முரசொலி கடிதங்கள் · 3470
சிறுதாவூர் சீமாட்டிக்கு சீற்றம் ஏனோ?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3470. சிறுதாவூர் சீமாட்டிக்கு சீற்றம் ஏனோ? உடன்பிறப்பே, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றையதினம் அவரது கட்சிக்காரர்கள் இல்லத்தில் சில திருமணங்களை நடத்திவைத்து விட்டுப் பேசும்போது - மணமக்களை வாழ்த்துவதற்கு செலவழித்த நேரத்தை விட - என்னை வசைபாடுவதற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அது மண விழாவானாலும், ஆர்ப்பாட்டமானாலும், எந்த விழாவானாலும் அவரது பேச்சுக்கு மய்யமாக நான் மட்டும்தான் இருக்கிறேன் போலும்! எத்தனையோ பேர் எனக்குச் சாபம் கொடுத்து முடித்து விட்டார்கள். ஏன் இந்த அம்மையாரே பலமுறை எனக்குக் கொடுத்த சாபம் எதுவும் பலிக்கவில்லை. நான் சின்னஞ்சிறுவனாக திருவாரூரில் எனது உறவினர் திரு. கிருஷ்ணன் (முரசொலி சொர்ணத்தின் தந்தையார்) இல்லத்தில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த போது - அண்ணன் கிருஷ்ணன் அவர்கள் என்னை அணுகி, தம்பி சோதிடம் இல்லை, சாத்திரம் இல்லை என்றெல்லாம் நீ இந்தச் சிறு வயதிலேயே பிரச்சாரம் செய்கிறாயே, எனக்குத் தெரிந்த சோதிடர் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அப்படியே உள்ளதை உள்ளவாறு சொல்கிறார் என்றும், அடுத்த நாள் அவர் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருக்கிறார் என்றும், அந்த நேரத்தில் நீயும் இருந்து அவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றும் கூறினார். நானும் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டேன். அன்று மாலையில் ஒரு அம்மையார் என்னை சந்தித்தார். அவர் என்னிடம், “ஏம்பா, நீதான் இந்த வீட்டுக்காரரின் பிள்ளையா?” என்று கேட்டார். அவர் யார் என்பதைப் புரிந்து கொண்டேன். அவரது கேள்விக்குப் பதிலாக ஆமாம் என்று கூறினேன். எத்தனை பேர் உடன் பிறந்தவர்கள்
என்று அந்த அம்மையார் கேட்க, நானும் ஒரு தோராயமாக “மூன்று பிள்ளைகள், இரண்டு பெண்கள்” என்று சொன்னேன். இது போலவே வேறு சில கேள்விகளையும் என்னைக் கேட்டு, என்னிடம் பதிலைத் தெரிந்து கொண்டு போய் விட்டார்கள்.
அடுத்த நாள் காலையில், சோதிடரும் முதல் நாள் என்னைச் சந்தித்த அந்த அம்மையாரும் கிருஷ்ண அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். கிருஷ்ண அண்ணன், அவரது துணைவியார், நான் மற்றும் சுற்றிலும் அமர்ந்தோம். சோதிடர் அவருக்கே உரிய சிலவற்றை செய்து விட்டு - கிருஷ்ண அண்ணனிடம் என்னைக் காட்டி, இவர் தானே உங்கள் மைந்தர் என்றார். கிருஷ்ண அண்ணனிடம் நான் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால் அவர் எதுவும் பேசாமல் ஒத்துக் கொள்வதைப் போல அமர்ந்திருந்தார். அடுத்து சோதிடர் உங்களுக்கு எத்தனை ஆண் குழந்தைகள் என்று சொல்லட்டுமா என்று கேட்க - சோதிடருக்கு எதிரே இருந்த சோதிடரின் மனைவி தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு - மூன்று விரல்களை நீட்ட - அதைப் பார்த்துக் கொண்டே - உங்களுக்கு மூன்று பிள்ளைகள் தானே? என்றார். கிருஷ்ண அண்ணன் அதற்கும் எதுவும் பேசவில்லை. அடுத்து எத்தனை பெண் குழந்தைகள் என்று சொல்லட்டுமா என்று கேட்டுத் தனது மனைவியைப் பார்க்க அந்த அம்மையார் எதுவும் காட்டிக் கொள்ளாமல் இரண்டு விரல்களை நீட்டிக் காட்டிட, சோதிடர்; உடனே இரண்டு பெண் குழந்தைகள் தானே என்றார். கிருஷ்ண அண்ணனுக்கு கோபம் வந்து விட்டது. அவருக்கு கோபம் வந்தால் வாயில் வார்த்தைகள் இப்படித்தான் வரும் என்றில்லை. சரமாரியாக சோதிடரைத் திட்டத் தொடங்கி விட்டார். சோதிடரின் மனைவி நேற்று இந்த பிள்ளையாண்டான் தான் இந்த விவரங்களை யெல்லாம் சொன்னதாக என்னைக் காட்டி விட - சோதிடர் என் பக்கம் திரும்பி “இந்தச் சிறு வயதிலேயே இப்படியெல்லாம் செய்கிறாயா? நீ உருப்படவே மாட்டாய்” என்று பெரிய சாபத்தைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார். அந்தச் சாபம் பலித்ததா என்பதற்கு இந்த உலகமே சாட்சி!
அந்தச் சோதிடர் விட்ட சாபமே பலிக்க வில்லை என்கிற போது - ஜெயலலிதா விடுகின்ற சாபமா பலிக்கப் போகிறது?
நான் எழுதிய “சிலப்பதிகார காப்பியம்” என்ற நாடகத்திலேயே இந்தச் சோதிடம் பற்றி ஒரு அத்தியாயமே எத்தனையோ
ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன். அதில் சோதிடன் ஒருவன் அரசர் நெடுஞ் சேரலாதனிடம் அவருடைய இளைய மகன் இளங்கோதான் அடுத்து பட்டத்திற்கு வருவான் என்று சொன்ன போது - இளைய மகன், இளங்கோ குறுக்கிடுவான். அது,
“இளங்கோ:- இல்லை, இல்லை. என் அண்ணனே ஆளப் பிறந்தவர்!
சேரலாதன்:- இளங்கோ! நிமித்தகர் வாக்குப் பொய்க்காது!
இளங்கோ:- பொய்க்காது படைத்தவர்களுக்கு நிமித்திகர் வாக்குப் பொய்க்காது! இது உண்மைக் காது! அவர் ஆரூடம் கேட்டுக் கலங்காது!
நிமித்திகன்:- ஊழ்வினையை மாற்ற இயலாது இளங்கோ!
இளங்கோ:- ஏன் இயலாது? “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்” எனக் குறள் கூறும் கருத்தை உண்மையாக்குகிறேன்! நீர் கூறும் விதியை மதியால் வெல்லுகிறேன்!
நிமித்திகன்:- மூத்தவன் இராமன் காடாள வேண்டும்; இளையவன் பரதன் நாடாள வேண்டும் என்ற விதியை யாராவது மாற்ற முடிந்ததா?
இளங்கோ:- பரதனும் ஆளவில்லை; இராமனும் ஆளவில்லை; பதினான்கு வருடம் பாதுகை அல்லவா நாடாண்டது! நிமித்திகரே, பழைய இதிகாசங்களைக் காட்டி விதியை நிலை நிறுத்த எண்ணாதீர்! இதோ.....நான் படைக்கிறேன் புதிய இதிகாசம்! உமது ஆரூடத்தை அறிவால் வெல்லுகிறேன்..... அண்ணனையே அரசுக்குரியவராக்குகிறேன்! ஏற்றுக் கொள்ளும் நிமித்திகரே எனது அறைகூவலை! உமது கூற்று தூள்! தூள்! தூளாகப் போகிறது பாரும்!.....”
(“சிலப்பதிகாரம் - நாடகக் காப்பியம்” என்ற தலைப்பில் நான் எழுதிய இந்த உரையாடல் - திரு. டி.ஜி. நாராயணசாமி, திரு. எம்.டி. ஜெயபாலன், ஆகியோரால் மொழி பெயர்க்கப்பட்டு - திரு. பி. மருதநாயகம், திரு. வி. முருகன் ஆகியோரால் தொகுக்கப்பட்டு - “மேக்மில்லன்” நிறுவனத்தால் அச்சியற்றப்பட்டு - வரும் 31-5-2010 அன்று சென்னையில் இந்தியக் குடியரசு துணைத்
தலைவரால் வெளியிடப்படவுள்ள புத்தகத்தில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது :-
Ilango :- No, No. It is my brother who is born to rule and nothing shall change that position.
Neduncheraladhan :- Who can defy Destiny, Ilango? Our Astrologer’s prediction is bound to come true.
Ilango :- That might be so for those with ears of superstition but not for me, Sire, since my ears are tuned into the gospel of truth and truth alone. The forecast is bound to fail and I accept the challenge of the so-called Fate which has got to turn tail when confronted with deter mined endeavour, as Valluvar has inspired us to believe.
Astrologer :- Haven’t you read the epics, Ilango? Could anyone alter the decree of Destiny that Rama the eldest brother should go into exile and Bharata rule in his place?
Ilango :- The epic I read says authoritatively that neither Bharata nor Rama ascended the throne but it was the sandal that reigned supreme. Revered Master - Astrologer, please do not dangle the epics before us in order to prop up a false case. Here and now I swear to create an epic new that shall smash your prediction to smithereens. My brother and brother alone shall rule this land and the miracle that brings this about will not originate from your chart-caged planets but from the effulgent sun of honest intellect.)
இந்த உரையாடலை எழுதியவன் நான்தான். அப்படிப்பட்ட நான் ஏதோ சோதிடரின் வார்த்தையைக் கேட்டு என் வீட்டை அறக் கட்டளைக்கு ஒப்படைக்கப் போவதாக அறிவித்தேனாம். யாரோ சோதிடர் அந்த வீட்டிலே நான் தங்கியிருந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னதால்தான் வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேனாம். அம்மையார் ஜெயலலிதா மணவிழா மேடையிலே முழங்கியிருக்கிறார். எந்தச் சோதிடன் சொன்னான் என்று ஜெயலலிதா நிரூபிக்கத் தயாரா? இன்னும் சொல்கிறேன், என்னுடைய பிறந்த நாளுக்குப் பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத்தான்; என் மறைவுக்குப் பிறகு அந்த வீட்டை மருத்துவமனையாகப் பயன்படுத்த ஒப்படைக்க இருக்கிறேன்.
இது எதுவும் தெரியாமல் ஜெயலலிதா எந்தச் சோதிடன் சொன்னதையோ கேட்டுக் கொண்டு மணவிழாவிலே சென்று புலம்பியிருக்கிறார். அது மாத்திரமல்ல, தலைமைச் செயலகக் கட்டிடத் திறப்பு விழாவினைக் கூட சோதிடன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தான் சீக்கிரமாக திறந்து வைத்து விட்டேனாம்! எந்தச் சோதிடன்? சொல்லத் தயாரா? மார்ச் மாதத்திற்கு மேல் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே உட்கார்ந்திருந்தால் நீங்கள் திரும்ப ஆட்சிக்கு வரவே முடியாது என்று சோதிடன் சொன்னதைக் கேட்டு விட்டுத்தான் தலைமைச் செயலகத்தை மாற்றியிருக் கிறேனாம். மார்ச் திங்கள் முடிந்து ஏப்ரல் திங்கள் முடிந்து மே திங்கள் நடைபெறுகிறது. புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் முற்றுப் பெற இன்னும் மூன்று நான்கு மாதங்களாகப் போகிறது. அதுவரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் புளுகு என்னவாகப் போகிறது? ஏன், ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது புதிய தலைமைச் செயலகம் ஒன்றை கோட்டூர்புரத்தில் கட்டுவதாகச் சொல்லி சோதிடர்களையெல்லாம் அழைத்து வந்து பூஜை புனருத்தாரணங்கள் எல்லாம் செய்து அடிக்கல் நாட்டியதாக ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டதே, என்னவாயிற்று? அந்தச் சோதிடம் பலித்ததா? அது மாத்திரமல்ல, கடற்கரை சாலையிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது வைக்கப்பட்ட கண்ணகி சிலையை அன்றாடம் பார்த்துக் கொண்டே தலைமைச் செயலகம் சென்றால், ஆட்சி நீடிக்காது என்று யாரோ சோதிடன் சொன்ன சொல்லைக் கேட்டுக் கொண்டு இரவோடு இரவாக லாரியை விட்டு இடிக்கச் சொல்லி, அந்தச் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் கொண்டு போய் ஒரு மூலையில் போட்டு வைத்தார்களே, அந்தச் சோதிடன் சொன்னது பலித்து அவருடைய ஆட்சி நீடித்ததா? அந்தக் கண்ணகி சிலையை அதே இடத்தில் வைத்து அன்றாடம் நான் பார்த்துக் கொண்டு தானே தலைமைச் செயலகம் செல்கிறேன், என்னுடைய ஆட்சிக்குத் தான் இடைஞ்சல் வந்து விட்டதா?
ஏன், இன்றைக்கு வந்துள்ள ஏடுகளில் ஜெயலலிதா ராகு - கேது - பூஜா செய்ய காளாகஸ்தி போவதாகவும், அதற்காக 300 காவலர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் செய்தி வந்திருக்கின்றது. இந்த சோதிடம், யாகம், பூஜை, புனருத்தாரணம் எல்லாம் அவருக்கே கை வந்த கலையே தவிர, இளம் பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி மணவிழா மேடையிலே ஏறிக் கொண்டு சோதிடர் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் வீட்டை தானம் செய்கிறேன், தலைமைச் செயலகத்தை மாற்றினேன் என்றெல்லாம் வசைபாடியிருக்கிறார் என்றால், சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்தச் சீற்றம் ஏனோ என்று தானே கேட்கத் தோன்றுகின்றது! சிறுதாவூர் பற்றி புகார் மனு கொடுத்தவர்கள் மீது வராத கோபம்; என் மீது வரலாமா? அன்புள்ள, மு.க. 18-5-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 317–322. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.