அடக்கம்

முரசொலி · தொகுதி 43 · கடிதம் 3473

முரசொலி கடிதங்கள் · 3473

ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம்... (2)

நாள் 31.5.2010சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3473. ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம்... (2)

உடன்பிறப்பே,

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர் பதவியில் இருந்த காலத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான டான்சி நிலத்தை விலை குறைத்து வாங்கியது பற்றிய வழக்கில் அவருக்கு மூன்றாண்டு கால சிறை தண்டனை சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது 27-8- 2001 அன்று விசாரணை தொடங்கியது.

அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றதும், அவசர, அவசரமாக முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக ஆகியே தீரவேண்டுமென்ற நிலையில் உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த அப்பீல் வழக்கினை விரைவாக விசாரித்து தீர்ப்பு பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

தனக்கு எதிரான வழக்கில் தன்னை எதிர்த்து வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞரை அவரே நியமித்துக் கொள்கின்ற அதிகாரத்துடன் நீதி மன்ற நடவடிக்கையையே கேலிக் கூத்தாக்க முயன்றார். அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால், முன்னாள் அட்வகேட் ஜெனரலாக இருந்த வேங்கடபதியை அரசு வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் டான்சி நில பேர விசாரணை வேகமாகத் தொடங்கப்பட்டது. அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வேங்கடபதி உச்சநீதிமன்றத்தில் - டான்சி நில பேர வழக்கு விசாரணை நடைபெறும் விதத்தையும், 2200 பக்க ஆவணங்களை படித்துப் பார்க்க தனக்கு நீதிபதி பாலசுப்ரமணியம் அவகாசம் தராததையும் எதிர்த்து மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் வழக்கு விசாரணையை வேறு மாநில

உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்; சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடந்தால் நீதியை நிலைநாட்ட முடியாது, 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள், அவர் முதல்வராக ஆனதும், அவசர, அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது; அவர் முதல்வராக ஆனவுடனே அவர் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுக்கள் மீது, அவரை எதிர்த்து வாதாட அவரே அரசு வழக்கறிஞரையும் நியமிக்க முடிவு செய்தார்; எனவேதான் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்த பிறகு அரசு வழக்கறிஞராகத்தான் நியமிக்கப்பட்டேன்; எனவே சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு தடை விதித்து வேறு மாநில நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வேண்டும்; என்று கேட்டுக்கொண்டார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பி. பரூச்சா, ஒய்.கே. சகர்வால், அசோக் பகான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் பரிசீலனைக்கு வந்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் மனுக்களை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அந்த வழக்கில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி வாதாடும் போது, “2200 பக்கங்கள் கொண்ட ஆவணங்களைப் படித்துப் பார்க்கக் கூட அவகாசம் அளிக்கப் படாததை வேதனை என்பதா? வேடிக்கை என்பதா? இது போன்ற நிகழ்வு மிகவும் அசாதாரணமானது. மேலும் மாநில முதலமைச்சரே அப்பீல் மனுதாரராக இருக்கிறார். எனவே நீதியின் நலன் கருதி இந்த வழக்குகளை விரைவாக பிற மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் நீதி மன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் பங்கம் ஏற்பட்டு விடும்” என்றார். உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது குறித்து என்னிடம் கருத்து கேட்ட போது, நீதி மன்றத் தீர்ப்பு பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று நான் கூறி விட்டேன். என்ற போதிலும், சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர அவசரமாக நடத்தப்படுவதால், ஜெயலலிதாவின் மேல்முறையீடுகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு சரிதான் என்று 1-9-2001 ஆம் தேதிய இந்து நாளிதழ் தனது தலையங்கத்தில் எழுதியிருந்தது.

நாடாளுமன்றமாயினும், சட்டமன்றங்களாயினும் அங்கே நீதிபதிகள் பற்றி பேசக் கூடாது என்பது மரபு. ஆனால் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உச்சநீதிமன்ற நீதிபதி பற்றி பேரவையில் 1-9-2001 அன்று தெரிவித்த ஒரு கருத்து வருமாறு:- “உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து விட்டு மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எப்படி பெற்றார்கள்? தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திப் பெற்றார்களா என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். தனி நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ததில், இரண்டு தீர்ப்புகளையும் ரத்து செய்துவிட்டு மீண்டும் விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. அந்த உத்தரவு எப்படி வழங்கப்பட்டது என்பதை தி.மு.க.- வினர்தான் விளக்க வேண்டும்”

இவ்வாறு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கே உள்நோக்கம் கற்பித்து சட்டப்பேரவையிலேயே ஜெயலலிதா பேசினார்.

ஆனால் சட்டப்பேரவையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி தெரிவித்த இந்தக் கருத்தில் உறுதியாக இருந்தாரா? கிடையாது. 3-9-2001 அன்று அதே சட்ட சபையில் சட்டமன்ற விதி 109-ன்கீழ் தன்னிலை விளக்கம் ஒன்று அளித்தார். அதில் அவர் அந்த மன்றத்தில் நீதிபதிகள் பற்றிப் பேசிய கருத்துக்களை செய்தித்தாள்கள் வேறு பொருள்படும்படி வெளியிட்டு விட்டதாகக் கூறியிருந்தார்.

இடைக்காலத் தடையை அகற்றக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரூச்சா, பிரிஜேஷ்குமார், அசோக் பான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 7-9- 2001 அன்று அளித்த தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலசுப்பிரமணியம் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும், சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதி வந்த பிறகு அவர் எந்த நீதிபதி இந்த வழக்கினை விசாரிப்பது என்பதை பொறுப்பேற்ற ஒரு வாரக் காலத்திற்குள் அறிவிப்பார் என்றும், அதன் பிறகு தான் விசாரணை புதிதாகத் தொடங்குமென்றும், புதிய விசாரணையை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு முன்பு ஆரம்பிக்கக் கூடாதென்றும் தெரிவித்தது.

இந்தத் தீர்ப்பு பற்றி இந்து நாளேடு தலையங்கம் எழுதிய போது, ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்கிற நிலை ஏற்பட்ட பிறகு ஜெயலலிதா எக்காரணம் கொண்டும் முதலமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்று எழுதியது. மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்கும்போது, உச்சநீதி மன்றம் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு அதன் மூலம் தகுதி இழப்பைச் சந்திக்கும் ஒருவர் முதலமைச்சராக பதவி ஏற்றது முறைதானா என்ற கேள்வியை கருத்தாக எழுப்பியிருக்கிறது. எனவே ஆறு மாத கால முடிவான நவம்பர் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து பதவியில் நீடித்து, பின்னர் தூக்கி எறியப்படும் நிலையைச் சந்திக்காமல் உடனடியாக ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்றும் அந்த இதழ் திட்டவட்டமாக எழுதியது. ஜெயலலிதாவை முதலமைச்சராக நியமித்தது சட்டப்படி செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் 21-9- 2001 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. பரூச்சா தலைமை யிலான ஐந்து நீதிபதிகள் வழங்கிய ஒருமனதான தீர்ப்பில், “தமிழக முதல்வராக ஜெயலலிதா நியமனம் செய்யப்பட்டது செல்லாது. அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, மே 14-ந்தேதி செய்தது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இனியும் ஜெயலலிதா முதல் அமைச்சராக நீடிக்க முடியாது. ஏனெனில் மே 14-ல் அவர் நியமிக்கப்பட்டது சட்டப்படி செல்லத் தக்கதல்ல” என்று தெரிவித்தனர். மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் தேவையென்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நீதிபதிகளிடம் கேட்ட போது, “முதல் அமைச்சர் மறைந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது, இவ்வளவு பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் ஒரு கட்சி எந்த நேரத்திலும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்” என்று கூறி அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இத்தகைய புகழ்ச்சிக்கு உரியவர் (?) தான் அமைச்சர் தம்பி ராசா, தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி கட்சியினரைத் தூண்டி விடுகிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா வகித்துவந்த முதல் அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலக

வேண்டு மென்று ஏடுகளும், வழக்கறிஞர்களும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதே நேரத்தில் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3)-வது பிரிவுக்கு இடைக்காலத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலே வழக்கு ஒன்றும் தொடர்ந்தார்கள். அதுபற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, ஐம்பதாண்டு காலமாக இருக்கின்ற சட்டம் அது. தவறு செய்தவர்கள், குற்றவாளிகள், கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் தேர்தலில் நிற்கலாம் என்று அதற்கு லைசென்ஸ் கேட்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கூறினேன்.

உச்ச நீதி மன்ற தீர்ப்பு காரணமாக தமிழ் நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் அவ்வாறு நினைக்க வில்லை. அ.தி.மு.க. பேரவையில் பெரும்பான்மையாக இருக்கிறது. ஜனநாயக முறைப்படி அவர்களே இன்னொருவரைத் தேர்ந்தெடுத்து பொறுப்பேற்பதில் தவறு கிடையாது” என்று கூறினேன். நீதி கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியா என்று கேட்டதற்கு, சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது, மகிழ்ச்சியும் இல்லை, வருத்தமும் இல்லை என்று கூறினேன்.

ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை பறிக்க வேண்டுமென்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ், உச்சநீதிமன்றம் அரசியலில் புனிதத்தைப் பாதுகாத்து விட்டது. இந்தத் தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று கூறினார்.

ஆனால் அ.தி.மு.க. வினர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்தினார்கள்; என் உருவ பொம்மை, முரசொலி மாறனின் உருவ பொம்மை, பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களின் உருவ பொம்மை ஆகியவற்றை ஊருக்கு ஊர் காவலர்கள் முன்னிலையிலேயே கொளுத்தினார்கள். சாஸ்திரி பவன் முன் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நிதி அமைச்சர் பொன்னையனே தலைமையேற்று மற்ற அமைச்சர்களின் துணையோடு கோஷங்களை முழங்கினார்.

சிறப்பு நீதிமன்றத்தால் டான்சி ஊழல் வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்ற ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்ட வழக்கில் 4-12-2001 அன்று கூறப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவை தண்டனையிலிருந்து விடுவித்தது. செய்தியாளர்கள் அப்போது என்னைச் சந்தித்து அந்த வழக்கில் அ.தி.மு.க. அரசுதான் பிராசிகியூஷன். அவர்களேதான் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அந்த நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். எனவே மாநில அரசு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்லுமா என்று கேட்டார்கள். அதற்கு நான் நாங்கள் நீதியை மதிப்பவர்கள். ஒரு நீதிபதி நீதியை மதிப்பதற்கு மேலாக நான் நீதியை மதிப்பவன் என்று கூறினேன். உச்சநீதி மன்றத்திற்குச் சென்றால் அங்கே நீதி வெல்லும் என்று நினைக்கிறீர்களா என்று திரும்பவும் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதை முன் கூட்டி எப்படிச் சொல்ல முடியும்? எந்தக் கோர்ட்டில் நீதி கிடைக்குமென்று சில பேரால் சொல்ல முடியும், என்னால் சொல்ல முடியாது” என்று கூறினேன். பின்னர் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டபோது, நான் முதலில் கூறிய கருத்தைத்தான் நினைத்துக் கொண்டேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது குறித்த செய்தி வந்த போது, அதற்கு சில நாட்களுக்கு முன்பே ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. உறுப்பினர் அவ்வாறு ஒரு தீர்ப்பு வரும் என்பதை அவர் எப்படி எதிர்பார்த்து முன் கூட்டியே தனது பதவியை ராஜினாமா செய்தார் என்ற பெரிய கேள்வி பலரின் முன் தோன்றியது. 5-12-2001 அன்றே புது டெல்லியில் வெளி வரும் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் ஒரு தலையங்கத்தைத் தீட்டியிருந்தது. அதிலே சில முக்கிய பகுதிகள் வருமாறு :- “டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவை சென்னை உயர்நீதி மன்றம் விடுதலை செய்ததன் மூலம் அவர் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் மேல் முறையீட்டின் காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல், அவரைக் குற்றவாளி அல்ல என்று தீர்மானித்து

விடுவித்துவிட்டது. அதன் காரணமாக, ஜெயலலிதாவும் அவரது ஆதரவாளர்களும் அவ்வழக்கு அவர்மீது திணிக்கப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டதாகச் சொல்லி வருகிறார்கள். அதுவும் ஏற்புடையதல்ல. காரணம், கீழ் நீதிமன்றம் ஏற்கெனவே குற்றச்சாட்டை உறுதி செய்திருக்கிறது. நீதிபதி தினகரின் தீர்ப்பு, உயர்நீதிமன்ற பெஞ்ச் அல்லது உச்சநீதி மன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்போடு ஒத்துப்போகும் என்பதற்கான உத்தரவாதம் கிடையாது. செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பையொட்டி எழுந்த கொண்டாட்டங்கள் எல்லாம் கூட தேவையற்றது. இந்தத் தீர்ப்பானது மாநில அரசியல் நிலவரத்தை எந்த வகையிலும் மாற்றியமைத்து விடாது. ஜெயலலிதா தாமாக அங்கு அதிகாரத்தைக் கொண்டிரா விட்டாலும் அவர்தான் முழுக்க முழுக்க தமிழகத்தில் நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அரசாங்க சக்தியெல்லாம் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், கள்ளச் சாராய வியாபாரிகள் ரவுடிகள் ராஜ்யத்தின் காரணமாகவும் வீணடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் இன்றைக்குத் தமிழகத்தில் திறம்பட இருந்து வருகின்றனர். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பணம் படைத்தவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது, அவர்களைக் குற்றவாளிகள் தான் என்று நிரூபிப்பது வெகு சுலபமானதாக இல்லை. சாட்சிகள் பல்டி அடித்து விடுவதன் காரணமாக, பொதுவாழ்வில் உள்ள முக்கியமானவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்படுவதில்லை. அந்த வகையில் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று கூறுவது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.”

உடன்பிறப்பே, என் மீது போடப்பட்ட 12 வழக்குகளிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன் என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லிக் கொள்கிறாரே, இந்த டான்சி வழக்கிலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். ஆனால் அந்த வழக்கிலே உச்சநீதி மன்ற நீதிபதிகள் 24-11-2003 அன்று கூறியது என்ன? “ஜெயலலிதா குற்றவாளி இல்லை யென்ற முடிவுக்கு நாங்கள் வந்திருந்த போதிலும், பொதுத்துறைக்குச்

சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு அவர் முதலமைச்சராக பதவியிலே இருந்த காலத்தில் விற்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. முதல் அமைச்சரே சொத்துக்களை வாங்க யத்தனித்து விட்ட நிலையில் அதிகாரவர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம் காட்டி இந்த விற்பனையை சுமூ கமாக முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பும் விலைக்கே முடித்திருக்கிறார்கள் என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்கள் நடத்தை விதிகளின் உட்பொருளுக்கு விரோதமானதாகும். நியாயமாகப் பேச வேண்டுமென்றால், அரசின் சிறு அதிகாரிகளுக்காக ஒரு சட்டமும், முதல் அமைச்சருக்காக ஒரு சட்டமும் இருக்க முடியுமா? இது போன்ற நிலைகளில் நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக்கப்பட வேண்டிய வெறும் ஆடம்பரப் பொருள் மட்டும்தானா? அது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா? இவைகள் தான் எங்களுடைய மனச்சாட்சியை துன்புறுத்துகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதாதான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக டான்சி நிலப் பத்திரத்திலே உள்ள அவருடைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார். எனவே ஜெயலலிதா நிபந்தனையில்லாமல் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைப்பதோடு, நாங்கள் என்ன கூறியிருக்கிறோம் என்பதன் அடிப்படையில் அவர் தன்னுடைய மனச்சாட்சிக்கே பதிலளிக்க முன்வரவேண்டும்.”

இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்திருப்பதைத்தான் ஜெயலலிதா தற்போது அவர் மீதான வழக்கிலிருந்து நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டதாகச் சொல்லிக் கொள்கிறார். எவ்வாறு அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வார்த்தைகளே நமக்கு நிரூபிக்கின்றது அல்லவா? அன்புள்ள,

மு.க.

31-5-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 332–339. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 43-இல் மேலும் கடிதங்கள்