முரசொலி கடிதங்கள் · 3574
அமைதி வழி - அறவழி - அதுவே அண்ணா வழி!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3574. அமைதி வழி - அறவழி - அதுவே அண்ணா வழி!
உடன்பிறப்பே,
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சியிலே இருந்தபோது சமச்சீர் கல்வித் திட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து விட்டதைப் போலவும், அதனால் சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களின் தரத்தை உயர்த்தவும், உயர் மட்டக் குழு அமைத்து, அதுகுறித்து ஆராய அவகாசம் தேவைப்படுவதாலும் இந்த ஆண்டு தமிழகத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே சமச்சீர் கல்வித் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்படவில்லை. 2006ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று அறிவித்திருந்தோம். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தை தனது முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றி அறிவித்து விடவில்லை.
சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி அரசுக்கு பரிந்துரைகளைத் தருவதற்காக 8.9.2006 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் எஸ். முத்துக்குமரன் அவர்கள் தலைமையில் கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழுவினை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு இதைப் பற்றி நன்கு ஆய்வு செய்து தனது ஆய்வறிக்கையை அரசின் பரிசீலனைக்காக அளித்தது. அவ்வாறு அந்தக் குழு பரிந்துரைகளை அளித்தவுடன் தமிழக அரசு அப்படியே அவற்றை ஏற்றுக் கொண்டு சமச்சீர் கல்வித் திட்டத்திற்காக சட்டம் கொண்டு வந்து விடவில்லை.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை மீண்டும் ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க திரு. எம்.பி. விஜயகுமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களை ஒரு நபர் குழுவாக தமிழக அரசு நியமித்தது. முனைவர் எஸ். முத்துக் குமரன் ஆய்வறிக்கையினை அந்த ஒரு நபர் குழு பரிசீலனை செய்து - சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியது.
அதன் பின்னரும் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்ந்து பரிசீலிக்க, பிற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டங்கள், தேர்வுமுறைகள் ஆகியவற்றைக் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க அதிகாரிகளைக் கொண்ட கல்வியாளர்கள் குழு ஒன்று அரசினால் 30.10.2008- ன்படி அமைக்கப்பட்டது. அந்தக் கல்வியாளர்கள் குழு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையினை அரசுக்கு வழங்கியது.
இந்தக் குழுக்களையெல்லாம் அமைத்து அவர்கள் பல மாதங்கள் ஆய்வு செய்து பரிந்துரைகளையெல்லாம் அளித்த பிறகுதான், அதாவது சுமார் நான்காண்டுகள் பரிசீலனை செய்த பின்னர்தான் 2010ஆம் ஆண்டில், சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக அதற்கான சட்டம் 1.2.2010 அன்று தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்டது.
சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகும் அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 1.3.2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கல்வியாளர்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு சமச்சீர் கல்விச் சட்டத்தின்படி 2010-2011ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் விரிவாக ஆராயப்பட்டன. சமச்சீர் கல்வி முறையை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தலாம் என்றும், முதற்கட்டமாக 2010-2011ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கும், அதனைத் தொடர்ந்து 2011- 12ஆம் கல்வியாண்டில் பிற எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
சமச்சீர் கல்விச் சட்டத்தினை தள்ளுபடி செய்யக் கோரி ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் 30.4.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையில் தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லத்தக்கது என நிலைநிறுத்தம் செய்யப்பட்டது.
சமச்சீர் கல்விக்குச் சாதகமான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பாணைக்கு இடைக்காலத் தடை வழங்கக் கோரி புதுடெல்லி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
முதற்கட்டமாக 2010-2011ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாடப் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு பாட நூல் கழகத்தால் முதலாம் வகுப்புக்குத் தேவையான 61 இலட்சம் பாடப் புத்தகங்களும் ஆறாம் வகுப்புக்குத் தேவையான 84 இலட்சம் பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு அவைகள் முறையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் கடந்த ஆண்டு அந்தப் புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார்கள்.
அரசின் கொள்கை முடிவின்படி 2011-2012ஆம் கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் 200 கோடி ரூபாய்ச் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன. இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் - அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் - என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்தக் காலக் கட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டப் பட வேண்டுமென்பதுதான் தி.மு. கழகத்தின், ஏன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலை. அதனை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகத்தான், எடுத்த எடுப்பிலேயே தான்தோன்றித்தனமாக அதனை அறிவித்துவிடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள்
குழு, அதிகாரிகள் குழு என்றெல்லாம் நியமித்து, அந்தக் குழுக்களைக் கொண்டு வெளி மாநிலங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்யச் செய்து, அதன் பிறகுதான் படிப்படியாக சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, அது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர் திரு. கே. சியாம் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது நீதியரசர்கள் திரு. எஸ். ராஜேஸ்வரன், திருமதி கே.பி.கே. வாசுகி ஆகியோர் கூறும்போது, “சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது. இது தவிர, ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையைச் செலவிடுவது அவசியம்தானா? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்த போது, நீதியரசர்கள் பி.எஸ். சவுகான், சுதந்திரகுமார் அளித்த தீர்ப்பில் “1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். அதை இடையில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையும், 7ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். அந்தப் பாடத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அது குறித்து ஆராய நிபுணர் குழு நியமிக்கப்பட்டு, அந்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2 வார காலத்தில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ஐகோர்ட் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தினமும் விசாரணை
நடத்தி ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும்.” என்று கூறியது.
இந்தத் தீர்ப்பின்படி அ.தி.மு.க. அரசு கல்வியாளர்கள் குழு ஒன்றினை அமைத்தது. அந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற கருத்து பலராலும் சொல்லப்பட்டது. அதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படாமல், அந்தக் குழுவினைக் கொண்டே அறிக்கை ஒன்றினைத் தயார் செய்து, அந்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குழுவினர் தந்த அறிக்கை பற்றியெல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும் அளித்த தீர்ப்பில் -
“We have no hesitation to hold that the State has exceeded in its powers in bringing the Amending Act to postpone an enactment which is already come into force” - மாநில அரசு அதனுடைய அதிகார வரம்பை மீறியுள்ளது என்று கூறுவதற்கு எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை - என்றே தெரிவித்ததோடு முதல் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு கணிசமான பணிகள் முடிந்து விட்டன. அவை இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுவிட்டன. இந்த நிலையில் சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது, மாணவர்களின் நலனைப் பாதிக்கும். எனவே அந்தச் சட்டத்தின் 3ஆம் பிரிவைத் திருத்தி, தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம் என்றும், சமச்சீர் சட்டத்தின்கீழ் வரும் கல்விக்கான பாடப் புத்தகத்தை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் எனவே மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் நலனையும் கருத்திலே கொண்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்த பிறகும் - தமிழக அரசு அதனை மதிக்காமல் - தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யாமல் மாணவர்களின் நலன் கருதி உயர் நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப் படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதையும் அலட்சியப்படுத்திவிட்டு உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாதென்றும், ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டுமென்றும் தெரிவித்து ஐந்து நாட்கள் ஆகிய போதிலும் தமிழக அரசு அந்த உத்தரவையும் மதித்து இதுவரை சமச்சீர் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்கும் பணியைத் தொடங்கவே இல்லை. மாறாக தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று கூறியிருக்கிறார் என்றால், தமிழக மாணவர்களின் நிலைமை பற்றி தமிழக அரசு கவலையே படவில்லை என்பது நன்கு தெரிகிறது.
பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் இந்த ஆண்டு தாங்கள் என்ன பாடப் புத்தகங்களைப் படிக்கவிருக்கிறோம் என்பதே தெரியாத நிலையில் மாணவச் செல்வங்களும், அவர்களின் பெற்றோர்களும் தவித்துப் போய் இருப்பதைப் பற்றி தமிழக அரசு கவலையே படாமல் இதனை கெளரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மதிக்காமல், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்தையும் கேட்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 29-7-2011 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை மாணவச் செல்வங்கள் புறக்கணித்து, தங்களுக்குள்ள எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். மாணவர்கள் நினைத்தால் எதிலும் வெற்றிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அறப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அமைதி வழி - அறவழி! அதுவே அண்ணா வழி! அன்புள்ள, மு.க. 28-7-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 269–274. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.