முரசொலி கடிதங்கள் · 3575
அந்த நாள் முதல் இந்த நாள் வரையில்....!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3575. அந்த நாள் முதல் இந்த நாள் வரையில்....!
உடன்பிறப்பே,
பொய் வழக்கு போடுவதில் ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமே இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக தனக்குப் பிடிக்காதவர்கள் எவரையும் விடமாட்டார். காரணம் இருக்கிறதோ இல்லையோ காவல்துறையை ஏவி விட்டு அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து நடவடிக்கை எடுக்கத் தவறமாட்டார்.
உதாரணமாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் எந்தக் கட்சியையும் சேராதவர்கள். அவர்களே நீதி மன்றத்தில் “தங்கள் மீது அ.தி.மு.க. ஆட்சியினரால் 2004ஆம் ஆண்டு போடப்பட்ட பொய் வழக்கு” என்று சில நாட்களுக்கு முன்னால் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வழக்கு கூட - செங்கற்பட்டு நீதி மன்றத்திலே விசாரணையை நடத்துவதற்குப் பதிலாக பாண்டிச்சேரி நீதிமன்றத்திலே நடத்தப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றமே மாற்றியதாகும். அப்படி மாற்றப்படும்போது உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் ஆர்.சி.
லகோதி, ஜி.பி. மாத்தூர் ஆகியோர் 26-10-2005 அன்று என்ன சொன்னார்கள் தெரியுமா?
“We have discussed above many facets of the case which do show that the State machinery in Tamil Nadu is not only taking an undue interest but is going to any extent in securing the conviction of the accused by any means and to stifle even publication of any article or expression of dissent in media or press, interview by journalists or
persons who have held high positions in public life and are wholly unconnected with the criminal case. xxx
Taking into consideration the entire facts and circumstances of
the case and the material on record, we have no hesitation in holding that the petitioner and other co-accused of the case have a reasonable apprehension that they will not get justice in the State of Tamil Nadu xxxx”
தமிழகத்திலே உள்ள மாநில அரசு தேவையற்ற ஆர்வத்தை காட்டுவது மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் எந்த அளவிற்கும் செல்லத் தயாராக உள்ளது. இந்த வழக்கு தொடர்பான செய்திகள் அல்லது பேட்டிகளை வெளியிட்ட பத்திரிகைகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை அச்சுறுத்த தமிழக அரசு மேற்கொண்ட முயற்சி கண்டனத்திற்குரியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் அவர்களின் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கும் பல்வேறு தடைகளை அரசு நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த வழக்கறிஞர்கள் கண்ணியத்துடன் தங்களது பணிகளைச் செய்ய முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. (தினமணி - 27.10.2005)
உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய சான்றிதழுக்குச் சொந்தக்காரர்தான் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு இன்றையதினம் ஆதரவாக இருக்கின்ற திரு. சோ போன்றவர்களும், திரு.குருமூர்த்தி போன்றவர்களும் கூட சங்கராச்சாரியார்கள் தெரிவித்துள்ள - அ.தி.மு.க. ஆட்சியில் அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன என்ற கருத்தையும்; அந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் பாண்டிச்சேரி நீதி மன்றத்திற்கு மாற்றியபோது தெரிவித்த கருத்துக்களையும்; மறுப்பார்களா என்று தெரியவில்லை.
சங்கராச்சாரியார்கள் மீது ஜெயலலிதா இந்த அளவிற்கு அப்போது நடவடிக்கை எடுக்க என்ன காரணம் என்பதை அப்போதே சில ஏடுகள் வெளியிட்டன. அதாவது சென்னை புறநகரில் உள்ள ஒரு பெரிய மருத்துவ மனையை கையகப்படுத்துவது குறித்து ஜெயலலிதாவுக்கு சங்கராச்சாரியார்கள் மீது பகை இருந்ததாகவும், அதுதான் அந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க காரணம் என்றும் எழுதியிருந்தன.
சங்கராச்சாரியார்கள் மீதே இந்த அளவிற்கு பழி வாங்கும் நடவடிக்கை என்றால் அரசியல் வாதிகள் அந்த அம்மையாருக்கு எம்மாத்திரம்? அரசியல்வாதிகள் மாத்திரமல்ல; அவரது பழி
வாங்கும் போக்கு காரணமாக யார் யார் மீது பொய் வழக்குகள் அவருடைய கடந்த கால ஆட்சியிலே தொடரப்பட்டன என்பதற்கு மேலும் சில உதாரணங்களைக் கூறலாமென்று கருதுகிறேன்.
சென்னை ஆற்காடு சாலையிலே உள்ள எம்.ஜி.ஆர். நினைவகக் காப்பாளர் முத்து - சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்த ஒருவருடைய மருமகன் ஆகியோர் “கஞ்சா” வைத்திருந்ததாகவும் - ஜெயாவின் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் “ஹெராயின்” வைத்திருந்ததாகவும் - மதுரையைச் சேர்ந்த செரினா என்ற பெண் “கஞ்சா” வைத்திருந்ததாகவும் பொய் வழக்குகள் போட்டதைத் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். செரினா என்ற பெண்ணை எதற்காக கைது செய்தார்கள், எதற்காக திருச்சி சிறைச் சாலையிலே வைத்தார்கள் என்பதைப் பற்றியும், ஜெயலலிதா ஆட்சியிலேயே அனைத்து ஏடுகளும் வெளியிட்டன.
2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 29-6-2001 அன்று நள்ளிரவில் என் படுக்கை அறை வரை காவல்துறையினரை நுழையச் செய்து, என்னைத் தாக்கி, கைது செய்வதாகக் கூறி என்னை எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்று சொல்லாமலே இழுத்துச் சென்ற கொடுமையைச் செய்தது யார்? சாட்சாத் ஜெயலலிதா அம்மையார்தானே? எதற்காக அந்த பழிவாங்கும் தன்மை? நான் செய்த குற்றம் என்ன? சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் தவறு என்று கூறினார்களே! என்ன ஆயிற்று அந்த வழக்கு? நிரூபித்தார்களா? நிரூபிக்க முடிந்ததா? பொய் வழக்குதானே அது? என் மீது குற்றப் பத்திரிகையையாவது தாக்கல் செய்ய முடிந்ததா? சென்னையிலே உள்ள மேம்பாலங்களையெல்லாம் தோண்டித் துருவிப் பார்த்தார்களே? எந்தச் சான்றுகளை வைத்து என்னைக் கைது செய்தார்கள்? அவ்வாறு பொய் வழக்கு போட்டதற்காக அவர்கள் மீது என்ன வழக்கு போடுவது? என்னைக் கைது செய்து அந்த அளவிற்கு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அவர்களை என்ன செய்வது?
இதே மேம்பாலங்களைக் காட்டி சென்னை மாநகர மேயராக இருந்து சிறப்பாக பல காரியங்களைச் செய்த தம்பி மு.க. ஸ்டாலின் மீதும் அதேபோன்று பொய் வழக்கு சுமத்தி ஜெயலலிதா ஆட்சியிலே கைது செய்யவில்லையா? நான் கைது
செய்யப்பட்ட அன்றே மத்திய அமைச்சர்களாக இருந்த தம்பி முரசொலி மாறனும், தம்பி டி.ஆர். பாலுவும் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்கள். மதுரை மாநகரில் மறியலில் ஈடுபட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், என் மகன் மு.க. அழகிரி போன்றவர்களும் அங்கே கைது செய்யப்பட்டு மதுரை சிறையிலே அடைக்கப்பட்டார்கள். இவை அனைத்தும் சட்டப்படியான நடவடிக்கைகள்தானா? பழி வாங்கும் போக்கின் பிரதிபலிப்புகள் அல்லவா?
1-7-2001 அன்று “இந்து” நாளேடு தனது தலையங்கத்தில் என்னை கைது செய்த விதம் அவமானகரமான பழிவாங்கும் செயல் என்று எழுதி தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.
சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் அவர்களுடைய கல்லூரியை இடித்து விட்டு, தலைமைச் செயலகம் கட்டப் போவதாக ஜெயலலிதா அறிவித்ததை எதிர்த்து, உண்ணா விரதம் இருந்தபோது - அவர்களைச் சமாதானப்படுத்த சென்ற தி.மு. கழகத்தினர், தம்பிகள் மு.க. ஸ்டாலின், கே. பொன்முடி, எ.வ. வேலு, ஜெ. அன்பழகன், புகழேந்தி ஆகியோரை காவல்துறையினரே கல்லூரிக்குள் அனுமதித்து; அவர்களும் அங்கே சென்று தங்கள் ஆதரவை மாணவிகளிடம் தெரிவித்து இல்லம் திரும்பிய பிறகு, நள்ளிரவில் காவல் துறையினரை இவர்களின் இல்லங்களுக்கு அனுப்பி கைது செய்து, அவர்கள் கல்லூரி கேட்டை உடைத்து உள்ளே சென்றதாக வழக்கு போட்டதோடு சிறையிலே அடைத்தார்கள். ஜெயலலிதா பொய் வழக்கு போட்டு, பழி வாங்குகிற தன்மைக்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா?
1995ஆம் ஆண்டு டான்சி ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி யளித்தார் என்பதற்காக; அவரை பழி வாங்குவதற்காக கவர்னருக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஜெயலலிதா வழக்கு தொடுத்ததோடு, கவர்னர் சென்னா ரெட்டி அவர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசைக் கோரி பேரவையிலேயே தீர்மானம் நிறைவேற்றினாரே இதே ஜெயலலிதா! கவர்னர் சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பேரவையிலேயே குற்றஞ்சாட்டினார். இது கடைந்தெடுத்த பொய் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவில்லையா ?
2001ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்றதற்கு மறுநாளே கழகச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தம்பி பரிதி இளம்வழுதி மீது ஜான் பாண்டியனை தாக்கியதாகக் கூறி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார். ஆனால் உண்மையில் தாக்கப்பட்டவர் பரிதி தான். “இந்து” நாளிதழே அப்போது 11-5- 2001 அன்று “Ilamvazhuthi escapes armed gang attack on election office” என்று எழுதியதே!
கழகப் பொருளாளராக அப்போதிருந்த ஆற்காடு வீராசாமியின் தம்பியை 26-5-2001 அன்று ஜெயலலிதா அரசு கைது செய்தது. அதற்கடுத்த நாள் 27-5-2001 அன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்போரூர் பரசுராமன் மீது ஓர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவரும் கைது செய்யப்பட்டு, சிறையிலே அடைக்கப்பட்டார். தெய்வசிகாமணி என்ற ஓர் ஒப்பந்தக்காரர் கொடுத்த புகாரின் மீது அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த புரசை ரெங்கநாதன் மீது ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். அவர் எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்து பின்னர் ஜாமீனில் விடப்பட்டவுடன், 30-5-2001 அன்று யாரோ ஒரு தியேட்டர் அதிபரை துப்பாக்கியைக் காட்டி அவர் மிரட்டியதாக மீண்டும் ஒரு வழக்கைப் பதிவு செய்து கைது செய்து சிறையிலே அடைத்தனர். அப்போது புரசை ரெங்கநாதன் த.மா.கா. ஜனநாயகப் பேரவை கட்சியிலே இருந்தார். சிறையிலே இருந்த அவரைப் பார்க்க அந்தக் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், மூத்த வழக்கறிஞர் என்ற முறையிலும் நண்பர் ப. சிதம்பரம் அவர்கள் சிறைக்குச் சென்றபோது, அவரைச் சந்திக்கக் கூட அனுமதி கொடுக்காமல் திருப்பி அனுப்பினர். இவை சட்டப்படி புனையப்பட்ட உண்மை வழக்குகளா? அனைத்தும் பொய் வழக்குகள்தானே!
அ.தி.மு.க.வில் நீண்ட காலம் இருந்த திருவில்லிபுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் தாமரைக்கனி அவர்கள் அம்மையாரின் போக்குப் பிடிக்காமல் தி.மு.க.வில் சேரப் போவதாக அறிவித்தார். அவர் மீது ஒரு புகாரை, அவருடைய மகனிடமிருந்தே பெற்று, தாமரைக்கனி கைது செய்யப்பட்டார். நீதி மன்றத்திற்குச் சென்று ஜாமீனில் வெளியே வர அனுமதி பெற்ற போதிலும், அவர் மற்றொரு வழக்கிலே கைது செய்யப்படுவதாகக் கூறி அவரை ஜாமீனில் விட மறுத்தது ஜெயலலிதா அரசு.
நீலங்கரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த கழகத்தைச் சேர்ந்த வி. எட்டியப்பன், துணைத் தலைவர் ரவி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன், எஸ்.கே. ரவி ஆகியோர் மீது அ.தி.மு.க. வினர் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் பொய்
வழக்கு தொடர்ந்து அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டனர்.
ஜெயலலிதாவின் பழி வாங்கும் நடவடிக்கையை கண்ட அன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கூட 30-5- 2001 அன்று “பழிவாங்கும் நாடகம், இரண்டாம் கட்டம்” என்ற தலைப்புடனும், “போயஸ் தோட்டத்தை விட தமிழ்நாடு பெரியது என்பதை எப்போது ஜெயா உணரப் போகிறார்?” என்ற துணைத் தலைப்புடனும் தலையங்கம் எழுதியதே.
தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது “அல்-உம்மா” இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சிறையிலே அடைத்ததாகக் கூறி அ.தி.மு.க. வைச் சேர்ந்த ப்ரீத்தி பாஸ்கர் என்பவர் ஒரு புகார் கொடுத்ததின் பேரில் என்மீதும், முன்னாள் டி.ஜி.பி. சாமா, முன்னாள் உள்துறை செயலாளர் சாந்த ஷீலா நாயர், காவல் துறை அதிகாரி கே.வி.எஸ். மூர்த்தி ஆகியோர் மீதும் அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதிலே குற்றவாளியாக அ.தி.மு.க. அரசு சுட்டிக்காட்டிய திருமதி சாந்த ஷீலா நாயர் அவர்களைத்தான் திட்டக் குழுவின் துணைத் தலைவராகத் தற்போது இந்த அரசு நியமித்திருக்கிறது. இந்த வழக்கு பற்றி 27-6-2001 தேதியிட்ட
“துக்ளக்”
“கருணாநிதியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே இந்தப் பிரச்சினை இந்த வகையிலே கையாளப்படுகிறது என்ற சந்தேகத் திற்கு இடம் உண்டு. மத விரோதங்களை கிளப்பிவிடக் கூடிய இம்மாதிரி விஷயத்தில் காட்டப்பட வேண்டிய பொறுப் புணர்வு மிக்க அணுகுமுறையை இந்த அரசு காட்டவில்லை. இது நல்லதல்ல”
என்று எழுதியது. வெகு விரைவில் நண்பர் சோ அவர்கள் இதைப் போலவே ஜெயலலிதா அரசைப் பற்றி தன்னுடைய விமர்சனங்களை எழுதத் தொடங்கிவிடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நான் மேலே சுட்டிக்காட்டியவாறு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன், 100 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதாவினால் திருமணம்
செய்து வைக்கப்பட்ட வி.என். சுதாகரன் 13-6-2001 அன்று ஜெயலலிதாவின் ஆட்சியில் திடீரென்று கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை சிறையிலே அடைக்கப்பட்டாரே! அவருடைய தந்தை விவேகானந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டார். சுதாகரன் கைதாகி செல்லும்போது செய்தியாளர்களிடம், தன்னை திட்டம் போட்டு சதி செய்து உள்ளே தள்ளுகிறார்கள் என்றும், அனைத்தையும் ஆண்டவன் தட்டிக் கேட்பான் என்றும், தன் மீது போடப்பட்டிருக்கின்ற 12 வழக்குகளுமே திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டுள்ள பொய் வழக்குகள் என்றும், வீட்டில் எந்தச் சோதனையும் செய்யாமல் தன் வீட்டிலே ஹெராயின் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் கூறினார். அவர் கைது செய்யப்பட்டவுடன் சென்னை மத்திய சிறையிலே அடைக்கப்பட்டார். சில மணி நேரங்களில் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். அனைத்தும் 24 மணி நேரத்தில் நடைபெற்றன. இந்த அளவிற்கு பரபரப்பாக போடப்பட்ட வழக்கின் கதி என்ன? சசிகலாவின் குடும்பத்தினர் மீதே ஜெயலலிதா பொய் வழக்குகள் போட்ட பழைய கதையை யாரும் மறந்துவிடவில்லை!
18-6-2001 அன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாநிலப் பொருளாளர் முடக்கத்தான் பாண்டியன் மதுரையிலே படுகொலை செய்யப்பட்டார். அதிலே சி.பி.ஐ. விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில், அந்த இயக்கத் தலைவர் திருமாவளவனை 21-6-2001 அன்று கைது செய்தனர்.
ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக, தி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை 2002ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் இரவோடு இரவாக வீட்டிற்கு அனுப்பினார்.
பத்திரிகையாளர், நக்கீரன் கோபால், ஜெயலலிதா அரசை விமர்சனம் செய்து எழுதினார் என்பதற்காக “பொடா” சட்டத்தின் கீழ் கைது செய்ததோடு திருப்தி அடையாமல், அவருடைய குடும்பத்தினரையெல்லாம் விசாரணை என்ற பெயரால்
கொடுமைப்படுத்தினார்கள். கோபாலின் மாமனார் தொடர்ந்து விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்ட காரணத்தால் 6-7-2003 அன்று மனம் புழுங்கி மறைந்தே விட்டார். “பொடா” சட்டத்தின் பெயரால் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு மாதக்கணக்கிலே சிறையிலே அடைக்கப்பட்டார்.
இவ்வாறு எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு கொடுமைப்படுத்துவது என்பது ஜெயலலிதாவிடம் ஆழமாக ஊன்றி விட்ட பழக்கமாகும். அந்தக் குண விசேஷேத்தைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள போதும் நில அபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தைக் காட்டி அதிலும் 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தி.மு. கழக ஆட்சியிலே நடைபெற்ற நில அபகரிப்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அதிலே கூட இந்த ஐந்தாண்டுகளில் அவருடைய கட்சிக்காரர்கள் செய்த தவறுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல்; எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கிக் குற்றம் சுமத்திடும் பாதகச் செயலைத் தொடங்கியிருக்கிறார்.
நில அபகரிப்பு வழக்குகள் எவ்வாறு போடப்படுகின்றன என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல - “முரசொலி”யிலே அல்ல - “டைம்ஸ் ஆப் இந்தியா” என்ற ஆங்கில நாளிதழில் 15-7-2011 அன்று வெளி வந்த செய்தியினை தமிழில் மொழியாக்கம் செய்து இங்கே தருகிறேன்.
தி.மு. கழகத்தைச் சேர்ந்த ஒருசிலர் மீதும் ஒரு மூத்த காவல் துறை அதிகாரியின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏடுகளில் எல்லாம் “நிலம் அபகரிப்பு - கொடைக்கானல் நகர் மன்றத் தலைவர் கைது” என்றெல்லாம் செய்தி வந்தது. ஆனால் இந்தப் புகாரை யார் கொடுத்தாரோ, அவருடைய தந்தையே எழுதிய கடிதத்தில் அந்தப் புகார் உண்மை அல்ல என்றும், தன்னுடைய ஒப்புதலோடுதான் அந்த நில பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் காவல் துறைக்கும் நீதி மன்றத்திற்கும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த உண்மை தெரியாமல், புகார் கொடுத்தமாத்திரத்தில் - அதுபற்றி காவல் துறை விசாரித்து உண்மை அறியாமலேயே கொடைக்கானல் நகர் மன்றத் தலைவர், தி.மு.க.வைச் சேர்ந்த முகமது இப்ராகிம் மற்றும் சேகர் சபாஸ்டியன், தலீப் சிங் ஆகியோரை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியிருக்கின்றது. எந்த அளவிற்கு தவறான தகவலின் பேரிலும் உண்மை தெரியாத நிலையில் காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது என்பதற்கும், கொடைக்கானல் நகர மன்றத் தலைவரை கைது செய்கின்ற அளவிற்கு எந்த அளவிற்கு பழி வாங்கும் தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு உதாரணம் ஆகும்.
இந்தச் செய்தி டெக்கான் கிரானிகல் ஆங்கில நாளிதழிலும் ஜூலை 20ஆம் தேதி வெளிவந்தது. ஆனால் தமிழ் நாளேடுகள் எதுவும் இதனை வெளியிடவே இல்லை.
இந்த வகையிலேதான் இந்த ஆட்சியிலே தி.மு. கழகத்தினர் மீது குறிப்பாக அமைச்சர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு, ஐ. பெரியசாமி, மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை தளபதி, மற்றும் கழக முன்னணியினர் மீது பொய் வழக்குகளை போட்டு விசாரணை என்ற பெயரால் இழுத்தடிக்கிறார்கள். அதிலும் வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு - மருத்துவமனையிலே நீண்ட நாட்கள் அனுமதிக்கப்பட்டு தற்போதுதான் சற்றுத் தேறி வருகிறார். அவரையெல்லாம் மூன்று நாட்கள் விசாரணை என்ற பெயரால் வைத்து அதிலே இந்த ஆட்சியினர் இன்பம் காண முயலுகிறார்கள்.
ஜெயலலிதா, கழகத்தைப் பழிவாங்கத் தவறான ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். அது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதமாகும். ஜெயலலிதாவின் தற்போதைய நடவடிக்கைகள் - “பழி வாங்குவதற்காக பொய் வழக்குகள் புனைவதிலே அவர் கைதேர்ந்தவர்” - “பொய் வழக்குகளில் பழகிப்போனவர்” - “அதில் ஒரு வகை சுகம் காண்பவர்” - என்பதையே காட்டுகின்றன!
அன்புள்ள, மு.க. 30-7-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 275–283. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.