துமிருக்கிறார். அப்போதெல்லாம்

அவர் அமெரிக்காவிற்கு வரவேண்டும், உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கச் செய்கிறேன், விருது வழங்க ஏற்பாடு செய்கிறேன், தெருவுக்குப் பெயர் வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றெல்லாம் கூறுவார். கடந்த முறை தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதும் என்னைச் சந்திக்க நேரம் கேட்டபோது ஒரு முறை சந்தித்தேன்; அடுத்த முறை வாய்ப்பு வழங்க முடியவில்லை. தி.மு. கழக ஆட்சியில் அவருக்கு “கலைமாமணி” விருதே வழங்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது கூட அமெரிக்க நாடு வாழ் தமிழர்களை யெல்லாம் ஒருங்கிணைத்து அழைத்துவரத் தனக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென்று கோரினார். அவர்தான் தற்போது “குமுதம்” வார இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி பாராட்டியிருக்கிறார்.

அந்தப் பாராட்டில், நியூயார்க்கில் ஜான் ஜே காலேஜ் ஆப் கிரிமினல் ஜஸ்டிஸ் என்றொரு கல்லூரி இருப்பதாகவும், அவர்களது பாடப் புத்தகத்தில் ஜெயலலிதாவின் சிந்தனையால் உருவான அனைத்து மகளிர் காவல் நிலையங்களை வெகுவாகப் பாராட்டி சில பக்கங்கள் வருகின்றன என்றும், அது போன்ற பல பிரமிப்பான செய்திகள் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை மிகவும் கவர்ந்திருந்ததால்தான், டெல்லியில் பிரதமரைச் சந்தித்தபின் நேராக சென்னை வந்து விட்டார் என்றும்-

அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா துணைப் பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாக யு.எஸ். அரசாங்கம் இந்தியாவைப் பற்றியதோர் அரசியல் கணக்குப் போடுவதால், அமெரிக்காவிற்கு நெருக்கமானவர் ஒருவர் டெல்லியில் இருந்தால் நல்லது என்று ஹிலாரி நினைக்கலாம் என்றும் - இலங்கை அரசை எதிர்த்து தமிழகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெ.யின் துணிச்சலும், அந்த மனதிடமும் ஹிலாரிக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் பிரகாஷ் எம். ஸ்வாமி வியப்புடன் குமுதம் செய்தியாளரோடு தகவல்களைப் பகிர்ந்து கொண்டாராம்.

இதே பிரகாஷ் எம். ஸ்வாமி அவர்கள் 2-2-2010 என்று என்னைச் சந்தித்த செய்தி ஏடுகளில் அப்போதே வந்தது. அந்தச் செய்தியில் - “அமெரிக்காவில் உள்ள நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பிரகாஷ் எம். ஸ்வாமி, முதல் அமைச்சர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நியூயார்க் தமிழ்ச்

சங்கத்தின் ஆதரவை தெரிவித்துக் கொண்ட அவர், இந்த மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த 100 தமிழறிஞர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகக் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் எம். ஸ்வாமி, முதல்வர் கலைஞரின் சமுதாயச் சேவையைப் பாராட்டி, அமெரிக்க நாடாளு மன்றம் சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான “அமெரிக்க காங்கிரஸ் மகாசபை விருது” வழங்கப்படவிருப்பதாகத் தெரிவித்தார். முதல் முறையாக இந்தியத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் இந்த விருதை, கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது நியூயார்க் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் நேரில் வழங்குகின்றனர்” என்றும் அவர் கூறினார்; அவ்வளவுதான்!

இந்தச் செய்திக்குக் காரணமான பிரகாஷ் எம். ஸ்வாமி தான் தற்போது இலங்கை அரசை எதிர்த்து தமிழகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெ.யின் துணிச்சலும் அந்த மனதிடமும் ஹிலாரியைக் கவர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசை எதிர்த்து ஜெயலலிதா மட்டும்தான் பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாரா? இதற்கு முன்பு தமிழகச் சட்டப்பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானங்களே நிறைவேற்றப்படவில்லையா? வேறு சிலர் பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றிய காரணத்தால் அமெரிக்கா இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்து விட்டதாகவே சொல்லுகிறார்கள், பாராட்டு தெரிவிக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த மாலை ஏடு ஒன்றின் போஸ்டரில் “இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை, ஜெயலலிதா முயற்சிக்கு வெற்றி” என்று அச்சிடப்பட்டிருந்தது. எவ்வளவு பெரிய பொய்யைத் திட்டமிட்டு இங்கேயுள்ள சிலர் உண்மையாக்கி ஊராரை மயக்குவதற்கு எவ்வளவு “பகீரதப் பிரயத்தனம்” செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு நண்பர் திருமாவளவன் கூட அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அது உண்மையாக இருக்கலாமோ என்றெண்ணி வரவேற்றிருக்கிறார். அதைப் பார்த்தவுடன் இந்தியாவில் வாழ்கிற இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்த போது அப்படி எதுவும் அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறினார்.

அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுத் துறைக்கான

குழு போர்க் குற்றங்களை அடுத்து இலங்கை அரசுக்கு அமெரிக்க உதவிகளை ஒரு வரையறைக்குள் நிறுத்துவதாக

வாக்களித்துள்ளது. இந்த நடவடிக்கை கூட உடனடியாக அமலுக்கு வராது. அடுத்த 2012, அக்டோபர் மாதம் துவங்கும் நிதியாண்டில் இலங்கைக்கான உதவி நிறுத்தம் பற்றிய இந்தக் குழுவின் பரிந்துரை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட், காங்கிரஸ் என்ற இரண்டு அவைகளிலும் வைக்கப்பட்டு, அவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும். இந்த ஆலோசனை கடந்த பல வாரங்களாக இக்குழுவின் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தியச் சுற்றுப் பயணத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்ற நாடுகள் குறித்த விவகாரங்களை இந்திய அரசிடம் மட்டும்தான் விவாதிப்பாரே தவிர, இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசிடம் விவாதிக்கமாட்டார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹிலாரி கிளிண்டனின் இந்தியச் சுற்றுப்பயணம் மற்றும் அவரது பேச்சுகள் விவரம் வெளிவந்தன. அதில் அண்ணா நூற்றாண்டு நூலகம், உழைக்கும் பெண்கள் அமைப்பு, தாஜ ஓட்டலில் நடைபெற்ற சந்திப்பு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளும் அவற்றில் அவர் பேசிய விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அமெரிக்க வெளியுறவுத் துறையின் உதவிச் செயலாளர் ஒருவர் இவர்களின் சந்திப்பு பற்றி செய்தியாளர்களிடம் கூறும்போதுகூட “அவர்கள் இலங்கை குறித்துப் பேசினார்கள், இலங்கையிலுள்ள நிலைமை பற்றி நமக்கு கவலைகள் உள்ளன என்பதை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டனர் என்று நான் நினைக்கிறேன்” என்றுதான் கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பு பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிலே கூட, “உள்நாட்டில் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் போர் முடிந்த பிறகும் மீள்குடியமர்த்தப்படவில்லை” என்று ஜெயலலிதா கூறியதாகவும், அதற்கு ஹிலாரி ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி வருவதாகக் கூறினார் என்றுதான் இருக்கிறதே தவிர, இலங்கைப் போரின்போது

ஜெயலலிதா வற்புறுத்தியதை அடுத்துத்தான்; அமெரிக்க நாடாளுமன்றக் குழு இந்தப் பொருளாதாரத் தடை முடிவு எடுத்துள்ளதாகவும், அதனால் ஜெயலலிதா உலகெங்கும் உள்ள தமிழர்களின் தலைவராக உயர்ந்துவிட்டார் என்றும் ஜெயலலிதாவை எப்படியாவது உச்சாணிக் கொம்பிலே உயர்த்தி ஏற்றி தூக்கி நிறுத்துவதற்கு படாதபாடுபட்டு எழுதியுள்ளது.

ஆனால் உண்மையிலே நடந்தது என்னவென்று தெரியாமல் அ.தி.மு.க. வின் தொண்டர்களோ “அம்மா” அவர்களின் முயற்சிக்கு வெற்றியோ வெற்றி என்று பக்கம் பக்கமாக கொடுக்கும் பாராட்டு விளம்பரங்கள் வேறு!

இப்படித்தான் கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது ஐ.நா. மன்றம் ஜெயலலிதாவுக்கு கெளரவ விருது வழங்கப் போகிறது என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதற்காக பெரிய விழா - பக்கம் பக்கமாக விளம்பரங்கள் - புகழாரங்கள் அத்தனையும் நடைபெற்றது. ஆனால் பிறகு அது உண்மையல்ல என்று தெரிந்ததும், ஐ.நா. சபையல்ல, ஐ.நா. சபையின் ஆலோசனை அமைப்பு என்றும், மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்றும் முகவரியை மாற்றினார்கள். கோபி அன்னான் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருதுதான் எங்கள் அம்மாவுக்கு தரப் போகிறார்கள் என்றார்கள்.

அதன் பிறகுதான் ஐ.நா. சபையில் இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக உரையாற்றச் சென்ற ஆர். சண்முகசுந்தரம், எம்.பி., அவர்களும், அவருடன் சென்ற காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த சர்மா அவர்களும் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரபல மலையாள ஏடான “மாத்ரு பூமி” இதழின் ஆசிரியர் மாதவன் குட்டி அவர்களும் அந்த விருது பற்றி விசாரித்து அந்த விருதுக்கும் ஐ.நா.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்கள். ஜெயலலிதாவுக்கு விருது வழங்கும் அனைத்துலக மனித உரிமைப் பாதுகாப்புக் குழு ஐ.நா. சபையின் அதிகாரப்பூர்வ அமைப்பு எனக் கூறப்படுவது சுத்தப் பொய் - ஐ.நா. சபையின் ஆலோசனைக் குழுவில் பங்கேற்க உலகில் 2531 அரசு சாரா அமைப்புகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த 2531 அமைப்புகளின் பட்டியலில் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கும் அமைப்பு இல்லவே இல்லை. அதைத்தான் அப்போது ஐ.நா. சபையின் “தங்கத் தாரகை விருது” என்றெல்லாம்

விளம்பரப்படுத்தினார்கள். அதைப்போலவே தான் இப்போதும் இலங்கை அரசை எதிர்த்து ஜெயலலிதா தீர்மானம் போட்டதால் அமெரிக்கா பயந்துகொண்டு இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்து விட்டதாக செய்தி பரப்ப முயலுகிறார்கள். அதிலும் அ.தி.மு.க. அமைச்சரவையிலே உள்ள மூத்த அமைச்சர்களே ஏடுகளில் அரைப்பக்க அளவிற்கு கொடுத்துள்ள விளம்பரங்களில் சொல்லியிருக்கிறார்கள் என்றால் அமெரிக்காவைப் பற்றி உண்மைக்கு மாறாக இப்படியெல்லாம் விளம்பரம் செய்யலாமா? அது ஒரு வெளிநாட்டுப் பிரச்சினை அல்லவா? மாலையில் ஏடுகளைப் பிரித்தால் பக்கம் பக்கமாக ஜெயலலிதாவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் உட்கார்ந்திருக்கின்ற புகைப்படங்களை விதம் விதமாகப் போட்டு வார்த்தை ஜாலங்கள் தான். நேற்று மாலையில் வந்த முதல் பக்க விளம்பரத்திலே கூட “இனவாத இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்கச் சட்டமன்றத்தில் முதல் தீர்மானம் கொண்டு வந்து இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வழிவகுத்த உலகத் தமிழர்களின் ஒளி விளக்கு அம்மா அவர்களே, தங்களின் மலர் பாதம் பணிந்து நெஞ்சம் நிறைந்த நன்றி” - இன்னும் இப்படி அடுக்கடுக்கான விளம்பரங்கள் மட்டுமல்ல. சென்னை மாநகரம் முழுவதும் “ஈழத்தின் எதிர்காலமே” என்றும் - “ஈழத்தின் விடியலே” என்றும் கட்-அவுட் காட்சிகள். தமிழகத்து மாணவச் செல்வங்கள் கடந்த மூன்று மாதங்களாக எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்று தெரியாமல் கலங்கி நிற்கின்றார்கள். அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் எப்போது புத்தகம் வரும் என்று தெரியாமல் உச்ச நீதி மன்றத் தீர்ப்பினை எதிர்பார்த்திருக் கிறார்கள். இந்த இலட்சணத்தில் மாணவர்களை தன்னுடைய பிடிவாதம் காரணமாக இன்னலுக்கு ஆளாக்கிய ஜெயலலிதா அம்மையாரைப் பற்றி இப்படி இல்லாத செய்திகளையெல்லாம் வெளியிட்டு, அதிலே இன்பம் காணுகிறார்களே, பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? ஈழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய சாட்சாத் அதே ஜெயலலிதாவேதான்: இன்று பக்கம் பக்கமாக

விளம்பரப் பஜனைப் பாடப்படுகிற உலகப் புகழ் உத்தமத் தமிழச்சி ஆகிவிட்டார்!

அன்புள்ள, மு.க. 31-7-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 284–289. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்