அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3466

முரசொலி கடிதங்கள் · 3466

என்னை மகிழ்விக்க, சென்னைக்கு வருவாயா?

நாள் 11.3.2010சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3466. என்னை மகிழ்விக்க, சென்னைக்கு வருவாயா?

உடன்பிறப்பே,

பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் உருவாக்கியதாலும், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையைக் கட்டியதாலும், புதியதோர் எழுச்சி தமிழுக்குக் கிடைப்பதை உணர்ந்த நல்லோர் சிலர், மயிலை திருவள்ளுவர் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்ற முறையீடொன்றை என்னிடம் தந்தனர். அப்போது அந்தக் கோயிலை அன்னியில், சென்னை நகரின் நடுப்பகுதியில் கோட்டம் ஒன்று அமைத்தால் என்ன என்ற ஆசை எனக்குத் தோன்றியது. அதுபற்றி விவாதித்தோம். பெரிய அளவில் வரலாற்றுப் புகழ் வாய்ந்ததாக அந்தக் கோட்டம் அமைய வேண்டுமென விரும்பினோம்.

சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் வள்ளுவர் கோட்டத்தை அமைத்திட முடிவு செய்யப்பட்டது. பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடப் பணிகளை முன்னின்று நடத்திய சிற்பி கணபதி ஸ்தபதியார் அவர்களும், குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தை வியக்கத்தக்க வண்ணம் வடித்துத் தந்த சிற்பி எஸ்.கே. ஆச்சார் அவர்களும், வள்ளுவர் கோட்டம் அமைத்திடும் வேலைகளை 18.9.1974 அன்று தொடங்கினர். வள்ளுவர் கோட்டம் 99 இலட்சம் ரூபாய்ச் செலவில், 1976ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

வள்ளுவர் கோட்டத்தின் முகப்பில், காண்போர் கருத்தைக் கவரும்வண்ணம், தோரணவாயில் அமைக்கப்பட்டு, “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என்ற முதல் குறள் பொறிக்கப்பட்டது.

குறள்மணி மாடத்தில், அழகிய வண்ண சலவை கற்பலகைகளில், திறந்த புத்தக வடிவில், தூண் ஒன்றிற்கு

இரண்டு அதிகாரங்கள் வீதம் 1330 குறட்பாக்கள் அமைக்கப் பட்டன. அறத்துப்பாலின் 38 அதிகாரங்கள் கருநிற பளிங்கிலும், பொருட்பாலின் 70 அதிகாரங்கள் சாம்பல்நிற பளிங்கிலும், காமத்துப்பாலின் 25 அதிகாரங்கள் மற்றும் சங்கப் புலவர் ஐவர் பாடிய திருவள்ளுவர் மாலை கருஞ்சிவப்பு பளிங்கிலும் பொறிக்கப்பட்டன.

மணிமாடத்திற்கு மேலே 220 அடி நீளம், 140 அடி அகலம் கொண்ட வேயா மாடம் அமைக்கப்பட்டது. அதில், தேரின் கலசம், கோபுரம், தேரின் கருவறையில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகிய மூன்றில் நிழலுருவம் தெரியும்வண்ணம் இரண்டு பெரிய நீர்நிலைகளும், ஒரு சிறிய நீர்நிலையும் அமைக்கப்பட்டது.

கருவறையின் நடுப்பகுதியில் இரண்டு அடி உயரமுள்ள பீடத்தின் மேலே முப்பாலைக் குறிக்கும்வண்ணம், மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் ஏழடி உயரமுள்ள ஒளிமிக்க கருங்கல்லால் ஆன திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.

குறள்மணி மாடத்திற்குக்கீழே 220 அடி நீளம், 100 அடி அகலம் கொண்ட, இடையே தூண்களே இல்லாத 3,500 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வண்ணம் பெரிய அரங்க மண்டபம் அமைக்கப்பட்டது. அரங்க மேடையின் நடுவே திருவள்ளுவரின் வண்ண ஓவியமும், இடதுபுறத்தில் சங்கப்புலவர் அதங்கோட்டாசான் திருவுருவப் படமும், வலதுபுறத்தில் தொல்காப்பியர் திருவுருவப் படமும் அழகிற்கு அணி சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டன.

வள்ளுவர் கோட்டத்திற்கு மணிமுடி வைத்தாற்போல், காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து உயர்ந்து நிற்பது சிற்பத் தேராகும். பெரியதும் சிறியதுமாக, பக்கத்திற்கு நான்கு சக்கரங்கள்; ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனது. தேரை ஏழடி உயரமுள்ள இரண்டு கல் யானைகள் இழுப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டது. தேரைச் சுற்றிலும் 133 அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரத்தையும் விளக்கும் அடிப்படையில் 133 அழகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டன.

வள்ளுவர் கோட்டம் 15.4.1976 அன்று தமிழக ஆளுநர் தலைமையில், குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு முன்னாள்

முதலமைச்சர் என்ற முறையிலோ, அந்த வள்ளுவர் கோட்டம் எழும்பிடக் காரணமாக இருந்தவன் என்ற முறையிலோகூட நான் அழைக்கப்படவில்லை. உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து, பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக்கால வேதனையையும் இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழமுத்தம் சுளைசுளையாய் தந்து, பள்ளிக்கனுப்பி, பின்னழகும் முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத்துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமணவிழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காணமுடியாமல், மணப்பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒருவிதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச்செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்.

அந்தத் தாயின் மகிழ்ச்சியைத்தான் நான் பெற்றேன் அன்று. என் வாழ் நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் கண்டு, ஆனந்தம் கொண்டேன்!

முக்கடல் சந்திக்கும் குமரிமுனையில், வான்புகழ் வள்ளு வருக்குச் சிலை அமைக்க 31.12.1975 ஆம் நாளன்று எனது தலைமையில் கூடிய கழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டு, சிலை அமைப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கழக அரசு கலைக்கப்பட்டது.

15.4.1979 அன்று இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் அடிக்கல் நாட்டியபோதிலும், சிலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

நான் மூன்றாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், “குமரிமுனையில் வள்ளுவருக்கு குறளின் அதிகாரங்களைக் குறிக்கும்வண்ணம் 133 அடி உயரமுள்ள மாபெரும் சிலை ஒன்று அமைக்கும் பணி தொடங்கப்படும்” என்று 17.3.1990 அன்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, நிதி ஒதுக்கீடும் செய்து, கல்லில் சிலை சமைக்கும் பணியினை கணபதி ஸ்தபதியாரிடம் ஒப்படைப்பதற்கான ஆணையினை 19.7.1990 அன்று வழங்கினேன். 6.9.1990 அன்று குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை அமைப்புப் பணியை நான் நேரில் சென்று தொடங்கி வைத்தேன்.

அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும்வகையில், சிலையின் பீடத்தின் உயரம் 38 அடி என்றும்; பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில், பீடத்தின் மேல் சிலையின் உயரம் 95 அடி என்றும்; ஆகமொத்தம் 133 அடி என்றும்; சிலை அமைப்பதற்கு 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3,681 கற்கள் தேவையென்றும்; 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலையின் மொத்த எடை 7,000 டன் என்றும் கணக்கிடப்பட்டது. 1990ஆம் ஆண்டு சிலை அமைப்புப் பணி தொடங்கிய போதிலும், 1991ஆம் ஆண்டு முதல் 1996, மே திங்கள் வரையிலான காலத்தில் பணிகள் மிகவும் தொய்வடைந்து நின்றுவிட்ட நிலையில் இருந்தன.

நான்காவது முறையாக முதலமைச்சராக மீண்டும் நான் பொறுப்பேற்றதற்குப் பிறகு, சிலை அமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு; உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் திருவள்ளுவர் சிலை, உலகத் தமிழினமே ஒன்று திரண்டு நிற்க, 2000ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல்நாள் சூழும் தென்கடல் ஆடும் குமரிமுனையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது.

அந்த விழா நிகழ்ச்சிகள் அப்படியே என் நெஞ்சில் காட்சிகளாகப் பதிவாகியிருக்கின்றன. “தொடர்ந்து திருக்குறளுக்குக் கலைஞர் ஆற்றியிருக்கிற பணிகளே ஒரு இருபது பணிகள் இருக்கும். அதன் சிகரமாக வள்ளுவருடைய திருவுருவச் சிலையை இங்கே அமைத்தார். அப்படி அமைத்த கலைஞர் புகழ் - வள்ளுவர் சிலையையும், வள்ளுவர் நூலையும் போல என்றைக்கும் நிலைத்து நின்று, மக்களுடைய உள்ளத்தையெல்லாம் கொள்ளை கொண்டதாகத் திகழும்” என்று பேராசிரியர் வாழ்த்தியதும்; மறைந்த நம்முடைய மூப்பனார் அவர்கள், அந்த விழாவிலே கண்ட எழுச்சியை வியந்து, குமரிமுனையில் இலட்சக்கணக்கில் குழுமியிருந்த மக்களையெல்லாம் எழுந்து நிற்கச் செய்து, “கலைஞரைப் பாராட்டுங்கள்; பாராட்டுவதற்கு அடையாளமாக அனைவரும் எழுந்து நின்று கையொலி செய்யுங்கள்” என்று கேட்க, அனைவரும் எழுந்து நின்று உற்சாகத்தோடு கையொலி செய்து என்னைப் பாராட்டி வாழ்த்தியதும்; அந்த விழாவிலே மூப்பனார் அவர்கள் “You can win” என்ற ஆங்கிலப் புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்து மகிழ்ந்ததும்; அருமைச் சகோதரர் சிவாஜி சில வார்த்தைகளைக் கொட்டி, என்னை ஒரு கணநேரம்

உணர்ச்சிவயப்படச் செய்ததும்; எனது இதயத்தில் அச்சடித்த சித்திரங்களாக அப்படியே இருக்கின்றன.

எனது நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் மற்றொரு நினைவுச் சின்னம் சென்னை தரமணியில் கழக ஆட்சியின்போது உருவாக் கப்பட்ட “டைடல் பூங்கா” எனப்படும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பூங்கா. மத்திய அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன் மேற்கொண்ட முனைப்பான முயற்சிகளின் காரணமாக, தகவல் தொழில்நுட்பத்திற்கென்று தனியே கொள்கை உருவாக்கி அறிவித்த முதல் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் என்ற சிறப்பு நமக்குக் கிடைத்தது.

அன்புள்ள, மு.க. 11-03-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 294–298. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்