அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3469

முரசொலி கடிதங்கள் · 3469

பன்னீர், பயன்படுத்திய பயனிலா வார்த்தை!

நாள் 13.5.2010சுமார் 2 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3469. பன்னீர், பயன்படுத்திய பயனிலா வார்த்தை!

உடன்பிறப்பே,

எண்ணிப் பார்க்கிறேன் - உன்னை “உடன்பிறப்பே” என்று அழைத்து எத்தனை கடிதங்கள் எழுதிவிட்டேன். இந்தக் கடிதத்தில் “உடன்பிறப்பே” என்று தொடங்கி, உன்னை விளித்திடும்போது; இன்று காலையில் சட்டப் பேரவையில்; எதிர்க்கட்சித் துணைத் தலைவர், “உடன்பிறப்பு” என்பது எனக்கு ஒரு போர்வை என்று எப்படித்தான் மனம் துணிந்து குறிப்பிட்டாரோ தெரியவில்லை - ஆம்; இப்படித்தான் சொன்னார்; முதலமைச்சர் முரசொலியில் “உடன்பிறப்பு” என்ற போர்வையில் எழுதியுள்ள கடிதம் என்றுதான் சொன்னார்.

1969 முதல் 1976 வரை ஏழு ஆண்டுகள்- 1989 முதல் 1991 வரை இரண்டு ஆண்டுகள் - 1996 முதல் 2001 வரை ஐந்து ஆண்டுகள் - இப்போது 2006 முதல் இதுவரை நான்கு ஆண்டுகள் நிறைவு செய்து; மொத்தம் பதினெட்டு ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றி, பத்தொன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஆம் - பதினெட்டு என்பது; வரலாற்றில், புராண இதிகாசங்களில் குறிப்பிடத்தக்க ஒரு எண்ணாகவே இருந்திருக்கிறது. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் - இராமாயணப் போர் பதினெட்டு மாதங்கள் - தேவாசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள் - சேரன் செங்குட்டுவன் இமய மலைக் குயிலாலுவத்தில் கனக விசயருடன் நடத்திய போர் பதினெட்டு நாழிகை என்று; பதினெட்டு என்ற எண்ணுக்குப் பெருமை சேர்க்கும் புலவர்கள் உண்டு.

என் வாழ்க்கையில் பதினெட்டு என்பது எனக்குப் பெருமை சேர்க்காவிடினும் - பதினெட்டை நினைத்து நான் பெருமூச்செறியும் பல சந்தர்ப்பங்களைச் சந்தித்துள்ளேன்.

அந்த சந்தர்ப்பங்களில் ஒன்றுதான், இன்று சட்டப் பேரவையில் நான் சந்தித்தது. பதின்மூன்று ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போகும் ஒரு வழக்கு பற்றியதுதான் நான்

“முரசொலி”யில் எழுதியுள்ள கடிதம் - உடன்பிறப்பாம் உனக்கு எழுதியது!

“உடன்பிறப்பு” என்பது எனக்கு ஒரு போர்வையாம் - அந்தப் போர்வையில் நான் புகுந்து கொள்கிறேனாம்; பன்னீர் சொல்கிறார் - “உடன்பிறந்த சகோதரம்” என்றும், “உடன்பிறவாச் சகோதரம்” என்றும், நான் போர்வைகளை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்க வேண்டிய தேவையே ஏற்பட்டதில்லை.

இராவணன், கும்பகர்ணனை விளித்தது போலவும் - இராமன், இலக்குவனை விளித்தது போலவும் - “உடன்பிறப்பே” என்று விளித்திட ஓராயிரம், பத்தாயிரம், இலட்சமென உன் போன்ற உடன்பிறப்புகள் எனக்கு இருக்கிறீர்கள்!

நீங்கள் போர்வைகள் அல்லர் - போருக்குத் தோள் தட்டும் மறவர்கள் - மானமிகு வீரர்கள் என்பதை அறிந்திருந்தும் - அமைதிக்குப் பெயர் போன அருமை நண்பர் பன்னீர் அவர்கள் - “பச்சைத் தமிழர்” என்று பேரவையிலேயே என்னால் அழைக்கப்பட்ட பன்னீர் அவர்கள் - அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்து விட்டு - எப்படி ஒரு வார்த்தையை சொன்னார் பார்த்தாயா? போர்வையாம் நீ! உன்னைக் கொண்டு மறைத்தவாறு நான் உனக்கும், உலகிற்கும் கடிதம் தீட்டுகிறேனாம்.

கடந்து, நடந்து முடிந்த இந்தப் பதினெட்டு ஆண்டுக் காலப் பதவிக் காலத்தில், எத்தனையோ இத்தகைய வார்த்தைகள், வசவுகள் - அவற்றை மீறி எழும் வாழ்த்துகள் - பாராட்டுகள் அனைத்தையும் சந்தித்த சரித்திரம்தான் என்னுடையது; இதில் பன்னீர் பயன்படுத்திய அந்தப் “போர்வை”க்காகவா; என்னைப் புலன் மாற்றிப் போட்டுக் கொள்ளப் போகிறேன்?

இளமையில் இரத்தத்துடன் ஊறிய சுயமரியாதைச் சூடும் தணியவில்லை; முதுமையில், “வாழ்க வசவாளர்கள்” என்று

நம் அண்ணன் சொன்ன வாசகமும் மறக்கவில்லை.

“வாழ்க வசவாளர்கள்” என்று வாழ்த்தி இம்மடலை முடிக்கிறேன்.

அன்புள்ள மு.க. 13-05-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 315–316. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்